முதலில் இந்தியா, அதற்கடுத்து நோர்வே, இப்போது தென்னாபிரிக்காவின் கைக்குப் போயிருக்கிறது பந்து. இலங்கையில் அமைதியை உருவாக்குவதற்கு ஏற்பாட்டாளர் அல்லது அனுசரணையாளர் என்ற ஏதோவொரு பெயரில் நடுநிலை வகிப்பதற்கான வாய்ப்பே இப்போது தென்னாபிரிக்காவுக்கு கிடைத்துள்ளது.
முதலில் இந்தியாவின் ஜி.பார்த்தசாரதி, பின்னர் நோர்வேயின் எரிக் சொல்ஹெய்ம், ஜப்பானின் யசூசி அகாசி, இந்த வரிசையில் இலங்கையில் அமைதியை ஏற்படுத்துவதற்கான விசேட தூதுவராக இப்போது இடம்பிடித்துள்ளவர் தென்னாபிரிக்காவின் சிறில் ரமபோசா.
இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் இணக்கப்பாடொன்றை ஏற்படுத்தி நிலையான அமைதி, நல்லிணக்கத்தை உருவாக்கும் பொறுப்பு இப்போது சிறில் ரமபோசாவின் கைக்கு வந்திருக்கிறது.
இதற்கு முன்னர் நோர்வேயும் இந்தியாவும் இந்த முயற்சிகளில் இறங்கியபோது, இலங்கையில் ஆயுதப் போராட்டம் நடந்துகொண்டிருந்தது.
ஆனால், தென்னாபிரிக்கா களமிறங்கும் சூழல் வித்தியாசமானது. அது போர்ச் சூழல்.
இது போருக்குப் பிந்திய சூழல். அது போரிலிருந்து அமைதியை உருவாக்குவதற்கான முயற்சி. இது போரினால் உருவாக்கப்பட்டு விட்டதாக பிரகடனப்படுத்தப்பட்ட அமைதியை காப்பாற்றுவதற்கான முயற்சி.
அதாவது போர் முடிவுக்கு வந்தபோதிலும், இன்னமும் உருவாக்கப்படாத நிலையான அமைதியை எட்டுவதற்கான முயற்சிகளே இப்போது நடக்கின்றன.
முன்னர் நோர்வே மற்றும் இந்தியா என்பன அமைதி முயற்சியில் இறங்கியபோது, அரசாங்கத்துக்கும் ஆயுதம் தாங்கிய தமிழ் அமைப்புகளுக்கும் இடையில் படை பல ரீதியான ஒரு வித சம பல நிலை காணப்பட்டது.
அது நிலையானதாக இல்லாவிடினும், ஒருவித நெகிழ்வுப் போக்குச் சமநிலை தென்பட்டது. இதனால், இரு தரப்புமே ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுப்பதற்குத் தயாராக இல்லாத நிலையும் நழுவிக்கொள்ளும் நிலையும் காணப்பட்டன.
இரு தரப்புக்குமே போர் என்ற இன்னொரு தெரிவு இருந்ததால், அமைதியை நோக்கி அவர்களைத் திருப்புவது கடினமானதாக இருந்தது. அதன் விளைவாக, இரு தரப்பையும் அவ்வப்போது பேச்சு மேசைக்கு இழுத்து வரவே பெரும் போராட்டம் நடத்தும் நிலை காணப்பட்டது.
நோர்வேயும் இந்தியாவும் இலங்கையில் அமைதியை உருவாக்க முயன்று தோல்வியை சந்தித்த நாடுகள். இந்த முயற்சியில் இனிமேல் இல்லையென்றளவுக்கு இந்த நாடுகள் நொந்து போயுள்ளன என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இப்போது நிலைமை முற்றிலும் வேறுபட்டது.
முன்னர் விடுதலைப் புலிகள் இருந்த இடத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிடித்துள்ளது. முற்றிலும் ஜனநாயக ரீதியாகத் தெரிவுசெய்யப்பட்ட தமிழர்களின் பிரதிநிதிகள் என்ற பலம் மட்டும் அவர்களுக்கு உள்ளது. மற்றபடி, பேச்சு இல்லாவிட்டால் போர் என்று மாற்றுத் தெரிவொன்றை நாடும் வாய்ப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இல்லை.
அதற்கு முன்னுள்ள முதலும் கடைசியுமான தெரிவு, அரசாங்கத்துடன் பேசி தீர்வொன்றை எட்டுவதாகவே உள்ளது. என்றாலும், தமது அரசியல் பலத்தை வைத்தும் வெளிநாடுகளிலுள்ள ஆதரவைக் கொண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் பேரம் பேசவே முனைகிறது.
