ilakkiyainfo

ஹிட்லர் கொலை முயற்சி: 1944ஆம் ஆண்டு ஜுலை 20 என்ன நடந்தது? – ஜெர்மன் அதிகாரியின் சிலிர்க்க வைக்கும் கதை

ஹிட்லர் கொலை முயற்சி: 1944ஆம் ஆண்டு ஜுலை 20 என்ன நடந்தது? – ஜெர்மன் அதிகாரியின் சிலிர்க்க வைக்கும் கதை
July 23
01:28 2019

1944 ஜூலை 20 ஆம் தேதி, 36 வயதான ஜெர்மன் ராணுவ அதிகாரி கர்னல் கிளாஸ் ஸ்சென்க் கிராப் வான் ஸ்டாவ்பென்பெர்க் என்பவர் கிழக்கு புருஸ்ஸியாவில் வனப் பகுதிக்குள் மறைவாக இருந்த, பலத்த பாதுகாப்புள்ள வளாகத்திற்கு வந்து சேர்ந்தார். அவருடைய இலக்கு அடால்ப் ஹிட்லரை கொல்வது.

உல்ஸ்சான்ஜே அல்லது உல்பின் லெயர் என்பது கிழக்குப் பகுதியில் இருந்த ஹிட்லரின் ரகசியத் தலைமையகம்.

தலைவருக்கும் (ஹிட்லர்) ஜெர்மன் உயர் அதிகாரக் குழுவுக்கும் இடையில் தினசரி நடைபெறும் ஆலோசனைகளில் ஸ்டாவ்பென்பெர்க் கலந்து கொள்வது வழக்கம் – ஆனால் அவருடைய கைப்பெட்டியில் ஒரு வெடிகுண்டு வைத்திருந்தார்.

_107961202_3209f625-afb2-4cbe-addb-26c9631ba354கர்னல் கிளாஸ் ஸ்சென்க் கிராப் வான் ஸ்டாவ்பென்பெர்க்

“நாங்கள் சுற்றி நின்று கொண்டிருந்தோம். ஹிட்லர் உள்ளே வந்தார். கூட்டம் தொடங்கியது” என்று ஜெர்மன் ராணுவ அதிகாரி வால்ட்டர் வர்லிமோண்ட் 1967ல் பிபிசிக்கு அளித்த பேட்டியில் நினைவுகூர்ந்திருக்கிறார்.

“திடீரென கதவு மீண்டும் திறந்தது. நான் திரும்பிப் பார்த்தேன். ஒரு கர்னல் உள்ளே வந்ததை நான் பார்த்தேன். என்னிடம் அவர் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தினார்.

ஏனெனில் அவருடைய வலது கண் கருப்புத் துணியால் மூடப்பட்டிருந்தது. ஒரு கை துண்டிக்கப் பட்டிருந்தது. அவர் அங்கே நிமிர்ந்து நின்றிருந்தார். நல்ல ராணுவ வீரரின் படத்தை அவர் எனக்கு நினைவூட்டினார்.”

_107961151_a1aca544-0b95-43d5-ab8a-011047ccb9db

“எந்தவிதமான தயவும் இல்லாமல் அவர் பக்கம் திரும்பி அவரை ஹிட்லர் பார்த்தார். ஜெனரல் கெய்ட்டல் அவரை அறிமுகப்படுத்தினார்.”

ஸ்டாவ்பென்பெர்க் மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தவர், கத்தோலிக்கர், ராணுவ அதிகாரி. “என்னுடைய தந்தை நல்ல தோற்றம் உள்ளவர் – கருப்பு முடி, நீல நிற கண்கள், அலைபாயும் முடி, உயரமானவர் என்று எல்லோரும் சொல்வார்கள்.

மிகவும் உற்சாகத்துடன் இருக்கக் கூடியவர். நிறைய சிரிக்கக் கூடியவர். தாம் போற்றதலுக்குரியவர் என்று நினைத்திருப்பவர்” என்று அவருடைய மகன் பெர்த்தோல்ட் ஸ்சென்க் கிராப் வான் ஸ்டாவ்பென்பெர்க் கூறுகிறார். அவருக்கு வயது 80.

