ilakkiyainfo

வெளிநாட்டு புலிகள் மீதான தடை: தடை தாண்டும் ஓட்டமாக, மாறிவிட்ட அஞ்சலோட்டம்!- நிலாந்தன் (கட்டுரை)

வெளிநாட்டு புலிகள் மீதான தடை: தடை தாண்டும் ஓட்டமாக, மாறிவிட்ட அஞ்சலோட்டம்!- நிலாந்தன் (கட்டுரை)
April 06
09:42 2014

புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் மத்தியில் செயற்படும் 16 அமைப்புக்களையும் செயற்பாட்டாளர்களையும் அரசாங்கம் தடை செய்துள்ளது. அவ்வமைப்புக்களோடு தொடர்புடைய 424 பேர்களுடைய அனைத்து விபரங்களையும் அரசாங்கம் அறிவித்திருக்கிறது. இதன் மூலம் அரசாங்கம் பிரதானமாக மூன்று இலக்குகளைக் குறிவைப்பதாக எடுத்துக் கொள்ளலாம்.

முதலாவது ஜெனிவாத் தீர்மானத்துக்கு எதிரான உடனடியான பதிலடி.

இரண்டாவது, ஜெனிவாத் தீர்மானத்தில் தனக்கு எதிராகக் காணப்படும் அம்சங்களுக்கு எதிரான முன் தடுப்புக்களை உருவாக்குதல்.

மூன்றாவது, தமிழ் டயஸ் பொறாவில் தமிழ்த் தேசிய நெருப்பை, அணைய விடாமற் பேணும் தரப்புக்களை நீண்ட கால நோக்கில் முடக்குதல்.

இதில் முதலாவதின்படி, ஜெனிவாத் தீர்மானத்துக்கு எதிராகச் சுடச்சுடப் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. இலங்கைத் தீவில் தடை செய்யப்பட்டுள்ள அவ்வமைப்புக்கள் யாவும் ஐரோப்பியாவிலும், அமெரிக்காவிலும் தடையின்றிச் செயற்பட முடிகிறது என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.

எனவே, இத்தடையானது அவ்வமைப்புகளுக்கு எதிரானது மட்டுமல்ல அவ்வமைப்புககளைத் தடையின்றிச் செயற்பட அனுமதித்திருக்கும் மேற்கத்தைய நாடுகளுக்கும் எதிரானது தான். ஜெனிவாத் தீர்மானம் தன்னை அடிபணிய வைக்காது என்ற செய்தியை அரசாங்கம் உணர்த்த முற்படுகின்றது.

அதாவது கடந்த மூன்று ஜெனிவாக்களுக்கூடாகவும் அரசாங்கத்தை ஒரு கட்டத்துக்கும் மேல் வளைக்க முடியவில்லை அல்லது மேற்கு நாடுகள் கருதும் திரும்பிச் செல்லவியலாத ஒரு புள்ளி வரை அரசாங்கத்தை வளைக்க முடியவில்லை. மாறாக, அரசாங்கம் மேலும் துணிச்சலைப் பெற்றிருக்கிறது. மூன்றாவது ஜெனிவாத் தீர்மானத்திற்கு முன்னரும், பின்னரும் நடப்பவற்றை தொகுத்துப் பார்த்தால் அப்படித்தான் தெரிகிறது.

இரண்டாவதாக, மேற்படி தடை மூலம் மூன்றாவது ஜெனிவாத் தீர்மானத்திற்கு எதிரான முற்தடுப்புக்களை அரசாங்கம் உருவாக்கிக் கொள்ள முற்படுகிறது என்பது.

ஜெனிவாத் தீர்மானத்தின்படி, மனித உரிமைகள் அணையாளரது அலுவலகம் விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும். அதற்கு அரசாங்கம் அனுமதிக்கா விட்டால் அந்த விசாரணைகள் முன்பு நிபுணர் குழு செயற்பட்டது   போல நாட்டிற்கு வெளியிலிருந்தே  செயற்பட வேண்டி வரும். அப்படியொரு நிலை வந்தால் தமிழ் டயஸ்பொறா தான் பிரதான விசாரணைக் களமாக மாறும்.

