இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரவுள்ள தீர்மானத்தை யார் ஆதரிப்பர், யார் எதிர்ப்பரென்றும் அது எவ்வளவு கடுமையானதாயிருக்குமெனவும் பலவாறான கற்பனைகள் கொடிகட்டிப் பறக்கின்றன. ஒவ்வொரு அரசியல் ஆரூடக்காரரும் தான் சொல்வது பத்திரிகை நிறுவனத்துக்கும் வாசகர்கட்கும் மன மகிழ்வூட்டும் விதமாக அமையுமாறு கவனித்துக்கொள்ளுகிறார்.
நாம் கேட்பது நாம் கேட்க விரும்புவதாக இருக்கலாம். ஆனால் அது உண்மையல்லவென்றால் முடிவில் நட்டப்படுவோர் நாமே. தமிழ் மக்களிடையே ஒரு வகையான எதிர்பார்ப்பு சிலவராங்களாகக் கட்டியெழுப்பப்பட்டு வருகிறது.
புலம்பெயர்ந்த மேட்டுக்குடிகளின் நெருக்குவாரத்தின் கீழ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தன் பங்கிற்கு அமெரிக்கத் தீர்மானத்துக்கு ஆதரவு திரட்டும் முயற்சிகளில் இறங்கி ஆபிரிக்காவுக்கும் இலத்தீன் அமெரிக்காவுக்கும் படையெடுக்கப் போவதாக வாசித்தேன்.
சும்மா சிரிப்பதா வயிறு குலுங்கச் சிரிப்பதா என்று தெரியாததால், மக்களைப் பாதிக்கும் பிரச்சினைகளில் எல்லாத் தமிழ்த் தலைவர்களும் செய்வது போல, நானும் பேசாமலிருந்து விட்டேன்.
இத்தனை அமளிதுமளிக்குமிடையே பாக்கியசோதி சரவணமுத்து அளித்த நேர்காணல் 2.3.2014 ஞாயிறு தினக்குரலில் வெளியாகியிருந்தது. ஜெனீவாவில் என்ன நடக்கக்கூடும் என்பதைப் பற்றித் தர்க்க ரீதியாகச் சிந்தித்துக் கருத்துக்கூறியிருந்தார்.
இலங்கையின் சர்வதேச உறவுகள் மிக மோசமாக உள்ளமையையும் அவர் குறிப்பிட்டிருந்தார். அதற்கான அடித்தளம் எப்போதோ இடப்பட்டுவிட்டது. எவ்வாறாயினும், அவர் சொல்லத்தவறிய அல்லது சொல்லாமற் தவிர்த்த ஒரு விடயம் உள்ளது.
அது அமெரிக்காவின் உள் நோக்கங்கள் பற்றியது. மற்றப்படி அவர் சொன்னதை வாசித்தால் நமது ஆருடக்காரர்களின் புனைவுகளால் நாம் அதிகம் ஏமாறமாட்டோம்.
அமெரிக்கா, கிருஷ்ண பரமாத்மா தன்னைப் பற்றிச் சொன்னதுபோல, தர்மம் நலிந்து அதர்மம் தழைத்தோங்கும் போது தர்மத்தை நிலைநாட்ட யுகந்தோறும் மீள மீளத் தோன்றுகிற ஒரு சக்தியின் நவீன வடிவமல்ல என்று நமக்கு இப்போதைக்காவது விளங்கியிருக்கும்.
இன்றைய அமெரிக்கா, அதாவது இரண்டாம் உலகப்போருக்குப் பின்பான அமெரிக்கா எங்காவது தர்மம் தலைதூக்கும் வாய்ப்பு இருந்தால் அதைத் தன் முள்ளுச் சப்பாத்தால் மிதித்து அழிக்க ஆயத்தமாயுள்ள ஒரு பிசாசின் அவதாரமாகவே தெரிகிறது.
அதையேதான் சாவெஸ் ஐ.நா. சபையில் ஜோஜ்புஷ் உரையாற்றி வெளியேறிய பின்பான தனது உரையின் போது சுட்டிக்காட்டினார். எனவேதான், அமெரிக்கா உண்மையிலேயே தமிழருக்குச் சார்பாக நிற்கிறதென்றால், தமிழர் மிக மோசமான ஒரு சமூகமாக இருக்கும் வாய்ப்பு அதிகம்.
நல்ல காலம், அமெரிக்கா தமிழருக்கு ஆதரவாக இல்லை. தமிழ் மக்களை அமெரிக்காவுக்குப் பின்னால் அலையத் தூண்டும் மேய்ப்பர்கள் எல்லோருக்கும் விளங்க வேண்டிய உண்மைகள் சிலதுண்டு.
