Site icon ilakkiyainfo

ஜெயலலிதா நாளை விமானத்தில் கொடநாடு பயணம்! அமைச்சர்களுக்கு கழுத்துவலி உத்தரவாதம்!!

கடந்த சில வாரங்களாக தேர்தல் தொடர்பான டென்ஷன், ஹெலிகாப்டரில் சென்று தேர்தல் பிரசாரம் செய்ததால் ஏற்பட்ட களைப்பு ஆகியவை காரணமாக, நாளை கொடநாடு செல்கிறார், முதல்வர் ஜெயலலிதா. இதையடுத்து தமிழக தலைநகர் மீண்டும் கொடநாடுக்கு ட்ரான்ஸ்ஃபர் ஆகிறது.

காஷ்மீர் மாநிலத்தில் 6 மாதத்துக்கு ஒருமுறை தலைநகர் மாற்றப்படும். கோடைக்காலத்தில், ஸ்ரீநகரும், குளிர்காலத்தில் ஜம்முவும் தலைநகராகச் செயல்படும். காஷ்மீரில்கூட 6 மாதத்துக்கு ஒருமுறைதான் தலைநகர் மாற்றப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் அடிக்கடி தலைநகர் மாற்றப்படுகிறது.

முதல்வர் ஜெயலலிதா நினைத்தால் உடனடியாக கொடநாடுக்கு தலைநகர் மாற்றப்பட்டு, அங்கிருந்துதான் தலைமைச் செயலகம் செயல்படும்.

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து வேட்பாளர் தேர்வு, தேர்தல் அறிக்கை வெளியீடு என பல்வேறு பணிகளில் ஜெயலலிதா ஈடுபட்டிருந்தார். பின்னர் மார்ச் 3-ம் தேதி முதல் தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டார். தமிழகம், புதுவை உள்பட 40 தொகுதிகளிலும் ஹெலிகாப்டரில் பறந்து பறந்து பிரசாரம் செய்தார். அதனால் அவருக்கு களைப்பு ஏற்பட்டது.

கடந்த வியாழக்கிழமை வாக்குப் பதிவு முடிந்ததையடுத்து, நாளை கொடநாடு சென்று ஓய்வெடுக்க முடிவு செய்துள்ளார்.

இதற்காக நேற்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் தலைமைச் செயலகம் வந்த ஜெயலலிதா, அங்கு 45 நிமிடம் மட்டுமே இருந்தார். முதல்வர் வருவதை அறிந்த அமைச்சர்கள் சிலர்தான் விழுந்தடித்து ஓடி வந்தனர். பலர் இன்னமும் வெளியூர்களிலேயே உள்ளதால், அம்மா தரிசனம் பெற முடியவில்லை.

சென்னையில் இருந்த அதிஷ்டக்கார அமைச்சர்கள் மட்டுமே, நேற்று அம்மா தரிசனத்துக்கு ஆஜராகியிருந்தனர்.

கடந்த 2 மாதங்களாக வானத்தைப் பார்த்து அண்ணாந்து (ஹெலிகாப்டரை பார்த்து) கும்பிடு போட்ட அமைச்சர்கள், நேற்று இடுப்பை வளைத்து கும்பிடுபோட்டனர்.

இதனால் சில அமைச்சர்களை இதுவரை பாடாய் படுத்திவந்த கழுத்து வலி மறைந்த போதிலும், இடுப்பில் வலி ஏற்பட்டுள்ளது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) மீண்டும் விமானத்தை பார்த்து கும்பிட வேண்டுமென்பதால், மீண்டும் கழுத்துவலி உத்தரவாதமாக உண்டு.

கொடநாடு செல்வதற்கு முன் ‘ஒரு எட்டு’ தலைமைச் செயலகத்தில் கால் மிதித்துச் செல்வோம் என ஜெயலலிதா வந்ததாகத் தெரிகிறது. தற்போதைய ஏற்பாட்டின்படி, நாளை (ஞாயிற்றுக்கிழமை) சென்னையிலிருந்து தனி விமானத்தில் (யாருடைய காசில்) முதல்வர் ஜெயலலிதா கோவை செல்கிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கொடநாடு செல்கிறார்.காஷ்மீர் மாநிலத்தில் தலைநகர் மாற்றம் செய்யும்போது தலைமைச் செயலக கோப்புகள் அனைத்தும் லாரிகளில் எடுத்துச் செல்லப்படுவது வழக்கம். அதைப்போல சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து நேற்று முக்கிய ஆவணங்கள் அனைத்தும் கொடநாடுக்கு கொண்டு செல்லும் பணியில் முக்கிய அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது. முதல்வர் முன்னே செல்ல கோப்புகள் அனைத்தும் பின்னே செல்கின்றன.

கடந்த ஆண்டு டிசம்பர் 23-ம் தேதி சென்னையிலிருந்து கொடநாடு சென்ற ஜெயலலிதா நீண்ட நாட்கள் அங்கேயே தங்கியிருந்து அரசுப் பணிகளைக் கவனித்து வந்தார். ஜனவரி 26-ம் தேதி குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்காகச் சென்னை வந்த ஜெயலலிதா மீண்டும் கொடநாடு சென்றார்.

அங்கிருந்தபடியே வேட்பாளர்களைத் தேர்வு செய்து பின் தேர்தல் பிரசாரத்துக்காக சென்னை திரும்பினார். வந்த காரியம் முடிந்து விட்டதால், மீண்டும் கொடநாடு புறப்பட்டு விட்டார்.

இதற்கிடையே, தேர்தல் பணியில் ஈடுபட்டு களைப்பில் இளைப்பாறிக் கொண்டுள்ள அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்களுக்கு அம்மா கொடநாடு செல்லும் விஷயம் தெரியவந்துள்ளது.

இதையடுத்து அம்மாவை வழியனுப்புதற்காக சென்னையை நோக்கிப் புறப்பட்ட வண்ணம் உள்ளனர்.

சென்னையில் இருந்து கோவை செல்லும் பாதையில் உள்ள ஊர்களில் உள்ள அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், தத்தமது ஊர்களில் இருந்தபடியே, அம்மாவின் விமானம் வானில் செல்லும்போது, வானத்தை நோக்கி கையெடுத்து கும்பிடலாம் என்பது உண்மைதான்.

ஆனால், ஏற்கனவே அமைச்சர்களை பூச்சி போல பார்க்கும் அம்மாவின் கண்களுக்கு (தரையோடு தரையாக விழுந்து வணங்கியபடி காணப்படுவதால்), விமானத்தில் இருந்து பார்க்கும்போது இவர்கள் புழு அளவுக்குகூட தெரிய மாட்டார்கள் என்பதால், சென்னைக்கு பயணமாகிறார்கள்.

நாளை போயஸ்கார்டனிலிருந்து விமான நிலையத்துக்கு காரில் புறப்படும் ஜெயலலிதாவுக்கு வழிநெடு தோரணங்கள், கொடிகள் கட்டி வழியனுப்பி வைக்க உள்ளனர். கேரளாவின் செண்டை மேளத்துக்குகூட புக் செய்யப்பட்டு விட்டது.

அந்த பாதையில் அமைச்சர்கள் விழுந்து வணங்குவதற்கு வசதியாக, சில இடங்களில் நடைபாதைகள் சுத்தப்படுத்தப்படுகின்றன.

Exit mobile version