அமெரிக்காவில் உள்ள வடக்கு கலிபோர்னியா அருகே நடந்த சாலை விபத்தில் 9 பள்ளி மாணவர்கள் பலியாகியுள்ளனர். மேலும் 32 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃபெட் எக்ஸ் நிறுவனத்தின் டிரக் ஒன்று பள்ளி மாணவர்களை அழைத்து சென்ற சுற்றுலா பேருந்தின் மீது மோதியதில் 9 மாணவர்கள் பலியானதாகவும்,
32 பேர் காயமடைந்ததாகவும் கலிபோர்னிய நெடுஞ்சாலை ரோந்து பணியில் உள்ள பெண் அதிகாரி கூறியுள்ளார். ஃப்ரான் கேட்லர் என்ற அந்த அதிகாரி கூறுகையில், சாலை பிரிவில் திரும்பும்போது கட்டுப்பாட்டை இழந்த டிரக் பயணிகள் வாகனம் ஒன்றின் மீது மோதியதுடன், சுற்றுலா வாகனத்தின் மீது மோதியதாக கூறினார்.
காயமடைந்த 32 பேர் அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களின் நிலை குறித்து இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை. இன்று காலை வரை விபத்து நடந்த இண்டர்ஸ்டேட் 5 என்ற அந்த சாலை மூடப்பட்டிருந்தது.
தங்களது வாகனம் விபத்துக்குள்ளானது குறித்து தங்களுக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும், தற்போதைய சூழலில் விபத்தில் சிக்கியவர் குணமடைய பிரார்த்தனை செய்வது பற்றி மட்டுமே சிந்தித்து வருவதாகவும், அதே சமயத்தில் விபத்து குறித்து விசாரிக்கும் அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு தந்து வருவதாகவும் அந்நிறுவனத்தின் செய்தி தொடர்பாளரான போனி கவுர்வெலஸ் தெரிவித்துள்ளார்.