ilakkiyainfo

ஆப்கன் அதிபர் கர்சாய்க்கு பெண் குழந்தை… இந்திய மருத்துவமனையில் பிறந்தது

குர்கான்: ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் கர்சாயின் மனைவிக்கு டெல்லி அருகே உள்ள குர்கான் போர்ட்டிஸ் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையைப் பார்ப்பதற்காக கர்சாய் மருத்துவமனைக்கு வந்து சென்றுள்ளார்.

07-fghanistan-president-hamid-இது கர்சாய் தம்பதிக்கு 3வது குழந்தையாகும். இதற்கு முன்பு பிறந்த இரு குழந்தைகளும் ஆப்கானிஸ்தானில்தான் பிறந்தன. ஆனால் இம்முறை கர்சாயின் மனைவியின் பிரசவத்தில் சில சிக்கல்கள் ஏற்படலாம் என்று டாக்டர்கள் கருதியதால்தான் இந்த முறை இந்தியாவுக்கு வந்து அவர் குர்கான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இங்கு அதி நவீன மருத்துவ வசதிகள் இருப்பதால் இந்தியாவை கர்சாய் தம்பதி தேர்வு செய்ததாம். செவ்வாய்க்கிழமை காலை குழந்தை பிறந்தது. தாயும், சேயும் நலமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்தியாவுக்கான  ஆப்கானிஸ்தான் தூதர் சாய்தா முகம்மது அப்தலி கூறியதாவது:

செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணியளவில் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் நலமாக உள்ளனர்.

குழந்தை மற்றும்  மனைவியைப் பார்க்க அதிபர் கர்சாய் டெல்லி வந்து பின்னர் குர்கான் மருத்துவமனைக்கு வந்தார். அவர் பின்னர் கொழும்பு புறப்பட்டுச் சென்றார். தனது மனைவி மற்றும் குழந்தையுடன் சிறிது நேரம் மகிழ்ச்சியாக செலவிட்டார் அதிபர் என்றார். கர்சாய்க்கு 56 வயதாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் குழந்தை பிறப்பு குறித்து மருத்துவமனையிலிருந்து அதிகாரப்பூர்வ செய்தியும் அறிக்கையும் வெளியிடப்படவில்லை. பாதுகாப்பு காரணமாக இந்த முழு விஷயமும் மிக ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. ரா மற்றும் ஐ.பி. உளவுப் பிரிவினர் இந்த நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தனர்.

கர்சாயின் மனைவியுடன் அவரது உறவினர்கள் சிலரும் வந்து தங்கியுள்ளனர். இன்று மாலை கர்சாயின் மனைவி டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று தெரிகிறது.

இந்தியாவுடனான தொடர்பு… கர்சாய்க்கும், இந்தியாவுக்கும் நிறைய தொடர்புகள் உள்ளன. அவர் படித்தது இந்தியாவில்தான். அதாவது இமாச்சல் பல்கலைக்கழகத்தில்தான் அவர் படித்தார்.

தஞ்சமளிக்கும் இந்தியா… மேலும், முன்பு   தலிபான்கள் வசம் ஆப்கானிஸ்தான் சிக்கியிருந்தபோது அவர்களை எதிர்த்துப் போரிட்டு வந்த முக்கியக் குழுவைச் சேர்ந்த அப்துல்லா அப்துல்லா தனது குடும்பத்தினரை டெல்லியில்தான் பாதுகாப்பாக தங்க வைத்திருந்தார்.

அவருக்கு இந்திய அரசு பாதுகாப்பு கொடுத்திருந்தது. பின்னர் தலிபான்கள் வீழ்ந்தவுடன் அப்துல்லா தனது குடும்பத்தை மீண்டும் தனது நாட்டுக்கு அழைத்துச் சென்றார். பாதுகாப்பு அமைச்சராகவும் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version