Site icon ilakkiyainfo

‘இனம்’ திரைப்படம்: காட்சிகள் வெட்டப்பட்டு, ஈழப் போராட்டம் காப்பாற்றப்பட்டது!

வெள்ளிக்கிழமை வெளியான ‘இனம்’ என்ற படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாக போராட்டங்கள் நடத்தப்பட்டதை அடுத்து படத்தில் இருந்து ஐந்து காட்சிகளை நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளார் படத்தினை வெளியிட்ட திருப்பதி பிரதர்ஸ் உரிமையாளர் இயக்குனர் லிங்குசாமி.

சந்தோஷ் சிவன் தயாரித்து இயக்கியுள்ள படம், ‘இனம்’.

இலங்கையில் நடைபெற்ற விடுதலைப் புலிகளின் ஆயுத போராட்டத்தை மையமாகக் கொண்டு உருவான திரைப்படம் இது. இந்தப் படத்தில் விடுதலைப் புலிகளை அவமதிக்கும் வகையில் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகக் கூறி தந்தை பெரியார் திராவிடக் கழகத்தினர் படத்தை தடை செய்ய வலியுறுத்தினர். இதையடுத்து படத்தில் 3 நிமிடங்கள் இடம்பெறும் ஐந்து காட்சிகள் நீக்கப்பட்டுள்ளன.

இவைதான் அந்த ஐந்து காட்சிகள்:

1) பள்ளிக்கூடம் ஒன்றில் குழந்தைகள் கல்வி பயிலும்போது, விடுதலைப் புலிகள் வந்து போராட்டம் தொடர்பான காட்சிகளை வீடியோவில் திரையிட்டு காட்டி, இயக்கத்துக்கு ஆள் சேர்க்கிறார்கள். குழந்தைகளுக்கு வகுப்பு நடத்தி கொண்டிருந்த ஆசிரியர் இதை ரசிக்கவில்லை என்பது ஒரு காட்சி.

இந்தக் காட்சி, விடுதலைப்புலிகளை கேவலப்படுத்தும் காட்சி என்கிறார்கள், இந்தப் படத்துக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள். அதாவது, குழந்தைகளின் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தி இயக்கத்தில் சேர்த்திருந்தால், அது கேவலமான விஷயமாம்.

மிக மிக நியாயமான வாதம்தான். அப்படி செய்யப்பட்டிருந்தால், எதிர்கால சந்ததியைினரை பற்றிக் கவலைப்படாமல் செய்யப்பட்ட செயல்தான் (தந்தை பெரியார் திராவிடக் கழகத்தினர் ‘கேவலமான செயல்’ என்கிறார்கள்)

ஆமா, ஒருவேளை… அப்படியான சம்பவங்கள் இலங்கை பள்ளிக்கூடங்களில் நடந்திருக்குமோ? எதற்கும், உங்களுக்கு அருகாமையில் யாராவது ஈழத் தமிழர் இருந்தால் கேட்டுத் தெரிந்து கொள்ளவும்.

2) புத்த மதத் துறவி ஒருவர், தமிழ்க் குழந்தைகளுக்கு மாதுளம்பழம் கொடுக்கும் காட்சி வெட்டப்பட்டுள்ளது. அதாவது, எந்தவொரு இலங்கை புத்த துறவியும், தமிழர்களை சக மனிதர்களாக பார்க்க சான்சே இல்லை என்கிறார்கள்.

3) சிங்கள ராணுவத்தை சேர்ந்த ஒருவர், யுத்தத்தில் இறந்து கிடந்த நிலையில், அவரது கையில் தனது குழந்தையின் போட்டோவை வைத்திருக்கும் காட்சி வெட்டப்பட்டுள்ளது. இலங்கை ராணுவத்தினர் யாருக்குமே குடும்பம், குழந்தைகள், இந்த குழந்தைகள் மீது பாசம் ஏதும் இருந்திருக்க முடியாது என்கிறார்கள்.

4) ”யுத்தத்தில் தலைவர் கொல்லப்பட்டார்” என்று ஒரு காட்சியில் கூறப்படும் வசனம் வெட்டப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள் இயக்கத்தில் யுத்தத்தில் தமது உயிரைக் கொடுப்பவர்களுக்கே முதலிடம் கொடுக்கப்பட்டு, அவர்கள் மாவீரர்களாக கொண்டாடப்பட்டனர்.

தன்னை நம்பி வந்தவர்களை முள்ளிவாய்க்காலில் இலங்கை ராணுவத்தினரின் கைகளில் விட்டுவிட்டு தப்பியோடாமல், தலைவரும் வீர மரணம் அடைந்திருக்க சான்சே இல்லை என அடித்துக் கூறுகிறார்கள், படத்துக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள். தலைவர் மீது நல்ல மதிப்புதான் வைத்திருக்கிறார்கள்.

5) படத்தின் இறுதியில் காட்டப்படும் கார்டில் 38,000 பேர் கொல்லப்பட்டார்கள் என்ற தகவலும் நீக்கப்பட்டுள்ளது. இறுதி யுத்தத்தில் எத்தனை பேர் இறந்தார்கள் என்ற கணக்கை யாராலும் உறுதி செய்ய முடியாது என்பது உண்மைதான்.

எப்படியோ, படத்தின் ஓபினிங்குக்கு நல்ல விளம்பரம் கிடைத்துள்ளது. சீமான், வைகோ மற்றும் சிலர் இந்தப் படம் பற்றி ஆக்ரோஷமான கருத்துக்களை இதுவரை ஏன் முன்வைக்கவில்லை என்று தெரியவில்லை.

ஒருவேளை படத்துக்கு வசூல் குறையும்போது அதை தூக்கி நிறுத்த, செகன்ட் இன்னிங்ஸில் ஆட வருவார்களோ, என்னவோ!

Exit mobile version