இலங்கை, அமெரிக்காவுக்குக் கேந்திர முக்கியமான ஒரு தீவு. தனது நோக்கங்கட்கு இசைவான ஒரு ஆட்சி இலங்கையில் இருப்பதை அது விரும்புகிறது.
எனவே, அதன் தெரிவு தமிழருக்கும் சிங்களவருக்குமிடையிலானதாக இருக்கும் என்றால், அது யார் தரப்பில் நிற்கும் என்று நமக்கு விளங்கவேண்டும். விளங்க விரும்பாதவர்களின் தூக்கத்தைக் கலைக்க நான் விரும்பவில்லை.
அமெரிக்கா இலங்கையில் அதிகம் விரும்பக்கூடிய ஆட்சி மகிந்த ராஜபக்ஷ ஆட்சி அல்ல என்று ஊகிப்பது கடினமல்ல. எனவே, ராஜபக்ஷ ஆட்சியைக் கவிழ்க்க அது உள்ளூர விரும்பலாம். ஆனால், உடனடியாக அதில் சில பிரச்சினைகள் உள்ளன.
இப்போதெல்லாம் அமெரிக்காவுக்குத் தன் படைகளை ஈடுபடுத்தி ஆட்சிக் கவிழ்ப்பை நடத்த விருப்பம் குறைவு. இன்னொரு ஆப்கானிஸ்தானுக்கோ. இன்னொரு ஈராக்குக்கோ இன்னொரு சோமாலியாவுக்கோ கூட அது ஆயத்தமாக இல்லை.
எனவே, அது உள் நாட்டில் தனக்கு உடன்பாடான சக்திகளைப் பாவித்து ஆட்சிக் கவிழ்ப்பை நடத்துகிறது. உக்ரேனில் நடந்ததும் அதுவே. எனினும், அமெரிக்காவின் எதிர்பார்ப்புக்கள் ரஷ்யக் குறுக்கீட்டால் தவறலாம்.
எந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்கேனும் அமெரிக்கா ஆதரவு தெரிவித்தால், அந்த ஆட்சியின் இடத்தில் வரப்போவது நல்லாட்சியாயிருக்கும் என்று எதிர்பார்ப்பவர்களிடம் அரசியல் விவேகத்தை எதிர்பார்க்க இயலாது.
அமெரிக்கா வெனெசுவேலாவில் ஒரு ஆட்சி மாற்றத்திற்காக கடுமையாக முயல்கிறது. இதன் ஆண்டுகள் முன்பு ஹொண்டூராஸில் ஒரு சதிப் புரட்சியை ஆதரித்தது. இங்கெல்லாம், ஆட்சிக் கவிழ்ப்பின் பிறகு எத்தகைய ஆட்சி அமையும் என்ற நிச்சயம் அதற்கு இருந்துள்ளது.
பொருளாதாரத் தடைகள் மூலம் மேற்கொண்ட ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிகள் பலவும் வெற்றி பெற்றதாகத் கூற இயலாது. கியூபாவுக்கு எதிரான வணிகத் தடையைப் போல, அமெரிக்காவுக்குப் பெரிய மூக்குடைப்பு எதுவுமில்லை.
வடகொரியா, சிம்பாப்வே, ஈரான் போன்று அமெரிக்க வணிகத் தடைகல் தமது நோக்கத் திற் தவறிய சூழ்நிலைகள் பல. ஆனாற் சில இடங்களில் அமெரிக்க மிரட்டல் வரையறைக்குட்பட்டுப் பயனளித்துள்ளது.
எனினும், ஆட்சி மாற்றம் என்று வரும்போது, ஒரு வலிய மாற்று அணி ஆயத்தமாக இல்லாமல் அதற்கு மக்கள் ஆதரவு இல்லாமல், வருகிற எவ் வணிகத் தடையும் அந்நிய நெருக்கு வாரமும் ஒரு மக்கள் விரோத அரசாங்கத்திற்கும் வலிவூட்டும்.
இலங்கை அரசாங்கத்தின் மீது அமெரிக்க நெருக்கு வாரங்கள் வலுத்துள்ளன. இலங்கை அரசாங்கம் அமெரிக்காவினதும் மேற்குலகினதும் பிடியிலிருந்து நழுவ இயலாது. ஆனால், இலங்கை அரசாங்கத்தை ஒரு வரையறைக்கு மேல் நெருக்க இயலாத ஒரு சூழ்நிலை உள்ளது.
சீனாவை விட முக்கியமாக இலங்கை அரசாங்கத்தைப் பாதுகாக்கும் அக்கறை இந்தியாவுக்கு உண்டு. ஏனெனில், இலங்கை மீதான அமெரிக்க ஆதிக்கம் இந்தியாவின் பிராந்திய மேலாதிக்க நோக்கங்கட்குத் தடையாயிருக்கும்.
