ilakkiyainfo

‘‘தலைவருக்காகப் பார்க்கிறேன், இல்லென்னா.. கட்சியை உடைச்சிருப்பேன்!”

கழுகார் வந்ததும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பட்டியலை விரித்தபடி பேச ஆரம்பித்தார்!

”காங்கிரஸ் கட்சியின் சரித்திரத்திலேயே முதன்முறையாக வேட்புமனுத் தாக்கல் தொடங்குவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னதாக இப்போதுதான் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. வேட்புமனுத் தாக்கல் முடியும் நாள் வரை காத்திருந்து வேட்பாளர் பட்டியலை வெளியிடுவதுதான் அவர்கள் வழக்கம். பெரிய பெரிய தலைகளின் முட்டல் மோதலும் இல்லை. அதனால்தான், உடனடியாக பட்டியல் வெளியாகிவிட்டது!”

p49 copie‘இந்த வேட்பாளர் பட்டியலைத் தயார்செய்தது யார்?”

”குலாம்நபி ஆசாத், முகுல் வாஸ்னிக் ஆகிய இருவரும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஞானதேசிகனை அருகில் வைத்துக்கொண்டு இதனைத் தயாரித்துள்ளனர். வழக்கம்போல் ஜி.கே.வாசன் ஆதரவாளர்கள்தான் அதிகப்படியான தொகுதிகளில் வேட்பாளர்கள் ஆகியிருக்கின்றனர்.

இதுவரை 33 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் அறிவித்துள்ளது.   இதில் ஜி.கே.வாசன்   ஆதரவாளர்கள் மட்டும்   13 பேர். ப.சிதம்பரம் தனது  ஆதரவாளர்கள்   மூவருக்கு வாங்கிக் கொடுத்துள்ளார்.

தங்கபாலு மூன்று தொகுதிகளைக் கைப்பற்றியிருக்கிறார். கோவையும் நீலகிரியும் பிரபு அணிக்குப் போயுள்ளது. அரக்கோணமும் வேலூரும் இளைஞர் காங்கிரஸுக்குத் தரப்பட்டுள்ளது. மற்ற தொகுதிகள் தனிப்பட்ட ஆட்களின் கோட்டா”

”ம்”

”இதிலும் மோதலுக்குக் காரணமானத் தொகுதிகள் உண்டு. சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி ப.சிதம்பரத்தின் ஆதரவாளரான வள்ளல்பெருமானுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், ஜி.கே.வாசனின் ஆதரவாளரான மணிரத்னம் என்பவருக்குத்தான்   ஞானதேசிகன் பரிந்துரை செய்தாராம். கடந்த சில ஆண்டுகளாகவே அந்தத் தொகுதியைக் குறிவைத்து வேலைசெய்து வந்திருக்கிறார் மணிரத்னம்.

அவருக்குத் தராமல் போனது தொண்டர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைமையின் முடிவை எதிர்த்து சிதம்பரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்திவருகிறார்கள். அதேபோல், நாமக்கல் தொகுதியை ஜி.கே.வாசன் அணி கேட்டுள்ளது. ஆனால், அது தங்கபாலுவுக்குப் போய்விட்டது. தங்கபாலுவின் ஆதரவாளர்கள் அதிகம் இருக்கும் சேலம், கள்ளக்குறிச்சி இரண்டுமே ஜி.கே.வாசன் அணிக்குப் போய்விட்டது!”

”ஆறு தொகுதிகளுக்கு ஏன் இன்னும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை?”

”கன்னியாகுமரி தொகுதி குமாரதாஸ், விஜயதாரணி இருவரில் யாருக்கு என்ற குழப்பம் தீரவில்லை. ஜோதிமணி, பேங்க் சுப்பிரமணியம் ஆகியோரில் கரூர் யாருக்கு என்ற மோதல் தொடர்கிறது. கிருஷ்ணகிரி தொகுதியை தங்கபாலு தனது ஆதரவாளருக்கு வாங்கத் துடிக்கிறார்.

ஆனால், இளைஞர் காங்கிரஸைச் சேர்ந்த அனிதாவுக்குத் தரப்படலாம் என்கிறார்கள். விழுப்புரத்துக்கு ராணி பெயர் அடிபடுகிறது. இவை எல்லாமே முடிவுசெய்ய முடியாதவையாக இருக்கின்றன. அதனால்தான் அறிவிப்பில் தாமதம்!”

