Site icon ilakkiyainfo

ஈழப் போரின் இறுதி நாட்கள்-21: இறுதி யுத்தத்தில் வான் புலிகளுக்கு என்ன நடந்தது?-1

இலங்கை அரசுக்கு வெளிநாட்டு உளவுத்துறைகள் தாமாகவே முன்வந்து தகவல் கொடுத்ததற்கான இரண்டாவது காரணத்தை கடந்த அத்தியாயத்தில் பார்த்தோம்.. முன்றாவது காரணம் என்ன?

விடுதலைப் புலிகள் இயக்கம் நடத்திவந்த கடல்வழி ஆயுதக் கடத்தல்களும் (கப்பல் போக்குவரத்து), விமானத் தாக்குதல்களை நடத்திய வான்புலிகள் பிரிவும்.

அமெரிக்கா உட்பட மேலை நாடுகளுக்கு அச்சுறுத்தலாக உள்ள அல்-காய்தா, தலிபான், மற்றும் அதே போன்ற இயக்கங்களிடம் இப்போதுகூட இல்லாத இந்த இரண்டும் விடுதலைப் புலிகளிடம் இருந்ததே, விடுதலைப் புலிகள் இயக்கத்தை இல்லாது செய்வதற்கு மேலை நாட்டு உளவுத்துறைகளை தூண்டியது.

ஆயுதங்களை கடத்தும் வகையிலான கப்பல்கள், குண்டு வீச்சு மற்றும் தற்கொலை தாக்குதல்களை நடத்தும் வகையிலான விமானங்கள், தனிப்பட்ட தீவிரவாத இயக்கம் ஒன்றின் கைகளில் இருப்பது, ஏதோ ஒரு காலத்தில் அனைவருக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய அம்சம் என்பதில், அனைத்து மேலைநாட்டு உளவுத்துறைகளும் ஒரே கருத்தை கொண்டுள்ளன.

விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல் போக்குவரத்தை பொறுத்தவரை, அதில் இருந்து கே.பி. (குமரன் பத்மநாதன், அல்லது செல்வராசா பத்மநாதன்) ஒதுக்கி வைக்கப்பட்டதும், பெரிதாக எதையும் சாதிக்க முடியவில்லை என்பது, சி.ஐ.ஏ. உட்பட வெளிநாட்டு உளவுத்துறைகளுக்கு தெரியும். கே.பி.யின் இடத்துக்கு புலிகளின் தலைமையால் கொண்டுவரப்பட்ட புதிய ஆட்களால், எதையும் சாதிக்க முடியாது என்பதும் நன்றாகவே தெரியும்.

இருப்பினும், அந்தக் கப்பல்களை நடமாட விடுவது, பிற்காலத்தில் அச்சுறுத்தலை ஏற்படுத்தலாம் என்ற நோக்கில், அந்தக் கப்பல்களை ஒவ்வொன்றாக அழிப்பதற்கு சி.ஐ.ஏ. எப்படி உதவியது என்பதை, ஏற்கனவே இந்த தொடரில் விளக்கமாக எழுதியிருந்தோம்.

அடுத்து வான்புலிகள் விவகாரம்.

விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு ஒரு விமானப்படை தேவை என்று ஆரம்பத்தில் சில முயற்சிகள் (கிட்டு காலத்திலேயே) செய்யப்பட்டாலும், அவையெல்லாம் வெறும் பொம்மை விளையாட்டுகளாகவே இருந்தன. நிஜமான விமானங்களை வைத்து ஒரு கட்டமைப்பை எப்படி உருவாக்குவது என்பதை திட்டமிட்டு கொடுத்து செயல்படுத்தியவர், சங்கர்.

சங்கரின் நிஜப்பெயர், வைத்தியலிங்கம் சொர்ணலிங்கம். விமானங்களை பற்றிய விசாலமான அறிவு இவருக்கு எப்படி வந்தது என்றால், 1980-களில் இவர் ஏர்-கனடா நிறுவனத்தில் பணிபுரிந்தபோதுதான். ஆம், இவரும் ஏர்-கனடா ஸ்டாஃப் ஆக இருந்தவர்!

1980-களில் கனடாவில், ஏர்-கனடாவில் பணிபுரிந்த தமிழர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம் (ஒரு கை போதும்). சங்கர், கனடாவின் கியூபாக் மாநிலம் மொன்ட்ரியோல் நகரில் உள்ள மிரபெல் (Montréal–Mirabel) ஏர்போர்ட்டில் இருந்த, ஏர்-கனடாவின் மெயின்டெனன்ஸ் ஹாங்கரில் பணிபுரிந்தவர்.

