ilakkiyainfo

கணவன் தூக்கிலிடப்பட்ட மேடையை பார்த்து கதறிய மனைவி

கண்டி,போகம்பறை சிறைச்சாலையில் தனது கணவன் தூக்கிலிடப்பட்ட மேடையை பார்த்து அவரது மனைவி கதறியழுத சம்பவமொன்று இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

அனுராதபுரம் சாலியபுரத்தில் பிறந்து குற்றவாளியான டி.ஜே.சிறிபால என்றழைக்கப்படும் ‘மருசிரா’ பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர். அவர் சிறைச்சாலையிலிருந்து பல தடவைகள் தப்பிச்சென்றவராவார்.

இவர், கண்டி போகம்பறை சிறைச்சாலையில் 1975 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 05 ஆம் திகதி தூக்கிலிடப்பட்டு கொலை செய்யப்பட்டார். அந்த இடத்தை அவருடைய மனைவியான ரன்மெனிக்கே (வயது 70) இன்று வெள்ளிக்கிழமை பார்த்தபோதே கதறியழுதார்.

போகம்பறை சிறைச்சாலையை பார்வையிடுவதற்காக சென்றிருந்த ரன்மெனிக்கே தனது கணவன் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறை கூடத்தை பார்த்தவுடன் ‘சிறிபால என்னை விட்டுட்டு போய்விட்டார்’ என்று கதறியழுதார்.

தூக்கு மேடைக்கு அருகில் சென்றும் அவ்வாறே கதறியழுதார். இதனால் சிறைச்சாலையை பார்வையிடுவதற்கு வந்தவர்கள் மத்தியிலும் ஒருவகையான சோகம் ததும்பியது.
20211
தூக்குத்தண்டனை நிறைவேற்றுவதற்கு முதல் நாளான  1975 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 04 ஆம் திகதி  டி.ஜே.சிறிபால அளவுக்கு அதிகமான தூக்க குளிசைகளை உட்கொண்டிருந்தமையினால் சித்தசுயாதீனமற்ற நிலையிலேயே  தூக்குமேடைக்கு சிறைச்சாலை அதிகாரிகள் அவரைதூக்கிசென்றுள்ளனர்.

கைதி, தூக்குமேடைக்கு நடந்து சென்றதன் பின்னர் அவருடைய கழுத்துக்கு தூக்குகயிற்றை மாட்டி அக்கயிற்றை மேடையிலிருந்து கீழே இறக்கினால் அவர் மரணமடைந்துவிடுவார்.

எனினும் நோய்காவு வண்டியில் அழைத்துசென்று கழுத்துக்கு தூக்கு கயிற்றை மாட்டியதால் டி.ஜே.சிறிபால என்ற தூக்குத்தண்டனை கைதியின் உயிர் பிரிவதற்கு நீண்ட நேரம் எடுத்தது என்று சிறைச்சாலையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இது தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்காக ஜனாதிபதியின் ஆணைக்குழுவும் நியமிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

Exit mobile version