ilakkiyainfo

1966ஆம் ஆண்டே தமிழ் மக்களை ஏமாற்றிய தமிழரசுக் கட்சியனர்!!: (தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? பகுதி 24)

1966ஆம் ஆண்டே தமிழ் மக்களை ஏமாற்றிய தமிழரசுக் கட்சியனர்!!: (தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? பகுதி 24)
March 22
10:00 2016

 

1966ஆம் ஆண்டின் தமிழ் மொழி (விசேட ஏற்பாடுகள்) சட்ட ஒழுங்குகள் நிறைவேற்றப்பட்டமை ஒரு முழுமையான வெற்றி அல்லது சாதனை என்று சொல்லத்தக்கதாக இருக்கவில்லை.

ஏனென்றால், வடக்கு மற்றும் கிழக்குக்கு அப்பாலுள்ள தமிழர்களுக்கு அது எந்தவொரு தீர்வையும் தரவில்லை. அவர்கள் தொடர்ந்தும் தனிச் சிங்களச் சட்டத்தின் பாதிப்பை எதிர்நோக்கிக் கொண்டிருந்தார்கள்.

‘டட்லி-செல்வா’ ஒப்பந்தத்திலிருந்த  ‘தமிழ் பேசும் நபரொவர் தன்னுடைய கொடுக்கல் வாங்கல்களை தமிழ்மொழியில் நாடெங்கிலும் செய்யும் வாய்ப்பு வேண்டும்’ என்ற இணக்கப்பாட்டை 1966ஆம் ஆண்டின் தமிழ் மொழி (விசேட ஏற்பாடுகள்) சட்ட ஒழுங்குகள் நிறைவேற்றவில்லை.

தமிழ்த் தரப்பின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத இந்த சட்ட ஒழுங்குகளை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, லங்கா சம சமாஜக் கட்சி மற்றும் கம்யுனிஸ்ட் கட்சி ஆகியன கடுமையாக எதிர்த்தன.

இந்த எதிர்ப்பு டட்லி சேனநாயக்கவுக்கு கடும் அழுத்தத்தை வழங்கியது. ஆனால், டட்லி சேனநாயக்க ‘டட்லி-செல்வா’ ஒப்பந்தத்தை நிறைவேற்றுவார் என்று தமிழரசுக் கட்சி நம்பியது.

தமிழ் அரச அலுவலர்கள், சிங்கள மொழியறிவு இல்லாததால் தமது வேலையை இழக்கும் நிலையிலிருந்தார்கள்.

Murugeysen_TiruchelvamMurugeysen_Tiruchelvam
அவர்கள், தமிழரசுக் கட்சியின் அமைச்சரான   எம்.திருச்செல்வத்தைச் சந்தித்து நாம் தமிழரசுக் கட்சியின் கோரிக்கையை மதித்தே சிங்களம் படிக்காமல் இருந்தோம், இப்போது நாம் வேலைகளை இழக்கும் நிலையில் இருக்கிறோம் என தமது ஆதங்கத்தைப் பதிவு செய்தபோது, அமைச்சர் முருகேசன் திருச்செல்வம், தமிழரசுக் கட்சி இப்போது  அரசாங்கத்துடன் இணக்கப்பாடொன்றை எட்டியுள்ளது.

ஆகவே, இனி நீங்கள் சிங்களம் கற்காமல் இருப்பதற்கு காரணமில்லை. நீங்கள் சிங்களம்  கற்பதற்கான கால எல்லையை நீடித்துள்ளோம்.

ஆகவே, சிங்களத்தைக் கற்றுத் தேறுங்கள் என்று கூறியதாக தன்னுடைய ‘தமிழ் தேசத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் (ஆங்கிலம்)’ என்ற நூலில் வி.நவரட்ணம் குறிப்பிடுகிறார்.

v_navaratnam_5வி.நவரட்ணம்

தமிழ் அரச அலுவலர்களின் நிலையை நிர்வாக ரீதியில் தீர்ப்போம் என ‘டட்லி-செல்வா’ ஒப்பந்த பேச்சுவார்த்தையின் போது எஸ்மண்ட் விக்ரமசிங்ஹவும், முருகேசன் திருச்செல்வமும் சொன்னது இந்தத் தீர்வைத்தானா என வி.நவரட்ணம் கேள்வி எழுப்புகிறார்.

