Site icon ilakkiyainfo

லாரி மீது அடுத்தடுத்து கார்கள் மோதல் ஒரே குடும்பத்தில் 7 பேர் நசுங்கி பலி

ஓசூர் : ஓசூர் அருகே நள்ளிரவில் பழுதாகி நின்ற லாரி மீது அடுத்தடுத்து கார்கள் மோதிய கோர விபத்தில் ஒரே குடும்பத்தில் 7 பேர் நசுங்கி பலியாகினர். 5 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியை சேர்ந்தவர் ஆனந்தன் (50). வேலூர் மாவட்டம் பாகாயம் காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தார். இவர் மற்றும் குடும்பத்தினர் 12 பேர் நேற்று இரவு 2 கார்களில் பெங்களூருக்கு கோயில் திருவிழாவுக்கு புறப்பட்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கோபசந்திரம் பஸ் நிறுத்தம் அருகில் நள்ளிரவு 1 மணியளவில் கார்கள் வந்து கொண்டிருந்தன. அப்போது கிருஷ்ணகிரி – ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் கிரானைட் கற்களை ஏற்றி சென்ற லாரி பழுதாகி நின்று கொண்டிருந்தது.

எதிர்பாராதவிதமாக ஆனந்தன் குடும்பத்தினர் வந்த 2 கார்களும் லாரி மீது அடுத்தடுத்து பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன், அவரது மனைவி உமா (48), மகன் சஞ்சய் காந்தி (13), ஆனந்தனின் தம்பி பாபு (46), அவரது மனைவி ரமணி, மகன் அருண், பாபுவின் உறவினர்

முருகன் ஆகிய 7 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.டிரைவர் வில்லு (35), பாபுவின் மகள் ஷாலினி (20), பிரீத்தி (7), ஆனந்தனின் மகள் ஐஸ்வர்யா (15), முருகனின் மகன் திவாகர் (4) ஆகிய 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

விபத்தில் சிக்கிய 2 கார்களுக்கும் பின்னால் வந்த மகாராஷ்டிர மாநில பதிவு எண் கொண்ட கார் விபத்துக்குள்ளான காரின் அருகே தடுப்பு சுவரில் மோதி நின்றது. இந்த விபத்தை கண்டு அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

இதுகுறித்து சூளகிரி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.ஓசூர் டிஎஸ்பி கோபி தலைமையில் போலீசார் விரைந்து வந்தனர். விபத்தில் பலியான 7 பேரின் உடல்களையும் இடிபாடுகளில் இருந்து மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்குஅனுப்பி வைத்தனர்.

காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர் 5 பேரும் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

உடனடியாக கிரேன் வரவழைக்கப்பட்டு விபத்தில் சிக்கிய கார்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டன. இவ்விபத்து குறித்து சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பழுதாகி சாலையோரம் நின்ற லாரி டிரைவர் மாயமாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

முதலில் காரில் இருந்த அனைவரும் இறந்தனர்

கிருஷ்ணகிரி – ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது முதலில் மோதிய காரில் இருந்த 7 பேர் பலியாகி உள்ளனர். கண் இமைக்கும் நேரத்தில் பின்னால் வந்து மோதிய 2வது காரில் இருந்த 5 பேரும் படுகாயம் அடைந்தனர்.

இதில் ஐஸ்வர்யாவை தவிர மற்ற அனைவரும் சுயநினைவை இழந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஜஸ்வர்யாவிடம் பேசி அவர்கள் குறித்த தகவல்களை போலீசார் சேகரித்தனர். விபத்தில் சிக்கிய 3வது காரில் வந்த ராஜஸ்தானை சேர்ந்த பட்டேல், உக்கார், ராகுல், தினேஷ், பர்கரோ ஆகியோர் காயமின்றி உயிர் தப்பினர்.

Exit mobile version