தென்னிந்திய நகைச்சுவை நடிகர் வடிவேலு இம்சை அரசன் புலிகேசியில் தான் பயில்வான் போன்று கட்டுமஸ்தான உடல் உள்ளவன் எனக் காண்பிக்க பயில்வான் ஒருவனது உடலை தனது முகத்துடன் இணைத்து ஓவியம் வரைய ஓவியர் ஒருவரை நிர்ப்பந்தித்து அனைவரையும் வயிறு குலுங்கச் சிரிக்க வைத்தது பழைய கதை.
ஆனால் வல்லரசு நாடான அமெரிக்காவின் ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்ப் தனது பதவி நிலைக்குள்ள கௌரவ நிலையை அலட்சியம் செய்து நடிகர் வடிவேலைப் பின்பற்றும் வகையில் காரியமொன்றைச் செய்து அனைவரையும் திகைக்கவும் நகைக்கவும் வைத்துள்ளார்.
அவர் தன்னைப் பயில்வானாகக் காண்பிக்கும் வகையில் தனது தலைப் பகுதியுடன் ஹொலிவூட் ரொக்கி 111 திரைப்பட சுவரொட்டியில் தோன்றும் நடிகர் சில்வெஸ்டர் ஸ்டாலோனின் கட்டுமஸ்தான உடலை இணைத்து விநோதமாக புகைப்படமொன்றை உருவாக்கி நேற்று முன்தினம் புதன்கிழமை டுவிட்டர் இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
ஆனால் அவர் அந்த புகைப்படத்துடன் வசனம் எதனையும் வெளியிடவில்லை என்ற போதும் அவர் தனது உடல் நலம் குறித்து ஜம்பமடிக்கும் வகையில் இந்தப் போலியாக உருவாக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளதாக நம்பப்படுகிறது.
டொனால்ட் அண்மையில் இரவு நேரத்தில் வோல்ட்டர் றீட் மருத்துவ நிலையத்துக்கு திடீர் விஜயத்தை மேற்கொண்டமை அவரது உடல் நலம் தொடர்பில் வதந்திகள் பரவக் காரணமாக அமைந்தது.
இது தொடர்பில் டொனால்ட் ட்ரம்ப் தெரிவிக்கையில், தனக்கு உடல் நலத்தில் எதுவித பாதிப்பும் இல்லை எனவும் மருத்துவர்கள் தனது மார்புப் பகுதியின் வசீகரத்தைப் பாராட்டியதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
”எங்களுக்கு உங்களது வசீகரமான மார்பைக் காண்பியுங்கள். நாங்கள் அதனைப் பார்க்க வேண்டும். நாம் இதைப்போன்ற மார்பை ஒருபோதும் பார்த்ததில்லை” என மருத்துவர்கள் தன்னிடம் கூறியதாக ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் , ஹொங்கொங்கின் மனித உரிமைகளை ஆதரிப்பதற்காக அவர் இரண்டு மசோதாக்களில் கையெழுத்திட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு, சீன அரசாங்க அதிகாரிகளை கோபப்படுத்தி, தடுமாறிய நகரத்தில் ஜனநாயக சார்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் வியாழக்கிழமை இரவு “நன்றி பேரணி” ஒன்றை நடத்தினர்.
குறித்த பேரணியில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் புதன்கிழமை ட்விட்டரில் வெளியிட்ட புகைப்படத்தை வைத்திருந்தனர்.
“சுதந்திரத்திற்காக போராடுங்கள், ஹொங்கொங் உடன் நிற்கவும்” என்று ஆயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள் ஒரு பொது சதுக்கத்தில் அமெரிக்கக் கொடிகளை அசைத்து, புகைப்பட நகல்களை வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.