அந்த நாட்களில் ஏர்-கனடா நிறுவனத் ஆபரேட் பண்ணிய DC-9 விமானங்களின் லைன்-மெயின்டெனன்ஸ், மற்றும் சி-செக் ஆகியவை மிரபெல் ஹாங்கரில்தான் நடைபெற்றன (இப்போது DC-9 விமானங்களே ஏர்-கனடாவில் கிடையாது). இந்த அனுபவத்துடன் இலங்கை வந்து விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்தார் சங்கர்.

வான்புலிகள் பிரிவை தொடங்கியவர் இவர்தான். ஆனால், அந்த விமானங்கள் பறந்து குண்டுவீச்சு நடத்துமுன் இவர் கொல்லப்பட்டு விட்டார். இலங்கை ராணுவ கமாண்டோ படைப்பிரிவின் ஆழ ஊடுருவும் யூனிட் ஒன்றை இவரை கொல்வதற்காகவே வன்னிக்குள் அனுப்பி வைத்தார்கள். அந்த தாக்குதலில் இவர் கொல்லப்பட்டார்.

வான்புலிகளின் முதலாவது விமான குண்டுவீச்சு தாக்குதல் நடந்தது 2007-ம் ஆண்டில் என்ற போதிலும், விடுதலைப் புலிகளிடம் விமானங்கள் இருக்கலாம் என்ற சந்தேகம் அதற்கு முன்னரே ஏற்பட்டிருந்தது.

1995-ம் ஆண்டு இலங்கை ராணுவம் நடத்திய ஆபரேஷன் ரிவிரெச தாக்குதல் திட்டமிடலின்போது, திட்டமிடலுக்கு பொறுப்பு அதிகாரியாக இருந்த மேஜர் ஜெனரல் ரொஹான் தலுவத்த, “விடுதலைப் புலிகளிடம் இலகு ரக விமானங்கள் (light aircraft) இருக்கலாம் என பதிவு செய்தார். இலங்கை ராணுவ ரிக்கார்ட்களில், புலிகளின் வான்படை பற்றி முதல் தடவையாக செய்யப்பட்ட பதிவு அதுதான்.

1998-ம் ஆண்டில் இருந்து உளவுத்துறை வட்டாரங்களில், விடுதலைப் புலிகளிடம் சிறிய விமானங்கள் உள்ளன என்ற தகவல் பரவலாக அடிபட்டுக் கொண்டிருந்தது. இலங்கை, வன்னி பகுதியில் மர்ம விமானங்கள் பறந்ததை சிலர் பார்த்ததாக சொன்னார்கள். ஆனால், அப்போது அதெல்லாம் சீரியசாக எடுக்கப்பட்டிருக்கவில்லை.

அதன்பின் புலிகளிடம் ‘அந்த ஹெலிகாப்டர்’ இருக்கலாம், ‘இந்த விமானம் இருக்கலாம்’ என பலவித ஊகங்கள் மீடியாக்களில் வெளியாகின. ஆனால், 2006-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் வெளியான ஒரு உளவு அறிக்கையில், “விடுதலைப் புலிகளிடம் செக் குடியரசு தயாரிப்பான Zlin Z‐143 ரக விமானங்கள் இரண்டு உள்ளன என்ற தகவல், நிஜமானது என கடைசியில் நிரூபணமானது.
அதற்குமுன், புலிகளிடம் என்ன விமானம் உள்ளது என தெரியாத நிலையில், இலங்கையில் இருந்த நார்வே தலைமையிலான கண்காணிப்புக் குழு, 2005-ம் ஆண்டு மே 28-ம் தேதி வெளியிட்ட அறிக்கையில், கிளிநொச்சி அருகே இரணமடு பகுதியில் விடுதலைப் புலிகள் அமைத்துள்ள விமான ரன்வே ஒன்றை தாம் பார்த்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

(புலிகள் அமைத்த அந்த ரன்வேயை, யுத்தத்துக்கு பின் இலங்கை விமானப்படை பெரிதுபடுத்தி பயன்படுத்துகிறது. இலங்கையில் சமீபத்தில் நடந்த காமன்வெல்த் மாநாட்டுக்கு வந்த பிரதிநிதிகளை, கிளிநொச்சிக்கு அழைத்துச்சென்ற இலங்கை விமானப்படை விமானம், இந்த இரணமடு ரன்வேயிலேயே தரையிறங்கியது)

