ilakkiyainfo

இந்தியா-மேற்கிந்திய தீவுகள் இன்று மோதல்: மற்றுமொரு ஆட்டத்தில் பாக்.-ஆஸி. பலப்பரீட்சை

இருபது-20 உலக கிண்ணத் தொடரில் இன்று நடக்கும் ஆட்டத்தில் பாகிஸ்தான், அவுஸ்திரேலியாவும் மற்றுமொரு ஆட்டத்தில் இந்தியா, மேற்கிந்திய தீவுகள் அணியும் மோதுகின்றன.

5ஆவது இருபது-20 உலக கிண்ணத் தொடர் பங்களாதேஷில் இடம்பெற்று வருகிறது. இதன் சூப்பர் 10 சுற்றில் விளையாடும் 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

இதன்படி குழு 1இல் இலங்கை, தென்னாபிரிக்கா,  இங்கிலாந்து, நியூசிலாந்து, நெதர்லாந்து அணிகளும், குழு2இல் இந்தியா, அவுஸ்திரேலியா, பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள், பங்களாதேஷ் அணிகளும் இடம் வகிக்கின்றன.

இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள ஏனைய அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.

இந்த நிலையில் சூப்பர்–10 சுற்றில் குழு2இல் இன்று பிற்பகல் மிர்பூர் தேசிய மைதானத்தில் அரங்கேறும் ஆட்டத்தில் அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

இந்தியாவிடம் ஏற்கனவே தோற்றுள்ள பாகிஸ்தான் அணி இந்த ஆட்டத்தில் கட்டாயம் வென்றாக வேண்டிய நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது.

இதிலும் தோற்றால் அரைஇறுதி வாய்ப்பு கேள்விக்குறியாகி விடும். சயீத் அஜ்மல், அப்ரிடி, முகமது ஹபீஸ் போன்ற சுழற்பந்து வீச்சாளர்களை தான் பாகிஸ்தான் அதிகமாக சார்ந்துள்ளது.

பாகிஸ்தான் தலைமை பயிற்சியாளர் மொயின் கான் கூறுகையில், ‘ஒரு தொடரில் முதல் ஆட்டத்தில் ஒரு அணி தோல்வியடைகின்றது என்றால், அதன் பிறகு வெற்றி வாய்ப்பு அந்த அணிக்கு குறைந்து விடும்.

இந்த ஆட்டம் எங்களுக்கு முக்கியமானது. தொடரில் நீடிக்க வேண்டும் என்றால், இந்த ஆட்டத்தில் கட்டாயம் வென்றாக வேண்டும். அவஸ்திரேலியா சிறந்த அணி. எங்களுக்கு இது கடினமான ஆட்டமாக இருக்கும்’ என்றார்.

முதல்முறையாக 20 ஓவர் உலக கிண்ண மகுடத்தை சூடும் முனைப்புடன் தயாராகி வரும் அவுஸ்திரேலிய அணியில் அதிரடி மன்னர்கள் அணிவகுத்து நிற்கிறார்கள். குறிப்பாக டேவிட் வோர்னர் எல்லா வடிவிலான கிரிக்கெட்டிலும் நல்ல போர்மில் இருக்கிறார்.

ஷேன் வொட்சன், ஆரோன் பிஞ்ச், மேக்ஸ்வெல்ஸ், ஹொட்ஜ் என்று திறமையான துடுப்பாட்ட வீரர்களுக்கு அந்த அணியில் பஞ்சமில்லை. காயத்தில் இருந்து மீளாததால் இந்த ஆட்டத்தில் சகலத்துறை வீரர் ஜேம்ஸ் பவுல்க்னெர் ஆடமாட்டார்.

இந்த ஆண்டில் விளையாடியுள்ள ஐந்து இருபது-20 போட்டிகளிலும் அவுஸ்திரேலியா வெற்றி பெற்றிருக்கிறது. அந்த வெற்றிப்பயணத்தை உலக கிண்ணத்திலும் நீடிக்கும் ஆவலில் அந்த அணி வியூகங்களை தீட்டியுள்ளது.

மிர்பூர் ஆடுகளம், சுழற்பந்து வீச்சுக்கு சாதகமானது என்பது அறிந்த வடயம். எனவே இந்த ஆட்டம் பாகிஸ்தானின் சுழலுக்கும், அவஸ்திரேலியாவின் துடுப்பாட்டத்துக்கும் இடையே சவாலாக இருக்கும் என்று வர்ணிக்கப்படுகிறது.

இவ்விரு அணிகளும் இருபது-20 போட்டிகளில் இதுவரை 11 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 6இல் பாகிஸ்தானும், 4இல் அவுஸ்திரேலியாவும் வெற்றி கண்டன. ஒரு ஆட்டம் சமநிலையானது.