1943ல் டுனீசியாவில் பணியாற்றியபோது ஸ்டாவ்பென்பெர்க் மிக மோசமாகக் காயமடைந்தார் – அப்போது வலது கண்ணையும், வலது கையையும், இடது கையில் இரண்டு விரல்களையும் இழந்தார்.

`அந்தக் காலத்தில் காயங்கள் என்பது சாதாரண விஷயம். ஒரு கை, ஒரு கண் இழந்திருப்பது என்பது ரொம்பவும் சாதாரணம் என்று தெரிந்து கொள்ளுங்கள். அவர் உயிருடன் இருக்கிறார் என்பது உண்மையிலேயே நிம்மதியான விஷயம்” என்கிறார் பெர்த்தோல்ட்.

_107961152_c1b2bb3e-8aea-44ab-8c17-bcf430059f45

அதிக அரசியல் நாட்டம் இல்லாதவர் என்றாலும் ஸ்டாவ்பென்பெர்க் அடிப்படைவாத சிந்தனையாளர், தேசியவாதி. சில நேரங்களில் நாஜி கொள்கைகளை அவர் ஆதரித்துள்ளார்.

ஆனால் போர் நடந்து கொண்டிருந்தபோது, அந்த ஆட்சிக்கு எதிரான கருத்து அவரிடம் அதிகரித்தது – கிழக்கில் ஜெர்மனியின் கொடுமைகளைப் பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்திருந்தார். போரில் ஜெர்மனி தோல்விமுகத்தில் இருந்தது.

`ஹிட்லர் மீதான வசியத்தில் இருந்து அவர் நீங்கியிருந்தார். அது ஹிட்லரின் மாறுபட்ட குணம், அதை ஏற்புடையது என்று நாங்கள் நினைத்தோம்” என்கிறார் பெத்தோல்ட்.

“நான் 10 வயதுச் சிறுவன். உலகில் என்ன நடக்கிறது என்று அறிந்து கொள்வதில் ஆர்வமாக இருந்தேன். எங்கள் எல்லோரையும் போல நானும் சிறிய நாஜியாக மாறவிருந்தேன்.

ஆனால் நாங்கள் அதுபற்றி ஒருபோதும் தந்தை அல்லது தாயாருடன் கலந்து பேசியதில்லை.

அவர் அரசியல் பற்றிப் பேசினால், தனது உண்மையான உணர்வுகளை அவர் வெளிக்காட்டிக் கொள்ள மாட்டார். ஏனென்றால் அது மிகவும் ஆபத்தில் முடியக் கூடும். குழந்தைகள் விஷயங்களை விட்டுக் கொடுத்தனர்.”‘

ஸ்டாவ்பென்பெர்க் காயங்களில் இருந்து குணமடைந்தபோது, ஜெனரல் ஹென்னிங் வான் ட்ரெஸ்க்கோவ் தலைமையிலான சதிகாரர்கள் குழுவினர் அவரை அணுகினர். ஹிட்லரை கொன்று, நாஜி ஆட்சியை தூக்கியெறிய அவர் விரும்பினர். அந்தச் சதியில் முன்னணி நபராக ஸ்டாவ்பென்பெர்க் மாறினார்.

ஆனால் 1944 ஆம் ஆண்டில் ஜெர்மன் மாற்றுப்படையில் கமாண்டருக்கு தலைமை அலுவலராக ஸ்டாவ்பென்பெர்க் நியமிக்கப்பட்டார்.

இந்தப் பதவி காரணமாக அவர் ஹிட்லரை நெருங்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலம் கொலை செயலை செய்து முடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது.