”ஜி.கே.வாசனும் ப.சிதம்பரமும் போட்டியிடாதது தொண்டர்கள் மத்தியில் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளதே?”

”வலுவான கூட்டணி அமைந்திருந்தாலும் ப.சிதம்பரம் போட்டியிட மாட்டார் என்று அவரது ஆட்கள் சொல்லிவந்தார்கள். தான் இருக்கும்போதே மகன் கார்த்தியை தீவிர அரசியலுக்குள் கொண்டுவந்துவிட வேண்டும் என்பது அவரது திட்டம். அதனை கடைசி வரைக்கும் அறிவிக்காமல் அமுக்கமாக வைத்திருந்தார் ப.சி. அதற்குக் காரணம் ஒன்றைச் சொல்கிறார்கள்.

சிவகங்கை தொகுதியை தனக்கோ அல்லது தனது மகனுக்கோ குறிவைத்துக்கொண்டு இருந்தார் சுதர்சன நாச்சியப்பன். தான் போட்டியிடவில்லை என்று முன்பே அறிவித்துவிட்டால், அது சுதர்சன நாச்சியப்பனுக்குப் போய்விடும் என்று பயந்துவிட்டாராம் ப.சிதம்பரம். அதனால்தான் கடைசி வரைக்கும் சொல்லாமல் வைத்திருந்துள்ளார். வேட்பாளர் பட்டியல் தயாராகி வெளியிட நாள் நெருங்கும்போது, அகமது படேலிடம் தனது விருப்பத்தை ப.சிதம்பரம் சொல்லியிருக்கிறார்.

ஜி.கே.வாசனைப் பொறுத்தவரை இரண்டு வாரங்களுக்கு முன்னதாகவே அந்த முடிவை அறிவித்துவிட்டார். வேட்பாளர் பட்டியல் டெல்லியில் தயாராகி வந்தபோது, அவரை குலாம்நபி ஆசாத் டெல்லிக்கு அழைத்துள்ளார். ஆனால், அவர் போகவில்லை.

‘உங்களுக்கு எந்தத் தொகுதி வேண்டும்?’ என்று ஆசாத் கேட்டபோது, ‘நான் போட்டியிடவில்லை. தமிழகம் முழுக்கப் பிரசாரம் செய்ய இருக்கிறேன்’ என்றாராம். இந்தத் தகவல் அகமது படேலுக்கும் போயுள்ளது. அவரும் ஜி.கே.வாசனுக்கு போன் போட்டு பேசியுள்ளார். ‘ஏன் போட்டியிடவில்லை?’ என்று வாசனிடம் அவரும் கேட்டுள்ளார்.

‘ஒரு குறிப்பிட்டத் தொகுதிக்குள் முடங்க விரும்பவில்லை. மாநிலம் முழுக்க பிரசாரம் செய்கிறேன்’ என்று ஜி.கே.வாசன் சொல்லியிருக்கிறார். மறுபடியும், ‘ஏன் போட்டியிடவில்லை? வேறு வருத்தம் ஏதாவது இருக்கிறதா?’ என்று அகமது படேல் கேட்க, ‘இதுவரை   எல்லாவற்றையும் என்னைக்   கேட்டுத்தான் செய்தீர்களா? நான் ஏன் போட்டியிடவில்லை என்பதை மட்டும் திரும்பத் திரும்பக் கேட்கிறீர்களே?’ என்று கிண்டலாகக் கேட்டாராம் ஜி.கே.வாசன்.

அதோடு இந்த விவாதம் முடிந்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை மதிய வேளையில் பத்திரிகையாளர் சோவைச் சந்தித்து நீண்ட நேரம் பேசிவிட்டுத் திரும்பியுள்ளார் ஜி.கே.வாசன். அவரும் ‘நீங்கள் போட்டியிடாதது சரிதான்!’ என்று அட்வைஸ் செய்தாராம்!” என்ற கழுகார், காங்கிரஸ் மேட்டருக்கு முற்றுப்புள்ளி வைத்தார்!