அப்பொழுது வேண்டிய தரவுகளையும் சாட்சிகளையும் ஒழுங்கமைக்கப் போவது பெரும்பாலும் மேற்படி தடை செய்யப்பட்ட அமைப்புகள் தான். எனவே, அந்த அமைப்புகளுக்கும் தாயகத்துக்குமான தொடர்புகளை அறுத்து விட்டால் விசாரணைக்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்வது சட்டவிரோதமாகி விடும். அதற்கு அவசியமான ஒரு அனைத்துலக வலைப்பின்னல் இத்தடை மூலம் நெருக்கடிக்குள்ளாகும். இது இரண்டாவது.

மூன்றாவது, நீண்ட கால நோக்கிலானது. நாட்டில் உள்ள நிலைமைகள் காரணமாக இங்குள்ள தமிழர்கள் தமது மெய்விருப்பங்களை தடையின்றி வெளிப்படுத்த முடியாதிருக்கின்றனர். இந்நிலையில், தமிழகமும், தமிழ் டயஸ்பொறாவும் தான் தமிழ்த் தேசியத்தின் கூர்முனைகள் போலக் காணப்படுகின்றன.

மே 19 இற்குப் பின் ஈழத் தமிழ் அரசியலின் அஞ்சலோட்டக் கோலானது தமிழ் டயஸ்பொறாவிடம் தான் கையளிக்கப்பட்டிருக்கின்றது என்பதான ஒரு தோற்றம் கடந்த ஐந்தாண்டுகளாக கட்டியெழுப்பப்பட்டு வந்துள்ளது. மேற்படி தடை மூலம் அந்த நிலை மேலும் விருத்தியடைவது தடுக்கப்படும் என்று அரசாங்கம் நம்புகிறது.

இந்த இடத்தில் ஒன்றைச் சுட்டிக்காட்ட வேண்டும். தடை செய்யப்பட்ட அமைப்புக்களில் எல்லாமும் கடுந்தீவிர நிலைப்பாடுகளைக் கொண்டவை அல்ல. குளோபல் தமிழ் ஃபோரம் போன்ற அமைப்புக்கள் அங்குள்ள அவற்றை விடத் தீவிரமான அமைப்புக்களால் கடுமையாக விமர்ச்சிக்கப்பட்டு வருகின்றன.

அவற்றின் நடவடிக்கைகள் ”றிவேர்ஸ் லொபி’ என்று வர்ணிக்கப்படுகின்றன. அதாவது தமிழர்களுடைய இறுதி இலக்கிலிருந்து பின்வாங்கிச் செல்லும் ஒரு லொபியைத்தான் அவை முன்னெடுக்கின்றன என்றதொரு குற்றச்சாட்டு.

அவுஸ்ரேலியன் தமிழ் கொங்கிரஸ், கனேடியன் தமிழ் கொங்கிரஸ் போன்ற அமைப்புக்கள் மீதும் இது போன்ற குற்றச்சாட்டுகள் உண்டு. அவை அந்தந்த நாடுகளின் அரசாங்கங்களின் நிகழ்ச்சி நிரல்களுக்கு கீழ்படிவான அமைப்புக்கள் என்று விமர்சிக்கப்படுகின்றன.

மேற்படி 16 அமைப்புக்களில் சில விடுதலைப் புலிகளுடைய அரசியலை அப்படியே அதன் கொடி, படம், சின்னங்களோடு பேண விளைகின்றன. சில அமைப்புக்கள் அந்த அரசியலைக் கடந்து போக முயற்சிக்கின்றன.

இவ்வாறாக, தீவிரத்தின் தன்மை பொறுத்து மேற்படி அமைப்புக்கள் இரண்டாகப் பிளவுண்டு காணப்படுகின்றன. தமிழ் நாட்டிலும் மே 17 இயக்கத்திற்கும் சேவ் தமிழ் இயக்கத்திற்கும் இடையில் இப்படியொரு நிலை உருவாகி வருகின்றது.

கடந்த ஜெனிவா மூன்றின் போது தமிழ்த் தரப்பு இரண்டாகப் பிளவுண்டு காணப்பட்டதாக ஒரு விமர்சனம் முன்வைக்கப்பட்டது. தீவிர நிலைப்பாட்டைக் கடைப்பிடிக்கும் அமைப்புக்கள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு நெருக்கமாகவும், மிதமான நிலைப்பாட்டைக் கடைப்பிடிப்பிக்கும் அமைப்புக்கள் கூட்டமைப்புக்கு நெருக்கமாகவும் காணப்பட்டன.