அடுத்து வந்த மாதங்களில், ஹிட்லரை கொல்வதற்கான பல முயற்சிகள் தோல்வியடைந்தன. சதிகாரர்களை ஜெர்மன் உளவுப் படையினர் நெருங்கி வருகிறது என்ற அச்சம் அதிகரிக்கத் தொடங்கியது.

_107961153_b8355be4-3ef8-4dde-b9dc-d6116fd2f935

சதியாளர்களின் திட்டம் ஆபத்து நிறைந்ததாக இருந்தது. உல்பின் லெயர் பாதுகாப்பு சோதனைகளைத் தாண்டி தனது கைப் பெட்டியில் ஸ்டாவ்பென்பெர்க் வெடிகுண்டை எடுத்துச் சென்று, தினசரி கூட்டத்தின் போது ஹிட்லருக்கு அருகே அதை வைத்துவிட வேண்டும்.

பிறகு ஏதாவது காரணம் சொல்லி அந்த அறையில் இருந்து அவர் வெளியேறிவிட வேண்டும். குண்டு வெடித்ததும், ஸ்டாவ்பென்பெர்க் பெர்லின் நகருக்கு விரைந்து திரும்பிவிட வேண்டும். தனது மாற்றுப் படையினர் மூலமாக சதியாளர்கள் கட்டுப்பாட்டை எடுத்துக் கொள்வார்கள்.

“தங்களுக்கு வெற்றி கிடைக்குமா என்று அவர்களுக்கு உறுதியாகத் தெரியவில்லை. ஆனால், ஜெர்மானியர்கள் அனைவரும் ஹிட்லரை ஆதரிப்பவர்கள் இல்லை என்பதை நிரூபிக்க, ஹிட்லரை கொல்வதற்கான தாக்குதல் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்று ட்ரெஸ்க்கோவ் கூறினார்” என்கிறார் பெத்தோல்ட்.

ஆனால் அந்த சதி தோல்வியடைந்தால், சதியாளர்கள் ஆபத்தில் சிக்க மாட்டார்கள். “என்ன திட்டமிடப்பட்டது என்று தமக்குத் தெரியும் என்று என் தாயார் எப்போதும் சொல்வார்.

இதை கண்டறிந்து, தாயார் தகராறு செய்தபோது தந்தை அதைக் கூறியிருக்கிறார். ஆனால் என் தந்தை தான் குண்டு வைக்கப் போகிறார் என்று தாயாருக்குத் தெரியாது.”

“இதன் பின்விளைவுகளை அவர்கள் அறிந்திருந்தார்கள். ஆனால் இப்போது அமைதியான சூழல் நிலவுவதைப் போல, போர் நடைபெறும் காலத்தில், உயிர் அவ்வளவு முக்கியமானதாகக் கருதப்படவில்லை.

மக்கள் எப்போதும மரணம் அடைகிறார்கள். உயிர்த்தியாகம் செய்வது பெரிய விஷயமாகக் கருதப்படுகிறது. ஆனால், போர்க்காலத்தில் வேறு மாதிரியாக இருக்கும்.”

“ஜூலை 20 ஆம் தேதி ஸ்டாவ்பென்பெர்க் உல்பின் லெயர் சென்றார் – பகல் 12:30 மணிக்கு கூட்டம் நடைபெறுவதாகத் திட்டமிடப் பட்டிருந்தது.

வெடிகுண்டு தயார் செய்தபோது அவருக்கு இடையூறுகள் இருந்தன. எனவே கூட்டத்துக்குச் செல்வதற்கு முன்பு இரண்டில் ஒரு வெடிகுண்டை மட்டும் தனது கைப்பெட்டியில் எடுத்துச் சென்றார்.

“ஸ்டாவ்பென்பெர்க் தனது கையில் பெரிய கருப்பு கைப்பெட்டி வைத்திருந்தது எனக்கு நினைவிருக்கிறது” என்று 1967ல் வர்லிமோண்ட் கூறியுள்ளார்.

