Site icon ilakkiyainfo

ஈழப் போரின் இறுதி நாட்கள்-17: கொழும்புவில் கரும்புலிகள் இருப்பிடத்துக்கு லீட் கொடுத்த MI-5

ஜனாதிபதி ராஜபக்ஷே மீது தற்கொலை தாக்குதல் நடத்துவதற்காக உடலில் வெடிகுண்டு கட்டப்பட்ட நிலையில் ஒருவரை, கண்காட்சி நடந்த மண்டபத்துக்குள் அழைத்துச் செல்லும் ஆர்மி அங்கிளின் திட்டம், அவரது வாகனத்தை மண்டப  காம்பவுண்டுக்குள் கொண்டுசெல்ல அனுமதிக்கப்படாத காரணத்தால், திட்டம் தோல்வியில் முடிந்தது.

ஆர்மி அங்கிளின் ஜீப் BMICH மண்டப கேட்டிலேயே நிறுத்தப்பட்டு விட்டது. அதிலிருந்து இறங்கிய ஆர்மி அங்கிள், மண்டபத்துக்கு உள்ளே செல்ல, ராணுவ சீருடையில் இருந்த தற்கொலை தாக்குதலாளி அங்கிருந்து நகர்ந்து தமது இடத்துக்கு சென்றுவிட்டார்.

பின்னர் ஆர்மி அங்கிள் அகப்பட்டுக்கொண்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட போது, விடுதலைப்புலிகளின் கரும்புலிகள் பிரிவை சேர்ந்த தற்கொலை தாக்குதலாளிக்காக, பிரத்தியேகமாக ராணுவ சீருடை ஒன்றை ஆர்மி அங்கிள் தயாரித்து கொடுத்திருந்தார் என்ற தகவலும் தெரிய வந்திருந்தது.

ஜனாதிபதி ராஜபக்ஷே மீது இந்த தற்கொலை தாக்குதல் முயற்சி வெற்றியடையாத நிலையில், அப்போது வன்னிப் பகுதியில் இறுதி யுத்தம் நடந்து கொண்டிருந்தது (அதிலிருந்து மூன்றரை மாதத்தில் யுத்தம் முடிந்தது).

யுத்த முனையில் விடுதலைப் புலிகள் இயக்கம் மிகுந்த நெருக்கடி நிலையில் இருந்தது. கொழும்பு BMICH மண்டபத்தில் தற்கொலை தாக்குதல் முயற்சி செய்யப்பட்ட 2009-ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 4-ம் தேதி, வன்னிப் பகுதியில் விடுதலைப் புலிகள் தமது கட்டுப்பாட்டில் இருந்த பல பகுதிகளை இழந்து விட்டிருந்தனர்.

இலங்கை ராணுவத்தின் 57-வது டிவிஷன், கிளிநொச்சி நகரை கைப்பற்றி (ஜனவரி 2-ம் தேதி), ராமநாதபுரம் (ஜனவரி 17-ம் தேதி), விசுவமடு டவுனையும் கைப்பற்றி (ஜனவரி 28-ம் தேதி), தொடர்ந்து நகர்ந்து கொண்டிருந்தது. 58-வது டிவிஷன், விசுவமடு டவுனில் 57-வது படைப்பிரிவுடன் இணைந்துகொண்டு, தேவிபுரம் கிராமத்தை கைப்பற்றியிருந்தது (பிப்ரவரி, 20-ம் தேதி) 59-வது படைப்பிரிவு, முல்லைத்தீவு நகரை கைப்பற்றிவிட்டது (ஜனவரி 25-ம் தேதி).

ராணுவ நகர்வின் வேகத்தை விடுதலைப்புலிகளால் தடுக்க முடியவில்லை. புலிகளின் ஆயுதக் கையிருப்பு குறைந்து கொண்டிருந்தது. புதிதாக ஆயுத சப்ளை வருவதற்கான சந்தர்ப்பங்கள் அனைத்தும் அடைபட்டு விட்டிருந்தன.

