Site icon ilakkiyainfo

முடிவுக்கு வந்த கட்டப்பஞ்சாயத்து

வெட்டு, குத்து, வழிப்பறி, வீடுடைப்பு, தீ வைப்பு, அச்சுறுத்தல், கொலை, கொள்ளை கட்டப் பஞ்சாயத்து போன்றவற்றை பல சினிமாக்களில் நாம் பழிவாங்கும் படலமாக சித்திரிக்க பார்த்திருக்கிறோம். அவ்வாறு சினிமாவில் காட்டப்படுவது போன்றே கட்டப் பஞ்சாயத்தில்  ஈடுபடும்  பாதாள உலகக் கோஷ்டியினரை நடைமுறையில் நாம் காண்பது மிக அரிது.

எனினும்  கடந்த மூன்று  வருடங்களாக  ‘ஆவா குறூப் ‘ என்ற பெயரில் வடக்கில், பிரதானமாக யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளை சினிமா பாணியில் அச்சுறுத்திவந்த பாதாள உலகக் கோஷ்டியினரை கோப்பாய் விஷேட பொலிஸ் குழு இந்த வாரத்தின் ஆரம்பத்தில் கைது செய்தது.

யாழ்ப்பாணத்தில் பல்வேறு வாள்வெட்டுச் சம்பவங்களூடாக தன்னை அடையாளப்படுத்தியிருந்த‘ஆவா குறூப்’ எனும்  இந்த பாதாள உலகக்  குழுவானது  2011 ஆம் ஆண்டு  ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்.மாவட்டத்தின்  கோப்பாய், அச்சுவேலி,  சுன்னாகம், மானிப்பாய், கோண்டாவில் உள்ளிட்ட பல பகுதிகளில் தனது கைவரிசையினை தொடர்ச்சியாக காட்டிவந்த இந்த குழு தொடர்பில் யாழில் உள்ள பலரும் அச்சமடைந்த நிலையில் நாட்களை கடத்தலாயினர்.

இந்த ஆவா குறூப் தொடர்பில் பொதுமக்களிடம் காணப்பட்ட அச்ச நிலைமை காரணமாக யாழ். மாவட்டத்தின் எந்தவொரு பொலிஸ் நிலையத்திலும் இந்த குழுவினருக்கு எதிராக முறைப்பாடுகள் செய்யப்படவில்லை.

எனினும் இந்த குழுவினர் தொடர்பில் பொலிஸாருக்கு பல்வேறு தகவல்கள் கிடைத்திருந்தன. எனினும் முறைப்பாடுகள் எதுவும் இல்லாததினால் அவர்களை கைது செய்வதில் சிக்கல் நிலவியது.

இவ்வாறானதொரு நிலையிலேயே வடமாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தரவும் மற்றும் யாழ். மாவட்டத்துக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபராக ரொஹான் டயஸும் அண்மையில் புதிதாய் நியமனம் பெற்றிருந்தனர்.

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர மற்றும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஹான் டயஸ் ஆகியோரின் கவனத்திற்கு ‘ஆவா குறூப்’ தொடர்பான விடயம் கொண்டுசெல்லப்பட்டிருந்த நிலையில் அவர்களை கைது செய்ய மிக நுணுக்கமான நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டி இருந்தது.

இவ்விரு பிரதிப் பொலிஸ் மா அதிபர்களின் மேற்பார்வையின் கீழ் சுமார் 25 பேர் கொண்ட ஐந்து பொலிஸ் குழுக்கள் இந்த பாதாள உலகக் கோஷ்டியினரை கைது செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததுடன் அதுதொடர்பில் காய் நகர்த்தப்பட்டுக்கொண்டிருந்தது.

இதன் போது தான்  இந்த ஆவா குறூப் குழுவினர் கோண்டாவில் பகுதியில் உள்ள ஒரு வீட்டினுள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்தவர்களைத் தாக்கியுள்ளதுடன் வீட்டுக்கும் சேதம் விளைவித்துள்ளனர். அத்துடன் அந்த வீட்டின் வாயிற் கதவினையும் உடைத்து எறிந்துள்ள அந்த குழுவினர் அது தான் செய்யும் கடைசி நாசகார வேலை என்பதை அறியாது வழமையான தமது கட்டப்பஞ்சாயத்து பாணியில் திமிராய் திரிந்துள்ளனர்.

இதன் போது காயமடைந்தவர்களை வைத்தியசாலைக்கு எடுத்து செல்லும் போது பொலிஸார் அது தொடர்பில் வினவியதை தொடர்ந்து கோப்பாய் பொலிஸ் நிலையத்துக்கு ஆவா குறூப் தொடர்பில் முதல் முறைப்பாடு கிடைத்தது.

