ilakkiyainfo

தர்மபுரத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம்: உண்மையிலேயே வடக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளின் புத்துயிர்ப்பு உள்ளதா? (பாகம-1) – டி.பி.எஸ். ஜெயராஜ்

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள தர்மபுரம் பிரதேச புளியம்பொக்கணை பகுதியில் உள்ள முசலம்பிட்டி இந்திய வீட்டுத்திட்டத்தில் உள்ள 5ம் இலக்க  வீட்டில் 2014 மார்ச்  13 வியாழக்கிழமையன்று,  மாலை  இரண்டு  கைத்துப்பாக்கி  வெடியோசைகள் கேட்டன.

பயங்கரவாத புலனாய்வுப் பிரிவை(ரி.ஐ.டி) சேர்ந்த 50 வயதான ரட்னகுமார என்கிற காவல்துறை அதிகாரி காயங்களுக்கு உள்ளானார். 9 மி.மீ கைத்துப்பாக்கியால் சுட்டதாக சந்தேகிக்கப்படுபவர் முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவை சேர்ந்த பொன்னையா செல்வநாயகம் கஜீபன் என்கிற கோபி என்பவராவார்.

இந்தச் சம்பவம் ஸ்ரீலங்கா பாதுகாப்பு பிரிவினரிடையே அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீலங்காவில் யுத்தம் நிறைவடைந்ததின் பின்னர்  முதல் முறையாக   ஸ்ரீலங்கா பாதுகாப்பு அதிகாரி ஒருவர் எல்.ரீ.ரீ.ஈ யுடன் தொடர்புள்ள ஒருவரால் சுடப்பட்டு காயமடைந்துள்ளார்.

மே 2009 ல் இருந்து   எல்.ரீ.ரீ.ஈ என அழைக்கப்படும்  புலிகளை, நந்திக் கடலேரியின் கரைகளில் வைத்து தோற்கடித்ததை தொடர்ந்து பொதுவாக நாட்டிலும் குறிப்பாக வட மாகாணத்திலும் ஒரு இயல்பு மற்றும் நிலையான காலநிலை அனுபவிக்கப்பட்டு வந்தது.

நாட்டில் பிரச்சினைகளும் பின்னடைவுகளும் இருந்தபோதிலும் யுத்தம் முடிவடைந்ததிலிருந்து மக்கள் முன்னேற்றமடைந்து கொண்டிருந்தார்கள். கடந்த 58 மாதங்களாக வடக்கில் எல்.ரீ.ரீ.ஈ புத்துயிர் பெறுவதை வலியுறுத்தத் தக்கதான அடையாளங்கள் எதுவும் காணப்படவில்லை.

யுத்த வன்முறைகள் அற்ற ஒரு சூழ்நிலையில் தமிழ் மக்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். தர்மபுரத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தின் பின் அது தொடர்பான அமைதி நிலையின் உருவகஞ் சார்ந்த உண்மை சிதறுண்டு போயுள்ளது.

இந்தச் சம்பவத்தின் பின் விளைவுகள் வடக்கில் தற்போது  நிலவும் அமைதியான சூழலை கடுமையாக்குவதற்கான வாய்ப்பு உள்ளது.

இந்த சம்பவத்தின் பின் நடைபெற்ற நிகழ்வுகள் அத்தகைய அச்சமூட்டும் கெடுதிகள் இருப்பதற்கான முன்னறிவிப்பினை நல்குகின்றன. அந்த சூட்டுச்  சம்பவத்திற்கு முன் பாதுகாப்பு   மற்றும் சட்ட அமலாக்கல் அதிகாரிகள் வடக்கில் எல்.ரீ.ரீ.ஈ புத்துயிர் பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா என்பதுபற்றி ஒரு வழியில் விசாரணைகளை மேற்கொண்டு வந்துள்ளனர்.

புலிகளின் புத்துயிர்ப்புக்கு ஆதரவு தெரிவிக்கும் பிரசுரங்கள் கைப்பற்றப் பட்டுள்ளன. சிறிய ரக படைக்கலங்கங்களான ஆயுதங்களின் மறைவிடங்கள் தெரிய வந்துள்ளன. இது தொடர்பான தேடப்படுபவர்களின் பட்டியலில் கோபி என்கிற செல்வநாயகம் கஜீபன் இடம்பற்றுள்ளார்.

LTTE-Logoஇந்த சூட்டுச் சம்பவத்தின் பின் சாத்தியமான ஒரு எல்.ரீ.ரீ.ஈயின் மீள் இணைவு தொடர்பான சந்தேகங்கள் உண்மையாகிவிடடது போலத் தெரிகிறது.