தொடர்ந்தும் ராணுவம் முன்னேறுவதை தடுக்க வேண்டுமென்றால், யுத்த நிறுத்தம் ஒன்று ஏற்பட வேண்டும். இந்த நிலையில்தான், ஜனாதிபதி ராஜபக்ஷே மீதான தாக்குதல் திட்டம் நடைபெறவில்லை என்ற விபரத்தை, அய்யா, தமது லண்டன் தொடர்பாளர் மூலம் வன்னியில் இருந்த விடுதலைப் புலிகளின் உளவுப் பிரிவுக்கு தெரிவித்தார்.

இதையடுத்து, புலிகளின் உளவுப் பிரிவில் இருந்து அவசர உத்தரவு அய்யாவுக்கு வந்தது.

“மிக விரைவில், மற்றொரு தாக்குதலுக்கு ஏற்பாடு செய்யவும். அந்த தாக்குதல் தோல்வியடையவே கூடாது. அந்த தாக்குதல் முயற்சியில் உங்கள் (அய்யா) உயிரே போனால்கூட, தாக்குதல் வெற்றியில் முடிய வேண்டும்.

இது மிக மிக அவசரம் மட்டுமல்ல, விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் காப்பாற்றப்படுவதற்கு அவசியமான யுத்த நிறுத்தத்தை, கொழும்புவில் நடக்கும் தாக்குதலே கொண்டுவர முடியும். உடனே செய்யவும்” என்பதே அந்த அவசர தகவல் என்பதை, விசாரணையின்போது அய்யா தெரிவித்தார்.

அதையடுத்தே, ஜனாதிபதி ராஜபக்ஷே ஜோர்தான் நாட்டுக்கு புறப்பட்டு செல்லும்போது (மே, 14-ம் தேதி), விமான நிலையம் செல்லும் பாதையில் தற்கொலை தாக்குதல் நடத்த அய்யா, ஆர்மி அங்கிள் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். அதற்குள் ஐயா கைது செய்யப்பட்டு விட்டார் (மே, 10-ம் தேதி). ஆர்மி அங்கிளும் சிக்கிக் கொண்டார்.

ஜனாதிபதி ராஜபக்ஷே ஜோர்தான் நாட்டுக்கு புறப்பட்டு செல்லும்போது நடத்த வேண்டிய தற்கொலை தாக்குதலுக்கு தேவையான வெடிப்பொருள், மற்றும் தற்கொலை அங்கிகள் எங்கே என அய்யாவிடம் விசாரித்தபோது, அவை கொழும்புவில் யாரோ ஒருவரிடம் இருப்பதாக தெரிவித்தார்.

அந்த நபர் யார், முகவரி என்ன என்ற விபரங்கள் அய்யாவுக்கு தெரிந்திருக்கவில்லை.

“யுத்தம் இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டதால், தற்கொலை அங்கிகள் அணிந்த மொத்தம் 4 பேரை ஒரே நேரத்தில் வெடிக்க வைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்த ஐயா, தாம் 4 பேரை தயார் செய்து வைத்திருப்பதாகவும், அவர்கள் அணிய வேண்டிய தற்கொலை அங்கிகள் எங்கேயுள்ளன என்ற விபரம், தாக்குதல் நடக்கும் தினத்தன்றுதான் தமக்கு வந்து சேரும் என்றும் தெரிவித்தார்.

தாக்குதல் அங்கிகள் கொழும்புவில் உள்ள வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டுள்ளன என்பதை தவிர, வேறு விபரம் ஏதும் உளவுத்துறைக்கு கிடைக்கவில்லை.

தாக்குதல் நடக்கும் தினத்தில், அந்த தற்கொலை அங்கிகள் இருக்கும் இடத்தை எப்படி தெரிந்து கொள்வீர்கள்?”

“அன்று காலை, லண்டனில் உள்ள தொடர்பாளரிடம் இருந்து போன் வரும். அவர்தான், தற்கொலை அங்கிகளை எடுக்க வேண்டிய முகவரியை தெரிவிப்பார்”

இவர்களுக்கும், வன்னிக்கும் இடையிலான தொடர்புகள், லண்டனில் உள்ள விடுதலைப் புலிகள் தொடர்பாளர் ஒருவர் மூலம் நடக்கிறது என்ற விபரத்தை, ஏற்கனவே தெரிந்து கொண்ட இலங்கை உளவுத்துறை, இப்போது லண்டன் தொடர்பாளரிடம் இருந்து தற்கொலை அங்கிகள் இருக்கும் முகவரியை தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

காரணம், அய்யா அகப்பட்டுக்கொண்ட விஷயம் தெரியவந்ததும், விடுதலைப் புலிகள், கொழும்புவில் உள்ள வேறு செயல்பாட்டாளரிடம் இந்த ஆபரேஷனை கொடுத்து விடுவார்கள். ஏற்கனவே மறைவிடம் ஒன்றில் தற்கொலை அங்கிகள் தயாராக இருப்பதால், புதிய நபர், ஜனாதிபதி ராஜபக்ஷே மீதான மற்றொரு தாக்குதலை திட்டமிட்டு விடுவார்.