எனினும் அந்த முறைப்பாட்டில் ஆவா குறூப்பை சேர்ந்தவர்களே தம்மை தாக்கியதாகவோ, தமது வீட்டுக்கு சேதம் விளைவித்ததாகவோ குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. ஏனெனில் அந்த குழு மீது அவர்களுக்கு இருந்த பயமே ஆகும். தாக்குதல்தாரிகள் யார் என்று தெரிந்தும் பொது அடிப்படையில் ஒரு முறைப்பாட்டை அளிக்கச் செய்துள்ளது.

எவ்வாறாயினும் இது ஆவா குறூப் என்பதை புரிந்துகொண்ட கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஸ்ரீனிக சஞ்ஜீவ ஜயக்கொடி உப பொலிஸ் பரிசோதகர்களான ஏக்கநாயக்க அமரசிங்க (2599), கருணாரத்ன (18090) ஆகியோருடன் பொலிஸ்  கான்ஸ்டபிள்களான  உதேஷ் (48998), பண்டார  (66265),  வீரசூரிய(73111), மஞ்சுள (74505),குமார (90503) மற்றும் சாமர (63746) ஆகியோரை  உள்ளடக்கிய  விஷேட பொலிஸ் குழுவினரை சந்தேக நபர்களை அந்த பாதாள உலகக் கோஷ்டியினரை தேடும் படலத்தில் ஈடுபடுத்தினார்.

இதன்படி,கோண்டாவில் பிரதேசத்தில் குறித்த வீடு மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபரொருவரை சுன்னாகம் பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்ய முடிந்தது. கைது செய்யப்பட்ட நபரிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் அவர்களது ஊகம் சரியானதே என்பது உறுதியானது.

அந் நபரை கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழு தீவிர விசாரணைக்கு உட்படுத்திய நிலையில் அவரிடம் வாக்கு மூலம் ஒன்றையும் பதிவு செய்துகொண்டது. அந்த வாக்கு மூலத்தில் கோண்டாவில் பகுதியில் வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்டு அங்கிருந்தவர்களுக்கும் காயம் ஏற்படுத்தியது ஆவா குறூப் எனப்படும் பாதாள உலகக் குழுவே என குறிப்பிடப்பட்டுள்ளதுடன் அந்த குழு தொடர்பிலான பல்வேறு தகவல்களும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

இதனை அடுத்து உசாரடைந்த கோப்பாய் பொலிஸ் குழு விசாரணைகளில் வெளிப்படுத்தப் பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு ஆவா குறூப் தலைவரை சுற்றி வளைத்தது.அதன் படி இணுவில் பகுதியை சேர்ந்த 21 வயதுடைய ஆவா என அழைக்கப்படும் குமரேசரட்ணம் வினோதனை பொலிஸார் கைது செய்தனர்.

இந்த 21 வயதான பாதாள உலகத் தலைவனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அந்த குழு தொடர்பான அனைத்து தகவல்களையும் பொலிஸாரால் சேகரிக்க முடிந்தது.

கடந்த திங்களன்று பொலிஸார் மேற்கொன்ட நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டிருந்த வினோதன் பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலத்தில் தனது ஆவா பாதாள உலகக் கும்பலில் 30 பேர் அங்கம் வகிப்பதாக தெரிவித்துள்ளார். அத்துடன் தமது இந்த அடாவடி நடவடிக்கைகளுடன் பெண்ணொருவரும் இணைந்து செயற்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தகவல்  பொலிஸாருக்கு  புதியதாக இருப்பினும்  அது தொடர்பில் பொலிஸார் ஆராய்ந்தனர். அதன் விளைவாக ஒரு பெண் இரவு வேளைகளில் இந்த கும்பலால் முன்னெடுக்கப்பட்ட அடாவடித்தனங்களுக்கு ஒத்துழைப்பு நல்கி இவர்களுடன் சென்று வருவது தெரியவந்தது. இதனை அடுத்து அந்த பெண்ணை கைது செய்வதற்கான நடவடிக்கையினையும் பொலிஸார் மேற்கொண்டனர் .

அதன் விளைவாக அப்பெண் நேற்று முன்தினம் யாழ்ப்பாணம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட பெண்ணின் கணவர் வெளிநாடொன்றில் தொழில் செய்து வரும் நிலையில் அப்பெண் ஆவா குழுவில் இணைந்து செயற்பட்டு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஏற்கனவே இந்த கும்பலின் தலைவரை கைது செய்ததை தொடர்ந்து அந்த கும்பலின் அங்கத்தவர்கள் 11 பேரை பொலிஸார் அடுத்தடுத்து வெவ்வேறு பிரதேசங்களில் வைத்து கைது செய்தனர்.

