ilakkiyainfo

ஜனாதிபதி – விக்கினேஸ்வரன் சந்திப்பு மாற்றத்துக்கு வழி வகுக்குமா?

பேச்சுவார்த்தைகள் நடத்துவதற்கு வருமாறு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள அழைப்பு ஏற்கப்படவில்லை. கூட்டமைப்பினால் மறுக்கப்பட்டிருக்கின்றது. இதற்கான தீர்மானம் வவுனியாவில் நடைபெற்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் உயர் மட்டக் கூட்டத்தில் எடுக்கப்பட்டிருந்தது.

அரசாங்கத்தின் வரவு- செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதையடுத்து, ஜனாதிபதி தனது பதிலுரையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை நோக்கி இந்த அழைப்பை விடுத்திருந்தார்.

நாட்டின் இனப்பிரச்சினை தீர்க்கப்படாமல் இழுபட்டுக் கொண்டிருக்கின்றது. இனப்பிரச்சினையானது, புரையோடி, எண்ணற்ற கிளைகளாகப் பரந்து விரிந்து பிரச்சினைகள் பல்கிப் பெருகிப் போயிருக்கின்றன. நாளாந்தப் பிரச்சினைகளாகவும், வாழ்வியல்  பிரச்சினைகளாகவும், அரசியல் மற்றும் பொருளாதார பிரச்சினைகளாகவும் அவைகள் இன்று பல வடிவங்களில் விசுவரூபமெடுத்திரு க்கின்றன.

இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டிய அவசரத்தேவைகள் இப்போது தவிர்க்க முடியாத வகையில் எழுந்திருக்கின்றன. இத்தகைய ஒரு சந்தர்ப்பத்திலேயே ஜனாதிபதி தமிழ்த்தேசிய கூட்டமைப்பை நோக்கி இணைந்து செயற்பட வருமாறு அழைப்பு விடுத்திருக்கின்றார்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை நோக்கி, ஜனாதிபதி பேச்சுவார்த்தைகளுக்காக அழைப்பு விடுத்திருக்கின்றார். இந்த அழைப்பை உதாசீனம் செய்வது சரியல்ல. அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகள் பலனளிக்கவில்லை. முறிந்துவிட்டன என்பதெல்லாம் உண்மைதான். இருந்தாலும், அதற்காக நாங்கள் தொடர்ச்சியாக ஒதுங்கியிருக்க முடியாது. அரசாங்கம் அழைப்பு விடுக்கும்போதெல்லாம், அதனை மறுத்து ஒதுக்கிக் கொண்டிருக்க முடியாது.

ஒதுங்கியிருக்கவும் முடியாது. பேச்சுவார்த்தைகளின்  மூலமாகத்தான் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டியிருக்கின்றது. எனவே, அரசாங்கத்தின் அழைப்பை ஏதாவது ஒரு கட்டத்தில் ஏற்று அதனுடன் பேச்சுக்கள் நடத்தத்தானே வேண்டும். எனவே இந்த அழைப்பை நாங்கள் சாதகமாக எடுத்து பேச்சுவார்த்தைகளுக்குப் போகலாம்தானே என்ற தொனியில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் சிந்தித்திருப்பதாகத் தெரிகின்றது.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வவுனியா கூட்டத்தில் சம்பந்தன் ஆற்றிய இப்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பிலான நீண்ட உரையில் இந்த சிந்தனை வெளிப்பட்டிருக்கின்றது. ஆயினும் அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகள் பலனளிப்பதாகத் தெரியவில்லை. அத்துடன், எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைப் பேரவை கூட்டத்தில் இலங்கைக்கு எதிராகக் கொண்டு வரப்படவுள்ள தீர்மானங்கள், அரசாங்கத்தின் தலைக்கு மேல் கூரிய வாளாகத் தொங்கிக் கொண்டிருக்கின்றது.

இந்தச் சந்தர்ப்பத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்துடன் பேச்சுவார்தைகளை நடத்துமானால், பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருகின்றன. நெருக்கடிகள் எதுவும் கிடையாது என சர்வதேசத்திற்குக் காட்டுவதற்கு அரசாங்கத்திற்கு வாய்ப்பாகிப் போகும்.