அப்படியென்றால் தமிழரசுக் கட்சி மக்களை ஏமாற்றியல்லா விட்டது என்றும் அவர் குறிப்பிடுகிறார். வேலையை இழக்கும் நிலையிலிருந்த  அரச உத்தியோகத்தர்கள், சா.ஜே.வே.செல்வநாயகத்தை அணுகினார்கள்.

அவர், அவர்களை அமைச்சர் திருச்செல்வத்தோடு பேசுமாறு கூறினார். நீங்கள் சிங்களம் கற்கத் தயாராக இல்லையென்றால் என்னால் ஒன்றும் செய்ய முடியாது என்று திருச்செல்வம் கையை விரித்தார்.

சிங்கள அறிவில்லாததால் அரச உத்தியோகத்தர்களாக பத்மநாதன், சுரேந்திரநாதன், குலமணி ஆகிய மூவரும் வேலையை இழந்தனர்.

தமிழரசுக் கட்சியை நம்பியவர்களுக்கு, தமிழரசுக் கட்சி செய்த துரோகம் இது என வி.நவரட்ணம் குறிப்பிடுகிறார்.

tkn-11-07-rm-98-dimஐக்கிய நாடுகள் சபைத் தூதுக்குழுவின் தலைவராக ஜீ.ஜீ.பொன்னம்பலம்

1966இல் பிரதமர் டட்லி சேனநாயக்க- ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்துக்கான இலங்கைத் தூதுக்குழுவின் தலைவராக அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தலைவரும், யாழ்ப்பாண தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீ.ஜீ.பொன்னம்பலத்தை நியமித்தார்.

இதனை பிரதமர் டட்லி சேனநாயக்கவின் நல்லெண்ண நியமனம் என்று கருதினாலும், இது தகுதிசார்ந்த நியமனமாகக் கொள்ளப்படவும் முடியும்.

மிகச்சிறந்த பேச்சாளரான ஜீ.ஜீ.பொன்னம்பலம், ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் அனைவரையும் கவரும்படியான உரையை நிகழ்த்தினார்.

அமைதி காக்கும் நடவடிக்கைகள் பற்றிக் குறிப்பிட்டவர், இந்நடவடிக்கைகள் ஒரு சில நாடுகளின் தனிப்பட்ட விருப்பில் அல்லது சிலநாடுகளின் உதவியில் அமைவது ஏற்புடையதல்ல என்றார்.

குறிப்பாக வளர்ந்த மற்றும் வளர்ந்துவரும் நாடுகளிடையான அதிகரித்துவரும் இடைவெளி பற்றிய கரிசனத்தை தனது உரையில் பதிவு செய்தார்.

அத்தோடு, வளர்ந்துவரும் நாடுகள் எதிர்நோக்கும் சவால்களையும் எடுத்துரைத்தார். இந்த உரையின் முடிவில் ஜீ.ஜீ.பொன்னம்பலத்தை சந்தித்து பாராட்டிய அமெரிக்க தூதுவரான பிரான்ஸிஸ்.

ஈ.வில்லிஸ், ‘வளர்ந்துவரும் நாடொன்றின் குரல் இதுவென்றால், நாமும் வளர்ந்து வரும் நாடாகவே இருக்க விரும்புகிறோம்’ என்ற கூறியதாக தனது கட்டுரையொன்றில் அ. விநாயகமூர்த்தி பதிவுசெய்கிறார்.

தமிழரொருவர் அமைச்சரானமை, தமிழரொருவர் ஐ.நா.தூதுக்குழுவின் தலைவரானமை எல்லாம் நல்லெண்ணத்தின் வெளிப்பாடுகளாக இந்தன.

ஆனால், நல்லெண்ணத்தை காட்டியளவுக்கு, தமிழ் மக்களின் அரசியற் தேவைகளை நிறைவேற்றுவதற்கு டட்லி அரசாங்கம் முயற்சி எடுக்கவில்லை என்பதுதான் வரலாறு கூறும் பாடம். ஆங்காங்கே நல்லெண்ண முயற்சிகள் இருதரப்பிலும் இடம்பெற்றன. ஆனால், அவை எதுவும் முழுவடிவம் பெறவில்லை.

a_Dudley_Senanayakaபிரதமர் டட்லி சேனநாயக்கவின் 1967 யாழ். விஜயம்

1967இல் பிரதமர் டட்லி சேனநாயக்க யாழ். விஜயம் ஒன்றை மேற்கொண்டார். யாழ். புதிய சந்தைக் கட்டடத் தொகுதிக்கு அடிக்கல் நாட்டுவதே அவரது விஜயத்துக்கான காரணமாக இருந்தாலும், நல்லெண்ண விஜயமாகவே பிரதமர் டட்லியின் யாழ். விஜயம் பார்க்கப்பட்டது.