அதனடிப் படையில் ஆவா குறூப்பை சேர்ந்த 13 உறுப்பினர்களைக் கைது செய்துள்ளதாக குறிப்பிடும் பொலிஸார் ஏனையோரை தேடி வலைவிரித்து ள்ளதாக குறிப்பிட்டனர். இது வரை கைது செய்யப்பட்டவர் களிடமிருந்து 9 மோட்டார் சைக்கிள்கள் மோட்டார் சைக்கிளின் இருக்கைக்கு கீழே மறைத்து வைக்கப்பட்டிருந்த இரு கைக்குண்டுகளும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவற்றைவிட பல்வேறு குற்றச் செயல்களை மேற்கொள்ள இந்த ஆவா குழு பயன்படுத்திய 12 வாள்கள் மற்றும் இரு நக்கிள்ஸ் எனப்படும் தாக்கும் ஆயுதமும் கைப்பற்றப்பட் டுள்ளது.

கோப்பாய் பொலிஸாரின் தகவலின்படி கைது செய்யப்பட்டவர்கள் 17 வயதிற்கும் 30 வயதிற்கும் இடைப்பட்டவர்களாவர். அத்துடன் தலைவரை தவிர ஏனையோர் நல்ல கட்டுடல் கொண்டவர்கள் என கோப்பாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த 30 பேர் கொண்ட ஆவா குறூப் ஆனது மூன்று பிரிவுகளாக பிரிந்து இயங்கி வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணமெங்கும் கட்டப் பஞ்சாயத்தை அரங்கேற்றி வந்த இந்த குழு, தமது குழுவினர் வரும் போது மடித்து கட்டப்பட்ட சாரத்தை அவிழ்த்து தமது கால்களில் விழுந்து வணங்க வேண்டும் எனவும் பாதையில் நிற்கும் போது தலைக்கவசம் கழற்றப்பட வேண்டும் எனவும் பலரை வற்புறுத்தியுள்ளது.

இதனை விட இந்த ஆவா குழு வானது ஒப்பந்த அடிப்படையில் தனது அராஜகங்­களை அரங்கேற்றி­யுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பிரதானமாக வாள்களை செய்து விநியோகிக்கும் இந்த ஆவா குழு, பெற்றுக் கொள்ளப்படும் ஒப்பந்தங்களின் அடிப்படையில் வீடு புகுந்து தாக்குதல் நடத்தல், அச்சுறுத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றவியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த குழுவின் ஜெயா என்ற நபரே ஒப்பந்தங்களைப் பெற்றுக்கொள்பவர் என பொலிஸார் சுட்டிக்காட்டினர்.

தமது பகைவர்களை பழிவாங்க சினிமா படங்களில் கொடுக்கப்படும் ஒப்பந்தங்களைப் போன்றே இங்கும் ஒப்பந்தங்கள் பரிமாற்றப்பட்டு இந்த அராஜகம் அரங்கேற்றப்பட்டு வந்துள்ளது.

இதனைவிட  இற்றைக்கு  சில மாதங்களுக்கு முன்னர் மானிப்பாய் நகரில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தரின் கைகளை வெட்டி காயப்படுத்தி­யமை தொடர்பிலும் தேடப்பட்ட­வர்கள் இந்த ஆவா கூறூப் குழுவினரே என கோப்பாய் பொலிஸ் நிலையத்தின் விசாரணை அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

சன்னா, ஹாவா மற்றும் கண்ணா என அழைக்கப்படும் அந்த குழுவின் 3 உறுப்பினர்களே பொலிஸ் உத்தியோகத்தரின் கைகளை வெட்டிக் காயப்படுத்தியவர்கள் என சந்தேகிப்பதாக பொலிஸார் சுட்டிக்காட்டுகின்றனர்.

வீடுடைத்தல், அச்சுறுத்தல் போன்றவற்றுக்கு மேலதிகமாக வீதியில் பெண்களை கேலி செய்தல், அவர்களை கையைப் பிடித்து இழுத்தல் போன்ற பல்வேறு பெண்களுக்கு எதிரான குற்றங்களையும் இந்த குழுவினர் அரங்கேற்றியிருப்ப­தாகவும் ஆவா குழு மீதுள்ள பயம் காரணமாக அவை தொடர்பில் எவரும் பொலிஸில் முறையிடத் தயங்கி வந்திருப்பதாகவும் யாழ்.பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த குழு கைது செய்யப்பட்டதை தொடர்ந்து கோப்பாய், அச்சுவேலி உள்ளிட்ட பல பொலிஸ் நிலையங்களுக்கு இந்த குழுவுக்கு எதிரான பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி குறிப்பிடுகிறார்.

