ஐ.நா. மனிதஉரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான மூன்றாவது தீர்மானம், விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் கட்டத்தை நெருங்கியுள்ளது. எதிர்வரும் 26ஆம் திகதி இந்த தீர்மானம் ஐ.நா. மனிதஉரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்படும்.
இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு, வரும் 27 அல்லது 28ஆம் திகதி நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பத்தி எழுதப்படும்போது, பரிசீலனையில் இருக்கும் தீர்மான வரைவுக்குப் போதிய ஆதரவு கிடைத்துள்ளதாகத் தெரிகிறது.
சிலவேளைகளில், ஆதரிக்கும் நாடுகளின் எண்ணிக்கை குறைந்தாலும் கூட, தீர்மானம் நிறைவேற்றப்படுவது உறுதி என்றே ஜெனீவா தகவல்கள் கூறுகின்றன.
இந்தநிலையில், அடுத்தடுத்து மூன்று ஆண்டுகளாக இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்படும் இந்த தீர்மானங்கள், மேற்குலகமும், தமிழர் தரப்பும் எதிர்பார்க்கும் மாற்றங்களை ஏற்படுத்துமா-? என்ற சந்தேகமும் இருக்கவே செய்கிறது.
ஏனென்றால், இந்த ஆண்டு நிறைவேற்றப்படும் தீர்மானம், ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் பணியகத்துக்கு, இலங்கையில் நடந்த மீறல்கள் குறித்து விசாரிக்கும் ஆணையை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது கிட்டத்தட்ட ஒரு சர்வதேச விசாரணைப் பொறிமுறை தான்.
இந்த தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்பது ஏற்கனவே உறுதியாகி விட்டது.
இதற்கு முன்னர் நிறைவேற்றப்பட்ட இரண்டு தீர்மானங்களும், அவ்வளவு கடுமையானதாக இல்லாவிடினும், உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையை வலியுறுத்துவதாக இருந்த போதிலும், அவற்றை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளவில்லை.
அவற்றைப் போலவே, இப்போதைய தீர்மான வரைவும், நாட்டின் இறையாண்மையை மீறுவதாக உள்ளதென்று அரசாங்கம் சுட்டிக்காட்டி வருகிறது.
எனவே, இந்தவாரம், ஜெனீவாவில் நிறைவேற்றப்படவுள்ள தீர்மானத்தை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாத நிலையில், இது எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படும் என்று சந்தேகம் எழுவது இயல்பு.
இந்த தீர்மான வரைவின், பெரும்பாலான பகுதிகள், இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டிய கடப்பாடுகளையே சுட்டிக்காட்டுகிறது.
ஒரு பகுதியில் தான், அதாவது போரின் போது இடம்பெற்ற மீறல்கள் குறித்து விரிவான விசாரணைகளை மேற்கொள்ளும் விவகாரத்தில் தான், ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளருக்கு விசாரணை மற்றும் கண்காணிப்பை மேற்கொள்ளும் ஆணையை இது வழங்குகிறது.
எனவே, இந்த தீர்மானம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றால், அதற்கு இலங்கை அரசாங்கத்தின் முழுமையான பங்களிப்பும் ஒத்துழைப்பும் அவசியமானவை.
13ஆவது திருத்தச்சட்டம், மாகாணசபைகளுக்கு அதிகாரங்களை பகிர்தல், விசாரணைகளை மேற்கொள்ளல், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்தல் என்று விரியும் – தீர்மான வரைவு கூறும் இலங்கை அரசுக்கான கடப்பாடுகளை, வெளியில் உள்ள எவராலுமே நடைமுறைப்படுத்த முடியாது.
அதேவேளை, ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் பணியகத்திடம் ஒப்படைக்கப்படும், போர்க்கால மீறல்கள் குறித்த விசாரணைகளையும் கூட, இலங்கை அரசாங்கத்தின் ஒத்துழைப்பின்றி முழுமையாக முன்னெடுக்கவும் முடியாது.
ஏனென்றால், ஐ.நா. மனிதஉரிமைகள் ஆணையாளர் பணியகம், மேற்கொள்ளும் விசாரணைகள் இலங்கைக்குள் இருந்தும் மேற்கொள்ளப்பட வேண்டும்.
மீறல்கள் நடந்த இடங்களை அவதானிக்கவும், சாட்சிகளை அழைத்து வாக்குமூலங்களைப் பெறவும், பாதிக்கப்பட்டவர்களின் தரப்பு நியாயங்களைப் பெறவும், அந்த விசாரணைக்குழுவோ, விசாரணை அதிகாரியோ, எப்படியும், இலங்கைக்கு வந்தேயாக வேண்டும்.