எச்சரிக்கை அடைந்துள்ள பாதுகாப்பு அதிகாரிகள் இப்போது கோபி என்கிற கஜீபன் மற்றும்  அவருக்கு துணையாக இயங்கும் அப்பன் என்கிற நவநீதன் ஆகியோரை தேடி பரவலான  தீவிர மனித வேட்டையை தொடர்ந்து வருகிறார்கள். வடக்கின் பெருநிலப் பகுதியான வன்னியில் உள்ள சுவர்கள் மற்றும் மரங்கள் யாவற்றிலும் தேடப்படுபவர்கள் பற்றிய துண்டுப் பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன.

காவல்துறை மற்றும் இராணுவம் இணைந்த பாரிய படையினர் மீண்டும் ஒரு முறை சுற்றிவளைப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை முல்லைத்தீவு, வவுனியா, மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் நடத்தி வருகின்றனர்.

பெருமளவிலான   இளைஞர்கள் சுற்றிவளைக்கப்பட்டு   விசாரணைக்கு உட்படுத்தப் பட்டுள்ளார்கள். அதேவேளை அதில் பெரும்பாலானவர்கள் விடுதலை செய்யப்பட்டதுடன் சிலர் விசாரணைக்காக தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

வாகனங்கள் முறைப்படி நிறுத்தப்பட்டு பயணிகள் சோதனை செய்யப்பட்டு வருகிறார்கள்.அங்கொன்றும் இங்கொன்றுமாக பயணிகளின் அடையாள அட்டைகளும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.

கோபி என்கிற கஜீபன்

இவ்வாறான நிலமைகளில் ஆண் மற்றும் பெண் ஆகிய இருபாலாரும் தீவிரமான கண்காணிப்புக்கு இதுபோல உட்படுத்தப்படுவது வழமையான ஒன்று. புனர் வாழ்வுக்குப் பின்னர் வித்தியாசமான வாழ்க்கையை தொடரும் முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்களில் அநேகரும் இந்த கண்காணிப்பின் கீழ் உள்ளனர்.

வன்னி மண்ணில் வாழும் பரிதாபகரமான இந்த மனிதர்கள் தற்பொழுது ஏற்பட்டுள்ளதைப் போன்ற சூழ்நிலையில் வழமையான சந்தேகத்துக்கு உரியவர்களைப் போலவே நடத்தப்படுவார்கள். முன்னாள் புலிகளில் அநேகர் இப்பொழுது அதிகாரிகள் முன் சமூகமளிக்க வேண்டியுள்ளது.

அவர்களின்   நடத்தைகள் நெருக்கமாக கண்காணிக்கப்படுகிறது. பாதுகாப்பு படைகள் வன்னியில் நடத்தும் தேடுதல்கள் கோபி என்கிற கஜீபனை தேடுவற்காக நடத்தப்படுகிறது என்பது வெறும் மழுப்பல்தான்,

ஆனால் வடக்கில் எல்.ரீ.ரீ.ஈயின் மறுமலர்ச்சிக்கு சாதகமான இலக்குகளை  நசுக்குவதற்கான   ஒரு நடவடிக்கையாக அது மேற்கொள்ளப்படுகிறது. முறைப்படி சரணடைந்து புனர்வாழ்வு பெறாமல் இருக்கும் முன்னாள் புலிகளைக் கண்டுபிடிப்பதற்கும் இப்போது முயற்சி நடக்கிறது.

தமிழீழ விடுதலைப் புலிகள் ஸ்ரீலங்காவில் ஒரு இயக்கமாக செயற்படுவது, முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்காலில் 2009 மேயில் அது தோற்கடிக்கப் பட்டதுடன் முடிவடைந்து விட்டது.

புலிகளின் உயர்மட்டத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றம் ஏராளமான அதன் முன்னணி தவைர்கள் கொல்லப்பட்டு விட்டார்கள். 11,000 மேற்பட்ட ஏனைய தலைவர்களும் மற்றும் அங்கத்தவர்களும் சரணடைந்ததுடன் தடுப்பு முகாம்களில் புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கும் உட்படுத்தப் பட்டார்கள்.

இவர்களில் 10,000 க்கும் அதிகமானவர்கள் கட்டம், கட்டமாக   விடுவிக்கப்பட்டார்கள். ஆயிரத்துக்கும்  குறைவானவர்களே இன்னும் காவலில் உள்ளார்கள்,அவாகளில்  சிலர் நீதிமன்றின் முன்பாக நிறுத்தப்பட்டுள்ளார்கள்.