இதனால், தற்கொலை அங்கிகளை உடனே கைப்பற்ற வேண்டும். அவை எங்கே உள்ளன என்ற விபரம் தெரிந்த நபர், லண்டனில் இருக்கிறார்.

இந்த சூழ்நிலையில் பிரிட்டிஷ் உளவுத்துறையின் உதவி நாடப்பட்டது.

லண்டன் தொடர்பாளரின் பிரிட்டிஷ் போன் இலக்கம், ஐயாவிடம் இருந்தது. அந்த போன் இலக்கம், பிரிட்டிஷ் உளவுத்துறையிடம் இலங்கை உளவுத்துறையால் கொடுக்கப்பட்டது. பிரிட்டிஷ் உளவுத்துறை, ஓரிரு மணி நேரத்திலேயே, லண்டனில் இருந்த நபரின் முழு பின்னணியையும் தெரிந்துகொண்டு, அவரை தமது ஹை-அலர்ட் கண்காணிப்புக்குள் கொண்டுவந்தனர்.

இதற்கு காரணம், லண்டனில் அப்போது இலங்கையில் நடக்கும் யுத்தத்தை நிறுத்த சொல்லி பெரிய ஆர்ப்பாட்டங்கள் நடந்து கொண்டிருந்தன. அந்த ஆர்ப்பாட்டங்களின் பின்னணியில் இருந்தவர்களில் முக்கியஸ்தர்கள் என கருதப்பட்ட சுமார் 100 பேரை, பிரிட்டிஷ் உளவுத்துறை எம்.ஐ.-5, ஓசைப்படாமல் கண்காணித்து கொண்டிருந்தது.

அவர்கள் ஒவ்வொருவரும் பயன்படுத்திய ஒன்றுக்கு மேற்பட்ட போன் இலக்கங்கள், இமெயில் தொடர்புகள், அனைத்தும் கண்காணிப்பில் இருந்தன.

இது வெளிநாட்டு உளவுத்துறைகள் வழமையாக செய்யும் காரியம்தான். எல்லாவற்றையும், ஓசைப்படாமல் கண்காணித்துக் கொண்டு இருப்பார்கள். அரசியல் காரணங்களுக்காக நடவடிக்கை ஏதும் எடுக்க மாட்டார்கள். ஆனால், வேறு விவகாரங்களில், தாம் தெரிந்துகொண்ட தகவல்களை உபயோகித்துக் கொள்வார்கள். சிலரை, 5, 10 ஆண்டுகள்கூட தமது வாட்ச் லிஸ்ட்டில் வைத்திருப்பார்கள்.

இலங்கை உளவுத்துறை கொடுத்த போன் நம்பர், ஏற்கனவே, பிரிட்டிஷ் உளவுத்துறையின் கண்காணிப்பு வளையத்தில் இருந்த போன் இலக்கம். அதனுடன் தொடர்பான நபர் யார் என்பதை தெரிந்துகொண்ட பிரிட்டிஷ் உளவுத்துறை, அந்த நபரின் மற்றைய போன் இலக்கங்கள், மற்றும் இதர தொடர்புகளை ஓரிரு மணி நேரத்துக்கு உள்ளேயே, தீவிர கண்காணிப்புக்குள் கொண்டுவந்தது.

இந்த நபர், கொழும்புவில் இருந்த அய்யாவுடன் தொடர்பு வைத்துக்கொண்ட போன் இலக்கம், ஒரு பிரிட்டிஷ் செல் இலக்கம். இதே நபர், மற்றொரு பிரிட்டிஷ் நிறுவனத்தால் வழங்கப்பட்ட ஒரு லேன்ட்லைன் இலக்கத்தையும் உபயோகித்து வந்தார் என்ற விபரம், பிரிட்டிஷ் உளவுத்துறையிடம் ஏற்கனவே இருந்தது.

