Site icon ilakkiyainfo

17 வருடங்கள் … திகில் ஜெயலலிதா கேஸ்

17 வருடங்கள் … திகில் ஜெயலலிதா கேஸ்பிறந்த பிறந்த மாநிலமான கர்நாடகம், நொந்த மாநிலமாக மாறிக்கொண்டு இருக்கிறது ஜெயலலிதாவுக்கு!

39-க்கு 37 கொடுத்த தமிழக மக்களின் தீர்ப்பைக்கூடக் கொண்டாட முடியாமல், சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதி குன்ஹா கொடுக்கக் காத்திருக்கும் தீர்ப்புதான், ஜெயலலிதாவுக்கு நிம்மதியான தூக்கம் இல்லாமல் புரளவைக்கும் புலம்பலைக் கொடுத்துவருகிறது.

இந்திய நீதித் துறை வரலாற்றில் இப்படி ஒரு வழக்கு இழுபறி படலத்தை எட்டியது இல்லை என்ற சிறப்புப் பெருமையை ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன்… மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பெற்றுவிட்டது.

இந்த வழக்கு பதிவான பிறகு, இந்திய நாடாளுமன்றம் ஐந்து தேர்தல்களைக் கடந்துவிட்டது. தமிழ்நாடு சட்டமன்றம் மூன்று தேர்தல்களைச் சந்தித்துவிட்டது. உச்ச நீதிமன்றத்துக்கு 16 தலைமை நீதிபதிகள் மாறிவிட்டார்கள். சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 12 தலைமை நீதிபதிகள் வந்து போய்விட்டார்கள்.

49 வயதில் இருந்த ஜெயலலிதா பொன் விழா கடந்து, மணி விழா கடந்து ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டன. பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்துக்கே நான்கு நீதிபதிகள் மாறிவிட்டார்கள். அரசு வழக்கறிஞரும் மாறிவிட்டார். வழக்கின் விசாரணை அதிகாரிகள் ஓய்வுபெற்று விட்டார்கள்.

ஆனாலும் வழக்கு நகர்ந்துகொண்டே, நடந்துகொண்டே போகிறது. ‘எல்லாவற்றுக்கும் கணக்குத் தீர்க்கும் நாள் ஒன்று உண்டு’ என்பார்கள். ஆனால், அது என்று என்பதுதான் இந்த வழக்கைப் பொறுத்தவரை தெரியவில்லை.

சட்டத்தின் ஆட்சி, சட்டம் தன் கடமையைச் செய்யும், சட்டம் தன் வழி செல்லும்… என்று நம்பிக்கை நித்தமும் தரப்படுகிறது. ஆனால் ‘எப்போது?’ என்பதுதான் பெங்களூரு வழக்கைப் பொறுத்தவரை பெரிய கேள்வி!

”ஆங்கில நிர்வாகமுறை மிகச் சிறந்தது என்பதில் எந்த ஐயமும் இல்லை. அது, உன்னதமான பயன்களைத் தந்தது. ஆனால், அதற்கென சில குறைகளும் இருந்தன. அணுகுவதற்கு எளிமையும் விரைவான நியாயமும் வேண்டும்.

அவற்றை அடைய இந்த அமைப்பு முற்றிலுமாக மாற்றப்பட வேண்டும்” என்று இந்தியாவின் முதல் அட்டார்னி ஜெனரலாக இருந்த எம்.சி. செதல்வாட் சொன்னார்.

அவருடைய வார்த்தைகளை காதிலேயே வாங்கிப் போட்டுக்கொள்ளவில்லை என்பதற்கு கண்ணுக்கு முன் நிற்கும் சாட்சி, கர்நாடக மாநிலத்தில் நடந்துவரும் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு.

முதல்முறை ஆட்சிக்கு வந்தபோது, அதாவது 1991-ம் ஆண்டு கணக்குப்படி ஜெயலலிதாவின் சொத்து 2 கோடியே 1 லட்சத்து 83 ஆயிரத்து 957 ரூபாய். 1996-ம் ஆண்டு அவரது பதவிக்காலம் முடிந்தபோது அவருடைய சொத்து மதிப்பு, 66 கோடியே 65 லட்சத்து 20 ஆயிரத்து 395 ரூபாய். மாதம் ஒரு ரூபாய் ஊதியம் வாங்கிய ஜெயலலிதா, 66 கோடிக்கும் மேலான சொத்தை எப்படி வாங்க முடியும்? இந்த ஒற்றைக் கேள்விக்குப் பதில் தேடித்தான்,

17 ஆண்டுகளாக வழக்கு நடக்கிறது. இந்த வழக்கை நடத்துவதற்கு அரசும், நீதித் துறையும், ஜெயலலிதா தரப்பும் இதுவரை செலவு செய்திருக்கும் தொகை குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டு இருக்கும் தொகையைவிடக் கூடுதலாக இருக்கும். கால விரயம், பொருள் விரயம் மட்டுமல்ல, நீதியும் விரயம் ஆகிக்கொண்டு இருப்பதன் அடையாளம் இது.