ஆனால், அரசாங்கம் இந்த வேறுபாடுகள் எவற்றையும் கணக்கில் எடுக்கவில்லை. அது மேற்படி எல்லா அமைப்புக்களையும் ஒரே பைக்குள் போட்டுத் தடை செய்திருக்கிறது.

இதன் மூலம் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டையுடைய எந்தவொரு அமைப்பும் அது தீவிரமானதாக இருந்தாலும் சரி, மிதமானதாக இருந்தாலும் சரி அவற்றை அரசாங்கம் ஒரேவிதமான ஆபத்தாகத்தான் பார்க்கிறது என்று தெரிகிறது.

எனவே, கூட்டிக்கழித்துப் பார்த்தால், மேற்படி தடையானது தாயகத்துக்கும், புலம்பெயர்ந்த தமிழர்களுக்குமிடையில் ஒரு சட்ட வேலியைப் போட்டிருக்கிறது. பணப் பரிவர்த்தனை, தகவல் பரிவர்த்தனையும் உட்பட எல்லாப் பரிவர்த்தனைகளும் இனிச் சோதனைக்குள்ளாகப் போகின்றன.

ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னரான கடந்த ஐந்தாண்டுகளுக்கும் மேலாக பாதிக்கப்பட்ட தமிழர்கள் தமது கூட்டுக் காயங்களிலிருந்தும், கூட்டு மன வடுக்களிலிருந்தும் மீண்டெழுவதற்குரிய நிதி உதவியின் பெரும் பகுதி டயஸ்பொறாவிடமிருந்து தான் கிடைத்து வருகிறது. இனிமேல் அத்தகைய உதவிகளுக்கும் வரையறைகள் உருவாகக்கூடும்.

அண்மையில் வன்னியில் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட பின் விடுவிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களைச் சந்தித்த படைத்துறை உயர் மட்டத்தினரும் இந்த விவகாரத்தைத் தொட்டுக் கதைத்திருருக்கிறார்கள்.

புலம்பெயர்ந்த தமிழர்களிடமிருந்து வரக்கூடிய நிதி உதவிகளையிட்டு விழிப்பாயிருக்குமாறும் அத்தகைய உதவிகளைத் தவிர்க்குமாறும் அவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா காவல்துறைப் பேச்சாளரும், அண்மையில் இதே தொனிப்படக் கருத்துத் தெரிவித்தித்திருக்கிறார். சில கைதுகள் தொடர்பாக விளக்கமளிக்கும் போதே அவர் அவ்வாறு கூறியுள்ளார்.

இப்பொழுது தடை வந்துவிட்டது. இனிமேல் முன்னாள் இயக்க உறுப்பினர்கள் மட்டுமல்ல, சாதாரண சனங்களும், அரசியல்வாதிகளும், சமூகச் செயற்பாட்டாளர்களும்கூட வெளியிலிருந்து நிதி உதவி பெறுவது முன்னரைவிடக் கூடுதலாகக் கண்காணிக்கப்படும்.

அதாவது, தாயகத்திற்கும், அதன் நிதிப் பின்தளத்திற்கும் இடையிலான உறவுகள் சட்ட ரீதியாக கண்காணிக்கப்பட்டு நெருக்கடிக்குள்ளாகப் போகின்றன.

இதில் முதலாவது பாதிப்பு, தாயகத்தில் வசிக்கும் பாதிக்கப்பட்ட சாதாரண சனங்களுக்குத் தான். தமிழ்க் கட்சிகளைப் பொறுத்தவரை இத்தடையால் ஓப்பீட்டளவிற் கூடுதல் பாதிப்பு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்குத் தான். கூட்டமைப்புக்குப் பாதிப்புக் குறைவாகத் தானிருக்கும். அந்தக் கட்சி தமிழ் டயஸ்பொறாவில் அதிகபட்சம் தங்கியிருக்கவில்லை.