போட்டிக்கான அணிகளின் உத்தேச பட்டியல் 
 
அவுஸ்திரேலியா: ஆரோன் பிஞ்ச், டேவிட் வொர்னர், ஷேன் வொட்சன், மேக்ஸ்வெல், ஜொர்ஜ் பெய்லி (அணித் தலைவர்), பிராட் ஹொட்ஜ், பிராட் ஹேடின், டேனியல் கிறிஸ்டியன், மிட்செல் ஸ்டார்க், நாதன் கவுல்டர்–நிலே, பிராட் ஹொக்.

பாகிஸ்தான்: கம்ரன் அக்மல், அகமது ஷேசாத், முகமது ஹபீஸ் (அணித் தலைவர்), உமர் அக்மல், சோயிப் மாலிக், அப்ரிடி, சோகைப் மசூத், பிலாவல் பாத்தி அல்லது ஜூல்பிகர் பாபர், உமர் குல், சயீத் அஜ்மல், ஜூனைட் கான்.

மற்றொரு ஆட்டத்தில் இந்தியா- மேற்கிந்திய தீவுகள் சந்திப்பு
 
Chris-Gayle-a-threat-as-upbeat-India-run-into-West-Indiesஇந்த நிலையில் சூப்பர்–10 சுற்றில் குழு2இல் இன்றிரவு மிர்பூர் தேசிய மைதானத்தில் அரங்கேறும் ஆட்டத்தில் இந்தியாவும், நடப்பு சாம்பியன் மேற்கிந்திய தீவுகளும் மோதுகின்றன.

தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் தோற்கடித்ததன் மூலம் இந்திய அணியின் நம்பிக்கை அதிகரித்துள்ளது.

அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அமித் மிஸ்ரா ஆகிய மூன்று சுழற்பந்து வீச்சாளர்களின் அபாரமான பந்து வீச்சால் பாகிஸ்தான் அணி 130 ஓட்டங்களுக்குள் கட்டுப்படுத்தப்பட்டது.

மிர்பூர் மெதுவான ஆடுகளம் என்பதால் இன்றைய ஆட்டத்திலும் சுழற்பந்து வீச்சின் தாக்கமே முக்கிய அம்சமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தானுக்கு எதிராக எமது வீரர்கள் சில  பிடியெடுப்புகளை தவற விட்டனர். இதனைத் தவிர அனைத்து செயல்பாடுகளும் திருப்தி அளித்ததாக டோனி தெரிவித்தார். தவானும், ரோகித்ஷர்மாவும் ஓரளவு நல்ல தொடக்கம் தந்த நிலையில், விராட் கோலியும், சுரேஷ் ரெய்னாவும் நடுவரிசை துடுப்பாட்டத்தில் அசத்தினர்.

அதே உத்வேகம் இன்றைய ஆட்டத்திலும் தொடரும் பட்சத்தில் சாதகமான முடிவை எதிர்பார்க்கலாம். இந்த ஆட்டத்திலும் இந்திய அணி வெற்றி கண்டால், அரைஇறுதி வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொள்ள முடியும்.

ஆனால் எதிரணியான மேற்கிந்திய தீவுகள் அணியை துளியும் குறைத்து மதிப்பிட முடியாது. பயிற்சி ஆட்டங்களில் இங்கிலாந்து, இலங்கை அணிகளை எளிதில் சாய்த்தது.

இமாலய சிக்சர்களை அடிப்பதில் வல்லவரான கிறிஸ் கெய்ல், வெய்ன் சுமித்,  டேரன் சேமி, வெய்ன் பிராவோ, சாமுவேல்ஸ் என்று ஒரு அதிரடி வீரர்களே அந்த அணியில் இருக்கின்றனர்.

இதே போல் சுழற்பந்து வீச்சாளர்கள் சுனில் நரேன், பத்ரீ ஆகியோரும் இங்குள்ள சூழலை கச்சிதமாக பயன்படுத்திக் கொள்வதில் சிறப்பானவர்கள். இந்தியாவுக்கு நிகராக மேற்கிந்திய தீவுகள் சரிசம பலத்துடன் திகழ்வதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.

இந்தியாவும், மேற்கிந்திய தீவுகள் இதுவரை மூன்று இருபது-20 போட்டிகளில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் 2இல் மேற்கிந்திய தீவுகளும், ஒன்றில் இந்தியாவும் வெற்றி பெற்றுள்ளன.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் 
 
இந்தியா: ஷிகர் தவான், ரோகித் ஷர்மா, விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, யுவராஜ்சிங், டோனி (அணித் தலைவர்), ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், அமித் மிஸ்ரா, புவனேஷ்வர்குமார், முகமது ஷமி.

மேற்கிந்திய தீவுகள்:வெய்ன் சுமித், கிறிஸ் கெய்ல், சாமுவேல்ஸ், வெய்ன் பிராவோ, லென்டில் சிமோன்ஸ், டேரன் சேமி (அணித் தலைவர்), ராம்டின், சுனில் நரேன், பத்ரீ, ரவி ராம்போல், கோட்ரெல் அல்லது கிரிஷ்மர் சான்டோகி.

Exit mobile version