உலகக் கோப்பை டி 20 போட்டியின் அரையிறுதியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி அதிரடியாக ஆடி இந்திய அணியை வென்று இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றுள்ளது. அவர்களின் மகளிர் அணியும் இறுதி ஆட்டத்தில் ஆடுகின்றனர்.
வெற்றிக் களிப்பில் மேற்கிந்தியத் தீவுகள் அணியினர்
மும்பையில் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்திய அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
எதிர்வரும் ஞாயிறு கொல்கத்தாவில் நடைபெறவுள்ள இறுதி ஆட்டத்தில் அவர்கள் இங்கிலாந்து அணியை எதிர்த்து விளையாடுவார்கள்.
மேற்கிந்தியத் தீவுகள் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெயில் 5 ஓட்டங்களே எடுத்து ஆட்டமிழந்தாலும், லெண்டல் சிம்மன்ஸ் நிதானமாக உறுதியுடன் ஆடி தமது அணி இறுதி ஆட்டத்துக்கு தகுதிபெற பெரிதும் உதவினார்.
சிம்மன்ஸ் மற்றும் ரசல் அதிரடி ஆட்டம்
அவருக்கு உறுதுணையாக இருந்த ஆண்ட்ரே ரசலும் அபாரமாக ஆடி ஓட்டங்களை குவித்து வந்தார்.
முன்னதாக இந்திய அணி தமது 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 192 ஓட்டங்களை எடுத்தது. இதில் விராட் கோலி மிகச்சிறப்பாக ஆடி 47 பந்துகளில் 89 ஓட்டங்களை எடுத்தார்.
துவக்க ஆட்டக்காரர்களான ரோஹித் ஷர்மா மற்றும் அகிஞ்சய் ரஹானி இந்திய அணிக்கு வலுவான ஒரு அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர்.
எனினும் மேற்கிந்தியத் தீவுகள் அணி கெயில் மற்றும் சாமுவேல் மார்லன்ஸை விரைவாக இழந்தாலும் பின்னர் ஆடவந்த சிம்மன்ஸ் மற்றும் ரசல் தமது அணி இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெறுவதை உறுதி செய்தனர்.
உலகக் கோப்பை டி20: பெண்கள் அணியில் வெஸ்ட் இண்டீஸ் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற பெண்களுக்கான இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது.
பின்னர் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்தது.
அந்த அணியின் வீராங்கனை கூக்கர் அதிரடியாக விளையாடி 48 பந்துகளில் 61 ரன்கள் சேர்த்தார். நியூசிலாந்து தரப்பில் வீராங்கனை டேவைன் 4 ஓவர்களில் 22 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுக்களை சாய்த்தார்.
பின்னர் 144 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது. ஆனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
இதனையடுத்து ஞாயிற்றுக் கிழமை கொல்கத்தாவில் நடைபெறும் இறுதிப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் பெண்கள் அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.
பெண்களுக்கான உலகக் கோப்பை டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி முதன் முறையாக தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.