”பி.ஜே.பி. – பா.ம.க. கூட்டணி உருவாகும் மேடைக்கு 20-ம் தேதி மதியம் வராமல் டாக்டர் ராமதாஸ் நேராக தைலாபுரம் போய்… அங்கும் வீட்டுக்குள் போகாமல் நேராக சீர்காழி பறந்துபோனதைக் கடந்த இதழில் விவரித்து இருந்தேன்!

தே.மு.தி.க. இருக்கும் அணியில் பா.ம.க. சேருவதை ராமதாஸ் விரும்பவில்லை. ஆனால் அன்புமணி, ‘வேறு வழியில்லை’ என்று சொன்னார். அன்புமணிக்குத்தான் குடும்பத்தினர் ஆதரவும் அதிகம் இருந்தது. அதற்குமேல் தன்னுடைய முடிவுக்கு மற்றவர்களைக் கட்டுப்படுத்த ராமதாஸால் முடியவில்லை. அதனால், கோபித்தவராக சீர்காழிக்குப் போய்விட்டார். ‘அரசியலை விட்டு ஒதுங்கப்போகிறேன்’ என்று ராமதாஸ் அறிவிக்கப்போவதாகக்கூட செய்தி பரவியது!”

”சீர்காழி கூட்டத்தில் என்ன பேசினாராம்?”

”பி.ஜே.பி. கூட்டணியில் பா.ம.க. போய்ச் சேர்ந்துவிட்டது; ராஜ்நாத் சிங் இருக்கும் மேடையில் அன்புமணி உட்கார்ந்துவிட்டார்; ஒப்பந்தத்தில் ஜி.கே.மணி கையெழுத்துப் போட்டுவிட்டார்… இவை அனைத்துமே 20-ம் தேதி மாலை 5 மணிக்குள் நடந்து முடிந்துவிட்டது.

ஆனால், அன்று இரவு சீர்காழியில் பேசிய ராமதாஸ், இவை எதுவுமே நடக்காதது மாதிரி பேசி, அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார். அவருக்கு முன் பேச அழைக்கப்பட்டார் காடுவெட்டி குரு. அவரது பேச்சில் எப்போதும் அனல் தெறிக்கும். ஆனால், அமைதியாக ஐந்து நிமிடங்கள் பேசிவிட்டு, ‘நம்முடைய இனம் காக்க வேட்பாளர் அகோரத்துக்கு வாக்களியுங்கள்’ என்று முடித்துவிட்டார் குரு. மயிலாடுதுறை தொகுதிக்குள் வருகிறது சீர்காழி. இது பா.ம.க-வுக்கு பி.ஜே.பி. கூட்டணிக்குள் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகுதிதான்!”

”மேலும் சொல்லும்!”

‘மைக் பிடித்த ராமதாஸ், ‘பா.ம.க. மட்டும்தான் போராடும் கட்சி. தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் நாடகக் கட்சிகள். 47 ஆண்டுகளாக இந்த இரு கட்சிகளும் நாட்டை சின்னாப்பின்னப்படுத்திவிட்டன. வளம் கொழிக்கிற இந்த நாட்டை டாஸ்மாக்  திறந்து  குடிகார நாடாக ஆக்கிவிட்டார்கள்.  ஐந்நூறு, ஆயிரம்  வாங்கிக்கொண்டு உங்கள்  எதிர்காலத்தை  வீணடித்துவிடாதீர்கள்’ என்று பொதுவாகப் பேசிவந்த ராமதாஸ், அடுத்து தன்னைப்பற்றி பேச ஆரம்பித்தார்.

‘தாழ்த்தப்பட்டவருக்குத் தனி டம்ளர், மற்றவர்களுக்குத் தனி டம்ளர் என வைத்திருக்கும் இரட்டைக் குவளை முறையை எதிர்த்து நானும் குருவும்தான் போராடினோம். ஆனால், அவருக்கு சாதி வெறியர் என்றும் எனக்கு சாதிதாஸ் என்றும் பட்டம் கிடைத்தது.

இளையபெருமாள் என்னை எதிர்த்து அவ்வளவு செய்தார். என்னுடைய அணுகுமுறையால் சமூகநீதி கூட்டணி அமைத்தோம். சில தொகுதிகளைக் குறிப்பிட்டுக் கேட்டார். என்னிடம் எதற்கு கேட்கிறீர்கள்… நீங்களே எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொன்னேன்.

