Site icon ilakkiyainfo

மாணவிக்கு தண்டனை; செருப்பை மாலையாக்கி அணிவித்த ஆசிரியை

 

சப்பாத்து வாங்க வசதியின்றி செருப்பை அணிந்து பாடசாலைக்குச் சென்ற   மாணவியொருவரை தண்டிப்பதாகக் கூறி, செருப்பை மாலையாக்கி அம்மாணவிக்கு ஆசிரியையொருவர் அணிவித்த சம்பவமொன்று திருகோணமலை, சேருநுவர பிரதேச பாடசாலையொன்றில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை (25) இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் தகவலறிந்த சேருநுவர பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி எம்.பீ.வீரரத்ன, பாதிக்கப்பட்ட மாணவிக்கு தனது சொந்த செலவில் சப்பாது வாங்கிக் கொடுத்துள்ளார்.

தந்தையை இழந்த நிலையில் தாயுடன் வாழ்ந்து வந்துள்ள மேற்படி மாணவி, தன்னிடம் சப்பாத்து இல்லாத காரணத்தால் செருப்பை அணிந்து பாடசாலைக்குச் சென்றுள்ளார்.

மேற்படி மாணவி செருப்பு அணிந்து வந்துள்ளதை அவதானித்துள்ள குறித்த பாடசாலையின் ஒழுக்க நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாகவுள்ள ஆசிரியை, அம்மாணவியை தண்டிக்கும் முகமாக செருப்பை மாலையாக்கி அம்மாணவியின் கழுத்தில் அணிவித்துள்ளார்.

இது தொடர்பில் தகவல் அறிந்த சேருநுவர பொலிஸார், அப்பாடசாலைக்குச் சென்று அதிபரிடம் விசாரித்துள்ளனர். பாடசாலையின் ஒழுக்க நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான ஆசிரியையே இவ்வாறு செய்துள்ளார் என அதிபர் கூறியுள்ளார்.

இதனையடுத்து, பொலிஸ் பொறுப்பதிகாரியின் சொந்த செலவில் அம்மாணவிக்கு புதிய சப்பாத்து வாங்கிக்கொடுக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், மாணவியின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு இப்பிரச்சினையை பெரிதுபடுத்த விரும்பவில்லை என பாதிக்கப்பட்ட மாணவியின் தாயார் குறிப்பிட்டார்.

Exit mobile version