நாங்களே உள்ளூரில்  எமது   பிரச்சினைகளைத்   தீர்த்துக் கொள்வோம் என்று கூறி, சர்வதேச மட்டத்தில் மனித உரிமை, பொறுப்பு கூறல், நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல், அரசியல் தீர்வு காணுதல் உள்ளிட்ட விடயங்களில் ஏற்பட்டிருக்கின்ற நெருக்கடிகளை அரசாங்கம் சமாளிப்பதற்கு உதவியதாக முடியும் என்று கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தவர்கள் கருத்து வெளியிட்டிருந்தனர்.

ஆகவே, ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் கூட்டம் முடிவடையும் வரையில் அரசாங்கத்துடன் பேச்சுக்கள் நடத்தச் செல்லக் கூடாது என அவர்கள் வலியுறுத்தியிருந்தனர். இதனடிப்படையில், அரசாங்கத்தின் அழைப்பை இப்போதைக்கு ஏற்பதில்லை. மார்ச் மாதத்தின் பின்னர், நிலைமைகளை ஆராய்ந்து அதற்கேற்ப முடிவுகளை மேற்கொள்வது என்று வவுனியா கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

ஜனாதிபதியின் அழைப்பு

அரசாங்கத்துடன் இணைந்து தேசிய மட்டத்தில் தீர்வு காணவும், நல்லிணக்கத்தை அடையவும் எதிரணியைச் சேர்ந்த தமிழ்த்தலைவர்கள் முன்வரவேண்டும் என்று ஜனாதிபதி அழைத்திருந்தார். தேசிய நல்லிணக்கத்தையும், தேசிய ஒற்றுமையையும்  ஏற்படுத்துவதற்காக  எல்லா தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட  வேண்டியிருக்கின்றது என்பதை அவர் வலியுறுத்தியிருந்தார்.

அதற்காக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன், வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஆகியோரை நேரடியாகக் குறிப்பிட்டு, தேசிய ஒற்றுமையை உருவாக்குவதற்கு இருவரும் அரசாங்கத்துடன் கைகோர்த்துச் செயற்பட முன்வர வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தார். இவ்வாறு செயற்படுவதன் மூலம், உள்ளுர் அரசியல் முரண்பாடுகளினால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு இலங்கை ஒரு முன் உதாரணமாக அமைய முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

உண்மையில் ஜனாதிபதியின் அழைப்பானது, இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காண்பதற்காகத் தமிழ்த்தேசிய கூட்டமைப்புடன் நடத்தவேண்டிய நேரடி பேச்சுவார்த்தைகளுக்கல்ல. தமிழ் மக்களும் அரசாங்கமுமே இனப்பிரச்சினையின் பிரதான பங்காளிகளாவர். எனவே பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டுமானால், சம்பந்தப்பட்ட இரு தரப்பினரும் பேச்சுக்களில் ஈடுபட வேண்டும்.

பேச்சுக்கள் நடத்தி பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பில் முதலில் ஓர் இணக்கப்பாட்டை எட்ட வேண்டும். அதன் பின்னர்தான் சம்பந்தப்பட்ட ஏனைய தரப்பினருடன் தேவையானால் பேச்சுக்கள் நடத்தி ஓர் இணக்கப்பாட்டை எட்டி, அதனை நடைமுறைப்படுத்த வேண்டும். ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் எல்லா தரப்பினரும் இணைந்து பேச்சுக்கள் நடத்தி பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்பதே ஜனாதிபதியின் விருப்பமாகும்.

ஆனால் இத்தகைய ஒரு பேச்சுவார்த்தையில் தமிழர் தரப்பு விரும்புகின்ற, அதிகாரப் பரவலாக்கலுடன்கூடிய ஓர் அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தையாக இது தெரியவில்லை.

கட்டமைப்புடன் கூடிய ஒரு நிர்வாகச் செயற்பாடு – சுயமான. சுதந்திரமான ஓர் ஆட்சியதிகாரம் தேவை என்பதே தமிழர் தரப்பின் இனப்பிரச்சினைக்கான தீர்வின் அடிப்படை இலக்காகும். ஆனால் ஒற்றையாட்சியில், அதிகாரங்கள் மத்திய அரசாங்கத்திடம் மேலோங்கியிருக்கின்ற ஒரு நிலையே இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பதே அரச தரப்பிலான இனப்பிரச்சினைக்கான தீர்வின் அடித்தளமாகும். எனவே, இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காண்பதென்பதில் அரசுக்கும் தமிழர் தரப்புக்கும் இடையில் இலக்குகளில் பாரிய இடைவெளி காணப்படுகின்றது.