அப்படி ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்காகப் பாடுபட்டவன் நான்’ என்று நெடுநேரம் விவரித்துக்கொண்டு இருந்த ராமதாஸ், கடைசி வரைக்கும் கூட்டணி பற்றி பேசவே இல்லை. இந்தத் தகவல் சென்னையில் இருந்த அன்புமணிக்கு வந்தது. எப்படியாவது அப்பாவைச் சமாதானப்படுத்த வேண்டும் என்ற யோசனையில் இறங்கினார்!”

”சமாதானப் படலம் நடந்ததா?”

”சீர்காழி கூட்டம் முடித்துவிட்டு அங்கேயே தங்கிவிட்ட ராமதாஸ், அடுத்து தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்க வேண்டுமா என்ற யோசனையில் ஆழ்ந்தார். அதனால், தைலாபுரம் வந்துசேர்ந்தார். கடந்த நான்கைந்து நாட்களாக மாத்திரைகள் எதுவும் ஒழுங்காக சாப்பிடாததால், உடம்பும் சுணக்கமாகிவிட்டது. மனைவி சரஸ்வதி, சென்னையில் மகன் அன்புமணி வீட்டில்தான் இருந்தார்.

அப்பாவைச் சமாதானப்படுத்த ஒரே வழி, அனைவருமே மொத்தமாகப் போய் காலில் விழுந்துவிடுவது என்று முடிவெடுத்தார். தனியாகப் போய் யாரும் மாட்டிவிடக் கூடாது என்றும் நினைத்தார்கள். கடந்த வெள்ளிக்கிழமை அன்று நான்கைந்து கார்களில் சரஸ்வதி, அன்புமணி குடும்பத்தினர், மகள்கள் காந்தி மற்றும் கவிதா குடும்பத்தினர் சென்னையில் இருந்து தைலாபுரம் நோக்கி பயணப்பட்டனர்.

சில நேரங்களில் போர்களில் குழந்தைகளை முன்னால் விட்டு போராளிகள் பின்னால் பதுங்கிச் செல்வதைப்போல, பேரன் பேத்திகளை முதலில் வீட்டுக்குள் அனுப்பி ‘தமிழினப் போராளி’ தாத்தாவைச் சமாதானப்படுத்த வைத்தார்களாம். பேரன், பேத்திகளோடு பெரிய டாக்டர் கொஞ்சிக்கொண்டிருக்க… சின்ன டாக்டர் குடும்பத்தோடு உள்ளே நுழைய… குணச்சித்திர காட்சியாகவே அது அமைந்துள்ளது.

எல்லோரும் வெள்ளைக் கொடியோடு சரணடைந்துவிட்டார்கள். ‘இப்படி ஒரு கூட்டணி அமைப்பதைத் தவிர வேறு வழியில்லை’ என்று பேச்சுவார்த்தை நடத்தியவர்தானே ராமதாஸ். அவரது கோரிக்கை… சேலமும் திருவண்ணாமலையும் வேண்டும் என்பது.

அதில் சேலம் கிடைக்கவில்லை. கேட்ட எட்டில் ஏழு கிடைத்துவிட்டது என்பதில், ராமதாஸுக்கு ஓரளவு திருப்திதான். ஆனாலும் பிகு பண்ணிக்கொண்டார். முதலில் கொஞ்ச நேரம் கோபமாகப் பேசிக்​கொண்டிருந்தாராம். கடைசியில், ‘நான் நார்மலாக, கொஞ்ச நாட்கள் தேவைப்படும்’ என்று சொல்லிக்கொண்டாராம். அப்பாவை சமாதானப்படுத்திய திருப்தியில் குடும்பம், சென்னைக்குத் திரும்பிவிட்டது. அநேகமாக பா.ம.க. போட்டியிடும் தொகுதிகளில் மட்டும் ராமதாஸ் பிரசாரம் செய்வார். தே.மு.தி.க. தொகுதிகளுக்கு அன்புமணி போவார் என்கிறார்கள்!”

”இன்னும் புதுச்சேரி சிக்கல் தீரவில்லையோ?”