எனினும் எல்.ரீ.ரீ.ஈயின் வெளிநாட்டுக் கட்டமைப்பு செயற்பட்டு வந்தாலும் அதன் முன்னைய உயிர்கொல்லி விஷத்தின் வீரியம் இப்போது பெருமளவு குறைந்துவிட்டது.

தமிழ் புலம்பெயர்ந்தோர் மத்தியில் உள்ள பெரும்பாலான எல்.ரீ.ரீ.ஈ கிளைகள், முன்னணி அமைப்புகள்,மற்றும் வியாபார நிறவனங்கள் என்பன, பேரின்பநாயகம் சிவபரன் அல்லது நெடியவன் என்பவரது ஒட்டுமொத்த மேலாதிக்கத்தின் கீழ் உள்ளன.

நோர்வேயில் வசிக்கும் நெடியவன் ஒரு குறைந்தளவு சுயவிபரத்தை வெளிக்காட்டியவாறு, தலைநகர் ஒஸ்லோவில் இருந்து சுமார் 150 மைல்கள் தூரத்திலுள்ள ஒரு சிறிய நகரத்துக்கு இடம்பெயர்ந்துள்ளார். அங்கிருந்தவாறு தனது நம்பிக்கைக்கு உரிய உதவியாளர்களான இளம்பொறை  மற்றும் நந்தகோபன் ஆகியோரின் உதவியுடன் தொடர்ந்து இயக்கத்தை நடத்தி வருகிறார்.

மற்றொரு மட்டத்தில் வெளிநாட்டிலுள்ள அநேக புலிகள் மற்றும் புலிகள் சார்பு செயற்பாட்டாளர்கள் தங்களை மனித உரிமை காவலர்களாக உருமாற்றிக கொண்டுள்ளார்கள்.

மேம்போக்காக எல்.ரீ.ரீ.ஈ யின் விளையாட்டினது பெயர் இப்போது தேசிய விடுதலையை அணுகுவதற்கான ஆயுதப் போராட்டம் என்பதாக இல்லை. இப்போது அது நீதி,பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் மற்றும் சமத்துவம் என்பனவற்றுக்கான உயர்ந்த தேடலை முன்னோக்கிச் செல்கிறது.

ஒரு சோகம் கலந்த நகைச்சுவை சம்பவமான இந்த காட்சி மாற்றம் காரணமாக, மரியாதைக்குரிய மனித உரிமை அமைப்புகளின் அங்கீகாரம் பெற்ற பிரதிநிதிகளுக்கு துணையாக முந்தையகால புலிகள் தங்கள் புதிய அவதாரத்தை செயல்படுத்தி மகிழ்வது விந்தையானது. இப்போது யுத்தக்களம் புதிய இடமான ஜெனிவாவில் உள்ள ஐநா மனித உரிமைகள் சபை அரங்குக்கு மாற்றப்பட்டுள்ளது.

புலனாய்வு அறிக்கைகள்

வெளிநாட்டு எல்.ரீ.ரீ.ஈயினரின் இந்த செயற்பாடுகள் தொடர்ந்தாலும்கூட, Kilinochi Bord ஸ்ரீலங்காவின் பாதுகாப்பு நிறவனம் தொடர்ந்து விழிப்புடனேயே இருந்துவருகிறது. வடக்கு – கிழக்கு தமிழ் பகுதிகளில் புலம்பெயர் புலி மூலகங்கள் வன்முறைகளை தூண்டிவிடுவதற்கு முயற்சி  செய்வதாக  புலனாய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

வெளி நாட்டுப் புலிகளுக்கு ஆயதமேந்திய எதிர்ப்புக்கான ஒரு முன்னறிப்பு தோன்றியுள்ளாக வெளிநாடுகளில் சித்தரித்துக் காட்டுவதற்கு ஒரு வகையான வன்முறை சம்பவம் அல்லது சம்பவங்கள் இங்கு நடப்பது அவசியமாக உள்ளது.

எல்லாவற்றையும் விட, 12,000 எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்கள் எரித்திரியாவில் ஆயுதப்பயிற்சி பெறுவதாகவும் மற்றும் பிரபாகரன் உயிருடன் இருப்பதாகவும் நம்பும் கணிசமானளவு முட்டாள்கள் இன்னமும் இருக்கிறார்கள்.

ஸ்ரீலங்காவிலுள்ள பாதுகாப்பு அதிகாரிகளுக்கு ஸ்ரீலங்காவில் எல்.ரீ.ரீ.ஈ ஒரு உயிர்வாழும் அமைப்பாக இப்போது இல்லை என்பது நன்கு தெரியும். எனினும் புலம்பெயர் புலி மூலகங்களின் உதவியால் தற்போது நடக்கும் முயற்சிகள் மற்றும் அவர்களிடமுள்ள பணபலம் என்பனவற்றைப் பற்றிய கவலைகள் உள்ளன.