இந்த இடைவெளி குறைக்கப்பட வேண்டும். இரு தரப்பினரும் ஒரு நேர் கோட்டில் ஒன்றிணைய வேண்டும். ஓர் இணக்கப்பாட்டின் அடிப்படையில் பேச்சுக்கள் நடத்தப்பட வேண்டும். அப்போதுதான் நிரந்தரமான ஓர் அரசியல் தீர்வுக்கான பேச்சுக்கள் ஆக்கபூர்வமான முறையில் நடைபெறும்.

இரண்டு வகையான பேச்சுவார்த்தைகள்

பேச்சுவார்த்தைக்கு வருமாறு ஜனாதிபதி தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுத்திருக்கின்ற போதிலும், பேச்சுவார்த்தைகளைப் பொறுத்தமட்டில் இன்றைய நிலையில் இரண்டு விடயங்கள் காணப்படுகின்றன. மாகாண சபையின் நிர்வாகம் அதன் செயற்பாடுகள், அதற்குரிய சட்ட ரீதியான அதிகாரங்கள் மற்றும் அவற்றைப் பயன்படுத்தி, நிர்வாகச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான பேச்சுவார்த்தைகள். இது முழுக்க முழுக்க மாகாண சபையின் சீரான நிர்வாகச் செயற்பாடுகள், அதற்குரிய அதிகாரங்கள் என்பவற்றுடன் தொடர்புடையது.

இனப்பிரச்சினைக்கு அரசியல் ரீதியாகத் தீர்வு காண்பதற்கான பேச்சுவார்த்தைகள் என்பது மற்றுமொரு விடயம். இது மாகாண சபையிலும் பார்க்க அதிமுக்கியத்துவம் மிக்கது. ஏனெனில் வடமாகாண சபைக்கான தேர்தலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு போட்டியிட்டு வெற்றிபெற்றாலும்கூட, மாகாண சபை முறைமை என்பது இனப்பிரச்சினைக்குரிய தீர்வல்ல என்பது தமிழர் தரப்பின் தீர்க்கமான முடிவாகும்.

இலங்கை இந்திய ஒப்பந்தம் செய்யப்படுவதற்கு முன்னர், இனப்பிரச்சினைக்குத் தீர்வாக மாகாண சபை முறைமை பற்றி பேசப்பட்டபோதும்சரி, அதற்குப் பின்னரும்சரி, இனப்பிரச்சினைக்குரிய தீர்வாக மாகாண சபை முறையை தமிழ்த்தலைவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனை அவர்கள் அப்போதே நிராகரித்திருந்தார்கள்.

ஆயினும் தவிர்க்க முடியாத வகையில் இலங்கை -இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு, 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமும் கொண்டு வரப்பட்டு, மாகாண சபை முறைமை நடைமுறைப்படுத்தப்பட்டதனால், அதனை ஏற்றுச் செயற்படவேண்டிய கட்டாய நிலைமைக்குத் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையிலேயே வடமாகாண சபைக்கான தேர்தலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு களம் இறங்கி, விரும்பத்தகாதவர்களின் கைகளில் மாகாண சபை சென்றடையாமல் பாதுகாக்கப்பட்டிருக்கின்றது.

வடமாகாண சபைக்கான தேர்தல் நடைபெற்று, அதன் ஆட்சிப் பொறுப்பைத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பொறுப்பேற்றிருக்கின்றது. ஆனால், அந்தசபையின் நிர்வாகச் செயற்பாடுகளை சீராக முன்னெடுக்க முடியாத வகையில் பல முட்டுக்கட்டைகள் எழுந்திருக்கின்றன. இந்த முட்டுக்கட்டைகளை அகற்ற வேண்டிய அவசரத் தேவை இப்போது எழுந்திருக்கின்றது. முட்டுக்கட்டைகள் நீக்கப்படும் வரையில் அங்கு நிர்வாகத்தைக் கொண்டு செல்ல முடியாத நிலைமை உருவாகியிருக்கின்றது. எனவே, மாகாண சபை நிர்வாகம் தொடர்பாகவும், அதற்கென சட்டரீதியாக ஒதுக்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்துவதற்குரிய நிலைமைகளை உருவாக்கும், அரசாங்கத்துடன் பேச்சுக்கள் நடத்தப்பட வேண்டியிருக்கின்றது.