”அரசியல் கட்சிகளோடு கூட்டணிப் பேச்சுவார்த்​தையில் இறங்கிய பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், மோகன்ராஜுலு டீம், தமிழக கட்சிகளோடு பேசும்போது தமிழகத்தில் உள்ள 39 தொகுதிக்கு மட்டும்தான் பேசினார்கள். புதுச்சேரியை பா.ம.க. கேட்டபோது, ‘புதுச்சேரிக்கு மாநிலத் தலைவர் வேறு. அங்குதான் நீங்கள் பேச வேண்டும்’ என்று சொல்லிவிட்டார்கள்.

இதில் மோகன்ராஜுலு மட்டும் புதுச்சேரி பொறுப்பாளர். அவர் இரண்டு முறை புதுச்சேரி சென்று என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியைச் சந்தித்துவிட்டு வந்தார். புதுச்சேரியில் காங்கிரஸைத் தோற்கடிக்க வேண்டுமானால், என்.ஆர். காங்கிரஸ் ஆதரவு இருந்தால்தான் முடியும் என்று புதுச்சேரி பி.ஜே.பி. முடிவெடுத்தது.

எனவே, அந்தத் தொகுதியை என்.ஆர். காங்கிரஸுக்கு ஒதுக்கியது. தமிழகத்தில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடந்து வரும்போதே, ‘புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் – பி.ஜே.பி. கூட்டணி’ என்றும் அந்தத் தொகுதி என்.ஆர். காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது. இது பா.ம.க-வுக்குப் பெரிய ஷாக். என்.ஆர். காங்கிரஸுக்கு ஒதுக்கினாலும் பா.ம.க. போட்டியிடுவதில் உறுதியாக இருக்கிறது!”

”அப்படியா?”

”பா.ம.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருக்கும் அனந்தராமன், ராமதாஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர். பா.ம.க-வுக்கும் தே.மு.தி.க-வுக்குமான உறவை உருவாக்கியதில் அனந்தராமன் முக்கியப் பங்கு வகித்தார் என்று கடந்த முறையே சொல்லியிருந்தேன்.

இந்த அடிப்படையில்  புதுச்சேரியில்  பா.ம.க. வேட்பாளரை நீங்கள் ஆதரிக்க வேண்டும் என்று தே.மு.தி.க-விடம் பா.ம.க. கேட்டுள்ளது. அப்போது தே.மு.தி.க. ஒரு நிபந்தனை விதித்துள்ளது. ‘சேலத்தில் பா.ம.க-வைச் சேர்ந்த அருள் போட்டியிடப்போவதாக தகவல் வருகிறது. அவர் நின்றால், அது தே.மு.தி.க. வெற்றியைப் பாதிக்கும்.

சேலத்தில் நீங்கள் முறையாக நடந்துகொண்டால், புதுச்​சேரியில் உங்களை ஆதரிப்பது பற்றி பரிசீலனை செய்வோம்’ என்பதுதான் அந்த நிபந்தனை. இதனை பா.ம.க. ஏற்றுக்கொண்டது. எனவே, புதுவை பா.ம.க. வேட்பாளரை தே.மு.தி.க ஆதரிக்​கலாம். சென்னை வந்து ராஜ்நாத் சிங்கை சந்தித்து சால்வை போட்ட புதுவை முதல்வர் ரங்கசாமி… விஜயகாந்த், ராமதாஸ், வைகோ போன்றவர்களைச் சந்திக்கவில்லை; ஆதரவும் கேட்கவில்லை. எனவே, இந்தக் கட்சிகள் என்.ஆர். காங்கிரஸை ஆதரிக்குமா என்பது சந்தேகமே. ‘தமிழகக் கூட்டணி, புதுவைக்குப் பொருந்தாது’ என்றே இறுதியில் சொல்வார்கள்போல!”

”பி.ஜே.பி. வேட்பாளர் பட்டியலிலும் பாக்கியிருக்கிறதே?”

”பி.ஜே.பி. 8 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதில் வேலூர், தஞ்சாவூர் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதில் வேலூர் தொகுதிக்கு போட்டி அதிகமாக இருக்கிறது. ஸ்ரீபெரும்புதூர் தொகுதியை எதிர்பார்த்து இருந்தார் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன். அது ம.தி.மு.க-வுக்குப் போய்விட்டதால் அவர் வேலூரை எதிர்பார்க்கிறார்.

