Site icon ilakkiyainfo

யாழ்ப்பாண விடுதிகளில் கைது செய்யப்பட்டவர்களுக்கு பிணை வழங்க நீதிமன்றம் மறுப்பு

யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது விடுதிகளில் இருந்து கைது செய்யப்பட்ட 7 பேருக்கு பிணை வழங்க யாழ். நீதவான் நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது.

குறித்த 7 சந்தேகநபர்களும் நேற்றும் இன்றும் (3,4) நீதிமன்றத்தில் பொலிஸாரால் ஆஜர்படுத்தப்பட்டனர்.

பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் அரியாலையில் இயங்கிவந்த விடுதி ஒன்றில் இருந்தும் நல்லூரில் இயங்கி வந்த விடுதி ஒன்றில் இருந்தும் 5 பெண்கள் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து  இவர்கள் யாழ்ப்பாண பொலிஸாரினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதுடன் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.

இந்தக் கைது நடவடிக்கை தொடர்பில் தனித்தனியாக இருவேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, அரியாலையில் கைது செய்யப்பட்ட 5 பேருக்கும் எதிராக அனுமதியற்ற விடுதியில் தங்கியிருந்தனர் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

நல்லூரில் இயங்கிய விடுதியில் கைது செய்யப்பட்டவர்கள் மீது சட்டவிரோதமாக மசாஜ் நிலையத்தினை நடத்தி வந்தனர் என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

இவர்களில் நல்லூர் பகுதியில் உள்ள விடுதியில் வைத்து கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களை எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்தது.

அரியாலையில் இயங்கிவந்த விடுதியில் கைது செய்யப்பட்ட ஏனைய நான்கு சந்தேகநபர்களும் இன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அவர்களை எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களில் இரண்டு பெண்கள் தென்பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது

Exit mobile version