எனவே மாகாண சபைக்கான பேச்சுவார்த்தைகள், இனப்பிரச்சினை தீர்வுக்கான பேச்சுவார்த்தைகள் என இரண்டு வெவ்வேறு பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட வேண்டியிருக்கின்றது. இரண்டையும் ஒன்றாகக் கணிப்பிடவும் முடியாது. ஒன்றாகச் சேர்த்து தீர்வு காணவும் முடியாது.

மாகாண சபையின் நிர்வாகம் தொடர்பான பேச்சுக்கள்

மாகாண சபையைத் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பொறுப்பேற்று மூன்று மாதங்களாகின்றன. ஆனால் அந்த சபையினால் நிர்வாக ரீதியாக ஒரு துரும்பைக்கூட அசைக்க முடியாமல் இருக்கின்றது. இதற்கு இராணுவ பின்னணியைக் கொண்ட ஆளுனரும், அவருடைய சொற்படி நடக்கின்ற அதிகாரிகளுமே காரணம் என முதலமைச்சர் விக்கினேஸ்வரன் வெளிப்படையாகவே தெரிவித்திருக்கின்றார்.

இந்த அடிப்படையில்தான் இப்போதுள்ள ஆளுனரை நீக்கி, சிவில் பின்னணியைக் கொண்ட ஒருவரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவான முறையில் முன்வைக்கப்பட்டிருக்கின்றது. அதேபோன்று முதலமைச்சருடன் இணைந்து செயற்படத்தக்க ஒரு பிரதம செயலாளரை நியமிக்க வேண்டும், அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்களையும் முதலமைச்சரின் சிபாரிசுக்கமைய நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டிருக்கின்றது.

முட்டுக்கட்டைகள் நீக்கப்பட்டு வடமாகாண சபையை சீராகக் கொண்டு நடத்துவதற்குரிய சூழலை ஏற்படுத்தித் தரவேண்டும் எனக் கோரி வடமாகாண முதலமைச்சர் ஜனாதிபதிக்கு பல கடிதங்கள் எழுதியிருக்கின்றார். இருப்பினு ம் அவை குறித்து நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் அவர் நேரடியாக ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவைச் சந்தித்து நிலைமைகளை விளக்கி, தமது கோரிக்கைகளை முன்வைத்திருந்தார்.

அத்துடன் இந்த விடயங்கள் தொடர்பில் உடனடியாக ஜனாதிபதியைச் சந்தித்துப் பேச வேண்டியிருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்று உறுதியளிக்கப்பட்டிருந்த போதிலும், சந்திப்பும் நடைபெறவில்லை மாகாண சபை நிர்வாகத்தில் உள்ள முட்டுக்கட்டைகளும் நீக்கப்படவில்லை.

இந்த நிலையில்தான், ஜனாதிபதியை நேரடியாகச் சந்தித்துப் பேச்சுக்கள் நடத்தி பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான முயற்சிகளில் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் 2014 ஆம் ஆண்டின் புத்தாண்டு காலச் சூழலில் முயற்சிகளை மேற்கொண்டிருந்தார். ஆயினும் பொங்கலுக்குப் பின்னர் 19 ஆம் திகதி ஜனாதிபதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளும்போது, முதலமைச்சர் அவரைச் சந்தித்துப் பேச்சுக்கள் நடத்தலாம் என்று அவருக்குத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் ஜனாதிபதியை அங்கு சந்தித்துப் பேச்சுக்கள் நடத்துவதென்பது கடினமாக இருக்கும் என்பதால் உடனடியாக அவரைச் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். அதுவரையில் தான் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்குப் போகப்போவதில்லை என ஜனாதிபதியின் செயலாளரிடம் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் உறுதியாகக் கூறிவிட்டார். இதனையடுத்தே ஜனாதிபதிக்கும் முதலமைச்சருக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் வியாழனன்று 2 ஆம் திகதி நடைபெற்றுள்ளது.