கோவையைச் சேர்ந்தவராக இருந்தாலும் வானதி சீனிவாசன் திருமணம் செய்தது வேலூரில். அவரும் இந்தத் தொகுதியை எதிர்பார்க்கிறார். வானதிக்கு பொன்ராதாகிருஷ்ணன், முரளிதர் ராவ் ஆகியோர் ஆதரவு இருக்கிறது. தமிழிசையை இல.கணேசனும் வெங்கய்யா நாயுடுவும் ஆதரிக்கிறார்கள்.

மாவட்டச் செயலாளர்களாக இருக்கும் ராஜேந்திரன், வெங்கடேசன் ஆகிய இருவரும் தொகுதியைக் கேட்கிறார்கள். டெல்லிதான் இனி முடிவெடுக்க வேண்டும். தஞ்சாவூரைப் பொறுத்தவரை கறுப்பு முருகானந்தம், எம்.எஸ்.ராமலிங்கம் ஆகிய இருவரும் மோதுகிறார்கள். விரைவில் டெல்லி இதனை அறிவிக்கும் என்கிறார்கள்” என்று சொல்லிவிட்டு அழகிரி மேட்டரை எடுத்தார் கழுகார்!

”தேவையில்லாமல் தேன்கூட்டைக் கலைத்துவிட்டதாக நினைக்கிறார் கருணாநிதி. மன்மோகன் சிங், ராஜ்நாத் சிங், ரஜினிகாந்த் என்று ஒவ்வொருவராக அவரவர் வீடு தேடிச்சென்று சந்தித்துவந்த அழகிரி, தன்னுடைய அடுத்தக் குடைச்சலை ஆரம்பித்துவிட்டார். தன்னுடைய வீடுதேடி அனைவரையும் வரவைத்துவிட்டார். ஞாயிற்றுக்கிழமை காலையில் அழகிரி வீட்டுக்கு வைகோ போனது தி.மு.க. வட்டாரத்தை அதிர்ச்சியில் ஆழ்த்திவிட்டது.

இந்தச் சந்திப்பு பற்றிய தகவல் கிடைத்ததும், கருணாநிதியிடம் ஸ்டாலின் கொந்தளித்தபடி பேசினாராம். ‘இது கட்சிக்குப் பண்ற துரோகம்’ என்றாராம் அவர். ‘அழகிரிதான் கட்சியிலேயே இல்லையே! நீக்கப்பட்டவர் யாரைப் பார்த்தாலும் நாம் என்ன செய்ய முடியும்?’ என்றாராம் கருணாநிதி.

இப்படி கமென்ட் அடித்தாலும், கருணாநிதிக்கு வருத்தங்கள் இல்லாமல் இல்லை. ‘என் காலத்திலேயே இதை எல்லாம் பார்க்கணுமா? நான் வளர்த்த கட்சியை என் குடும்பத்தைச் சேர்ந்தவரே கெடுக்க நினைக்கிறதை நான் பார்க்கணுமா?’ என்று கதறினாராம்.

வைகோ – அழகிரி சந்திப்பு நடந்தது ஞாயிறு காலையில். சனிக்கிழமை அன்று தன்னை வந்து சந்தித்த முன்னாள் அமைச்சரிடம், ‘அழகிரி தினமும் பேட்டி கொடுக்கிறார். அதனாலதான் அவரைக் கட்சியை விட்டு நீக்க வேண்டாம்னு சொன்னேன். சும்மா விட்டு இருந்தா தன்னுடைய ஆதரவாளர்கள் ஒன்றிரண்டு பேருக்குத் தொகுதி வாங்கிக் கொடுத்துவிட்டு அழகிரி அமைதியாக இருந்திருப்பார். தேவையில்லாமல் சீண்டிவிட்டோம்’ என்று சொல்லியிருக்கிறார்.

‘அழகிரியுடன் யாரும் தொடர்பு வைத்துக்கொள்ளக் கூடாது’ என்று சமீபத்தில் அறிக்கை வெளியானது. இந்த அறிக்கையும் கருணாநிதிக்கு உடன்பாடு இல்லையாம். திடீரென, வேலூரில் 11 பேர் கட்சியை விட்டுக் கட்டம் கட்டப்பட்டதையும் கருணாநிதி விரும்பவில்லை.