விமானம் மூலம் யாழ். பலாலி விமானத்தளத்தை வந்தடையவிருந்த பிரதமர் டட்லியை யார் வரவேற்பது என்பதில் தமிழ்த் தரப்புத் தலைவர்களிடம் போட்டியிருந்தது.

பிரதமர் டட்லி – யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்வதால் அவரை வரவேற்கும் உரிமை யாழ்ப்பாணத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான தனக்கே உண்டு என்பது ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் நிலைப்பாடாக இருந்தது.

பலாலி விமானத்தளம் காங்கேசன்துறை தொகுதிக்குள் வருவதால், காங்கேசன்துறை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான தனக்கே வரவேற்கும் உரிமையுண்டு என சா.ஜே.வே.செல்வநாயகம் கூறினார்.

இது வரவேற்பை ஒழுங்குபடுத்திய அரசாங்க அதிபருக்கு பெரும் சங்கடத்தையும் சிக்கலையும் ஏற்படுத்தியது. வரவேற்பது தொடர்பான குறித்த வரைமுறையை அறியத்தருமாறு அவர்கள் பிரதமரின் அலுவலகத்தை தொடர்புகொண்டு கேட்டனர்.

பிரதமர் அலுவலகத்தின் நெறிப்படுத்தலின்படி மயிலிட்டி உள்ளூராட்சிசபைத் தலைவர் முதலில் மாலையிட்டு வரவேற்பதென்றும், இரண்டாவதாக சா.ஜே.வே.செல்வநாயகம் மாலையிட்டு வரவேற்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

முக்கிய அதிதிகள் விஜயம் செய்யும் போது, அவர்களை குறித்த பிரதேசத்தின் உள்ளூராட்சிசபைத் தலைவர் வரவேற்பது ஆங்கிலேய அரசியல் பாரம்பரியத்திலுள்ளதொன்றாகும். இன்றும் இதுவே பொருத்தமான வரைமுறையாகும்.

பிரதமர் டட்லி சேனநாயக்கவை வரவேற்க பெருமளவு மக்கள் திரண்டிருந்தனர். அநேக தலைவர்களும் திரண்டிருந்தனர்.

ஆனால், ஜீ.ஜீ.பொன்னம்பலம் மட்டும் அங்கிருக்கவில்லை. பிரதமர் டட்லி சேனநாயக்க வந்த விமானம் பலாலியில் தரையிறங்கியது.

விமானத்திலிருந்து முதல் ஆளாக ஜீ.ஜீ.பொன்னம்பலம் வெளியே வந்தார். தனக்கு வரவேற்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை, அதனால் பிரதமரோடு வரும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொண்டார்.

ஆரவாரமான வரவேற்பு பிரதமர் டட்லி சேனநாயக்கவுக்கு யாழ்ப்பாணமெங்கிலும் வழங்கப்பட்டது. அனைத்துத் தமிழ்க் கட்சியினரும் போட்டி போட்டுக்கொண்டு பிரதமர் டட்லி சேனநாயக்கவை வரவேற்றனர்.

பிரதமர் டட்லியின் வரவை எதிர்த்த ஒரே கட்சியினர் சண்முகதாசனின், இலங்கை கம்யுனிஸ்ட் கட்சி (பீகிங் பிரிவு) மட்டுமே. ஆனால், அவர்களது எதிர்ப்பு நடவடிக்கை பற்றி முன்னமே அறிந்த பொலிஸார், அவர்களை முற்றுகையிட்டு எதிர்ப்பு நடவடிக்கைகளைத் முறியடித்தனர்.

பிரதமர் டட்லி சேனநாயக்கவுக்கான இந்த வரவேற்பை தமிழ்க் கட்சிகளின் அல்லது தமிழ்த் தலைவர்கள் அரசியல் சரணாகதி என்று விமர்சிப்பவர்களும் உண்டு.