மானிப்பாயில் வீட்டுக்கு தீ வைத்தது, சுன்னாகத்தில் வீட்டை உடைத்து சேதப்படுத்தியது, அச்சுவேலி செல்வநாயகம் புரத்தில் 5 பேரை வாளால் வெட்டி காயப்படுத்தியது,கோண்டாவிலில் முச்சக்கர வண்டிக்கு தீ வைத்தது என இந்த ஆவா குழு செய்துள்ள அட்டகாசங்கள் தொடர்பில் தற்போது பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதனை விட ஒரு அழிவு இராச்சியத்தில் இருந்து விடுதலை கிடைத்ததாய் எண்ணி கோப்பாய் பொலிஸாருக்கு நாளாந்தம் கடிதங்களும் குறுஞ்செய்திகளும் தொலைபேசி அழைப்புக்களும் வருவதாகவும் அனைவரும் பொலிஸாருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி குறிப்பிடுகிறார்.

யுத்த வடுக்கள் நீங்கி மக்கள் இயல்பு வாழ்வை நோக்கி திரும்பிக் கொண்டிருக்கையில் இவ்வாறு சில ஆயுத கலாசாரம் கொண்ட சிலர் ஒன்றிணைந்து மேற்கொள்ளும் பாதாள உலக செயற்பாடுகளால் மக்கள் இன்னும் நொந்து போவார்களே தவிர அவர்களை அரவணைக்க மாட்டார்கள். மக்களின் பயத்தை தமது பாதாள தொழிலுக்கு மூலதனமாக பயன்படுத்தும் இவ்வாறானவர்கள் தொடர்பில் பொலி ஸார் தொடர்ந்தும் அவதானமாக செயற்பட வேண்டும் என்பது எங்கள் எதிர்பார்ப்பு.

-எம்.எப்.எம்.பஸீர் –

முக்கிய குறிப்பு
ஆவா குறுாப்பை  மட்டும்  கைதுசெய்தால்  போதாது. ஆவா  குழுவுக்கு  வக்காளத்து  வாங்கி  அறிக்கை  வெளியிட்ட  ரௌடி   சிவாஜிலிங்கம்  போன்றோரையும்  பிடித்து   தீவிரவிசாரணை   உட்படுத்த வேண்டும்.

வழிப்பறி, களவு , கள்ளக்காதல்… தாலியறுப்பு  போன்ற  ஒரு  சினவிடயம்   யாழ்பாணத்தில்  நடந்தாலும்  பெரிய  கொட்டை எழுத்தில்  பிரசுரிக்கும்   யாழ்பாணத்திலிருந்து   வெளிவரும்   பத்திரிகைகள் (உதயன்)  ஏன்  இந்தவிடயத்தை  இவ்வளவு  நாளும்   மறைத்தார்கள்?

இந்த  குழுவுடன்  தமிழ்தேசிய அரசியல்  வாதிகள், முதலாளிகள், அதிகாரவர்கத்தினர்கள்  எந்தவகையில்  தொடர்பில் உள்ளார்கள்  என்பதையும்  பாகுபாடற்று   விசாரணை செய்யவேண்டும்.

முக்கியமாக  தமிழ் தேசிய  கூட்டமைப்பு  உள்ளூராட்சி   மன்ற  உறுப்பினர்களிலிருந்து  பாராளுமன்ற  உறுப்பினாகள் வரை   எல்லாருமே   பெரிய  பட்டாளங்களுடன்  ரௌடிகளாக  உலாவருவதாக  யாழ்பாணத்தில் உள்ளவர்கள் கதைக்கிறார்கள்.

அவர்களை பொலிசாரே  அல்லது  இராணுவமோ  எதுவும்  செய்யமுடியாது என்கின்ற நிலையில் தான் இப்படி  அகங்காரம்  பிடித்துக்கொண்டு  திரிகின்றார்கள். இவர்கள் தங்களுடைய  தேவைக்கு இந்த பாதாள குழுக்களை பயன்படுத்தியிருக்கலாம்.

பொலிசாரின்  அல்லது அரசியல்வாதிகளின்  பின்புலம்    இல்லாது   மூன்றுவருடங்களுக்கு  மேலாக இக்குழு  இயங்கியிருக்க  முடியாது.

Exit mobile version