ஒரு முன்னாள் புலி அங்கத்தவருக்கு அல்லது முன்னாள் ஆதரவாளருக்கு பணம் கொடுத்து வன்முறைகளில் ஈடுபடும்படி அவர்களை ஊக்குவிப்பது சாத்தியமானது. இது வடக்க மற்றம் கிழக்கில் உள்ள தற்போதைய நிலமையை பெரிதும் பாதிக்கும்.

அரசில் வன்முறை பற்றிய மீள் எழுச்சிக்கான இந்த எதிர்பார்ப்பு,  அளவுக்க அதிகமாக பெருமளவு இராணுவ பிரசன்னத்தை வடக்கில் பராமரிப்பதற்கான நிலைப்பாட்டை மேற்கொள்வதற்கான ஒரு நியாயப்படுத்தல் முயற்சியாக பார்க்கப்படுகிறது.

இந்த அளவுக்கு மீறிய இராணுவ மயமாக்கம் பற்றி பல தரப்புகளிடமிருந்தும் கண்டனங்கள் எழுந்தாலும், எல்.ரீ.ரீ.ஈ மறுமலர்ச்சி அடையக்கூடிய சாத்தியம் உள்ளது என்கிற அச்சத்தினால் ராஜபக்ஸ ஆட்;சியினர் இந்த இராணுவ இருப்பைக் குறைக்க உறுதியாக மறுத்து வருகின்றனர்.

எல்.ரீ.ரீ.ஈ புத்துயிர் பெறவதற்கு சாத்தியம் உள்ளது என்கிற இந்தப் பின்னணியில் வடக்கில் துருப்புகளை குறைக்கும்படி எழுப்பப்படும் எதிர்காலக் கோரிக்கைகள் அலட்சியப் படுத்தப்படும் என்றே தோன்றுகிறது.

தற்போதைய நெருக்கடி நிலை பற்றிய ஒரு சிறப்பான விளக்கத்தைப் பெறுவதற்கு,  வடக்கில் இது தொடர்பாக நடைபெற்ற சமீபத்தைய முனனேற்றங்களைப்பற்றி ஆராய்வது நல்லது.

தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிப்பதன்படி,  இந்த வருட ஜனவரி மாதமளவில் ஒரு சர்ச்சைக்குரிய துண்டுப் பிரசுரத்தின் மூலம் வடக்கிலுள்ள பாதுகாப்பு படைகளை எச்சரித்ததுடன்   இவை எல்லாம் ஆரம்பமாகின.

தமிழ் மொழியிலுள்ள இந்தப் பிரசுரங்கள் வன்னியிலுள்ள பல வீடுகளுக்கு முன்னால் காணப்பட்டன. சில இளைஞர்கள், மக்கள் பயணம் செய்யும் பேரூந்துகள் மற்றும் சீரூந்துகளில் உள்ளவர்களுக்கு நேரடியாகவே விநியோகித்துள்ளார்கள்.

பாடசாலைகள், பேரூந்து நிலையங்கள், கோவில்கள் மற்றும் சாப்பாட்டுக் கடைகள் உட்பட்ட பல பொது இடங்களில் இந்த பிரசுரக்கட்டுகள் போடப்பட்டிருந்தன. ஒரு சில பிரசுரங்கள் மரத்தில் ஆணி அடித்து வைக்கப்பட்டோ அல்லது சுவர்களில் ஒட்டப்பட்டோ காட்சியளித்தன.

பிரசுரங்களின் விநியோகம் மற்றும் காட்சிப் படுத்தல் என்பன இரவோடிரவாக பரந்த அளவில் மேற்கொள்ளப் பட்டிருந்தன. இந்த விநியோகம் ஒரு நேரத்தில் ஒரு இடத்தை இலக்குவைத்து ஒரு சீரான முறையில் செயற்படுத்தப்பட்டிருந்தது. துண்டுப் பிரசுரத்து வட்டாரங்களில் போதியளவு மனித வளம் இல்லாதது வெளிப்படையாகத் தெரிந்தது. மேலும் பாதுகாப்பு படைகள் எச்சரிக்கை அடையாமலிருக்க மேற்கொள்ளபபட்ட தந்திரமாகவும் அது இருக்கலாம்.

