ஈராக்கில் நடைபெறும் யுத்தத்தில் ராணுவத்தை திணறடித்து கொண்டிருக்கும் ISIS இயக்கத்தின் தலைவர் இடம்பெற்றதாக கூறப்படும் ஒரு வீடியோவில் உள்ள நபர், நிச்சயமாக அந்த இயக்கத்தின் தலைவர்தானா என்று ஈராக்கிய உளவுத்துறை ஆராய்ந்து வருவதாக உளவு வட்டாரங்களில் பேச்சு உள்ளது.
கடந்த வாரம் ISIS இயக்கம் ஈராக், சிரியா நாடுகளின் தமது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை இணைத்து ‘இஸ்லாமிய தேசம்’ பிரகடனம் செய்தது. அத்துடன் அனைத்து இஸ்லாமியர்களுக்கும் தலைவராக (கலீபா) தமது இயக்கத்தின் தலைவர் அபு பக்கர் அல்-பக்தாதியையும் அறிவித்தது.
ISIS இயக்கத்தின் தலைவர் அபு பக்கர் அல்-பக்தாதி, பொது இடங்களில் நடமாடுவதில்லை. இவரது தலைக்கு அமெரிக்கா 10 மில்லியன் டாலர் சன்மானம் அறிவித்துள்ளது.
தற்போது இந்த இயக்கம் ஈராக், மற்றும் சிரியாவில் யுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையிலும் அபு பக்கர் அல்-பக்தாதி இந்த இரு நாடுகளில் ஒன்றில்தான் உள்ளாரா என்பதே ரகசியமாக இருந்து வந்தது.
இவரது இருப்பிடம் தெரிந்தால், உடனடியாகவே ஏவுகணை வீசி கொல்வதற்கு அமெரிக்க உளவு விமானங்கள் தயார் நிலையில் இருக்கும் என்று ஊகிப்பது சுலபம்.
இந்த நிலையில் அபு பக்கர் அல்-பக்தாதி பற்றிய வீடியோ ஒன்று சில தினங்களுக்கு முன் குறிப்பிட்ட ஜிகாதி வெப்சைட் ஒன்றில் வெளியானது. அந்த வீடியோ ஈராக்கின் இரண்டாவது பெரிய நகரமான மொசொல் நகரில் உள்ள பிரபல பள்ளிவாசலில் எடுக்கப்பட்டது என கூறப்பட்டுள்ளது.
அந்த பள்ளிவாசலுக்கு விஜயம் செய்த ISIS இயக்கத்தின் தலைவர் அபு பக்கர் அல்-பக்தாதி, கடந்த வெள்ளிக்கிழமை அங்கு தொழுகையில் ஈடுபடுவதையும், அதற்குமுன் அங்குள்ள மத வழக்கப்படி சிறப்பு குச்சி ஒன்றால் தமது பற்களை சுத்தம் செய்வதையும், தொழுகையின் பின் பள்ளிவாசலில் சொற்பொழிவாற்றுவதும் இந்த வீடியோவில் (ஆங்கில சப்டைட்டில்களுடன்) உள்ளது.
இந்த வீடியோவில் உள்ளவர் நிச்சயமாகவே ISIS இயக்கத்தின் தலைவர் அபு பக்கர் அல்-பக்தாதிதானா, நிஜமாகவே கடந்த வெள்ளிக்கிழமை தொழுகைக்காக மொசொல் நகரில் உள்ள பிரபல பள்ளிவாசலுக்கு அவர் வந்திருந்தாரா என்பதை ஆராயும் முயற்சியில் ஈராக்கி உளவுத்துறை ஈடுபட்டுள்ளதாக உளவு வட்டார தகவல்கள் உள்ளன.
இந்த வீடியோவில் உள்ளவர் அவர்தான் என்றால், ஈராக்குக்குள் அவரை ‘அனைத்து வழிமுறைகளையும் பயன்படுத்தி’ தேடத் தொடங்கும் சி.ஐ.ஏ.
அதற்கு, இந்த வீடியோவின் ‘உண்மைத்தன்மை’ தெரிய வேண்டும். எதற்கும் நீங்களும் ஒருமுறை வீடியோவை பார்த்து விடுங்களேன். அதற்கான லிங்க், கீழேயுள்ளது: