குருணாகல் மாவட்டத்தில் குளியாபிட்டிய நகரத்தில் இடம்பெற்றுக் கொண்டு இருக்கின்ற தேசத்தின் மகுடம் தேசிய கண்காட்சியில் நாட்டிய கலைஞர்களாக பங்கேற்ற தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஆலோசகர்களின் கால்களில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றனர்.
ஜனாதிபதியின் ஆலோசகர் ஏ. எச். எம். அஸ்பர் எம். பி, ஜனாதிபதி செயலகத்தின் சமூக அபிவிருத்தி பிரிவு பணிப்பாளர் நந்தன விஜேசிங்க உள்ளிட்ட பிரமுகர்களின் பாதங்களை இவர்கள் தொட்டு வணங்கினர்.
ஜனாதிபதி செயலகத்தின் காட்சிக் கூடத்தை அண்டிய அரங்கத்தில் நடனம், இசை நிகழ்ச்சிகள் மேடை ஏற்றப்பட்டன. இதன்போது விருந்தினராக ஏ. எச். எம். அஸ்பர் எம். பி கலந்து சிறப்பித்தார். அப்போதே இப்பிரமுகர்களால் முன்னாள் புலிகள் ஆசிர்வதிக்கப்பட்டார்கள்.
பார்வையாளர்கள், இரசிகர்கள் ஆகியோரை உற்சாகப்படுத்துகின்ற வகையில் இவர் சின்ன சின்ன ஆசை… சிறகடிக்க ஆசை என்கிற சினிமாப் பாடலை இவருக்கே உரிய பாணியில் தமிழ், சிங்களம் ஆகிய இரு மொழிகளிலும் மிக சுவாரஷியமாக பாடினார்.
நினைத்த மாத்திரத்தில் இரு மொழிகளிலும் பாட்டு சரிக் கட்டக் கூடிய திறமை உடைய இவர் மேன்மை மிகு மஹிந்த வெற்றி பெற ஆசை…. என்று இசையோடு பாடினார். இவரது பாட்டுக்கு ஆடல் அழகிகள் நாட்டியம் ஆடினார்கள். பார்வையாளர்களும் மேடையில் தோன்றி ஆட்டம் போட்டார்கள். இவர் பார்வையாளர்களை முற்றிலும் வசீகரித்து இருந்தார்.
இக்கண்காட்சி குறித்து ஊடகவியலாளர்களுக்கு இவர் தெரிவித்தவை வருமாறு:-
பர்தா அணிந்த முஸ்லிம் பெண்கள்
“ இக்கண்காட்சி வடக்கையும், தெற்கையும் சங்கமிக்க வைக்கின்ற பாலமாக அமைகின்றது. இங்கு வந்தபோது புதிய உலகத்துக்குள் புகுந்தது போன்ற உணர்வு ஏற்பட்டது.
சிங்கள மக்களோடு பர்தா அணிந்த முஸ்லிம் பெண்களும் கலந்து கொண்டனர். பிள்ளைகளுடன் தமிழ் பெண்களும் கலந்து கொண்டனர். இக்கண்காட்சி மக்களுக்கு நல்ல படிப்பினை ஆகும்.
கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் இருந்து பங்கேற்ற தமிழ் பிள்ளைகள் மிக அருமையாக திறமைகளை வெளிப்படுத்தினார்கள். இதே போல வடமேல் மாகாண பிள்ளைகளின் திறமைகளுக்கும் களமாக இக்கண்காட்சி அமைந்தது.
இக்கண்காட்சியில் பிரமிக்க வைக்கின்ற நவீன தொழினுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. இவ்வாறான ஒரு அற்புதமான கண்காட்சியை நடத்துகின்றமைக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கண்காட்சி ஏற்பாடுகளுக்கு பொறுப்பான அமைச்சர் ரஞ்சித் சியாம்பலபிட்டிய ஆகியோருக்கு எத்தனை நன்றிகளை கூறினாலும் தகும்.
ஜனாதிபதி செயலகத்தின் சமூக அபிவிருத்தி பிரிவு பணிப்பாளர் நந்தன விஜேசிங்க மிகவும் சிறப்பாக இந்நிகழ்ச்சிகளை நடத்திக் கொடுத்து உள்ளார். மிகுந்த கெட்டித்தனத்துடன் செயற்பட்டு உள்ளார்.
தேசிய நல்லிணக்கத்தை மேம்படுத்த வேண்டும் என்று மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்ற ஜனாதிபதியின் சமூக அபிவிருத்தி பிரிவை இன்னமும் மேம்படுத்த விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும். ”
இதே நேரம் தேசத்தின் மகுடம் கண்காட்சி ஏற்பாடுகளுக்கு பொறுப்பான அமைச்சர் ரஞ்சித் சியாம்பலபிட்டிய அடங்கலான அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகள் பலரும் ஜனாதிபதி செயலகத்தின் சமூக அபிவிருத்தி பிரிவினரால் நடத்தப்படுகின்ற கலை மற்றும் கலாசார நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்கள்.