Site icon ilakkiyainfo

நிறைவுக்கு வந்தது மன்னார் மனித புதைக்குழி அகழ்வு : இதுவரை 80 மனித எலும்புக் கூடுகள் மீட்பு

 

 மன்னார், மாந்தை திருக்கேதீஸ்வரம் மனித புதைக்குழியில் இதுவரை மேற்கொள்ளப்பட்டு வந்த மனித எலும்புக்கூடுகள் அகழும் பணிகள் இன்று புதன் கிழமையுடன்  முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மன்னார் திருக்கேதீஸ்வரம் மாந்தை பகுதியில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி நீர் இணைப்பிற்காக குழியொன்று தோண்டிய போது எலும்புக்கூடுகள் உள்ளமை தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில் மன்னார் நீதவானின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட நிலையில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 23 ஆம் திகதி தொடக்கம் இம்மாதம் 3ஆம் திகதி திங்கட்கிழமை வரை 32 தடவைகள் குறித்த மனித புதைகுழி மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் தோண்டப்பட்டது.

இதன் போது சுமார் 80 மனித எலும்புக்கூடுகள் மற்றும் மனித எச்சங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணத்தின் உத்தரவிற்கமைவாக மீட்கப்பட்ட குறித்த எலும்புக்கூடுகள் மற்றும் மனித எச்சங்கள் 80 பெட்டிகளில் தனித்தனியாக பொதி செய்யப்பட்டு மன்னார் பொது வைத்தியசாலையில் ஒதுக்கப்பட்ட இடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று புதன்கிழமை 33 ஆவது தடவையாக மனித புதைகுழி தோண்டும் முகமாக திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி உள்ள இடத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று   இடம்பெற்றது.

மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் இடம் பெற்ற விசேட கலந்துரையாடலின் போது குறித்த அகழ்வுப்பணியில் ஈடுபட்டு வந்த அனுராதபுர சட்ட வைத்திய நிபுணர் டி.எல்.வைத்தியரெட்ண, கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பிரதம பொலிஸ் பரிசோதகர் விக்கிரம சேகர ஆகியோருக்கு இடையில் நீண்ட நேரம் கருத்து பகிர்வு இடம்பெற்றது.

இந்த கருத்து பகிர்வின் இறுதியாக குறித்த மனித புதைக்குழியின் அகழ்வுப்பணிகள் இன்று புதன்கிழமையுடன் (5) முடிவுக்கு கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பெட்டிகளில் அடைக்கப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள 80 மனித  எலும்புக்கூடுகள் மற்றும் மனித எச்சங்களை ஆய்வுக்கு அனுப்பும் வகையில் அவற்றை எங்கு கொண்டு செல்வது தொடர்பில் எதிர்வரும் மே மாதம் 9 ஆம் திகதி மன்னார் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கும் படி மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version