ilakkiyainfo

காணாமற்போனோர் குறித்த ஆணைக்குழு முன் சாட்சியமளித்த ஊடகவியலாளரைக் கொல்ல முயற்சி

காணாமற்போனோரைக் கண்டறியும் சிறிலங்கா அதிபர் ஆணைக்குழுவின் முன்பாக, சிறிலங்கா இராணுவப் புலனாய்வாளர்கள் மற்றும் கருணா குழுவின் ஆட்கடத்தல்கள் குறித்து சாட்சியமளித்த ஊடகவியலாளர் மீது நேற்றிரவு வடமராட்சியில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

selvatheepan2யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் ‘தினக்குரல்’ மற்றும் ‘வலம்புரி’ நாளிதழ்களின் கரவெட்டிப் பிரதேச செய்தியாளராகவும், ‘வீரகேசரி‘ நாளிதழின் செய்தியாளராகவும் பணியாற்றும் சிவஞானம் செல்வதீபன் (வயது29) நேற்றிரவு அடையாளம் தெரியாத நபர்களால் வழிமறித்துத் தாக்கப்பட்டுள்ளார்.

நெல்லியடியில் இருந்து சிறுப்பிட்டியிலுள்ள தனது வீட்டுக்கு உந்துருளியில் சென்று கொண்டிருந்த போது நேற்றிரவு 8 மணியளவில் புறாப்பொறுக்கிச் சந்தியில் வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

மற்றொரு உந்துருளியில் வந்த இருவர், அவருடன் உரையாடி, அவர் தான் ஊடகவியலாளர் செல்வதீபன் என்பதை உறுதிப்படுத்திய பின்னரே, இரும்புக் கம்பிகளால் அவரைத் தாக்கியுள்ளனர்.

தாக்குதலுக்குள்ளாகி கீழே விழுந்த அவர் எழுந்து அருகிலிருந்த பற்றைக்குள் ஓட முயன்ற போது, மீண்டும் இரும்புக் கம்பியால் தலையில் தாக்கப்பட்டுள்ளார்.

அப்போது, யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறை சென்ற கடைசிப் பேருந்தின் சாரதி வீதியோரத்தில் உந்துருளி விழுந்து கிடப்பதைக் கண்டு பேருந்தை நிறுத்திய போது தாக்குதலாளிகள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.

உடனடியாக அப்பகுதிக்கு வந்த சிறிலங்காப் படையினர் அங்கிருந்தவர்களிடம் விசாரணை செய்ய முயன்ற போதும், காயமடைந்தவரை உடனடியாக பொதுமக்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

கால் ஒன்று முறிந்த நிலையிலும், தலையில் உட்காயம் ஏற்பட்டுள்ள நிலையிலும், ஊடகவியலாளர் செல்வதீபன் மந்திகை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அண்மையில் யாழ்ப்பாணத்தில் காணாமல் போனோரைக் கண்டறியும் சிறிலங்கா அதிபர் ஆணைக்குழுவின் அமர்வு இடம்பெற்ற போது, தனது சகோதரர் கருணாகுழுவினால் நடத்தப்பட்டு காணாமல்போனது குறித்தும், தான் இராணுவப் புலனாய்வாளர்களால் கடத்தப்பட்டு, கருணா குழுவிடம் ஒப்படைக்கப்பட்டு 3 மாதங்கள் தடுத்து வைக்கப்பட்டு, கப்பப் பணம் கொடுத்து விடுதலையானது குறித்தும் சாட்சியம் அளித்திருந்தார்.

இதன் தொடர்ச்சியாகவே அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது.

கடந்த சில நாட்களாகவே சந்தேகத்திற்குரிய நபர்களால் தான் பின்தொடரப்படுவதாக ஊடகப் பணியகங்களில் செல்வதீபன் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, ஒருவாரம் முன்னதாக, நெல்லியடி காவல் நிலையம் மூலம் இவரது உந்துருளி இலக்கம், தொலைபேசி இலக்கம், அடையாளஅட்டை இலக்கம் என்பனவற்றை, கொழும்பிலுள்ள தீவிரவாத புலனாய்வுக் காவல்துறையினர் சேகரித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Exit mobile version