ilakkiyainfo

ஒரே மலையில் 900 கோயில்கள்!!!

குஜராத்தின் பாவ்நகர் மாவட்டத்தில் உள்ள ஷத்ருஞ்சயா எனும் மலைகளில்தான் பாலிதானா கோயில்கள் என்று அறியப்படும் 900 ஜைனக் கோயில்கள் அமைந்துள்ளன. உலகிலேயே 900 கோயில்கள் உள்ள ஒரே மலையாக ஷத்ருஞ்சயா விளங்குகிறது.

இந்தக் கோயில்கள் அனைத்தும் மார்பிள் கற்களைக் கொண்டு கட்டப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல் 3000-த்துக்கும் அதிகமான படிக்கட்டுகளை கடந்து சென்று இந்தக் கோயில்களை அடைவது ஒரு டிரெக்கிங் அனுபவம் போலவே இருக்கும்.

இங்கே இளம் பெண்கள் முதல் முதிய பெண்கள் வரை ஜைனத்துறவிகள், வெள்ளை நிற உடையில் காட்சியளிக்கின்றனர். இப்பெண் துறவிகள் தங்களுடைய தலைமுடியை தாங்களே ஒரு வகை செய்முறையால் பிய்த்து எறிவதாக சொல்லப்படுகிறது.

இங்குதான் ஜைன மத தீர்த்தங்கரர்கள் நிர்வாணா எனும் சமாதி நிலையை எய்தியாகக் நம்பப்படுகிறது. இதன் காரணமாக ஜைன மத ஐதீகங்களின் அடிப்படையில் பண்டைய காலம் முதலே இந்த இடம் பாவ விமோச்சனம் அளிக்கும் புண்ணியத் தலமாக இடமாக கருதப்படுகிறது.

19-1392804558-historyவரலாறு
பாலிதானா கோயில்கள் பெரும்பாலானவை 11-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளன. ஆனால் அந்நிய படையெடுப்பின்போது அவை அழிக்கப்பட்டதால் தற்போது காணப்படும் கோயில்கள் மீண்டும் 16-ஆம் நூற்றாண்டில் எழுப்பப்பட்டவையாகும்.


கட்டிடக்கலை
பாலிதானா கோயில்கள் அனைத்தும் நன்கு திட்டமிடப்பட்டு, வரிசையாக ஒரு ஒழுங்குடன் 18 கி.மீ சுற்றளவில் கட்டப்பட்டுள்ளன. இந்த 900 கோயில்களும் 9 தொகுப்புகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதன்படி ஒவ்வொரு தொகுப்பிலும் ஒரு மூல சன்னதியும், அதைச் சுற்றிலும் மற்ற சன்னதிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

பெரிய கோயில்
பாலிதானா கோயில்களிலேயே மிகப்பெரிய கோயிலாக 1618-ஆம் ஆண்டு கட்டப்பட்ட சௌமுக கோயில் திகழ்கிறது. இந்தக் கோயிலில் காணப்படும் விசாலமான மண்டபங்கள் அந்தக் காலங்களில் பிரசங்கங்கள் பெரிய அறைகளில் நடந்ததை நினைவுபடுத்துவதாக உள்ளன. இங்கு உள்ள ஜைன தீர்த்தங்கரர் ஆதிநாத்தின் சிலை நான்கு தலைகளுடன் காட்சியளிக்கிறது.

பிரதான கோயில்
பாலிதானா கோயில்களில் ஆதிநாத் கோயில்தான் பிரதான கோயிலாக கருதப்படுகிறது. இங்கு ஜைன தீர்த்தங்கரர் ஆதிநாத்தின் சிலை 7 அடி உயரத்தில் பத்மாசன நிலையில் காட்சியளித்துக்கொண்டிருக்கிறது. இந்தக் கோயிலில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள சேகரிக்கப்பட்ட பழங்கால நகைகளை ஆனந்த்ஜி கல்யாண்ஜி டிரஸ்ட்டின் அனுமதி பெற்று பார்வையிடலாம்.