அதாவது, அரசாங்கத்தின் இழுப்புக்கேற்ப செல்லாமல், தமக்கென வரையப்பட்ட கோட்டுக்குள் நின்று ஆட முனைகிறது.
கூட்டமைப்பின் இந்த இறுக்கமான போக்கும் அரசாங்கத்தின் விட்டுக்கொடுக்காத தனது நிகழ்ச்சி நிரலுக்குள் கூட்டமைப்பை கொண்டுவரும் போக்கும் தான், போருக்குப் பின்னர் அமைதியை உருவாக்குவதற்கான பேச்சுக்கள் இடைநடுவில் நின்று போனதற்குக் காரணம்.
ஒரு வகையில் சொல்லப் போனால், ஜனநாயக ரீதியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்றுள்ள பலமானது விடுதலைப் புலிகளை விடவும், சக்தி வாய்ந்த தரப்பாக அதனை பல நாடுகளால் ஏற்றுக்கொள்ள வைத்துள்ளது.
தமிழர் தரப்பில் பேசும் தரப்பு மாறியுள்ளபோதிலும், ஆயுதப் போராட்டமொன்று இல்லாத சூழலிலும் இரு தரப்பும் சுயமாக ஒரு பேச்சு மேசையில் அமரத்தக்க நிலையில் இல்லை. இந்த இடைவெளி தான், புதியதொரு நடுநிலையாளர் பாத்திரத்தை உருவாக்க வழிவகுத்துள்ளது.
இந்த அரங்கினுள் பிரவேசிப்பதற்கான வழியை தென்னாபிரிக்காவுக்கு ஏற்படுத்திக் கொடுத்திருப்பது இரண்டு விடயங்கள். முதலாவது, அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுக்களை மீளத் தொடங்க முடியாத சூழல். இரண்டாவது ஜெனீவா தீர்மானங்கள்.
தொடர்ச்சியாக மூன்று வருடங்கள் ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட இலங்கைக்கு எதிரான தீர்மானங்கள், அரசாங்கத்தை நெருக்கடியில் தள்ளிவிட்டுள்ளன. கடைசியாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம், சர்வதேச விசாரணையொன்றை மேற்கொள்வதற்கு வழிவகுத்துள்ளது.
இந்த விசாரணையின் விளைவு என்னவாக இருந்தாலும், இந்த விசாரணையால் அரசாங்கம் பெரும் நெருக்கடிகளை எதிர்கொள்கிறது. எதிர்கொள்ளப் போகிறது என்பதில் மட்டும் சந்தேகமில்லை.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் மூலம் இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணைகள் நடத்தப்படவுள்ளது.
அதற்கு அரசாங்கம் ஒத்துழைக்காது போனால், வேறு வழிகளில் இலங்கைக்கு நெருக்கடி கொடுக்க மேற்கு நாடுகள் முனையும் சூழல் தான் தற்போது நிலவுகிறது.
சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட்டாலும், அதற்கடுத்து என்ன செய்வது என்ற சிக்கல் மேற்கு நாடுகளுக்கு இருக்கவே செய்கிறது.
அது அரசாங்கத்துக்கு ஒரு சிக்கலான விடயமாக இருந்தாலும், சர்வதேச விசாரணைகளில் தாம் குற்றவாளியாக்கப்படுவதிலிருந்து தப்பிக்க வேண்டும் என்றே கருதும்.
எனவே, இயல்பாகவே ஏதாவதொரு உள்நாட்டு பொறிமுறையின் ஊடாக இந்த விவகாரத்துக்குப் பதிலளிக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன.
ஜெனீவா தீர்மானம் ஐ.நா. விசாரணைக்கு மட்டுமன்றி, உள்நாட்டு விசாரணைகளையும் வலியுறுத்தியுள்ளது.
இந்த நிலையில், இப்போது சர்வதேச விசாரணையென்ற பொறியிலிருந்து முழுமையாக இல்லாவிட்டாலும், ஓரளவுக்கேனும் தப்பித்துக்கொள்ள வேண்டுமானால், இருக்கின்ற ஒரே வழி உள்ளகப் பொறிமுறை ஒன்றுக்கான வாய்ப்புகளை உருவாக்கிக்கொள்வது தான்.
இது சர்வதேச சமூகம், இலங்கை அரசுக்காக விட்டு வைத்துள்ள ஒரு தப்பிக்கும் வழி. அதாவது தென்னாபிரிக்காவை இந்த அரங்கினுள் கொண்டு வருவதற்கான வழியென்று கூடச் சொல்லலாம்.
