Site icon ilakkiyainfo

உக்ரைனிலிருந்து ரஷ்ய படைகளை வாபஸ் பெற புடினுக்கு ஒபாமா அறிவுரை

 

கீவ்: உக்ரைன் நாட்டை முற்றுகையிட்டுள்ள ரஷ்ய படைகளை வாபஸ் பெறும்படி, ரஷ்ய அதிபர், விளாடிமிர் புடினுக்கு, அமெரிக்க அதிபர், ஒபாமா அறிவுறுத்தியுள்ளார்.

சோவியத் யூனியன் உடைந்த பின், உக்ரைன், தனி நாடானது. பொருளாதாரத்தில் பின் தங்கியிருந்த உக்ரைனை, ஐரோப்பிய யூனியனில் இணைக்கும்படி கோரி, எதிர்க்கட்சியினர், இரண்டு மாதங்களாக தொடர் போராட்டம் நடத்தினர்.

இவர்களை ஒடுக்குவதற்காக, அரசு, பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. இந்த சட்டத்தைப் பயன்படுத்தி, போராட்டக்காரர்கள் மீது, கடந்த வாரம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், 25 பேர் கொல்லப்பட்டனர்.


போராட்டம் கட்டுக்குள் வராததால், அதிபர் யானுகோவிச், தலைமறைவானார். அதிபரை பதவி நீக்கம் செய்து விட்டதாக, உக்ரைன் பார்லி., அறிவித்தது. இடைக்கால அதிபராக, அலெக்சாண்டர் துருச்சினோவ் பொறுப்பேற்று உள்ளார்.

இந்நிலையில், க்ரீமியா பகுதியில், யானுகோவிச் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த மாகாணத்தின் சட்டசபையை, ரஷ்ய படைகள், கடந்த வாரம் முற்றுகையிட்டன. ரஷ்ய ஆதரவாளர்கள், சட்டசபையை கைப்பற்றி, அங்கு, ரஷ்ய கொடிகளை ஏற்றினர்.

இதற்கு மறுநாள், க்ரீமியா மாகாணத்தில் உள்ள இரண்டு விமான நிலையங்களை, ரஷ்ய ஆதரவாளர்கள் தங்கள் வசப்படுத்தினர். உக்ரைன் படைகளின் தலையீட்டால், விமான நிலையங்கள் மீட்கப்பட்டன.

உக்ரைன் எல்லையில், 1.5 லட்சம் ரஷ்ய வீரர்கள், போர் பயிற்சியில் ஈடுபட்டு உள்ளனர். ரஷ்ய படைகளின் அத்துமீறலுக்கு, உக்ரைன் நாட்டின் இடைக்கால அதிபர், அலெக்சாண்டர் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து, அமெரிக்க அதிபர் ஒபாமா, ரஷ்ய அதிபர் புடினுடன், 90 நிமிடங்கள் தொலைபேசியில் பேசினார்.


அப்போது அவர் கூறியதாவது: ரஷ்ய படைகள் நுழைந்துள்ளதன் மூலம், உக்ரைன் நாட்டின் இறையாண்மை பாதிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டில் உள்ள ரஷ்யர்கள், பாதிப்புக்குள்ளாவதாக நீங்கள் நினைத்தால், அது குறித்து, உக்ரைன் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தலாம், ஐ.நா., சபையில் தெரிவிக்கலாம்,  சர்வதேச பார்வையாளர்களை அனுப்பி பிரச்னைகளை தீர்க்கலாம்.

எனவே, உக்ரைனை ஆக்கிரமித்துள்ள ரஷ்ய படைகளை வாபஸ் பெற்று, அங்கு நிலவும் பதட்டத்தை தணிக்க வேண்டும். இவ்வாறு ஒபாமா கூறினார்.

ரஷ்ய அதிபர், விளாடிமிர் புடின் குறிப்பிடுகையில், உக்ரைன் நாட்டில் உள்ள ரஷ்யர்களின் நலனை பாதுகாக்கும் பொறுப்பு எங்களுக்கு உள்ளது. ரஷ்யர்கள் மீது, உக்ரைன் அரசு கிரிமினல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

எனவே, தான் ரஷ்ய படைகள், உக்ரைனுக்கு அனுப்பப்பட்டுள்ளன, என்றார். ரஷ்ய படைகள், உக்ரைனிலிருந்து வாபஸ் பெறாவிட்டால், ரஷ்யாவில்  நடைபெற உள்ள, ஜி8 உச்சி மாநாட்டை புறக்கணிக்கப்போவதாக, அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகள் எச்சரித்துள்ளன.

Exit mobile version