‘தேர்தல் நேரத்துல அனைவரையும் அரவணைத்துப் போகணும். அதை விட்டுவிட்டு யாராவது கட்சிக்காரர்களை நீக்குவார்களா? தவறு செய்தால் கண்டிப்போம். நடவடிக்கையை தேர்தல் முடிந்த பிறகு வைத்துக்கொள்ளலாம். என் பேச்சை யார் கேட்கிறார்கள்?’ என்று நொந்தாராம் கருணாநிதி.”

”வைகோ – அழகிரி சந்திப்பில் என்ன நடந்ததாம்?”

”மார்ச் முதல் வாரத்தில் மதுரை விமானநிலையத்தில் அழகிரியும் வைகோவும் தற்செயலாகச் சந்தித்துக்​கொண்டார்கள். ‘விரை​வில் நேரில் சந்தித்துப் பேசுவோம்’ என்று இருவரும் முடிவெடுத்தார்கள். இதன் அடிப்படையில்தான் அழகிரியின் மதுரை வீட்டுக்கு வைகோ போனார். ‘என்னை 93-ம் ஆண்டு கொலைப்பழிச் சுமத்தி வெளியில் அனுப்பினார்கள். இப்போது உங்கள் மீதும் பழி சுமத்தப்பட்டுள்ளது’ என்று சொன்னாராம் வைகோ. ‘இரண்டுக்குமே ஸ்டாலின்தான் காரணம்’ என்றாராம் அழகிரி.

‘கட்சி அவரோட கட்டுப்பாட்டில் போய்விட்டது. யாரும் அவரைக் கேட்க முடியவில்லை. தலைவருக்கே கட்சியில் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை’ என்று கலங்கினாராம் அழகிரி. ‘நானே மனரீதியாக ரொம்ப பாதிக்கப்பட்டுவிட்டேன். உங்களைப் பார்க்கும்போது ஆறுதலாக இருக்கிறது’ என்றாராம் அழகிரி. இருவரும் பழைய கதைகளை கொஞ்ச நேரம் பேசிக்கொண்டு இருந்தார்கள். அதன் பிறகு தேர்தலைப் பற்றி பேச்சு வந்தது. ‘என்னை தி.மு.க-வில் இருந்து நீக்கினாலும் தி.மு.க-வில்தான் இருக்கிறேன்.

இங்குதான் இருப்பேன். அதனால், வெளிப்படையாக என்னால் உங்களுக்கு உதவி செய்ய முடியாது. ஆனால், மறைமுகமாக எல்லா உதவிகளையும் செய்வேன். உங்கள் வெற்றிக்கும் உங்கள் வேட்பாளர்கள் வெற்றிக்கும் என்னால் ஆனதைச் செய்வேன்’ என்று வாக்குறுதி கொடுத்தாராம் அழகிரி. தென் மாவட்டத்தில் விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி, தேனி ஆகிய நான்கு தொகுதிகளில் ம.தி.மு.க. போட்டியிடுகிறது.

இங்கெல்லாம் அழகிரி ஆதரவாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ம.தி.மு.க. வேட்பாளருக்கு தேர்தல் வேலை பார்ப்பார்​களாம். அதுவும் அழகிரியின் வைரியான பொன்.முத்துராமலிங்கம், தேனி தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ம.தி.மு.க-வைச் சேர்ந்த அழகுசுந்தரம் போட்டியிடுகிறார். ‘அழகுசுந்தரத்தை ஜெயிக்க​வைக்க முழுமையாக முயற்சிப்பேன்’ என்று சொல்லியிருக்கிறார் அழகிரி. வைகோவைச் சந்தித்துவிட்டு ராஜபாளையம் சென்றார் அழகிரி!”

”ஏற்கெனவே சொல்லியிருந்தீரே?”