அதற்கு இலங்கை அரசாங்கம், ஒத்துழைப்பும் அனுமதியும் அளிக்க வேண்டும்.
ஜெனீவாவில் நிறைவேற்றப்படும் தீர்மானத்தை நிராகரித்துள்ள அரசாங்கம், எப்படி அந்த தீர்மானத்தின் மூலம் உருவாக்கப்படும் ஒரு விசாரணைக்குழுவை இலங்கைக்குள் அனுமதிக்கும்?
அதுவும், ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையை ஒரு புலி போலவே வர்ணிக்கும் அரசாங்கம், அவரால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவை மட்டும் விசாரணைகளை மேற்கொள்ள எப்படி அனுமதிக்கும்?
இது எப்போதுமே ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்துக்கு இருக்கும் சிக்கல் தான். பாதுகாப்புச் சபையைப் போன்று, ஐ.நா மனித உரிமைகள் பேரவை நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஒரு அமைப்பு அல்ல.
அதனால், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்கு, விசாரணைக் குழுவை நியமிக்க, பேரவையால் பிறப்பிக்கப்படும் ஆணையைச் செயற்படுத்துவது எப்போதுமே, சவாலாகவே இருந்துள்ளது.
அதனால் தான், பல்வேறு சந்தர்ப்பங்களிலும் சம்பந்தப்பட்ட நாட்டின் இணக்கப்பாட்டுடன் தீர்மானத்தை நிறைவேற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதுண்டு.
ஆனால், எப்போதுமே, எந்தவொரு நாடும், தமது நாட்டில் நடக்கும் மீறல்கள் குறித்து வெளியில் இருந்து விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதை விரும்புவதில்லை.அதனால் சம்பந்தப்பட்ட நாட்டின் ஒப்புதல் கிடைப்பதென்பது மிகவும் அபூர்வமானது. என்றாலும் ஒரு சில உதாரணங்கள் இருக்கத் தான் செய்கின்றன.
இதுவே பாதுகாப்புச்சபையின் தீர்மானமாக இருந்தால், எப்படியோ ஒரு கட்டத்தில், சம்பந்தப்பட்ட நாடு வளைந்து கொடுத்துப் போக முடிவெடுத்து விடும்.
ஐ.நா. மனிதஉரிமை ஆணையாளர் பணியகத்தின் விசாரணைக் குழு, விசாரணை நடத்துவதற்கு சம்பந்தப்பட்ட நாடு, உள்ளே வர இடமளிக்காது போனால், வெளியில் இருந்து விசாரணைகள் முன்னெடுக்கப்படும்.
கடந்த ஆண்டு வடகொரியா தொடர்பாக நியமிக்கப்பட்ட இத்தகைய விசாரணைக் குழுவும், உள்ளே அனுமதிக்கப்படாமல், வெளியில் இருந்தே விசாரித்து அறிக்கை யை சமர்ப்பித்தது.
அதுபோலவே, இலங்கை இந்த தீர்மானத்தை நிராகரித்துள்ள நிலையில், ஐ.நா. மனிதஉரிமைகள் ஆணையாளர் நியமிக்கும் விசாரணைக்குழுவை உள்ளே வர அரசாங்கம் இடமளிக்காது போனால், வெளி யில் இருந்தே விசாரணைகள் முன்னெடுக்கப்படும் நிலை ஏற்படும்.
சிறப்பு அறிக்கையாளர் ஒருவர் மூலமோ, ஐ.நா. நிபுணர்குழுவின் மூலமோ, அல்லது சுதந்திரமான ஆணைக்குழு ஒன்றின் மூலமோ, ஐ.நா. மனிதஉரிமை ஆணையா ளர் விசாரணைகளை முன்னெடுக்கலாம்.
ஆனால், இத்தகைய விசாரணைகளை மேற்கொள்ளும் அதிகாரம், ஐ.நா. மனிதஉரிமை ஆணையாளருக்கு இல்லை என்று அரசாங்கம் கூறிவருகிறது.
எனினும், தீர்மான வரைவு, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்துக்கே, ஆணை பிறப்பிக்கும் வகையில் அமைந்துள்ளது.
கடந்தவாரம், கொழும்பில் நடந்த கருத்தரங்கு ஒன்றில், நவநீதம்பிள்ளைக்கு விசாரணை நடத்தும் அதிகாரம் இல்லை என்றும், அதற்கு ஐ.நா. சட்டங்களில் இடமளிக்கப்படவில்லை என்றும் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கூறியிருந்தார்.
