ilakkiyainfo

மாயமான மலேஷிய விமானம் தொடர்பில் மர்மம்: 24 மணிநேரத்தின் பின் விமானம் திரும்புவது ரேடாரில் பதிவு

 

மலேசிய விமானம் காணாமல் போன 24 மணி நேரத்திற்கு பின்னர் அது மீண்டும் திரும்பி வருவது ரேடார் சமிக்ஞைகள் காட்டுவதாக மலேசிய அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதனையடுத்த இந்த விமானத்தை தேடும் மீட்புக் குழுக்கள் தனது தேடுதல் பகுதியை விரிவு படுத்தியுள்ளன.

இதில் விமானத்தில் சென்ற இரு பயணிகள் களவாடப்பட்ட போலியான கடவுச்சீட்டுகளுடன் பயணித்திருப்பது தெரியவந்ததையடுத்து அவர்களை கண்டுபிடிக்க சி.சி.டி.வி. கெமரா மூலம் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

மலேசிய தலைநகரில் கோலாம்பூரில் இருந்து சீனத் தலைநகரான பீஜிங்கிற்கு பறந்து கொண்டிருந்த மலேசிய விமான சேவைக்கு சொந்தமான எம்.எச்.370 விமானம் தெற்கு வியட்னாமில் வைத்து கடந்த வெள்ளிக்கிழமை காணாமல் போனது.

இதில் பயணிகள், சிப்பந்திகள் என 239 பேர் இருந்துள்ளனர். காணாமல் போன விமானத்தை தேடி வியட்னாமின் தென் சீன கடற்பகுதியில் 24 மணி நேரத்திற்கும் மேலாக கடல், தரை என அனைத்துப் பகுதிகளிலும் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

எனினும் தேடுதல் நடவடிக்கை மலேசியாவின் மேற்கு கடற்பகுதிக்கும் விரிவுபடுத்தப்பட்டதாக மலேசிய சிவில் விமானப் போக்குவரத்து தலைவர் அஸ்ருதீன் அப்துல் ரஹ்மான்   நேற்று கோலாம்பூரில் நடந்த ஊடக மாநாட்டில் குறிப்பிட்டார்.

விமானத்தில் செல்ல பதிவு செய்திருந்த 5 பயணிகள் கடைசி நேரத்தில் அவர்களது பயணத்தை ரத்துச் செய்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

விமானத்தை தேடும் வேட்டையில் 20 விமானங்கள், 40 கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக மலேசிய ஆயுதப்படைகளின் தளபதி ஜெனரல் சுல்கிப்லி ஸின் குறிப்பிட்டார்.

இதில் பதிவாகியிருக்கும் ரேடார் சமிக்ஞைகள் குறிகள் அதிக கவனம் செலுத்தி விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக மலேசிய விமானப்படைத் தளபதி ரொட்சாவி தாவுத் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ரேடார் சமிக்ஞைகளின்படி காணாமல் போன விமானம் தனது பயணப்பாதையில் மீண்டும் திரும்பி வந்து கொண்டிருப்பது பதிவாகியுள்ளது. தென் சீன கடற்பகுதியில் எண்ணெய் படிந்திருக்கும் அடையாளங்களை வியட்னாம் கப்பற்படையின் படகுகள் முன்னர் கண்டுபிடித்திருந்தன. எனினும், அங்கு விமானத்தின் எந்த பாகமும் கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்த விமானத்தில் பயணித்திருக்கும் நான்கு பயணிகள் குறித்து சந்தேகம் இருப்பதாக மலேசிய போக்குவரத்து அமைச்சர் ஹிஷாமுத்தீன் ஹ¥ஸை ஆரம்பத்தில் குறிப்பிட்ட போதிலும் இருவர் மீதே சந்தேகம் ஏற்பட்டிருப்பதாக பின்னர் தெரிவித்தார்.

