‘உத்தம வில்லன்’ படத்தின் போஸ்டர் காப்பியில்லை என்றும், மேக்கப் போடுவது அவ்வளவு இலகுவான வேலை இல்லை என்றும் கொதித்தெழுந்திக்கிறார் நடிகர் கமல்.
‘உத்தமவில்லன் படத்திற்காக கமல்ஹாசன் வித்தியாசமான மேக்கப் அணிந்திருந்த புகைப்படம் வெளியானது. இது பிரெஞ்ச் புகைப்படக் கலைஞர் எரிக் என்பவர் கேரளாவில் எடுத்த புகைப்படத்தைப் பார்த்து காப்பி அடித்திருப்பதாக செய்திகள் வெளியானது.
ஆனால் கமலிடம் இதுபற்றி கேட்டபோது அவர் செம கடுப்பாகி பதில் சொல்லியிருக்கிறார்.
‘தெய்யம்’ என்ற பழங்கால கலை 1000 வருடங்களாக இங்குள்ளது. கலைநயத்துடன் கூடிய இந்த ஆட்டத்தை ஆடும் பாரம்பரியத்தை சேர்ந்த 3-வது தலைமுறை கலைஞர்தான் எனக்கு இந்த மேக்கப்பை போட்டார்.
ஒரு காதல்ஜோடி மார்பில் தலைவைத்த படி போஸ் தந்தால் அது ‘ஏக் துஜே கே லியே’ போஸ்டரின் காப்பி என்று சொல்வார்களா? உத்தம வில்லன் படத்தில் தமிழ்நாட்டின் பாரம்பரிய கூத்து கலையுடன் கலந்த கலவையாக தெய்யம் நடனம் என் படத்தில் இடம்பெறுகிறது.
நான் அணிந்திருப்பது முகமூடி அல்ல. என் முகத்தின் மேல் பெயின்ட்டால் வரையப்பட்டிருக்கிறது. இதற்கு 4 மணி நேரம் ஆனது. முகத்தில் பெயின்ட்டால் மேக்கப் போடுவது சாதாரண விஷயம் கிடையாது. என்று கடுப்பாகியிருக்கிறார் கமல்.
உத்தம வில்லனில் ஆண்ட்ரியா, பூஜா, பார்வதிக்கு என்ன வேலை?
15-03-2014
உத்தமன் என்ற 8ஆம் நூற்றாண்டுக் கூத்துக் கலைஞராக கமல் நடிக்க அவரின் நெருங்கிய நண்பர் நடிகர் ரமேஷ் அரவிந்த் இயக்க ‘உத்தம வில்லன்’ படத்தை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்கிறது.
இப்படத்திற்கு கதை, திரைக்கதை அமைத்தவரும் கமல்ஹாசன் தான்.
கமலின் விஸ்வரூபம் படத்தில் நடித்த பூஜா குமார் மற்றும் ஆண்ட்ரியா ஆகியோர் இதிலும் நடிக்கிறார்கள்.
கமல் இரட்டை வேடங்களில் நடிக்கும் இப்படத்தில் சிறப்பு தோற்றமாக இயக்குனர் கே.பாலசந்தர் மற்றும் இயக்குனர் கே.விஸ்வநாத் நடிக்கிறார்கள்.
இப்படத்தைப் பற்றி கிடைத்த அதிகாரப் பூர்வமான தகவலின் படி, உத்தமன் என்ற 8ஆம் நூற்றாண்டுக் கூத்துக் கலைஞன் கதாபாத்திரத்திலும், மனோரஞ்சன் என்ற 21ஆம் நூற்றாண்டின் சினிமா உச்ச நட்சத்திரமாக மற்றொரு பாத்திரத்திலும் கமல்ஹாசன் நடிக்கிறார்.
மனோரஞ்சனை கண்டெடுத்து நட்சத்திர அந்தஸ்திற்கு உயர்த்திய, குருவாக சினிமா இயக்குனராக கே.பாலச்சந்தர் நடிக்கிறார். மனோரஞ்சனின் மனைவியாக ஊர்வசியும், மனோரஞ்சனின் மாமனாறாக திரு.கே.விஸ்வநாத்தும் நடிக்கின்றனர்.
8ஆம் நூற்றாண்டில் நடக்கும் உத்தம வில்லனின் கதையில் மனநோயால் பாதிக்கப்பட்ட இளவரசியாக பூஜா குமார் நடிக்கிறார்.
21ஆம் நூற்றாண்டுக் கமலின் காதலியாக ஆண்ட்ரியா ஜெரெமியாவும் நடிக்கின்றனர்.
முத்தரசன் என்ற 8ஆம் நூற்றாண்டுக் கொடுங்கொல் சர்வாதிகாரியின் பாத்திரத்தில் நாசரும், ஜேகப் ஜக்காரியா என்ற பாத்திரத்தில் ஜெயராமும், ஜெயராமின் வளர்ப்பு மகளாக கதையின் பாத்திரமொன்றில் பார்வதி மேனனும் நடிக்கிறார்கள்.
எம்.எஸ்.பாஸ்கர் கொக்கு செட்டியார் என்ற முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்.
படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க கமல்ஹாசன் மற்றும் விவேகா பாடல்களை எழுதுகின்றனர். ஒளிப்பதிவு ஷாம்தத், படத்தொகுப்பு விஜய் சங்கர். திருப்பதி பிரதர்ஸ் சார்பாக இயக்குனர் லிங்குசாமியின் சகோதரர் சுபாஷ் சந்திரபோஸ் படத்தை தயாரிக்கிறார்.