ஆனால், ஜெனீவாவில், கடந்த வாரம், மனிதஉரிமை அமைப்புகளுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலின் போது, ஐ.நா. மனிதஉரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்படும் தீர்மானத்தின் அடிப்படையில், விசாரணைகளை மேற்கொள்ளும் அதிகாரம் தனக்கு இருப்பதாக, ஐ.நா. மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை குறிப்பிட்டிருந்தார்.
இன்னொரு விடயத்தையும், இங்கு குறிப்பிட வேண்டும், ஐ.நா. மனிதஉரிமைகள் பேரவையில் இலங்கைக்கு ஆதரவளித்து வரும், ரஷ்யா, சீனா போன்ற நாடுகள், விசாரணை அதிகாரம், ஐ.நா. மனிதஉரிமை ஆணையாளருக்கு கிடையாது என்றே குறிப்பிட்டிருந்தன.
ஆனால், கியூபாவோ, ஐ.நா. மனித உரிமை ஆணையாளருக்கே அதற்குரிய அதிகாரம் உள்ளதென்றும், அவரது பணியகத்துக்கு கிடையாது என்றும் வாதிட்டிருந்தது.
எனினும், ஐ.நா. மனிதஉரிமை ஆணையாளர் பணியகத்தினால் ஏற்கனவே விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
வடக்கு, கிழக்கு இணைப்பை இரத்துச் செய்யும் தீர்ப்பை பெற்றுக் கொடுத்த, சுனாமி நிவாரண பொதுக்கட்டமைப்புக்கு எதிரான தடை உத்தரவைப் பெற்ற- சிங்களக் கடும்போக்குவாத சட்டத்தரணி கோமின் தயாசிறி, நவநீதம்பிள்ளைக்கு விசாரணை அதிகாரம் இல்லை என்றும், இந்த தீர்மானத்தின் ஊடாக அவருக்கு அத்தகைய அதிகாரத்தை பெற்றுக் கொடுக்க அமெரிக்கா முனைவதாகவும், குறிப்பிட்டுள்ளார்.
நவநீதம்பிள்ளையின் அதிகாரங்கள் என்ன என்று கேள்வி எழுப்பும் ஒரு தீர்மானத்தை முன்வைத்து, இந்த விசாரணை முயற்சியைத் தோற்கடிக்கலாம் என்றும் அவர் யோசனை தெரிவித்துள்ளார்.
இதற்குப் போதிய காலஅவகாசமும், ஆதரவும் கிடைக்குமா என்பது சந்தேகமே.
ஏனென்றால், ஐ.நா. மனிதஉரிமைகள் பேரவையில் இந்த அமர்வு இறுதிக்கட்டத்தை எட்டி விட்டது. வேண்டுமானால், 26ஆவது அமர்வில் வரும் ஜுன் மாதம், இதுபற்றிய தீர்மானத்தை முன்வைக்க தனது நட்பு நாடுகளின் மூலம் இலங்கை முயற்சிகளை மேற்கொள்ளலாம்.
ஐ.நா. மனிதஉரிமை ஆணையாளரின் விசாரணைகளைத் தடுக்க இலங்கையும் தன்னால் இயன்ற எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வதற்கு வாய்ப்புகள் உள்ளன என்பதையே இது காட்டுகிறது.
எவ்வாறாயினும், ஜெனீவா தீர்மானம் இலங்கையை மேலும் நெருக்கடியில் தள்ளிவிடப் போவது மட்டும் உறுதி.
ஏனென்றால், இந்த தீர்மானத்தை ஏற்றுக் கொண்டால், உள்நாட்டில் சிங்களத் தேசிய வாதம், அரசாங்கத்தை விழுங்கி விடும். இதற்கு இணங்காது போனால், சர்வதேச அளவிலான நெருக்கடிகளை இலங்கை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படலாம்.
விசாரணைக் குழுவை இலங்கை அனுமதிக்க மறுத்தால், அமெரிக்கா, உள்ளிட்ட மேற்குலக நாடுகள் தனிப்பட்ட ரீதியாக இலங்கை மீது பொருளாதார, பயணத் தடைகளை கொண்டு வரக்கூடும்.
அதற்கான சாத்தியங்களை இப்போதே அனுமானிப்பது கடினம்.
எவ்வாறாயினும், தனது தீர்மானத்தை ஜெனீவாவில் நிறைவேற்றும் கடப்பாட்டை மட்டும் மேற்குலகம் கொண்டிருக் கவில்லை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அதனை நடைமுறைப்படுத்தும் கடப்பாடும் அவர்களுக்கு உள்ளது என் பதை மறந்துவிட முடியாது.
– சுபத்ரா