ilakkiyainfo

பஞ்சாபி – தமிழ் முறைப்படி ஹேமமாலினி மகள் திருமணம் நடந்தது

பிரபல சினிமா நட்சத்திர தம்பதியான தர்மேந்திரா–ஹேமமாலினியின் 2–வது மகள் அகானா தியோல் திருமணம் இன்று மும்பையில் நடந்தது. தாய் மற்றும் சகோதரியைத் தொடர்ந்து அகானாவும் இந்திப் படங்களில் நடித்துள்ளார்.

மணமகன் டெல்லி தொழில் அதிபர் வைபவ் வோரா. இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டதைத் தொடர்ந்து கடந்த 2 நாட்களாக மும்பையில் ‘மெகந்தி’ விழா நடந்தது. இன்று காலையில் மும்பையில் எளிமையான முறையில் திருமணம் நடந்தது.

ஹேமமாலினி தனது முதல் மகள் ஈஷா தியோல் திருமணத்தை தமிழ் – மராத்தி கலாச்சாரம் கலந்து நடத்தினார். 2–வது மகள் திருமணத்தை பஞ்சாபி – தமிழ் முறைப்படி நடத்தினார். முதல் பாதி பஞ்சாபி முறையிலும் 2–வது பாதி தமிழ் கலாச்சாரமும் கலந்து திருமண விழா நிகழ்ச்சிகள் நடந்தன.

வட இந்திய புரோகிதர்கள் 2 பேரும், தென் இந்திய புரோகிதர் ஒருவரும் முன்நின்று திருமணத்தை நடத்தினார்கள். திருமணத்தில் தந்தை தர்மேந்திரா கலந்து கொண்டார். ஆனால், அவரது முதல் மனைவி மகன்களான பாபிதியோல், சன்னிதியோல் கலந்து கொள்ளவில்லை.

ஆனால், மற்றொரு மகனான அபய் தியோல் மட்டும் ஹேமமாலினி குடும்பத்தினருடன் நெருக்கமாக இருந்தார். அவர் மட்டும் திருமணத்துக்கு வந்திருந்தார்.

50ad3904-f0ba-465f-8bce-2f12a5cac650_S_secvpfஅகானாவை மணந்த தொழில் அதிபர் வைபவ் வோரா கடந்த 2012–ம் ஆண்டு ஜூன் மாதம் ஈஷா தியோல் திருமணத்துக்கு வந்திருந்தார். அப்போது அவரும் அகானாவும் சந்தித்துக் கொண்டனர். அதன்பிறகு இருவருக்கும் நட்பு ஏற்பட்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

திருமண நிகழ்ச்சிக்கான பாதுகாப்பு பணியில் நடிகர் சல்மான்கானின் பாதுகாவலர்கள் ஈடுபட்டு இருந்தனர். மணமக்களுக்கு டெல்லியில் வருகிற 5–ந் தேதி வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதில் பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கலந்து கொள்வார் என்று கட்சி வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

 

Exit mobile version