1996-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா ஆட்சியை இழந்தார். 234 தொகுதிகளில் 4 தொகுதிகளில் மட்டுமே அ.தி.மு.க-வினர் வெற்றிபெற முடிந்தது. ஜெயலலிதாவே தோற்றுப்போனார். தோல்விக்கு நான்கு மாதங்கள் கழித்து, ”நடந்த தவறுகளுக்குப் பொறுப்பு ஏற்பது எனது கடமை’ என்று ஒப்புக்கொண்டார்.

அந்த அறிக்கையில், ”எனக்கு நெருக்கமாக இருந்த சிலருக்குத் தொடர்புடையவர்கள் எனக்குத் தெரியாமலேயே அதிகார மையங்களை ஏற்படுத்திக்கொண்டதால், கட்சியின் பெயர் கெட்டுவிட்டது” என்றும் சொன்னார். ஜெயலலிதா பெயர் குறிப்பிடாவிட்டாலும் யாரைச் சொல்கிறார் என்பது ஊர் அறிந்த ரகசியம். அவரோடு நீதிமன்றப் படி ஏறிக்கொண்டு இருக்கும் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர்தான் அந்த அதிகார மையங்கள்.

”வழக்கு தொடங்குவதற்கு முன் இவர்களுக்கு 17 சொத்துகள் மட்டுமே இருந்தன. வழக்கு காலம் என்று குறிப்பிடப்படும் 1991-96 காலகட்டத்தில் இது 306 சொத்துகளாக உயர்ந்துள்ளன.

இதில் 289 சொத்துகள் பல வழிகளில் வருமானத்துக்கு அதிகமாகச் சேர்க்கப்பட்டவை” என்று சொல்லி அதற்கு ஆதாரமாக 2,500 பக்க ஆவணங்களை பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா முன்னால் தாக்கல் செய்துள்ளார் அரசு வழக்கறிஞர் பவானிசிங்.

”வழக்கில் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளவர்களின் பொருளாதார நிலை ஒப்பிட முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளது. தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது, ஐந்து ஆண்டு காலத்தில் முதல் 27 மாதங்களுக்கு மட்டுமே மாதம் ஒரு ரூபாய் வீதம் 27 ரூபாய் ஊதியம் பெற்றுள்ளார். ஆனால், 14 கோடி ரூபாய் மதிப்புள்ள கட்டடங்களைக் கட்டி உள்ளார்.

அவரது வீட்டில் சோதனை நடத்தியபோது 90 லட்சம் மதிப்புள்ள 23 கிலோ தங்கம், ஆபரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்தக் காலகட்டத்தில் அவரது தரப்பினர் 32 கம்பெனிகளைப் புதிதாகத் தொடங்கி உள்ளார்கள்” என்று சொன்ன பவானிசிங், ”66 கோடி என்பது அன்றைய மதிப்பு. ஆனால், இதன் இன்றைய மதிப்பு 2,847 கோடி ரூபாய்” என்றும் சொல்லி மலைக்கவைத்துள்ளார். இதுதான் அரசு வழக்கறிஞரின் இறுதிகட்ட வாதத்தின் ஒட்டுமொத்த சாராம்சம்.

இதற்கு ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் தரப்பு வழக்கறிஞர்கள் தங்களது இறுதிகட்ட பதிலைச் சொல்ல வேண்டும். அதோடு வாதங்கள் முடிய வேண்டும். தீர்ப்புத் தேதி அறிவிக்கப்படும். தீர்ப்பு சொல்லப்படும். தடை இல்லாமல் போனால், ஜூலை இறுதிக்குள் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தின் அனைத்து பணிகளும் முடிந்துவிடும்.

ஆனால், உச்ச நீதிமன்றத்தில் தடை கேட்டு மனுத் தாக்கல் செய்தார் ஜெயலலிதா. ஜூன் 6-ம் தேதி வரைக்கும் தடை விதித்தது நீதிமன்றம். அந்தத் தடை, ஜூன் 16-ம் தேதி வரைக்கும் மீண்டும் உச்ச நீதிமன்றத்தால் நீட்டிக்கப்பட்டது.

இந்த வழக்கை விரைந்து முடிக்கவேண்டும் என்று 2003-ம் ஆண்டு உத்தரவு போட்டதே இதே உச்ச நீதிமன்றம்தான். ‘தமிழகத்தின் முதலமைச்சராக ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட்டார். அவர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு தமிழகத்தில் நடந்தால் இனி நியாயமாக நடக்காது.

எனவே, இதனை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும்’ என்று தி.மு.க பொதுச் செயலாளர் க.அன்பழகன் உச்ச நீதிமன்றத்துக்குப் போனபோது, இந்த வழக்கை நீதிபதிகள் எஸ்.என்.வரியவா, எச்.கே.சீமா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. ”நியாயமானதும் ஏற்கத்தக்கதுமான பல காரணங்களை மனுதாரர் அன்பழகன் சொல்லி இருக்கிறார்.