தென்னாபிரிக்காவை இலங்கை அமைதி விவகாரத்துக்குள் கொண்டுவருவதன் மூலம், உள்ளகப் பொறிமுறையின் மூலம் பொறுப்புக்கூறல் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது மட்டுமன்றி இறுதியான சமாதானத்தையும் எட்டுவதற்கு வழி தேடலாமென்று மேற்குலகம் கருதியிருக்க வாய்ப்புகள் உள்ளன.
முன்னர் இலங்கை அமைதி முயற்சிகளுக்குள் நோர்வேயை கொண்டுவந்தது மேற்குலகம் தான். அதாவது, உலகில் உள்நாட்டுச் சிக்கல்களைத் தீர்ப்பதற்கு அமெரிக்காவினால் பயன்படுத்தப்படும் ஒரு நாடாகவே நோர்வே இருந்து வந்தது. ஆனால், இலங்கையில் அந்த நாடு தோல்வி கண்டுவிட்ட நிலையில் மீண்டும் அதனைக் களமிறக்க முடியாது.
அதேவேளை, அயல் நாடான இந்தியாவும் மீண்டும் சமாதான முயற்சிகளில் இறங்கத் தயாராகவில்லை. இதனால், தென்னாபிரிக்காவுக்கான களத்தை மேற்குலகம் திறந்து விட்டிருப்பதாகத் தெரிகிறது.
தனியே பொறுப்புக்கூறல் மட்டும் இலங்கையில் எதிர்நோக்கப்படும் சவால் அல்ல. பொறுப்புக்கூறலுடன், நிலையான அமைதியை உருவாக்குவதற்கான அரசியல் தீர்வும் இங்கு அவசியமானது. அந்த இறுதியான அமைதியையும் நிலையான அரசியல் தீர்வையும் உருவாக்குவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேசியே ஆக வேண்டும்.
தெரிவுக்குழுவுக்கு வந்தால் தான் அதிகாரப்பகிர்வு குறித்துப் பேசலாம் என்பது அரசாங்கத்தின் பிடிவாதம். தெரிவுக்குழுவுக்கு வர முன்னர், அரசியல் தீர்வு குறித்த இணக்கப்பாடொன்றுக்கு அரசாங்கம் வரவேண்டும் என்பது கூட்டமைப்பின் பிடிவாதம்.
இந்த இரண்டுமே ஒன்றையொன்று உந்தித்தள்ளும் இயல்புடையதாக இருப்பதால், தாமாக முன்வந்து பேச்சுக்களை ஆரம்பிக்கும் சூழல் இல்லை.
அரசாங்கம், பெரும்பான்மையின அடிப்படைவாதிகளைத் திருப்திப்படுத்துவதிலேயே குறியாக இருப்பதால், கடந்து வந்த பாதைக்கு அதனால் மீளத் திரும்பிச் செல்ல முடியாது.
எனவே, ஏதோவொரு சக்தியின் துணையுடன் தான், அந்தப் பாதைக்குத் திரும்ப முடியும். அது தான் தென்னாபிரிக்கா. இப்போது தென்னாபிரிக்கா, இந்த அரங்கினுள் பிரவேசிப்பது பெரும்பாலும் உறுதியாகிவிட்டது.
கடந்த பெப்ரவரி மாதம் தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் சூமா, இலங்கையிலும் தென்சூடானிலும் அமைதியை ஏற்படுத்துவதற்கான சிறப்புத் தூதுவராக ஆபிரிக்கத் தேசிய காங்கிரஸின் பிரதித் தலைவரான சிறில் ரமபோசாவை அறிவித்திருந்தார்.
இதன் பின்னர், அரச தரப்பு அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தலைமையிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தலைமையிலும் தென்னாபிரிக்கா சென்று பேச்சுக்களை நடத்தி விட்டுத் திரும்பியுள்ளது.
இதன் அடுத்த கட்டம் என்னவென்றால், சிறப்புத் தூதுவர் சிறில் ரமபோசா மே மாத இறுதியில் அல்லது ஜுன் மாத தொடக்கத்தில் கொழும்பு வந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் கூட்டமைப்புத் தலைவர்களையும் சந்திக்கவுள்ளார். அதன் பின்னர் தான், இந்த விவகாரத்தில் தென்னாபிரிக்காவினது நடுநிலையாளர் பாத்திரம் உறுதிப்படுத்தப்படும்.
இரு தரப்புக்களையும் பேச்சு மேசைக்குக் கொண்டுவந்து இறுதியான அரசியல் தீர்வொன்றையும் நிலையான அமைதியையும் உருவாக்கும் முயற்சிகள் அதன் பின்னர் தான் ஆரம்பிக்கும்.