புலிகளிடம் விமானங்கள் இருக்கலாம் என்ற உளவு அறிக்கையை அடிப்படையாக வைத்து, அந்த விமானங்களை டிடெக்ட் பண்ணுவதற்கான ரேடார்கள் தேவை என்ற கோரிக்கை இலங்கை விமானப்படை தளபதியாக இருந்த டொனால்ட் பெரேராவால் அரசுக்கு கொடுக்கப்பட்டது (இந்த டொனால்ட் பெரேரா, 2009-ல் இஸ்ரேலுக்கான இலங்கை தூதராக நியமிக்கப்பட்டார்).

premium-idஅப்போது இலங்கை ஜனாதிபதியாக இருந்தவர், சந்திரிகா குமாரதுங்க. அவர், இது தொடர்பாக சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்த, ஒரு குழுவை அனுப்பி வைத்தார்.

இலங்கைக்கு ரேடார்களையும், வான் பாதுகாப்பு சாதனங்களையும் சப்ளை செய்ய சீனா ஒப்புக்கொண்டு, அந்த ஒப்பந்தம் செய்யப்படும் நிலையில், இந்தியா தலையிட்டது. “சீனாவிடம் இருந்து அவற்றை வாங்க வேண்டாம். நாமே இலவசமாக கொடுக்கிறோம்” என்றது புதுடில்லி.

இதையடுத்து, இந்திய விமானப்படை பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த குழு ஒன்று இலங்கை சென்று, ஆய்வு நடத்திவிட்டு டில்லி திரும்பியது. அதன்பின் ஏதும் நடக்கவில்லை. கிணற்றுக்குள் போடப்பட்ட கல்லாக இருந்தது, இந்த திட்டம்.

சந்திரிகாவுக்கு பின், இலங்கை ஜனாதிபதியாக மகிந்த ராஜபக்ஷே வந்தபோது, கோத்தாபய ராஜபக்ஷே பாதுகாப்பு செயலாளர் ஆனார். அவர் இந்த ரேடார் மற்றும் வான் பாதுகாப்பு சாதனங்கள் திட்டத்துக்கு என்ன நடந்தது என விசாரிக்க, அப்போது இலங்கையில் இந்திய தூதராக இருந்த நிருபமா ராவ்வை அழைத்து விசாரித்தார்.

“இந்தியாவால் இவற்றை வழங்க முடியாது என்றால், எமது பழைய ஏற்பாட்டின்படி சீனாவிடம் இருந்து பெற்றுக்கொள்ள ஒப்பந்தம் செய்யப் போகிறோம்” என நிருபமா ராவ்விடம் கூறப்பட்டது.

இதையடுத்து 2005-ம் ஆண்டு இறுதியில், ரேடார்களையும், வான் பாதுகாப்புக்கான ack ack துப்பாக்கிகளையும் வழங்க தயார் என்றது புதுடில்லி.

2005-ம் ஆண்டு இறுதியில், இலங்கை விமானப்படை டீம் ஒன்று, விமான ஆபரேஷனின் அப்போதைய தலைவர் ரொஷான் குணதிலகே தலைமையில் இந்தியா சென்றது. இந்தியாவின் ராணுவ தளங்களில் பாவனையில் உள்ள ரேடார்களை பார்த்து, அவை எப்படி இயங்குகின்றன என தெரிந்துகொண்டு திரும்பியது இந்த டீம்.

இதன்பின் இந்தியா, இரு ‘இந்திரா மார்க்-II’ ராடார் யூனிட்டுகளை இலங்கைக்கு கொடுத்தது.

2006-ம் ஆண்டு தொடக்கத்தில் ஒரு இந்திய ரேடார், கொழும்பு கட்டுநாயக விமானத் தளத்திலும், மற்றையது வவுனியா விமானப்படை தளத்திலும் பொருத்தப்பட்டன.

விடுதலைப் புலிகளின் விமானங்கள் வந்தால், இந்த ரேடார்கள் டிடெக்ட் பண்ணும் என்று சொல்லப்பட்டாலும், ‘இந்திரா மார்க்-II’ ரேடார் சிஸ்டம் மிகவும் பேசிக்-சிஸ்டம்தான். தற்போது முப்பரிமாண ரேடார்கள் உள்ள நிலையில் இது இருபரிமாண (two dimensional) ரேடார் சிஸ்டம்.

அது தவிர இது ஒன்றும் சுயாதீனமாக இயங்கும் ‘ஸ்டான்ட்-அலோன்’ ரேடார் சிஸ்டம் கிடையாது. இவ்வகை ரேடார்களை ‘gap filler’ என்பார்கள்.