அவரது சந்தேகங்களை நாங்கள் ஏற்கிறோம். பொதுவாக நீதி கிடைக்காது என்ற சந்தேகம், மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. எனவே, தமிழ்நாட்டில் இந்த வழக்கை நடத்தினால் நியாயம் கிடைக்காமல் போக வாய்ப்பு உள்ளது. இது வேறு மாநிலத்துக்கு மாற்றப்பட வேண்டிய வழக்குதான்” என்று ஒப்புக்கொண்ட நீதிபதிகள், ”இந்த வழக்கை தினந்தோறும் எடுத்து விசாரிக்க வேண்டும்” என்றும் சொன்னார்கள்.

அப்படிச் சொல்லி 10 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த விசாரணையின்போது மனுக்கள் மேல் மனுக்கள் தாக்கல் செய்வது, ஜெயலலிதா தரப்பினருக்கு சட்டம் வழங்கி இருக்கும் சலுகை, உரிமை என்றுகூடச் சொல்லலாம். ஆனால், ‘இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பால் மாறாத பற்றும் உண்மையும் கொண்டிருப்பேன்…’ என்று உறுதிமொழி எடுத்து முதலமைச்சராகப் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்ட ஜெயலலிதா இப்படி நடந்துகொள்வது சரியா?

இந்திய நீதித் துறை வரலாற்றில் அசைக்க முடியாத பல்வேறு தீர்ப்புகளை வழங்கிய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பி.என்.பகவதி ஒருமுறை சொன்னார்:

”நம் நாட்டு நீதித் துறை அமைப்பு அநேகமாக இடிந்து விழப்போகிற நிலையில் இருக்கிறது எனக் கூறவேண்டி இருப்பதற்கு வேதனைப் படுகிறேன். நிலுவையில் உள்ள வழக்குகளின் கனத்தால் நமது நீதித் துறை அமைப்பு நொறுங்கிக்கொண்டிருக்கிறது. நேர்மையற்ற வர்கள் மட்டும்தான் நீதிமன்றத் தாமதங்களால் நன்மையடைகின்றனர்.

தண்டனையில் இருந்து விலக்குப் பெற்றவர்களாக ஆண்டுக்கணக்கில் தம் கடமை தவறி, சட்டபூர்வப் பணிகளைச் செய்யாமலே நாள்களைக் கடத்திவிடுகிறார்கள். வசதியுள்ள ஒவ்வொரு நபரும் அரசுக்கு எதிராக அல்லது பொது நிர்வாகத்துக்கு எதிராக ஆணைகளும், தடை அல்லது நிறுத்த ஆணை என்று ஏதோ ஒன்றைப் பெற்றுக்கொண்டு அதன் பலனை ஆண்டுக்கணக்கில் அனுபவித்துக் கொள்கிறார்கள். இதெல்லாம் பெரும்பாலும் பொதுநன்மைக்குக் கேடு விளைவித்துதான் செய்யப்படுகின்றன” என்றார். அளவு கடந்த காலதாமதங்களுக்கான தடைக்கற்களை நீதித் துறைதான் கண்டுபிடிக்க வேண்டும்.

”பதவியில் இருக்கும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான வழக்குகளில் அவை தொடரப்பட்ட ஓர் ஆண்டு காலத்துக்குள் வழக்கு விசாரணையை நீதிமன்றங்கள் முடித்துவிட வேண்டும்” என்று இன்றைய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா சொல்லியிருக்கிறார். முதல் வழக்காக இதிலேயே அதனை அமல்படுத்தலாமே?

”நீங்கள் எவ்வளவு பெரியவராக இருந்தபோதிலும் உங்களைவிட சட்டம் பெரிது” என்று இதே வழக்கில்தான் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.என்.வரியவா, எச்.கே.சீமா ஆகியோர் எழுதினார்கள். ”நான் தனியாக கடந்த ஆறு மாதங்களாக நீதிமன்றத்தில் உட்கார்ந்து வருகிறேன்.

தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளதுபோல் உணர்கிறேன்” என்று நீதிபதி பச்சாப்புரே சொல்லும் அளவுக்கு, ‘நீதிபதி பாலகிருஷ்ணா, இந்த வழக்கை தொடர்ந்து விசாரிக்கலாம்’ என்று உச்ச நீதிமன்றமே சொன்ன பிறகு, ”எனக்கு விசாரணை நடத்த விருப்பம் இல்லை” என்று பாலகிருஷ்ணா விரக்தி அடையும் அளவுக்கு, ”இனி இந்த கோர்ட்டுக்கே வர மாட்டேன்” என்று அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா நொந்துகொள்ளும் அளவுக்கு இழுத்தடிப்புகள் எதற்காக?

தடை கேட்டு மனு போடும்போதெல்லாம், ஒவ்வொரு மனுவுக்கும் அபராதம் போடுகிறார் இப்போதைய நீதிபதி குன்ஹா. இது கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படுகிறது. உயர் நீதிமன்ற நீதிபதிகள் அந்த அபராதத் தொகையை இன்னும் அதிகப்படுத்துகிறார்கள். இப்படியே போனால் இன்னொரு 10 ஆண்டு காலத்தை இந்த வழக்கு இழுக்கும். இது சட்டம், நியாய தர்மங்களுக்கே இழுக்காக அமையும்!

Thanks to vikatan.com

Exit mobile version