இது எந்தளவுக்கு வெற்றி பெறும் என்பது அரசாங்கத்தினதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும் அணுகுமுறைகளில் தான் தங்கியுள்ளது என்று சண்டே ரைம்ஸ் இதழுக்கு இரா.சம்பந்தன் அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
தென்னாபிரிக்கா எவ்வாறு பயன்படுத்திக்கொள்ளப்படும் என்பதைப் பொறுத்தே இதன் வெற்றி, தோல்வி தீர்மானிக்கப்படும்.
விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு நோர்வேயின் சமாதான முயற்சிகள் பயன்படுத்தப்பட்டதாக ஒரு குற்றச்சாட்டு இருந்து வருகிறது. அதனை எரிக் சொல்ஹெய்ம் நிராகரித்துள்ளபோதிலும், நோர்வே அமைதி முயற்சிகளில் இறங்கிய பின்னர் தான் புலிகள் இயக்கத்தின் அழிவு ஆரம்பமாகியது என்பதில் சந்தேகமில்லை.
அதற்குக் காரணம் புலிகள் விட்ட தவறா, மேற்குலகினது சூழ்ச்சியா, அரசாங்கத்தினது தந்திரமா என்பது விரிவாகப் பார்க்கப்பட வேண்டிய வேறொரு விவகாரம்.
ஆனால், நோர்வேயினது அமைதி முயற்சிகளின் தொடக்கம் புலிகளின் அழிவில் போய் முடிந்தது என்பதே வரலாறாக இருக்கப் போகிறது.
இத்தகைய பின்னணியில் தென்னாபிரிக்காவினது அமைதி முயற்சிகளை அரசாங்கம் எவ்வாறு பயன்படுத்திக்கொள்ளப் போகிறது என்பதைப் பொறுத்தே இதன் வெற்றியும் தோல்வியும் தீர்மானிக்கப்படும்.
அதாவது, பெரும்பான்மையினத் தேசியவாதிகளை திருப்திப்படுத்தும் நிலைப்பாட்டிலிருந்து விலகி, பிரச்சினைக்குத் தீர்வு காணும் இதய சுத்தியுடன் ஒத்துழைத்தால் மட்டுமே இந்தப் பேச்சுக்கள் வெற்றி பெறும்.
உண்மைகளை ஒப்புக்கொண்டு பொறுப்புக்கூறினால் மட்டுமே, உண்மையான நல்லிணக்கம் சாத்தியப்படுமென்று ஈஸ்டர் ஆராதனையில் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசெப் ஆண்டகை குறிப்பிட்டிருந்தார்.
உண்மையான நல்லிணக்கத்தை எட்டுவதற்கு திறந்த மனதுடன் பேசுவதும் பிரச்சினையைத் தீர்க்க வேண்டுமென்ற இதயசுத்தியான எண்ணமும் அவசியம். அத்தகைய பேச்சுக்களின் முடிவில் தான், நிலையான அரசியல் தீர்வொன்றை எட்ட முடியும்.
ஆனால், அரசாங்கம், அத்தகையதொரு நிகழ்ச்சி நிரலுக்கு உடன்படுமா அல்லது வெறுமனே ஜெனீவா பொறியிலிருந்து தப்பிப்பதற்காக மட்டும் ஒரு உள்நாட்டுப் பொறிமுறையை உருவாக்குவதற்கு தென்னாபிரிக்காவை பயன்படுத்த முனையுமா என்று பார்க்கவேண்டியுள்ளது.
அரசாங்கத்தைப் பொறுத்தவரையில், தென்னாபிரிக்க பாணியிலான உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவொன்றை அமைப்பதே அதன் உடனடிக் கரிசனையாக இருக்கலாம்.
ஆனால், அது உடனடியாக எடுத்த எடுப்பிலேயே சாத்தியப்படும் போலத் தெரியவில்லை. அது பேச்சுக்களின் இறுதியான கட்டமே என்று இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளது இங்கு கவனிக்கத்தக்கது.
உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவை அமைத்து, ஜெனீவா நெருக்கடியிலிருந்து தப்பிக்க அரசாங்கம் வகுக்கும் வியூகத்துக்குள் சிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராகவில்லை என்பதை சம்பந்தனின் இந்தக் கருத்து எடுத்துக் காட்டுகிறது.
இப்படிப்பட்ட சூழலில், இரு தரப்பையும், தமது வழிக்குக் கொண்டுவந்து பேச்சு மேசையில் அமர வைப்பது ஒன்றும் தென்னாபிரிக்காவுக்கு ஒன்றும் இலகுவானதாக இருக்கப் போவதில்லை.
இதுவே இப்படியென்றால் இறுதியான அரசியல் தீர்வையும் உண்மையான நல்லிணக்கத்தையும் உருவாக்குவது எந்தளவுக்கு கடினமான பணியாக இருக்குமென்று சொல்லத் தேவையில்லை.
-சஞசயன்