இதை எப்படி எளிமையாக புரிய வைக்கலாம் என்றால், ஒரு பகுதிக்கு விமான தாக்குதலில் இருந்து பாதுகாப்பு கொடுக்க, இரு பிரதான ரேடார் சிஸ்டம்கள் 300 கி.மீ. தொலைவில் அமைக்கப்பட்டுள்ளன என வைத்துக் கொள்ளுங்கள். அந்த இரண்டு பிரதான ரேடார் சிஸ்ட்டத்துக்கும் இடையே, இடைவெளியை நிரப்புவதற்காக (‘gap filler’) வைக்கப்படும் ரேடார் சிஸ்டம்தான், இந்தியாவால் வழங்கப்பட்ட ‘இந்திரா மார்க்-II’ ரேடார் சிஸ்டம்.

ஒவ்வொரு ‘இந்திரா மார்க்-II’ ரேடார் சிஸ்டமும், 3 வாகனங்களில் பொருத்தப்பட்டிருக்கும். தரையில் இருந்து 35 மீட்டர் முதல், 3,000 மீட்டர் வரை பறக்கும் விமானங்களை, 90 கி.மீ. சுற்றளவில் இவை டிடெக்ட் பண்ணும்.

ஆனால், இந்த உயரத்தில் பறக்கும் F-7, Kfir, MIG-27 போன்ற போர் விமானங்களை மட்டுமே இந்த ரேடார்கள் டிடெக்ட் பண்ணும். அதாவது, வேகமாக பறக்கும் விமானங்களாக இருக்க வேண்டும்.

விடுதலைப் புலிகள் பயன்படுத்திய வேகம் குறைந்த இலகுரக விமானங்களை இந்த ரேடார் சிஸ்டம் டிடெக்ட் பண்ணவே பண்ணாது.

வான்புலிகளின் முதலாவது விமானத் தாக்குதல் 2007-ம் ஆண்டு மார்ச் 25-ம் தேதி நடந்தது.

எங்கே குண்டு போட்டார்கள் தெரியுமா, கொழும்பு கட்டுநாயக வான்படை தளத்தில்.

அங்கேதான், இந்தியா வழங்கிய இரு ‘இந்திரா மார்க்-II’ ரேடார் சிஸ்டங்களில் ஒன்று இருந்தது.

வன்னியில் இருந்து புறப்பட்ட இரு வான்புலி விமானங்கள், வவுனியாவுக்கு மேலாக பறந்துதான், கொழும்புவை சென்றடைந்தன.

வவுனியாவில் மற்றொரு ‘இந்திரா மார்க்-II’ ரேடார் சிஸ்டம் இருந்தது!

விடுதலைப்புலிகளின் விமானங்கள் போய் குண்டுவீசிவிட்டு திரும்பியதுவரை, இந்த இரு ரேடார் சிஸ்டத்தின் வார்னிங் பகுதியில் இருந்து, கிளி கத்தும் அளவுக்குகூட சத்தம் வரவில்லை.

எப்படி வரும்? Zlin Z‐143 ரக விமானங்களை டிடெக்ட் பண்ண முடியாத சிஸ்டங்கள் அவை.

அதன்பின், சீனாவிடம் ஓடிச்சென்ற இலங்கை, சீனா வழங்கிய முப்பரிமாண ஸ்டான்ட் அலோன் ரேடார் சிஸ்டங்களை 2007-ம் ஆண்டு நவம்பரில் பொருத்தியது. அதை வைத்தே, வான் புலிகளின் விமானங்களை வீழ்த்தியது.

இதில் முக்கியமாக தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்தியாவிடம், முப்பரிமாண, ‘ஸ்டான்ட் அலோன்’ ரேடார்கள் உள்ள நிலையிலும், இருபரிமாண ‘கேப்-ஃபில்லர்’ ரேடார்களையே இலங்கைக்கு கொடுத்தது.

இந்த விஷயம், தமிழக அரசியல் மேடைகளில், “இந்தியா ரேடார்களை கொடுத்து விடுதலைப் புலிகளை அழித்தது” என முழங்கும் அரசியல்வாதிகளுக்கு தெரிந்திருக்க வேண்டியது அவசியமில்லை. தெரிந்திருந்தாலும், சொல்ல மாட்டார்கள். சொன்னால், அரசியல் பண்ண முடியாது.
(தொடரும்)

Exit mobile version