Site icon ilakkiyainfo

மணலில் கலந்து பத்மநாபசாமி கோவில் நகைகள் கடத்தல்… தஞ்சை நகைக்கடைக்காரர்களுக்குத் தொடர்பு?

திருவனந்தபுரம், பத்மநாபசாமி கோவிலில் இருந்து கிலோ கணக்கில் தங்க நகைகளை மணலில் கலந்து கடத்தியதாகவும், தஞ்சாவூரை சேர்ந்த சில நகை கடை ஊழியர்களுக்கு இதில் தொடர்பு இருப்பதாகவும் பரபரப்பு கிளம்பியுள்ளது.

திருவனந்தபுரம் பத்மநாப சாமி கோவிலில் உள்ள ஏ முதல் எப் வரையிலான 6 ரகசிய அறைகளில் பல லட்சம் கோடி மதிப்பிலான பொக்கிஷங்கள் இருப்பது தெரிய வந்தது. இந்த பொக்கிஷங்களை மதிப்பிட உச்ச நீதிமன்றம் ஒரு குழுவை அமைத்தது.

இந்த நிலையில் கோயில் சொத்துகள் குறித்து முழு விபரங்கள் தெரிவிக்க கோபாலகிருஷ்ணன் என்பவரை உச்ச நீதிமன்றம் நியமித்தது. அவர் கடந்த இரண்டு  மாதங்களாக கோயிலில் ஆய்வு நடத்தி சில தினங்களுக்கு முன் அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

அதில் மன்னர் குடுமபத்தினர், கோயில் ஊழியர்கலும் சேர்ந்து கோயில் பொக்கிஷத்தை கடத்தியிருக்கலாம் என்று பரபரப்பை குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

மேலும் கோயிலில் இருந்து தங்க நகைகளை கிலோ கணக்கில் மணலில் கலந்து கடத்தியிருக்கலாம் என்றும், இது சில நகை கடை உரி்மையாளர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கலாம் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து மேலும் கூறுகையில் பத்மநாபசாமி கோயிலில் தஞ்சாவூரை சேர்ந்த சில நகை கடைகளுடன் ஓப்பந்தம் செய்திருந்தனர். இவர்கள் கோயில் நகைகளை பாலிஷ் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது கோயில் நகைகளை கிலோகணக்கில் அவர்கள் மணலில் கலந்து கடத்தி சென்றுள்ளனர். இவர்கள் தவறை உணர்ந்தும், பயந்தும் சிறிது நகைகளை கோயில் உண்டியலில் போட்டுள்ளனர்.

நகை பாலிஷ் பணியில் இருந்த ராஜூ என்பவருக்கு மட்டும் 3 கிலோ எடையுள்ள தங்க செயின் உள்பட 20 கிலோ தங்கம் கிடைத்துள்ளது. கோயில் இருந்து எத்தனை கிலோ தங்கம் கடத்தப்பட்டது என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த பொக்கிஷம் கடத்தலில் பல முக்கிய பிரமுகர்களுக்கும் தொடர்பு உள்ளது. தவிர கோயில் உண்டியலில் ஏராளமான வெளி நாட்டு பணம் உள்ளது. இதையும் பலர் சுருட்டியுள்ளனர். ரகசிய அறையில் இருந்து திருவாங்கூர் அரண்மனைக்கு ஒரு ரகசிய சுரங்க பாதை கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த சுரங்க பாதை வழியாகவும் நகைகளை கடத்தி சென்றிருக்கலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பழங்கால தங்க நகைகளுக்கு பதில் முலாம் பூசிய போலியா?

ஸ்ரீ பத்மநாப சுவாமி கோயிலில் பல ஆயிரம் கோடி மதிப்புள்ள பொக்கிஷங்கள் இருப்பதாக கருதப்படும் ரகசிய ‘பி’ அறையை திறக்க மன்னர் குடும்பத்தினர் அனுமதி வழங்கவில்லை என்றாலும் அந்த ரகசிய ‘பி’ அறை இதற்கு முன்னர் பல முறை திறக்கப்பட்டதற்கு நேரில் கண்ட சாட்சியங்கள் இருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறையில் இருக்கும் கோவிலுக்கு சொந்தமான சொத்துக்களை தங்களுக்கு சொந்தமான சொத்துக்களாக கூறி மன்னர் குடும்பத்தினர் அவற்றை விற்பதாக சந்தேகம் எழுந்திருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்தேகத்தை உறுதிப்படுத்தும் வகையில், கோயிலுக்குள் தங்க முலாம் பூசும் கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் ரகசிய அறையில் இருந்து தங்க நகைகளை கடத்தி அதற்கு பதிலாக போலி நகைகளை தங்க முலாம் பூசி அவற்றை இந்த ரகசிய அறையில் வைத்திருக்கலாம் என்கிற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.

கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம் ஒரு நகரமாக இருந்தாலும் அந்த சமூகத்தில் இன்னும் மன்னர் ஆட்சி நடப்பது போலவே தோன்றுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த கோயில் கணக்குகளை தணிக்கை செய்ய முன்னாள் கணக்கு தணிக்கை அதிகாரி வினோத் ராய் தலைமையிலான குழு நியமிக்கப்பட வேண்டும் என்று அந்த அறிக்கையில் கோரப்பட்டுள்ளது.

இந்த கோவிலில் நிர்வாக முறைகேடுகள் நடந்துவருவதாக வேதனை வெளியிட்டுள்ள அந்த அறிக்கை, கோவிலின் தினசரி செயற்பாடுகளில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தற்போதைய கோவில் அறங்காவலரும் அவரது குடும்பத்தினரும் தலையிடுவதற்கு உச்சநீதிமன்றம் தடை விதிக்கவேண்டும் என்று கோரியுள்ளது.

Exit mobile version