Site icon ilakkiyainfo

விரிவான விசாரணைக்கு ஆணையாளருக்கு அதிகாரம்

ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் 25ஆவது அமர்வில் இலங்கைக்கு எதிரான நகல் பிரேரணை ஒன்றை முன்வைத்திருக்கும் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் அந்தப் பிரேரணையின் வாசகங்களை மேலும் இறுக்கியிருக்கின்றன.

பல நாடுகள் மற்றும் மனித உரிமை அமைப்புக்களின் ஆலோசனையின் பின்னர் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை அமெரிக்காவின் நகல் யோசனையில்  திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இராஜதந்திர  வட்டாரங்களிலிருந்து  இந்த திருத்தப்பட்ட  பிரேரணை இப்போது கசிந்துள்ளது.

இலங்கையில் இடம்பெற்றவை எனக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் அது போன்ற துஷ்பிரயோகங்கள், குற்றங்கள் தொடர்பில் அதைப் புரிந்தவர்கள் தண்டனையிலிருந்து தப்ப முடியாத வகையிலும் பொறுப்புக் கூறலை உறுதிப்படுத்தும் விதத்திலும்…

பரந்த, விரிவான விசாரணை ஒன்றை ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் முன்னெடுத்து அது குறித்து கவுன்ஸிலுக்கு அறிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் முறையில் திட்டவட்டமான  தெளிவான  வாசகங்களுடன் அந்தப் பிரேரணை நகலில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக  ஜெனீவாவிலிருந்து  கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கை தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நடத்தக்கூடிய விசாரணைப் பொறிமுறைக்கான வரைவிலக்கணத்தை அந்தப் பொறிமுறை நிறைவு செய்ய வேண்டிய தேவைப்பாடுகளை தற்போதைய திருத்தப்பட்ட நகல் பிரேரணை வரைவு மேலும் தெளிவாகவும், குறிப்பாகவும் வெளிப்படுத்தி நிற்கின்றது.

இம்மாத ஆரம்பத்தில் அமெரிக்கா, பிரிட்டன், மொறீஸியஸ், மொண்டி நிக்ரோ, மஸிடோனியா ஆகிய நாடுகள் கூட்டாக முனவைத்த நகல் பிரேரணை வாசகங்கள், பல  நாடுகளின்  பிரதிநிதிகளின்  கருத்துக்களை  உள்வாங்கி  தற்போது  மாற்றியமைக்கப்பட்டிருக்கின்றன.

அந்த புதிய வடிவத்திலேயே  இலங்கையை மேலும்  இறுக்கும் வகையில் இலங்கைக்கு எதிரான விசாரணைகள் தொடர்பில் ஆணையாளருக்கு திட்டவட்டமான ஆணைகளை கவுன்ஸில் வழங்கும் விதத்தில் விடயங்கள் மாற்றியமைக்கப்பட்டிருக்கின்றன.

தமது பிரேரணையின் முதல் நகல் வடிவம் தொடர்பில் பல்வேறு நாடுகளினதும் பிரதிநிதிகளின் கருத்துக்களை உள்வாங்குவதற்காக பரந்தளவிலான இரண்டு கலந்துரையாடல்களை ஐ.நா.மனித உரிமைகள் அமர்வின் பிரதான கூட்டத் தொடருக்கு பக்கத்தே சமதையாக அமெரிக்க, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் நடத்தியிருந்தன. அப்போது பல நாடுகளினாலும் முன்வைக்கப்பட்ட கருத்துக்களை உள்வாங்கி முன்னைய நகல் வடிவம் திருத்தப்பட்டிருக்கின்றது.

அதில் தற்போது இடம்பெற்றுள்ள முக்கிய திருத்தங்கள் வருமாறு:

இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகளை வரவேற்கும் ஒரு வாசகத்தில் “இராணுவ மயப்படுத்தலை விலக்கும்’ இலங்கை அரசின் செயற்பாட்டை வரவேற்கும் என்பது “காணி உரிமையாளரின் பாவனைக்கு’ செல்லும் செயற்பாட்டை வரவேற்றல் என்று மாற்றப்பட்டுள்ளது.

சிவில் சமூகத்துக்கு எதிரான அச்சுறுத்தல், பதிலடி நடவடிக்கைகள் தொடர்பாகக் கவலை தெரிவித்திருக்கும் வாசகத்தில் “ஐ.நா. மனித உரிமைகள் பொறிமுறையுடன் ஈடுபட்டு பணிபுரிவோரும்’ அத்தகைய நெருக்கடிகளை எதிர்கொள்வது பற்றிய குறிப்பு சேர்க்கப்பட்டிருக்கின்றது.

இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் உட்பட்ட சிறுபான்மை மதக் குழுவினர் மீதான தாக்குதல் குறித்து அபாய எச்சரிக்கை எழுப்புகின்ற வாசகத்தில்,  “தாக்குதல்கள் குறிப்பிடத்தக்க அளவுக்கு அலையாக’ எழுந்திருப்பது பற்றிய சொற்றொடர் புதிதாகச் சேர்க்கப்பட்டிருக்கின்றது.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட தேசியத் திட்டம் தொடர்பான பிரேரணை வாசகத்தில் “அந்த ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் அனைத்து அம்சங்களையும் கவனித்து நடவடிக்கை எடுக்கும்  விதத்தில்  அந்தத்  திட்டத்தின் செயற்பாட்டை  முழுஅளவில்  விரிவுபடுத்த வேண்டும்’ என்ற புதிய தொடர் சேர்க்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசமைப்பின் 13ஆவது திருத்தத்துக்கு அமைவாக வடக்கு மாகாண சபை திறம்பட செயற்படுவதைஉறுதி செய்யுமாறு இலங்கை அரசைக் கோருகிறது  என்ற வகையில் ஆறாவது செயற்பாட்டுப் பந்தி திருத்தப்பட்டுள்ளது.

முன்னைய நகலில் “அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தின் தேவைப்பாட்டுக்கு அமைய வடக்கு மாகாண சபைக்கும் அதன் முதலமைச்சருக்கும் தேவையான வளங்களையும் அதிகாரங்களையும் வழங்க இலங்கை அரசை ஊக்குவிக்கிறோம்’ என்றிருந்த வாசகம் இப்போது மாற்றப்பட்டு, அதற்குப் பதிலாக 13ஆவது திருத்தத்தை முழு அளவில் நடைமுறைப்படுத்தும்படி திட்டவட்டமாக அரசைக் கோரும் விதத்தில் வாசகம் திருத்தப்பட்டிருக்கின்றது.

முதலாவது நகல் பிரேரணையில் செயற்பாட்டு பந்தி 8லேயே இலங்கை அரசு மீதான தாக்கமான பிரேரணை வாசகம் அமைந்திருந்தது. தற்போது திருத்தப்பட்ட இரண்டாவது நகல் பிரேரணையில் அது மேலும் இறுக்கமாக  வெளிப்படையாக  அமையும் வகையில் பின்வருமாறு திருத்தப்பட்டிருக்கின்றது:

“தொடர்ந்து இடம்பெற்றுவரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விடயத்தில் தெளிவான பேறுகளைத் தரக்கூடிய தேசிய மட்ட நடவடிக்கைகள் இல்லாத காரணத்தால் சர்வதேச விசாரணைப் பொறிமுறை அவசியமாகின்றது என்ற ஆணையாளரின் பரிந்துரையையும் முடிவையும் கவனத்தில் எடுத்து

அ) இலங்கையில் மனித உரிமைகள் நிலைவரத்தைத் தொடர்ந்து கண்காணித்து, சம்பந்தப்பட்ட தேசிய மட்ட நடவடிக்கையின் முன்னேற்றத்தை மதிப்பிட்டு

ஆ) இலங்கையில் இரு தரப்புக்களினாலும் இழைக்கப்பட்டவை அல்லது துஷ்பிரயோகமாகப் புரியப்பட்டவை என்று கூறப்படும் மோசமான மனித உரிமை மீறல்கள் மற்றும் அதேபோன்ற குற்றங்கள் குறித்து பரந்தளவிலான விசாரணையை முன்னெடுத்து தண்டனை விலக்களிப்பிலிருந்து தப்ப முடியாத வகையிலும் குற்றப் பொறுப்புக் கூறலை உறுதிப்படுத்தும் வகையிலும் அத்தகைய மீறல்கள் இடம்பெற்றமை தொடர்பான உண்மைகளையும் சூழ்நிலை சந்தர்ப்பங்களையும் சம்பந்தப்பட்ட நிபுணர்களின் உதவியைப் பெற்று நிலைநிறுத்தும்படியும்

இ) தற்போதைய   இந்தப் பிரேரணையின்  நடைமுறைப்படுத்தல் தொடர்பாக மனித உரிமைகள் கவுன்ஸிலுக்கு அதன் 27ஆவது அமர்வில் வாய் மூல அறிக்கையையும் 28ஆவது அமர்வில் தொடர்ந்து கலந்துரையாடல் ஒன்று இடம்பெறக்கூடிய விதத்தில் பரந்தளவிலான எழுத்து மூல அறிக்கையையும் சமர்ப்பிக்குமாறு ஆணையாளரைக் கோருகிறோம் என்று அந்த 8ஆவது பந்தி திருத்தப்பட்டிருக்கின்றது.

Exit mobile version