ilakkiyainfo

பரபரப்பான போட்டியில் பாகிஸ்தான் 16 ஓட்டங்களால் வெற்றி

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான பரபரப்பான போட்டியில் பாகிஸ்தான் அணி  16 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றது.

5ஆவது  இருபது-20 உலக கிண்ணத் தொடர்  பங்களாதேஷில் இடம்பெற்று வருகின்றது. இதன் சூப்பர் 10 சுற்றில் விளையாடும் 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
இதன்படி குழு 1இல் இலங்கை, தென்னாபிரிக்கா,  இங்கிலாந்து, நியூசிலாந்து, நெதர்லாந்து அணிகளும், குழு2இல் இந்தியா, அவுஸ்திரேலியா, பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள், பங்களாதேஷ் அணிகளும் இடம் வகிக்கின்றன.
இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள ஏனைய அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.
இந்த நிலையில் சூப்பர்–10 சுற்றில் குழு2 இல் இன்று   பிற்பகல் மிர்பூர் தேசிய மைதானத்தில் அரங்கேறிய  ஆட்டத்தில் அவுஸ்திரேலியா மற்றும்  பாகிஸ்தான்  அணிகள்  பலப்பரீட்சை  நடத்தின.
இரு அணிகளும் தனது முதல் வெற்றியை பதிவு செய்யும் நோக்கில் களமிறங்கியிருந்தமையால் போட்டி சுவாரஸ்யமாக காணப்பட்டது.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா முதலில் களத்தடுப்பை மேற்கொள்ள தீர்மானித்தது.
அந்தவகையில் முதலில்  துடுப்பெடுத்தாடிய   பாகிஸ்தான்  20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை  மாத்திரம்  இழந்து 191 ஓட்டங்களை பெற்றது.
பாகிஸ்தான் அணியில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய அகமட் செய்சாட் 5 ஓட்டங்களுடன் ஏமாற்றமளிக்க அடுத்து களமிறங்கிய ஹாபிஸ் 13 ஓட்டங்களுடன் அரங்கு திரும்பினார்.
182257
25 ஓட்டங்களுக்கு இரு விக்கெட்டுகளை இழந்து ஆரம்பமே தடுமாற்றத்தை எதிர்நோக்கியது பாகிஸ்தான அணி. இதனையடுத்து மற்றுமொரு ஆரம்ப துடுப்பாட் வீரரான கம்ரன் அக்மாலுடன் சகோதரர் உமர் அக்மால் கைகோர்த்தார்.
கம்ரன்  அக்மால் நிதானமாக  துடுப்பெடுத்தாட  அதிரடியாக  துடுப்பெடுத்தாடிய உமர் அக்மால் 28 பந்துகளில் 50 ஓட்டங்களை கடந்தார்.
இருவரும் 3ஆவது விக்கெட்டுக்காக இணைப்பாட்டமாக 96 ஓட்டங்களை பெற்றிருந்த போது கம்ரன் அக்மால் 31 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து வந்த சொஹிப் மசூட் 5 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இதனையடுத்து அப்பரிடி களமிறங்கினார். அதிரடியாக துடுப்பெடுத்தாடிக்  கொண்டிருந்த உமர் அக்மால் 54 பந்துகளில் 94 ஓட்டங்களை பெற்றிருந்த போது ஆட்டமிழந்து சதத்தை தவற விட்டார்.
பின்னர் அப்ரிடி 20 ஓட்டங்களையும், சொயில் மாலிக் 6 ஓட்டங்களையும் பெற்று களத்தில் இருந்தனர்.
இதனையடுத்து 192 ஓட்டங்கள் என்ற  வெற்றி  இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 20 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 175 ஓட்டங்களை பெற்று 16 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது.
அவுஸ்திரேலிய அணி  8 ஓட்டங்களுக்கு இரு விக்கெட்டுகளை இழந்து ஆரம்பமே தடுமாறியது. வோர்ணர் 4, வொட்சன் 4 ஓட்டங்கள் என ஏமாற்றமளித்தனர்.
இதனையடுத்து ஆரோன் பின்ஞ்ச் உடன் மெக்ஸ்வெல் கைகோர்த்தார். இதன்போது மெக்ஸ்வெல் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த அவுஸ்திரேலிய அணி தடுமாற்றத்திலிருந்து மீண்டது. மெக்ஸ்வெல் 18  பந்துகளில் 5 நான்கு  ஓட்டங்கள் 5 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக 50 ஓட்டங்களை கடந்தார்.

ஆரோன் பின்ஞ்ச் மற்றும் மெக்ஸ்வெல் ஆகியோர் 3ஆவது விக்கெட்டுக்காக 118 ஓட்டங்களை பெற்றிருந்த போது மெக்ஸ்வெல் 74 ஓட்டங்களுடன் அரங்கு திரும்பினார்.
இதன்பின்னர் களமிறங்கிய வீரர்கள் யாரும் பெரிதான சோபிக்கவில்லை. பெய்லி 4, ஹொட்ஜ் 2, ஹெடின் 8 ஓட்டங்கள் என ஏமாற்றமளித்தனர்.
ஆரம்ப வீரராக களமிறங்கி இறுதிவரை போராடிய பின்ஞ்ச் 65 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சில் சுல்பிகார் பாபர், உமர்குல், அப்ரிடி ஆகியோர் தலா இரு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
போட்டியின் ஆட்டநாயகனாக உமர் அக்மால் தெரிவு செய்யப்பட்டார்.
Exit mobile version