கொரியா– வடகொரியா, தென்கொரியா என 1948–ம் ஆண்டு பிளவுபட்டது முதல், வடகொரியாவில் ஒரு குடும்ப ஆட்சியே நடைபெறுகிறது. முதலில் கிம் இல் சுங் ஆட்சி செய்து வந்தார். 46 ஆண்டு காலம் அவர் ஆண்டார். அவருக்கு பின்னர் அவரது மகன் கிம் ஜாங் இல் 1994–ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தார்.
அவர் 17 ஆண்டு காலம் ஆட்சி நடத்தினார். அவரது மரணத்துக்கு பின்னர் அவரது மகன் கிம் ஜாங் அன் (வயது 31) 2011–ம் ஆண்டு டிசம்பர் 19–ந் தேதி ஆட்சிக்கு வந்தார்.
இந்தக் குடும்பம் வடகொரியாவில் சர்வாதிகார ஆட்சி நடத்தினாலும், மக்கள் அவர்கள் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளனர்.
இந்த நிலையில் வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் இப்போது பொது நிகழ்ச்சிகளில் தோன்றாமல் இருந்து வருகிறார். அவர் கடைசியாக கடந்த செப்டம்பர் மாதம் 3–ந் தேதி தனது மனைவியுடன் ஒரு இசை நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதுவே அவர் கலந்து கொண்ட கடைசி பொது நிகழ்ச்சி ஆகும்.
அந்த மாதக் கடைசியில் நடந்த பாராளுமன்ற கூட்டத்திலும் அவர் கலந்து கொள்ளவில்லை. இது பல்வேறு யூகங்களை கிளப்பி உள்ளது. அவர் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் அவர் உடல் நலமில்லாமல் இருப்பதாக அரசு டெலிவிஷன் கடந்த மாதம் செய்தி வெளியிட்டது.
இந்த நிலையில், அவரது தொழிலாளர் கட்சியின் 69–வது ஆண்டு விழா நேற்று கொண்டாடப்பட்டது. வழக்கமாக இந்த நாளில் அவர் தனது தாத்தா கிம் இல் சுங், தந்தை கிம் ஜாங் இல் ஆகியோரின் கல்லறைக்கு சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துவது வழக்கம்.
ஆனால் வழக்கத்துக்கு மாறாக நேற்று அவர் அங்கு செல்லவில்லை. அந்த நினைவிடத்தில் மரியாதை செலுத்தும் தலைவர்கள் பட்டியலில் அவரது பெயர் இடம் பெற வில்லை. இருப்பினும் அவரது பெயர் தாங்கிய மலர்க்கூடை மட்டும் அந்த நினைவுச் சின்னத்தில் வைக்கப்பட்டது.
இதனால் அவர் என்ன ஆனார் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இதுவரை கட்சியின் ஆண்டு விழாவில் பங்கேற்காமல் இருந்தது இல்லை. இந்த நிலையில், நேற்று அவர் பங்கேற்காததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே, அவர் ராணுவப்பயிற்சியில் ஈடுபட்டதாகவும், அப்போது அவரது காலில் காயமுற்றதாகவும் ஒரு தகவல் கூறுகிறது. இருப்பினும் இதற்காக 2 மாதங்களுக்கு மேலாக பொதுநிகழ்ச்சியில் பங்கேற்காமல் இருப்பாரா என்ற கேள்விக்குறியும் எழுந்துள்ளது.
மற்றொரு தகவல், ஆகஸ்டு இறுதியில் அல்லது செப்டம்பர் முதல் வாரத்தில் அவர் ராணுவப்பயிற்சியில் ஈடுபட்டபோது, உடல் பருமன் காரணமாக கணுக்காலிலும், மூட்டிலும் காயம் அடைந்ததாகவும், அவர் ஒரு உபகரணத்தின் உதவியுடன் நடந்து வந்ததாகவும், பின்னர் காயம் கடுமையானதாக ஆகி விட்டதாகவும் கூறுகிறது.
இருந்தாலும், வடகொரியாவின் ஆட்சி இன்னும் அவரது கட்டுப்பாட்டின்கீழ் இருப்பதாக நம்புவதாக தென் கொரியா கூறுகிறது.