இதில் போலியான இத்தாலி மற்றும் அவுஸ்திரேலிய கடவுச்சீட்டுகளை பயன்படுத்தியிருக்கும் இருவர் விமானத்தில் செல்வதற்கான டிக்கட்டுகளை ஒரே நேரத்தில் முன்பதிவு செய்திருப்பது தெரியவந்துள்ளது. இந்த இருவரும் கடந்த சனிக்கிழமை பீஜிங்கில் இருந்து ஐரோப்பாவுக்கு செல்வதற்கும் ஒரே நேரத்தில் விமான டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர்.

இந்த கடவுச்சீட்டுகளுக்கு சொந்தக்காரர்கள் தமது கடவுச்சீட்டு அண்மைய ஆண்டுகளில் தாய்லாந்தில் வைத்து களவாடப்பட்டதாக முறையிட்டுள்ளனர். இந்த விவகாரம் குறித்து எப்.பி.ஐ. உட்பட சர்வதேச புலனாய்வு நிறுவனங்களும் விசாரணைகளை முடுக்கிவிட்டிருப்பதாகவும் அனைத்து கோணங்களிலும் விசாரணை தொடர்வதாகவும் ஹ¥சைன் குறிப்பிட்டார்.

“எமது புலனாய்வுத்துறையினர் தமது செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளனர். தீவிரவாத தடுப்பு பிரிவும் விசாரணைகளை ஆரம்பித்திருக்கிறது. இது தொடர்பிலான அனைத்து   நாடுகளும் அறிவுறுத்தப்பட்டுள்ளன” என்றும் அவர் கூறினார்.

எனினும், எமது மற்றும் குடும்பத்தினரின் முதல் இலக்கு காணாமல் போன விமானத்தை கண்டுபிடிப்பதாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த விமானத்தில் 14 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் பயணித்துள்ளனர். மூன்றில் இரண்டு பங்கினர் சீன நாட்டவர்கள் ஆவர். ஏனையோர் ஆசியா, வடஅமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாட்டவர்களாவர்.

தீவிரவாத நடவடிக்கை குறித்து எழுப்பப்படும் சந்தேகங்கள் பற்றி கேட்கப்பட்ட போது மலேசிய பிரதமர் நஜீப் ரஸாக், “அனைத்து சாத்தியங்கள் பற்றியும் விசாரணை நடத்துகிறோம். முடிவொன்றுக்கு வருவது முன்கூட்டியதாக இருக்கும்” என்றார்.

இந்த விமானம் உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை நள்ளிரவு 1.30 மணி அளவிலேயே மாயமாகியுள்ளது. தெற்கு வியட்னாமில் வைத்து அதன் ரேடார் சமிக்ஞை மறைந்துள்ளது. விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு சபையுடன் விமானம் கடைசியாக மலேசியாவின் கிழக்கு கடற்கரையில் இருந்து 120 கடல் மைல் தொலைவில் வைத்து தொடர்பு கொண்டிருப்பதாக மலேசிய விமான சேவை குறிப்பிட்டுள்ளது.

விமானத்தில் இருந்த பயணிகளின் உறவினர்கள் மலேசிய மற்றும் சீன விமான நிலையத்தில் குவிந்துள்ளனர். அவர்களுக்கு விசேட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. விமானம் பற்றி இன்னும் விபரங்கள் தெரியாதது குறித்து பலரும் தமது ஆத்திரத்தை வெளியிட்டு வருகின்றனர். எனினும் ஏதாவது அதிசயம் நிகழுமாக என்று எதிர்பார்த்திருப்பதாக பல உறவினர்களும் குறிப்பிட்டுள்ளனர்.

10TH_MALAYSIA_1783207fஇருள் காரணமாக நேற்று முன்தினம் இரவு நிறுத்தப்பட்ட வான் ஊடான தேடுதல் நடவடிக்கைகள் ஞாயிற்றுக்கிழமை காலை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.

மலேசியா, வியட்னாம் விமானம் மற்றும் படகுகளை தேடுதல் வேட்டைக்கு அனுப்பியிருப்பதோடு அமெரிக்காவின் ஏவுகணை அழிக்கும் இந்த விமானமும் தேடுதல் வேட்டைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அமெரிக்க போக்குவரத்து பாதுகாப்பு நிபுணர்களும் இந்த விசாரணையில் இணைந்துள்ளனர்.

Exit mobile version