இலங்கையில் ஒரு இராணுவத் தளத்தை நிறுவும் வாய்ப்போ இலங்கையை வேறுவகையில் தனது இராணுவ நோக்கங்கட்காக இந்தியாவுக்கு எதிராகப் பாவிக்கும் வாய்ப்போ சீனாவுக்கு இப்போதைக்கு இல்லை என இந்தியா அறியும்.
சீனாவுடனான உடனடிப் போட்டி வணிகத்தை விட முக்கியமாக உட்கட்டமைப்பு விருத்தி முதலீடுகள் பற்றியது. இலங்கையில் ஏற்படக்கூடிய எந்த ஆட்சி மாற்றமும் இந்தியாவுக்கு அதிகம் உடன்பாடான ஒரு அரசாங்கத்தைக் கொண்டு வரும் வாய்ப்பில்லை என இந்தியா அறியும்.
எனவே இலங்கை மீதான அமெரிக்க மேற்குலக பொருளாதாரத் தடை எதுவும் நிச்சயமாகத் தமிழர் உட்பட அனைத்து மக்களையும் பாதிக்குமளவுக்கு அரசாங்கத்தை கவிழ்க்க உதவுமா என்பது ஐயத்திற்குரியது.
இலங்கையில் இப்போதுள்ள ஆட்சி மக்கள் விரோத ஆட்சி என்பதில் எனக்கு ஐயமில்லை. சிங்கள மக்களிடையிலும் ஆட்சியாளர் மீதான வெறுப்பும் எதிர்ப்புணர்வும் வளர்ந்து வருகிறது.
இருப்பினும், அயல் உதவியுடன் நிகழக்கூடிய ஒரு ஆட்சி மாற்றத்தைச் சிங்கள மக்களிற் கணிசமானோர் ஏற்பதாக இருந்தால், அந்த ஆட்சி மாற்ற முயற்சி அவர்களுக்கு உடன்பாடான அடையாளம் பெறவேண்டும்.
இலங்கைத் தமிழர்களின் நலன்கட்காகப் புலம்பெயர்ந்த தமிழரின் தூண்டுதலாலேயே மேற்குலகு ஒரு கடும் போக்கைக் கடைப்பிடிக்கிறது என்ற பிரசாரம் தமிழர் மத்தியில் போன்று சிங்கள மக்கள் மத்தியிலும் தீவிரமாக முன்னெடுக்கப்படுகிறது.
எனவே, இலங்கை அரசாங்கம் மேற்குலகின் நெருக்குவாரங்கள் அனைத்திற்குமான பழியைப் “புலிகள் மீதும்’ புலிகளின் முகவர்கள் மீதும் சுமத்தித் தன்னைக் காப்பாற்ற முயலும். அதன் மூலம் அது தனது அடக்குமுறை இயந்திரத்தை மேலும் வலுவூட்டவும் வசதி ஏற்படும்.
மேற்குலகின் அக்கறைகள் தமிழர் நலன் சார்ந்தனவல்ல என நமக்கு விளங்கவேண்டும். மேற்குலகு முன்னெடுக்கும் வேலைத்திட்டம் அதன் உலக ஆதிக்க நோக்கங்களாலும் அதை நடைமுறைப்படுத்துவதற்கு உள்ள வாய்ப்பு வசதிகளாலும் அதற்குத் தடையாயுள்ள பிராந்தியக் காரணிகளாலும் முடிவாகிறதே ஒழிய, குறுந் தமிழ்த் தேசியவாத விருப்பு வெறுப்புக்களால் அல்ல.
எனவே, தங்களாலேயே சர்வதேசம் இலங்கையைக் குறிவைக்கிறது என்ற பொய்யைப் பரப்புவதினின்று தமிழ்த் தலைமைகளும் அவர்களுடைய புலம்பெயர்ந்த போஷகர்களும் விலகுவது அறிவுடைமை. நமது இன்னல்களை கருத்துரைப்பது முக்கியம். அதைப் பிறர் தவறாகப் பாவிக்க உதவுவது முட்டாள்த்தனம்.
மேற்குலகை “வசப்படுத்தும்’ முயற்சிகளில் ஒரு சிறு பங்கையேனும் இந்த அரசாங்கத்தின் இடத்தில் பேரினவாத நோக்கற்றுச் சமூக நீதியையும் சனநாயகத்தையும் நிலைநிறுத்த முயலும் சிங்களச் சக்திகளுடன் நல்லுறவை நோக்கி முன்னெடுக்க நம்மால் ஏன் இயலவில்லை?
-கோகர்ணன்-