அந்தக் கட்சிக்குள் உள்ள சில தீவிர நிலைப்பாடுடைய முக்கியஸ்தர்களை தமிழ் டயஸ்பொறாத் தத்தெடுக்க முற்பட்டாலும்கூட கூட்டமைப்பின் பிரதான பலம் தாயகத்தில் தான் உள்ளது.

உள்நாட்டில் அதற்கு ஒப்பீட்டளவில் பலமான வலையமைப்பு உண்டு. பலமான மக்கள் ஆணையும் உண்டு. எனவே, டயஸ்பொறாவுடனான உறவு துண்டிக்கப்படுமிடத்து அது கூட்டமைப்புக்கு பெரிய சேதத்தை ஏற்படுத்தாது.

குறிப்பாக, கூட்டமைப்பின் உயர் பீடத்திலிருப்பவர்கள் டயஸ்பொறாவில் தங்கியிருக்கும் அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. எனவே, மேற்படி தடையானது கூட்டமைப்பின் பலத்தைப் பெருமளவிற்குப் பாதிக்காது.

ஆனால், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பிரதான பலமே அதற்கு டயஸ்பொறாவில் கிடைத்து வரும் அங்கீகாரமும் போஷிப்பும் தான். இப்பொழுது தடை மூலம் அதற்குச் சட்ட ரீதியான வரையறைகள் ஏற்பட்டிருக்கின்றன.

இனி அந்தக் கட்சி கூடுதலான பட்சம் உள்நோக்கித் திரும்பி வேலை செய்ய வேண்டியிருக்கும். இத்தடை அந்தக் கட்சிக்கு உடனடியான தீமையாகத் தோன்றினாலும், சிலசமயம் நீண்ட எதிர்கால நோக்கில் இது அவர்களுக்கு நன்மையாக முடியக்கூடும்.

வரலாற்றில் சில தீமையான தொடக்கங்கள் நன்மையான முடிவுகளைத் தந்திருக்கின்றன. எப்படியெனில் அந்தக் கட்சியானது இனி ஒப்பிட்டளவிற் கூடுதலாக உள்நோக்கித் திரும்ப வேண்டியிருக்கும்.

அது தனது பலத்தை ஒப்பீட்டளவில் உள் அரங்கை விடவும் வெளியரங்கிலேயே கூடுதலாக கட்டியெழுப்பி வைத்திக்கின்றது. ஆனால், இனி அந்தக் கட்சி தனது முழுக் கவனத்தையும், முழுப் பலத்தையும், முழு உழைப்பையும் உள்நோக்கித் திருப்ப வேண்டியிருக்கும்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு மட்டுமல்ல, அரங்கில் உள்ள ஏனைய எல்லாத் தமிழ்த் தேசிய சக்திகளுக்கும் இது பொருந்தும். மே 19 இற்குப் பின்னர் தமிழ் டயஸ்பொறாவானது தனது சக்திக்கு மீறியதொரு தோற்றத்தைக் காட்டி வருகிறது என்ற ஒரு கருத்து பரவலாக உள்ளது.

தமிழ்க் கட்சிகளின் முக்கியஸ்தர்கள் எல்லாரிடமும் இக்கருத்து உண்டு. யாழ்ப்பாணத்தில் 1990களின் பின் பாதியிலும் 2000 ஆண்டின் முற்பாதியிலும் தீவிரமாகச் செயற்பட்ட ஒரு அரங்கச் செயற்பாட்டாளர் பல தடவைகள் இக்கட்டுரையாளரிடம் அதைக் கூறியுள்ளார். டயஸ்பொறாவுடன் நெருங்கிச் செயற்படும் சிவில் செயற்பட்டாளர்களும் இதே தொனிப்படக் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள்.

குறிப்பாக, ஜெனிவாத் தேவைகளுக்காக மேற்கு நாடுகள் தமிழ் டயஸ்பொறாவுக்கு அதன் சக்திக்கு மீறியதொரு முக்கியத்துவத்தை வேண்டுமென்று கொடுத்து வருவதாக டயஸ்பொறாவில் உள்ள செயற்பாட்டாளர்களும் கூறுகிறார்கள்.