சில விடயங்களில் இணக்கம்

இந்தப் பேச்சுவார்த்தைகளில் முதலமைச்சருடன் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் முக்கியமாகக் கலந்து கொண்டிருந்தார். வடமாகாண சபையின் முக்கிய கோரிக்கையாகிய ஆளுனரை நீக்கி சிவில் பின்னணியைக் கொண்ட புதியவரை  நியமிப்பது தொடர்பில்  இணக்கம் காணப்படவில்லை. அவரை அவ்வாறு  நீக்கினால், அரசாங்கத்திற்கு  அரசியல் நெருக்கடிகள்  ஏற்படும் என்பதை ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அதேநேரம், அவரை அந்தப் பதவியில் இருந்து அப்புறப்படுத்தப்படாத படியினால் தங்களுக்குப் பெரும் அரசியல் நெருக்கடி ஏற்பட்டிருப்பதாக முதலமைச்சர் கூறியுள்ளார். அத்துடன் ஆளுனருடைய செயற்பாடுகள் என்ன, அவைகள் எவ்வாறு மாகாண சபையின் செயற்பாடுகளி;ல் முட்டுக்கட்டைகளை ஏற்படுத்தியிருக்கின்றது என்பது பற்றியும் இந்தச் சந்திப்பில் ஜனாதிபதிக்கு எடுத்துக் கூறி, அவரை அப்புறப்படுத்த வேண்டிய கட்டாயத் தேவை குறித்து எடுத்துக்கூறப்பட்டுள்ளது,

இதனையடுத்து, ஆளுனரின் அத்தகைய செயற்பாடுகளைத் தவிர்த்துக்கொள்ளுமாறு அவருக்கு அறிவுறுத்தி அவ்வாறு நடப்பதற்கு முற்றுப்புள்ளி வைப்பதுடன், அவருடைய பதவிக்காலம் இன்னும் சில மாதங்களில் முடிவடையும்போது புதியவரை நியமிப்பது என்றும் உறுதியளிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், இந்தப் பேச்சுவார்த்தைகளில் மற்றுமொரு முக்கிய விடயமாகிய இப்போதைய பிரதம செயலாளரை உடனடியாக நீக்கி, புதியவரை நியமிப்பதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. இதன்படி, முதலமைச்சரின் செயலாளராகவுள்ள திவாகரனை உடனடியாக பிரதமச் செயலாளராக நியமிப்பதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதம செயலாளராக இருந்த ரங்கராஜனை பிரதம செயலாளராக நியமிப்பதற்கு ஜனாதிபதி தரப்பில் ஒப்புதலளிக்கப்படவில்லை. ஆனால், அவரை மாகாண சபையின் முக்கிய நிபுணத்துவ ஆலோசகராக நியமிப்பதற்கு ஒப்புதல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய பதவி மாகாணசபையில் இல்லாத போதிலும், அவ்வாறான ஒரு பதவியை அனைத்து மாகாண சபைகளிலும் ஏற்படுத்துவதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிக்கின்றது.

அது மட்டுமல்லாமல், அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்களை முதலமைச்சரின் சிபாரிசுக்கமைய நியமிப்பதற்கும் ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடமாகாண சபையைப் பொறுத்தமட்டில் அதனுடைய நிர்வாகம் தொடர்பில் அரசாங்கத்துடனான இந்தப் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் காணப்பட்டுள்ள போதிலும் இன்னும் பல விடயங்களை அரசாங்கத்துடன் பேச்சுக்கள் நடத்த வேண்டிய தேவை இருக்கின்றது. குறிப்பாக பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் அரசாங்கத்துடன் பேச்சுக்கள் நடத்த வேண்டியிருக்கின்றது. அதற்கான காலம் இன்னும் கனியவில்லை. எனவே, மாகாண சபை தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெறுவதற்கான அறிகுறிகளே காணப்படுகின்றன.

இருப்பினும், அரசியல் தீர்வு குறித்து பேச்சுக்கள் நடத்துவதற்கான அறிகுறிகள் எதனையும் காணவில்லை. மாறாக மாகாண சபை தொடர்பிலான பேச்சுவார்த்தைகளையே தமிழ்த்தேசிய கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தைகள் எனக் கூறி காலத்தைக் கடத்தும் போக்கினை அரசாங்கம் கடைப்பிடித்தாலும் பிடிக்கலாம் என்பதில் சந்தேகமில்லை. இத்தகைய போக்கு சர்வதேசத்திற்குப் போக்கு காட்டுவதற்காகக்கூட மேற்கொள்ளப்படலாம்.

-செல்வரட்னம் சிறிதரன்-

Exit mobile version