“ஆனால் அவரை மறுபடியும் நான் பார்க்கவில்லை. எனவே மேசைக்கு கீழே அவர் வைத்ததையோ அல்லது சிறிது நேரத்தில் அவர் வெளியே சென்றதையோ நான் பார்க்கவில்லை. 10 நிமிடங்கள் கடந்தது. குண்டுவெடிப்பு நடந்தபோது அவரைப் பற்றி நான் மறந்துவிட்டேன்.”

_107961154_9580beed-27d5-41c9-be97-4e9f5d26a11b

பெர்லின் செல்வதற்காக அந்த வளாகத்தைவிட்டு ஸ்டாவ்பென்பெர்க் வெளியேறியபோது குண்டுவெடிப்பைப் பார்த்தார். ஹிட்லர் இறந்துவிட்டார் என்று அவர் நிச்சயமாக நம்பினார்.

ஆனால் குண்டு வெடிப்பதற்கு சற்று முன்னதாக, ஸ்டாவ்பென்பெர்க் வைத்த பெட்டி மேசைக்கு பின்னால், ஹிட்லரிடம் இருந்து தள்ளி வைக்கப்பட்டிருந்தது.

உத்தேசிக்கப்பட்டிருந்த அளவுக்கு அந்தக் குண்டு சக்திவாய்ந்ததாக இல்லை. குண்டு வெடித்தபோது ஓக் மர மேசையின் மீது வரைபடத்தைப் பார்க்க ஹிட்லர் குனிந்து நின்றிருந்தார்.

அதனால் குண்டு வெடித்தபோது அந்த மேசையின் பலகை அவருக்குப் பாதுகாப்பாக இருந்தது. அந்தக் குண்டுவெடிப்பில் நான்கு பேர் மரணம் அடைந்தனர். பலர் காயமடைந்தனர். ஆனால் ஹிட்லர் உயிர்தப்பிவிட்டார்.

`குண்டு வெடித்தபோது பெரிய விளக்குச் சரம் என் தலையில் விழுந்ததைப் போல உணர்ந்தேன். நான் கீழே விழுந்துவிட்டேன்.

கெய்ட்டெலின் கையைப் பிடித்தபடி ஹிட்லர் வெளியே அழைத்துச் செல்லப்படுவதை நான் பார்த்தேன்.

அவருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை அல்லது அதிக காயம் இல்லை என்பது தான் என்னுடைய முதலாவது எண்ணமாக இருந்தது” என்று வர்லிமோண்ட் நினைவுகூர்ந்தார்.

சில மணி நேரம் கழித்து, தலைவர் உயிருடன் இருப்பது உறுதி செய்யப்பட்டது. பெர்லினை கைப்பற்றும் முயற்சி தோல்வியடைந்தது.

ஸ்டாவ்பென்பெர்க் மற்றும் இதர சதிக்கூட்டத் தலைவர்கள் பெர்லினில் போர் அலுவலகத்தில் கைது செய்யப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அந்த சமயத்தில் ஸ்டாவ்பென்பெர்க்கின் கர்ப்பிணி மனைவி நினாவும், அவர்களுடைய நான்கு குழந்தைகளும் ஸ்வாபியன் மலையில் குடும்ப எஸ்டேட்டில் வாழ்ந்து வந்தனர். என்ன நடக்கிறது என்று பெர்த்தோல்டுக்குத் தெரியாது.

“வானொலியில் செய்திகளை நான் கேட்டேன். ஹிட்லரை கொலை செய்ய முயற்சி நடந்தது என்றும் சதிகார கிரிமினல்களும், முட்டாள் அதிகாரிகளும் இதைச் செய்திருப்பதாகவும் செய்தியில் கேட்டேன்.

அப்போது எனக்கு வயது 10. தினமும் செய்தித்தாள்கள் படிப்பேன். என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ள நான் விரும்பினேன்.