காவல் தெய்வங்கள்

தமிழில் இருந்த அந்த துண்டுப் பிரசுரங்கள் தமிழ் மக்களின் தேசிய உணர்வுகளை எழுச்சிப்படுத்தி உணர்ச்சிகரமான சொல்லாட்சி மிக்க வார்த்தைகளால் உருவாக்கப் பட்டிருந்தன. மக்கள் ஒன்று சேர்ந்து காவல் தெய்வங்களின் புத்துயிர்ப்புக்கு ஆதரவு தரும்படி அதில் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது.

முந்தைய காலங்களில் தமிழ் மக்களின்   காவலாளிகளாகவும், பாதுகாவலர்களாகவும் மற்றும் விடுதலையாளர்களாகவும் உள்ள அமைப்பு என எல்.ரீ.ரீ.ஈ கூறி வந்ததால் எல்.ரீ.ரீ.ஈ யினை பெரும்பாலும் காவல் தெய்வங்கள் என விபரித்து வந்தனர்.

அந்த துண்டுப் பிரசுரங்கள், தமிழ் மக்கள் தங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்துவதுடன் நீண்டகாலமாக விரும்பிய இலக்கான முழு சுதந்திரத்தை காவல் தெய்வங்களான தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையின் கீழ் அடைவதற்கு முன்னோக்கி எழுச்சி பெறும்படியும் வலியுறுத்தியிருந்தது.

அதில் மேலும் குறிப்பிட்டிருந்தது சர்வதேச நிலமை இப்போது நமக்கு சாதகமாக உள்ளதால் தமிழீழத்தை அடைவதற்கான காலம் கனிந்துள்ளது என்று.

ஆரம்பத்தில் பாதுகாப்பு வட்டாரங்கள் அத்தகைய துண்டுப் பிரசுரங்களைப் பற்றி அறிந்ததும் அதில் அதிக அக்கறை காட்டாததுடன் அந்த துண்டுப் பிரசுரங்களை தீவிரமானதாகவும் கருதவில்லை.

எனினும் வழமையான விசாரணைகள் நடத்தப்பட்டன. விசாரணைகள் முன்னேற்றம் அடைந்தபோது மேலும் கவலை தரும் விடயங்கள் வெளிக்கிளம்பின.

அது பற்றிய அறிவு உள்ள வட்டாரங்கள் தெரிவிப்பதன்படி ஆரம்பக்கட்ட தகவல்கள் வெளிப்படுத்தியது, எல்.ரீ.ரீ.ஈ க்கு புத்துயிர் கொடுப்பதற்கும் மற்றும் ஆயுதப் போராட்டத்தை மீண்டும் தொடங்குவதற்கும் வழி தேடுவதற்குத் திட்டமிடும் ஒரு குழு இருப்பதற்கான சாத்தியம் உள்ளது என்பதை. ஆயுதங்களும் மற்றும் வெடிபொருட்களும் பதுக்கி வைக்கப்படுகின்றன என்பதுடன் அனுதாபிகளும் ஆட்சேர்ப்பு செய்ப்படுகின்றனர் என்கிற தகவலும் வெளிப்பட்டது.

மேலதிக விசாரணைகளின் விளைவாக இந்த நடவடிக்கைகளின் பின்னால் பிரதான சூத்திரதாரியாக இயங்குகிறார்; எனச் சந்தேகப்படும் ஒரு மனிதனின் அடையாளமும் வெளிவந்தது.

அது வேறுயாருமல்ல முப்பத்தொரு வயதான பொன்னையா செல்வநாயகம் கஜீபன் அல்லது காசியன் என்கிற இயக்கப் பெயரைக் கொண்ட கோபி ஆவார்.

ஆறடி உயரம்,  நடுத்தர நிறம்,  இடதுபுற மேலுதட்டில் ஒரு மச்சம் என்பனவற்றைக் கொண்ட இவர் இப்போது தர்மபுரம் பகுதியில் வசிப்பதுடன் ஒரு கனரக வாகன ஓட்டுனராகவும் தொழில் புரிந்து வருகிறார்.

கஜீபன் என்கிற கோபி முன்பு ஒரு எல்.ரீ.ரீ.ஈ புலனாய்வுப் பிரிவு செயற்பாட்டாளராக, அச்சமூட்டும் பொட்டு அம்மான் என்கிற சண்முகலிங்கம் சிவசங்கரனின் கீழ் பணியாற்றியவராவார்.

யுத்தத்தின் முடிவில் சரணடைந்த கஜீபன் வவுனியா பூந்தோட்டத்தில் உள்ள  பாதுகாப்பு வதிவிடம் மற்றும் புனர்வாழ்வு  மையத்தில் (பார்க்) தங்க வைக்கப்பட்டார்.

(தொடரும்)
–  டி.பி.எஸ். ஜெயராஜ்

Exit mobile version