”ராஜபாளையத்தில் கட்சிக்காரர்கள் கூடிவிடக் கூடாது என்பதற்காக மாவட்டச் செயலாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அதிகமாக மெனக்கெட்டாராம். ஞாயிறு காலையில் ராஜபாளையத்தில் கிழவிகுளம் கதிரேசன் வீட்டு நிகழ்ச்சியில் அழகிரி கலந்துகொள்கிறார் என்றதும், அவசரமாக ஒரு கூட்டத்தைக் கூட்டினார் ராமச்சந்திரன். அனைத்து நிர்வாகிகளையும் சாத்தூருக்கு வரவைத்தார். இதனால், பலரும் இந்த நிகழ்ச்சிக்கு வரமுடியாமல் போனது. சாத்தூர் கூட்டத்தை முடித்துவிட்டு, நிர்வாகிகள் சிலர் ராஜபாளையத்துக்கும் வந்தார்கள். அழகிரி போன பிறகு இவர்கள் மண்டபத்துக்குள் பிரசன்னம் ஆனார்கள்.

நிகழ்ச்சியை முடித்துவிட்டு மதுரை வந்த அழகிரி, தன் ஆதரவாளர்களிடம் ஆலோசனை நடத்தியுள்ளார். சிம்மக்கல் ராஜேந்திரன் என்ற கட்சிக்காரர் வந்தாராம். ‘நான் 16 வயதில் கட்சிக்கு வந்தவன். இன்று எனக்கு 52 வயது ஆகிறது. ஆனால், நீங்கள் இந்தக் கட்சியிலேயே பிறந்தவர்.

உங்களை இப்படி செய்துவிட்டார்களே’ என்றாராம் அவர். இதைக் கேட்டு கலங்கிவிட்டாராம் அழகிரி. ‘அதனால்தான் இந்தக் கட்சிக்கு எதிரா என்னால எதுவும் செய்ய முடியல. தலைவர் இருக்கார்னு பார்க்கிறேன். இல்லைன்னா, இந்தக் கட்சியை உடைச்சிருப்பேன்’ என்றாராம். ‘என்னை நிரந்தரமாக நீக்க வேண்டும் என்று சில ஜால்ரா மாவட்டச் செயலாளர்கள் சொன்னார்களாம்.

என்னை ஆதரிக்க மொத்தம் 9 மாவட்டச் செயலாளர்கள் தயாராக இருக்கிறார்கள். தென் மாவட்டத்தில் மட்டுமல்ல… வட மாவட்டத்தில் உள்ளவர்களே தயாராக இருக்கிறார்கள்’ என்று சொன்னாராம். பலரும் அழகிரியிடம் ரகசியமாகப் பேசிக்கொண்டு இருக்கிறார்களாம். தேவையில்லாத சிக்கலில் தி.மு.க. வலியப்போய் சிக்கிக்கொண்டுள்ளதை ரசிக்கிறார் ஜெயலலிதா. 28-ம் தேதி மதுரை வருபவருக்கு, இதுதான் மேட்டராக இருக்கப்போகிறது” என்று சொல்லிவிட்டுப் பறந்தார் கழுகார்!

கலைஞரையும் நீக்கிவிடுவார்களா?

ராஜபாளையம் தி.மு.க-வைச் சேர்ந்த தமிழ்செல்வகுமாரின் மகள் கலைசேனாவின் காதுகுத்து விழாவில் தனது ஆதரவாளர்களுடன் மு.க.அழகிரி கலந்துகொண்டார். அப்போது அவர், தி.மு.க-வின் வேட்பாளர்கள் பற்றி கடுமையாக விமர்சித்தார்.

”திருவண்ணாமலையில் முன்னாள் அமைச்சர் பிச்சாண்டி தனது தம்பி கு.கருணாநிதிக்கு சீட் கேட்டபோது கொடுக்க மறுத்துவிட்டார்கள். அவர்களுக்குத்தான் கருணாநிதி என்ற பெயரே பிடிக்காதே. இரண்டு நாட்களுக்கு முன் செய்தித்தாளில் ஒரு அறிக்கை பார்த்தேன். என்னோடு தொடர்பு வைத்துக்கொள்பவர்களை கட்சியை விட்டு நீக்கப்போவதாக மிரட்டியிருக்கிறார்கள்.

தேர்தல் பிரசாரத்துக்காக தலைவர் கலைஞர் மதுரை வரப்போகிறார். அவர் என் வீட்டுக்கு வந்தால் அவரையே கட்சியை விட்டு நீக்கிவிடுவார்கள் போல!” என்று பொரிந்து தள்ளினார்.

விகடனிலிருந்து…

Exit mobile version