நான் வானொலி கேட்காதவாறு என்னைத் தள்ளிவைக்க, பெரியவர்கள் முயற்சி செய்தார்கள். என்னையும், எனது சகோதரனையும் பெரியப்பா கவுண்ட் உக்ஸ்குலுடன் நடைபயிற்சிக்கு அனுப்பிவிடுவார்கள். ஆப்பிரிக்காவில் மான் வேட்டைக்குச் சென்றது உள்பட, தன்னுடைய வாழ்க்கையில் நடந்த பல விஷயங்களை அவர் சொல்வார்.”

“உண்மையில் அடுத்த நாளன்று என்னையும், என் சகோதரனையும் பார்த்து, நமது தந்தை தான் குண்டு வைத்தார் என்று தாயார் கூறினார்.

`அவர் எப்படி அதைச் செய்ய முடியும்?’ என்று நான் கேட்டேன். “ஜெர்மனிக்காக இதைச் செய்ய வேண்டும் என்று தந்தை நம்பினார்” என்று எங்கள் தாயார் பதில் அளித்தார்.

“அது பெரிய அதிர்ச்சியாக இருந்தது. என்னால் அதை நம்ப முடியவில்லை. தலைவரின் மீது தாக்குதல்! தலைவர் அற்புதமானவர் என்ற சிந்தனையுடன் தான் பள்ளியிலும், வெளியிலும் சொல்லி நாங்கள் வளர்க்கப் பட்டிருந்தோம்.”

அன்றிரவு ஜெர்மன் உளவுப் படையினர் வந்தார்கள் – பெர்த்தோல்டின் தாயார், பாட்டி, பெரியப்பா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். பெர்த்தோல்ட் மற்றும் அவருடன் பிறந்தவர்கள் குழந்தைகள் இல்லத்துக்கு அனுப்பப்பட்டனர்.

“ஏன் என்ற கேள்வி குறித்து ஒருபோதும் பேசப்படவில்லை. எங்களுக்கு வேறு பெயர்கள் வைக்கப்பட்டன – போருக்குப் பிறகு அநேதமாக எஸ்.எஸ். குடும்பங்களில் இருந்து வந்தவர்களுக்கு இந்தப் பெயர்கள் வைக்கப்பட்டதாகத் தெரிகிறது.”

_107961156_05f2f72c-2c4e-4010-a102-6a4f820ad427

அதன்பிறகு கலகம் செய்து ஆட்சியைக் கைப்பற்றும் முயற்சிகளில் தொடர்புடையதாகக் கருதப்பட்ட ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு கொல்லப்பட்டனர்.

பெர்த்தோல்டின் தாயார் ரவென்ஸ்பிரக் தீவிர பாதுகாப்பு முகாமில் உள்ள உளவுப்படை சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

போருக்குப் பிறகு தனது பிள்ளைகளுடன் அவர் சேர்த்து வைக்கப்பட்டார் – அவர் மறுமணம் செய்து கொள்ளவில்லை. “என் தாயாரைப் பொருத்த வரை என் தந்தை இருந்தார். அவர் ஒருவர் மட்டும் தான். தாயாரின் வாழ்வில் இடம் பெற்ற ஒரே ஆண் என் தந்தை மட்டுமே.”

பெர்த்தோல்ட் மேற்கு ஜெர்மனி ராணுவத்தில் ஜெனரலாக உயர்ந்தார். அவர் இன்னும் தனது சொந்த நகரில் வசிக்கிறார்.

“ஜெர்மனியின் சிறிதளவு கவுரவத்தை அந்தச் சதித் திட்டம் காப்பாற்றியது என்பதில் எனக்கு எந்தக் கேள்வியும் இல்லை.”

பெர்த்தோல்ட் வான் ஸ்டாவ்பென்பெர்க் BBC World service -ல் Witness நிகழ்ச்சிக்குப் பேட்டி அளித்தார்.

-BBC செய்தி-

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

September 2020
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 

Latest Comments

இந்த குட்டி சாத்தான்கள் எந்த இனத்தை சேர்ந்தவர்கள் என்பதை நான் சொல்ல தேவை இல்லை , இவங்களை ஒரு நாட்டில்...

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

நல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com