ஆனால், இன்னொரு வகையில் பார்த்தால், தமிழ்த் தலைவர்கள் தமது நல்லெண்ணத்தை வெளிப்படுத்த இதனை ஒரு சந்தர்ப்பமாகக் கொண்டார்கள் என்றும் சொல்லலாம்.

இன்று வரை இலங்கை அரசியல் வரலாற்றில் ‘கனவான்’ தன்மை மிக்க தலைவர்களாக வெகு சிலரே கருதப்படுகிறார்கள். அவற்றில் டட்லி சேனநாயக்க குறிப்பிடத்தக்கவர்.

சுயலாபத்துக்காக அரசியலை பயன்படுத்தாத தலைவர், ‘கனவான்’ தன்மையுள்ள நேர்மையான தலைவர் என்பதே பலரும் டட்லி சேனநாயக்கவுக்கு சூட்டும் புகழாரம்.

ஆகவே, அன்றைய தமிழ்த் தலைமைகள் இத்தகையதொரு ‘கனவான்’ தன்மை மிக்க ஓர் அரசாங்கத் தலைவருக்கு தமது நல்லெண்ணத்தை வெளிப்படுத்துவதனூடாக தமது மக்களுக்கான நன்மைகளைப் பெற்றுத்தர முனைந்திருக்கக்கூடும்.

ஆனால், வரலாறு அவர்களுக்கு வேறுவிதமான பாடத்தைக் கற்றுக்கொடுத்தது. பேரினவாத சக்திகளின் அழுத்தத்தை எந்தக் ‘கனவானினாலும்’ இதுவரை முறியடிக்க முடிந்ததில்லை.

அதற்கு டட்லி சேனநாயக்கவும் விதிவிலக்கல்ல என்பதை ஒரு வருடகாலத்திலேயே தமிழ்த் தரப்பு புரிந்துகொண்டது.

முடிவுக்கு வரத்தொடங்கிய ‘தேனிலவுக்காலம்’

1968 ஒரு சவால்மிக்க வருடமாக இருந்தது. ‘டட்லி-செல்வா’ கூட்டணியின் ‘தேனிலவுக்காலம்’ அதன் முடிவை நோக்கி நகரத்தொடங்கியது.

சா.ஜே.வே.செல்வநாயகமும் முதுமையின் ஆதிக்கத்தில் இருந்தார். முதுமையும் அவரை பீடித்திருந்த பாக்கின்ஸன்ஸ் நோயும் அவரது அரசியல் செயற்பாடுகள் முன்னிருந்தது போல இல்லாது பெருமளவு குறைந்துபோகக் காரணமானது.

இந்தவேளையில், எம்.திருச்செல்வத்தினதும் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தினதும் ஆதிக்கம் கட்சிக்குள் முன்னிறுத்தப்பட்டது.

கட்சியின் முக்கிய தலைவர்களான வி.நவரட்ணம், சி.ராஜதுரை ஆகியோர் தாம் ஓரங்கட்டப்படுவதாக உணர்ந்தனர். சி.ராஜதுரை, அமிர்தலிங்கத்தை ‘கார்ட்போர்ட் ஹிட்லர்’ என்று வர்ணித்தார்.

1953-லேயே பேராசிரியர் மயில்வாகனம், பேராசிரியர் சின்னத்தம்பி ஆகியோரால் தமிழ் பல்கலைக்கழகம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் யாழ்ப்பாணத்தில் இந்து பல்கலைக்கழகம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்றது. இலங்கை தமிழரசுக் கட்சியோ திருக்கோணமலையில் தமிழ் பல்கலைக்கழகம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்றது.

திருகோணமலையின் சிங்கள மயமாக்கத்தை தவிர்க்க இது அவசியம் என தமிழரசுக்கட்சி சொன்னது. திருகோணமலையில் சிங்களக் குடியேற்றங்களை அமைப்பதில் தொடர்ந்து வந்த அரசாங்கங்கள் அக்கறையோடு செயற்பட்டுக்கொண்டிருந்தன.

1871இல் 81.8% தமிழர்களைக் கொண்டிருந்த திருகோணமலையில், 1963இல் 31.9% மட்டுமே தமிழர்களாக இருந்தார்கள். அக்காலத்தில் 1.3% லிருந்து 29.6% மாக சிங்களவர்களின் எண்ணிக்கை மாறியிருந்தது.

