Site icon ilakkiyainfo

மரணம் ஒரு முறைதான்! (கவிதை) -சந்துரு

 

அடங்கிப்போகும்
தமிழர்களின் மூச்சும்
அடக்கப்படும் எரிக்கப்படும்
தமிழர்களின் உடலங்களும்!

இன்றல்ல நேற்றல்ல
என் அப்பன் பாட்டன் காலத்திலிருந்தே
அழுகிப்போகும் அரசியல்
அடங்கிப்போகும் தமிழன் பேச்சுமூச்சு!

நாகரீகம் வானை முட்டி
வளர்ந்து நின்றாலென்ன
ஜனநாயகம் வீதியில் உலாவினாலென்ன
இனவாதம் மறுஜென்மம் எடுக்கும்

மனித உடலங்களையும்
மனித மனங்களையும் கொத்தித்தின்னும்
பெரும்பான்மை வீசும் சவுக்குகளில்
கிழிந்துபோகும் சிறுபான்மை!

ஐநாவும் அமெரிக்காவும்
வருமென்று எண்ணாதே!
எண்ணையும் நிலக்கரியும்
எங்களிடம் இருக்கவில்லை

முதலாளித்துவ முதலைகள்
திறக்கும் வாய்க்குள் விழுந்துபோவது
சிறுபான்மை மட்டுமல்ல
பெரும்பான்மை உழைப்பாளிகளுமே!

ஆதிக்க ஆளுமைகள்
சித்தரிக்கும் சித்திரங்களாய் -இன்று
பு(லி)துப்பயங்கர  வாதம்
தெரு நாய்களாக நாதியற்று

நாளாந்தம் நடந்தேறும்
மனிதக்கொலைகள் கைதுகள்
தடம் பதித்து வரும் தலைமுறைகள்
தடம் புரண்டு எங்கே செல்கின்றன ?

உனக்கும் எனக்கும் தானே
வடக்கிலும் தெற்கிலும் விடுதலை
வேண்டி  மரணத்தை முத்தமிட்டார்கள்
மறந்து போனாயோ  மாவீரர்களை ?

நாளாந்தம் ஓடி ஓடி
அலுத்துப்போன  உன்னிடமே
அறிவும் ஆத்திரமும் வரவேண்டும்
ஆதிக்கத்தின் பக்க வேர்களை  வெட்ட

கந்தனையும் கர்த்தரையும்
இன்னும் நீ நம்பிக்கொண்டிருக்கிறாயா
அவர்களே இப்பதான் குடியேற்றப்படுகிறார்கள்
மண்டியிட நினையாதே  மாற்றம் தேடி வா

மரணம் ஒருமுறைதான்  -உன்னோடு
கூடவே  முதுகில் பயணிக்கிறது!
அடிமைகளாக தினமும் கை தூக்காதே
ஆணிவேரை பிடுங்க கரம் பற்றி உயர்த்து!

பத்தட்டும் புரட்சித் தீ
திக்கெட்டும் விடுபடட்டும்!

*சந்துரு *

Exit mobile version