இந்த லேன்ட் லைன் இலக்கத்தில் இருந்து அவர், ஐயாவுக்கு ஒருபோதும் போன் பண்ணியிருக்கவில்லை. ஆனால், கொழும்புவில் இருந்த மற்றொரு இலக்கத்துக்கு வாரம் ஒரு தடவையாவது போன் பண்ணியிருந்தது தெரியவந்தது.

லண்டனில் இருந்த நபரின் பெயர், விபரங்களையும், கொழும்புவில் அவர் வாரம் ஒருதடவை தொடர்பு கொண்ட போன் இலக்கத்தையும், இலங்கை உளவுத்துறைக்கு கொடுத்தது, பிரிட்டிஷ் உளவுத்துறை. அவர்கள் கொடுத்த கொழும்பு போன் இலக்கத்தை சுலபமாக ட்ரேஸ் பண்ணியது இலங்கை உளவுத்துறை SIS.

அந்த போனுக்கு உரிய நபர், கொழும்புவில், வெள்ளவத்தை பகுதியில் 37-வது லேன் வீதியில் இருந்த ‘சன்பிளவர் அப்பார்ட்மென்ட்” என்ற அடுக்குமாடி குடியிருப்பில் இருந்தார்.

இந்த வீட்டை முற்றுகையிட்டது உளவுத்துறை. அப்போது வீட்டில் இருந்தவர், தாம் சூழ்ந்து கொள்ளப்பட்டு விட்டோம் என்பது தெரிந்தவுடன், ‘சன்பிளவர் அப்பார்ட்மென்ட்’ பில்டிங்கின் 7-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது அடையாள அட்டையில் இருந்து, அவரது பெயர், சதீஷ் குமார் சுஜிந்தன் (32) என்று தெரியவந்தது.

(பிரிட்டிஷ் உளவுத்துறை, புலிகளின் லண்டன் தொடர்பாளரின் பெயர் மற்றும் விபரங்களை இலங்கை உளவுத்துறை SIS-க்கு கொடுத்திருந்தது அல்லவா? அந்த பெயருடன், ‘சன்பிளவர் அப்பார்ட்மென்ட்டில்’ தற்கொலை செய்தவரின் பெயரை இணைத்து விசாரித்தபோது, இவர் லண்டனில் இருந்தவரின் சகோதரர்தான் என்பதை தெரிந்து கொண்டார்கள்)

‘சன்பிளவர் அப்பார்ட்மென்ட்’ வீட்டை சோதனையிட்டபோது, 4 தற்கொலை அங்கிகள் கிடைத்தன.

இவற்றில் ஒன்று, இதுவரை இலங்கையில் பாதுகாப்பு படையினரால் கைப்பற்றப்பட்ட தற்கொலை அங்கிகளில் மிக அதிக எடையுள்ள வெடிபொருளை கொண்டது. 15 கிலோ வெடிப்பொருள் கொண்ட அந்த தற்கொலை அங்கி, ஜனாதிபதி ராஜபக்ஷேவை குறிவைக்க தயாரிக்கப்பட்டது என பின்னர் விசாரணையில் தெரியவந்தது!

இலங்கையில் யுத்தம் முடிந்த இறுதி நாட்களில், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷே மயிரிழையில் உயிர் தப்பினார் என்றே சொல்லலாம். ஏன் தெரியுமா?

‘சன்பிளவர் அப்பார்ட்மென்ட்’ வீட்டை சோதனையிட்டு, 4 தற்கொலை அங்கிகளை கைப்பற்றிய தினம் எது தெரியுமா? மே 14-ம் தேதி! ஜனாதிபதி ராஜபக்ஷே ஜோர்தான் நாட்டுக்கு புறப்பட்டு சென்ற அதே மே 14-ம் தேதி!

‘சன்பிளவர் அப்பார்ட்மென்ட்டில்’ கிடைத்த விபரங்களில் இருந்து, சங்கிலித் தொடராக பலர் கைதாகினர். இவர்களில், தற்கொலை தாக்குதல் நடத்த தயாராக இருந்த கரும்புலிகளும் அடக்கம்.

தொடரும்…

 

Exit mobile version