திருகோணமலைத் துறைமுகம் 1956 வரை பிரித்தானிய கடற்படை வசம் இருந்தது. பிரித்தானிய கடற்படையின் வெளியேற்றத்தின் பின் முக்கிய வணிகத் துறைமுகமாக அது மாறியிருந்தது.

கப்பல் கம்பனிகள் பலவும் தமிழர்களுக்குச் சொந்தமாக இருந்ததுடன், துறைமுகத் தொழிலாளர்களாகவும் கணிசமானளவு தமிழர்கள் பணியாற்றினர்.

1967இல் தமிழ் மக்களின் விருப்புக்கு மாறாக திருகோணமலைத் துறைமுகம் தேசியமயமாக்கப்பட்டது. இதனைத் தமிழ் மக்கள் சிங்களமயமாக்கலாகவே பார்த்தனர். அரசின் பங்காளியான தமிழரசுக் கட்சியினால் இதனைத் தடுக்க முடியவில்லை. ஆனால், தொடர்ந்தும் அரசின் பங்காளியாக இருந்தது.

1968இல் எம்.திருச்செல்வம் மதராஸில் (சென்னை) இடம்பெற்ற உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் இலங்கை அரசின் சார்பாகப் பங்குபற்றி உரையாற்றியிருந்தார்.

ஆனால், உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு ஏற்பாட்டாளர்களோ, தமிழக அரசோ இலங்கையைச் சேர்ந்த தமிழறிஞர்களுக்கும், தமிழ்மொழிப் புலமையாளர்களுக்குமான உரிய இடத்தை வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்தது.

தமிழ் மொழிக்கு ஈழத்தவர் ஆற்றிய பங்களிப்பு புறக்கணிக்கப்படுவதாக ஈழத்து தமிழ் பத்திரிகைகள் குற்றம் சாட்டின. இது இலங்கையில் தமிழ் பல்கலைக்கழகமொன்றின் தேவையை உணர்த்தி நின்றது.

தமிழ் அரசியல் வரலாற்றைப் பார்க்கும் போது நாம் தமிழ், சிங்கள என்ற இரு இன அரசியலுக்கிடையிலான உறவை மட்டும் ஆராய்தல் போதுமானதல்ல. தமிழர்களுடைய அபிலாஷைகளைப்

புரிந்துகொள்வதற்கு தமிழர்களுக்கு உள்ளான அரசியலைப் புரிந்துகொள்வதும் அவசியமாகும். ‘தமிழ்த் தேசியம்’ என்று மேவி நிற்கும் குடைக்குள் பெருமளவிலான தமிழர்கள் ஒன்றுபட்டிருந்தாலும், தமிழர்களிடையே பிரதேசவாரி, குறிப்பாக சாதிவாரிப் பிரிவினை கணிசமானளவில் இருந்தது.

1968இல் நடந்த மாவிட்டபுரம் கோயில் நுழைவுப் போராட்டம் இந்த அடிப்படையில் முக்கியம் பெறுகிறது. தமிழர்கள், பெரும்பான்மைச் சிங்களவர்களிடையே தமக்கான உரிமைக்காகப் போராடிய வேளையில், தமிழர்களுக்குள் காலங்காலமாகத் சாதிரீதியில் தாழ்த்தப்பட்ட மக்கள், சாதிரீதியில் உயர்ந்ததாகக் கருதிய மக்களிடம் தம்முடைய உரிமைகளுக்காகப் போராடினார்கள்.

இலங்கைத் தமிழ் அரசியலில் யாரும் பேசாத அல்லது பேச விரும்பாத பக்கங்கள் இவை. தமிழ் இனம் தனக்கு எதிரான கொடுமைகளுக்கு நியாயம் தேடிக்கொண்டிருந்த வேளையில், தாம் தமக்கிடையே புரிந்த கொடுமைகளுக்கும் நியாயம் வழங்க வேண்டிய தேவை இருந்தது.

அது சாத்தியமாகும் போதுதான் தமிழினம் என்ற அடையாளத்தின் கீழ் ஒன்றுபடுவது சாத்தியமாகும். இந்த பிரதேசவாதமும் தமிழர்களுக்கிடையிலான பிரிவினைகளும் இன்றுவரை தொடர்வதைக் காணலாம்.

(தொடரும்…)

என்.கே.அஷோக்பரன் LLB (Hons)

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? பகுதி 23

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

September 2020
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 

Latest Comments

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

நல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com