பிற கோயில்கள்
சௌமுக கோயில் மற்றும் ஆதிநாத் கோயிலைத் தவிர ஆதிஷ்வரா கோயில், விமல் ஷா கோயில், சரஸ்வதிதேவி கோயில், சமவாசரண் கோயில் ஆகியவை பார்க்கவேண்டிய முக்கியமான கோயில்கள். இவைத்தவிர ஷத்ருஞ்சயா மலையடிவாரத்தில் அமைந்துள்ள நவீன கால கோயிலான சம்வத்சரனா என்ற கோயிலையும் கண்டிப்பாக பார்க்க வேண்டும்.

உறங்கும் கடவுளர்கள்!
பாலிதானா கோயில்களில் அனைத்து ஜைன கடவுளர்களும் உறங்குவதாகவும், எனவே கோயில் குருக்கள் இங்கு இரவு முழுதும் இருக்கவேண்டும் என்றும் சொல்லப்படுகிறது.

சிலைகளில் படியும் வெள்ளி!
இந்தக் கோயில்களில் உள்ள விக்ரகங்களில் ஒவ்வொரு இரவும் வெள்ளிப்படிவுகள் தானாகவே ஏற்படுவதாகவும், அதனை அந்தக் குருக்கள் தங்களுக்கு கடவுள் அளித்த பரிசாக நினைத்து அதனை எடுத்துச் செல்வதாகவும் கூறப்படுகிறது.

மூச்சு விட்ட சிலை!
பாலிதானா கோயில்களின் மூலவரான ஆதிநாத்தின் விக்ரகம் கோயிலில் முதன் முதலாக வைக்கப்பட்டபோது 7 முறை மூச்சு விட்டதாக ஒரு நம்பிக்கை நிலவுகிறது.

பறக்கும் சிலை!
பாலிதானா கோயில்களில் உள்ள சுவாமி சுபர்ஷ்வனாத்தின் 10 அங்குல சிறிய சிலை ஒன்று ஒவ்வொரு நாள் இரவும் பறந்துபோய் ஆதிநாத் விக்ரகத்தின் உள்ளங்கையில் அமர்ந்துகொள்கிறது என்று சொல்லப்படுகிறது.

மரத்துக்கடியில் புதையல்!
பாலிதானா கோயில்களின் வளாகத்தில் ஒரே ஒரு மரம்தான் உள்ளது. இந்த மரத்தின் அடியில் ஆபரணங்கள், முத்துக்கள், அந்தக் காலங்களில் இங்கு வாழ்ந்த மக்களின் மிச்சங்கள் ஆகியவை இருப்பதாக சிலர் நம்பி வருகின்றனர்.

மோட்சம்
பாலிதானா கோயில்களுக்கு பிப்ரவரி-மார்ச் மாதங்களில் ஆயிரக்கணக்கான ஜைன மதத்தவர்கள் மோட்சம் வேண்டி வந்து செல்கிறார்கள்.

திருவிழாக்கள்
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர்-நவம்பர் மாதத்தில் ‘சாவ் காவ் தீர்த்த யாத்திரா’ என்ற யாத்திரைத் திருவிழா ஷத்ருஞ்சயா மலைப்பகுதியில் விசேஷமாக நடைபெறுகிறது. இதுதவிர மகாவீர் ஜெயந்தி அன்று மகாவீரரின் சிலை நன்கு அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது.

எப்படி அடைவது?
பாலிதானா கோயில்களை விமானம் மூலமாக அடைய வேண்டுமென்றால் 51 மற்றும் 219 கி.மீ தொலைவில் உள்ள பாவ்நகர் (மும்பைக்கு மட்டுமே விமானச் சேவை உள்ளது), அஹமதாபாத் விமான நிலையங்களை பயன்படுத்திக்கொள்ளலாம். அதோடு பாவ்நகரிலிருந்து பாலிதானாவில் உள்ள சிறிய ரயில் நிலையத்துக்கு ரயில் சேவைகள் உள்ளன. அதுமட்டுமல்லாமல் இன்னும் சிறிது நாட்களில் மும்பை மற்றும் அஹமதாபாத் நகரங்களிலிருந்து பாலிதானாவுக்கு நேரடி ரயில் போக்குவரத்து தொடங்கப்பட இருக்கிறது. மேலும் பாலிதானா ரயில் நிலையத்திலிருந்து 800 மீட்டர் தூரத்தில் உள்ள பேருந்து நிலையத்துக்கு அஹமதாபாத், பாவ்நகர் போன்ற பகுதிகளிலிருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

Exit mobile version