இப்படியாக கடந்த ஐந்தாண்டுகளாக, தமிழ் டயஸ்பொறாவைப் பற்றிய ஒருவித உருப்பெருக்கப்பட்ட மிகைப்படுத்தப்பட்ட தோற்றமே கட்டியெழுபப்பட்டிருப்பதாக சம்பந்தப்பட்ட எல்லாத் தரப்பினரும் கூறுகிறார்கள்.

இதனால், தமிழ் அரசியல் வாதிகளும், செயற்பாட்டாளர்களும் தாய் அரங்கில் தங்களை உள்நோக்கி பலப்படுத்துவதை விடவும் வெளிநோக்கி காத்திருக்கும் ஒரு போக்கு கடந்த ஐந்தாண்டுகளாக முன்னொப்பொழுதையும் விட அதிகரித்து வருகிறது.

ஜெனிவாவுக்காகக் காத்திருப்பது என்பது இன்னொரு விதத்தில் டயஸ்பொறாவுக்காகக் காத்திருப்பதும் தான். டயஸ்பொறாக் காசுக்காகக் காத்திருப்பது போல டயஸ்பொறா பெற்றுத் தரப்போகும் ஒரு தீர்வுக்காகவும் காத்திருப்பது தான்.

முன்பு ஆயுதப் போராட்டம் நிகழ்ந்த காலங்களில் ”பொடியள் அடிப்பாங்கள்.. பொடியள் வெல்லுவாங்கள்.. பொடியள் நாடு பிடித்துத் தருவாங்கள்..’ என்று சொல்லிக் கொண்டே பெருமளவிலான தமிழர்கள் பார்வையாளர்களாக விலகி நின்றார்கள்.

அப்படித்தான் இப்பொழுதும் டயஸ்பொறா தீர்வைப் பெற்றுத்தரும் என்று நம்புவதும் ஒருவித பார்வையாளர் நோக்கு நிலையிலிருந்தே வருகிறது. அதாவது, பார்வையாளர் தொகை கூடக்கூட காத்திருப்பு அரசியலே அரங்கின் பிரதான போக்காக மாறப்பார்க்கிறது.

இப்பொழுது இத்தடை மூலம் தமிழ் அரசியலானது அதன் ஆகக்கூடிய பட்ச யதார்த்தத் தளத்தில் தன்னைப் பலப்படுத்தத் தேவையான புற நிர்ப்பங்கள் உருவாகியுள்ளன. இத்தடையானது தமிழ் அரசியலில் உள்ள ”மிதப்பு நிலைகளை’க் கைவிட உதவக் கூடும். யதார்த்தத்தில் கால்பதியாது மிதக்கும் அரசியலானது அநேகமாக வெளியாரின் நிகழ்ச்சி நிரலுக்கே சேவகஞ்செய்யக்கூடும்.

எனவே, மிதப்பு நிலை அரசியலைக் கைவிட்டு யதார்த்தத்தை அதன் உக்கிரத்தோடு எதிர்கொள்ள வேண்டிய ஒரு கட்டாயம் தமிழ் அரசியல் வாதிகளுக்கும், தமிழ் சிவில் செயற்பாட்டாளர்களுக்கும் ஏற்பட்டிருக்கிறது. வெளிநோக்கி காத்திருப்பதை விடவும் உள்நோக்கித் திரும்பித் தமது பேரம் பேசும் சக்தியை கட்டியெழுப்பப்பட வேண்டிய ஒரு நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

அரசாங்கம், இத்தடை மூலம் தாயகத்திற்கும் அதன் பிரதான பின் தளங்களில் ஒன்றுக்குமான ரத்தக் குளாய்களைத் துண்டிக்கலாம் என்று நம்புகின்றது. ஆனால், இத்தடையே தமக்கு நன்மையாக முடிந்தது என்று நிரூபிக்க வேண்டிய பொறுப்பு தமிழ் அரசியல்வாதிகளுக்கும் சிவில் செயற்பாட்டாளர்களுக்கும் உண்டு.

ஒரு தீமையை நன்மையாக மாற்றவல்ல தீர்க்க தரிசனமும், அர்ப்பணிப்பும் மிக்க தமிழ் அரசியல்வாதிகள், சிவில் செயற்பாட்டாளர்கள் யாருண்டு?
-நிலாந்தன்-

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

October 2020
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 

Latest Comments

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

நல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com