பொது பலசேனாவை அடக்க அமைச்சர் பதவிதான் தடையாக இருக்கு மென்றால் இந்த அமைச்சர் பதவியே எனக்குத் தேவையில்லை. இலங்கையில் கடும்போக்கு இயக்கமான பொது பல சேனாவுக்கும் அமைச்சர் ரிஷாட் பதியுதீனினுக்கும் கடந்த சில காலங்களாக பனிப்போர் நடப்பது அனைவரும் அறிந்த விடயமே.
இதனிடையில் கடந்த வாரம் பொது பல சேனா இயக்கம் அமைச்சரின் அமைச்சு கட்டிடத்துக்குள் அடாவடித்தனத்துடன் ,பொதுபல சேனா அமைப்பினர் நுழைந்து அவர்களுக்கு மாற்றுக் கருத்துடைய ஜாதிக பல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் வடரக்க விஜித புத்தபிக்குவை தேடியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
மேலும் மரிச்சு கட்டு பிரதேசத்தில் மீள் குடியமர்த்தப் பட்ட மக்களை வெளியேற்றுமாறும், அது வில்பது வனப்பகுதியைச் சேர்த்தது என்றும், அமைச்சர் ரிஷாத் இலங்கையில் முஸ்லிம் மக்களுக்காக அராபிய கொலனி ஒன்றை உருவாக்குவதாகவும் பொதுபல சேனா இயக்கதினர் அமைச்சர் ரிஷாட் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்.
இது சந்பந்தமாக அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் மேற்கொண்ட வன்னி நியூசின்
நேர்காணல்: (கே.எம்.ரிப்காஸ் , எம் .ரிமாஸ்)
கேள்வி:- அரச அனுசரணையாளரான பொது பலசேனா இப்போது உங்கள் அமைச்சிலேயே அடாவடி செய்து விட்டனரே?
பதில்:- விஷக்கிரிமி பொது பலசேனா கடந்த ஒன்றரை வருடமாக இலங்கை நாட்டில் உள்ள சிறுபான்மைகளை குறிப்பாக இந்நாட்டு முஸ்லிம்களையும், சகோதர பெளத்த மக்களையும் மோத விடுவதற்கு பல விஷம காரியங்களை அரங்கேற்றி வருகின்றனர்.
இதன் மூலம் முஸ்லிம்களுடைய கல்வி பொருளாதாரம் என்பவற்றை முடக்கும் ஒரு திட்டமே இவர்களிடம் உள்ளது. இவர்கள் ஹலால் பிரச்சனையில் தொடங்கி பின்பு முஸ்லிம்களின் உடை, கல்வி, பள்ளிவாசல்கள் மற்றும் மதரசாக்கள் என்பவற்றில் பிரச்சினை ஏற்படுத்தினர்.
மேலும், முஸ்லிம் மக்கள் அன்னியவர்களுக்கு சாப்பாடு கொடுக்க முன் உணவில் எச்சில் துப்பிவிட்டு தான் கொடுக்க வேண்டும் என்று குர் ஆனில் கூறப்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர்.
அந்நிய மக்களின் காணிகளை அபகரிக்க குர் ஆன் கூரியுள்ளதாக குர் ஆன் மீது அப்பட்டமான பொய்களை இட்டு கட்டுகின்றனர். அவ்வாறு குர் ஆனில் எங்குமே கூறப்படவில்லை.
குர் ஆன் அயலவர்களுக்கும் அந்நிய மக்களுக்கும் உதவி செய்யுமாறு பணிக்கிறது. குரான் யாருக்கும் துரோகம் செய்ய வேண்டாம், அநியாயம் செய்ய வேண்டாம் என்றே கூறுகிறது. முஸ்லிம்கள் சாப்பாட்டில் சூனியம் செய்து கொடுப்பதாக கூட கூறுகிறார்கள் இது எல்லாம் அப்பட்டமான பொய்.
கே:- வில்பத்து வனப்பகுதியில் நீங்கள் முஸ்லிம் அராபிய கொலனி அமைப்பதாக பொது பல சேனாவினர் குற்றம் சுமத்துகின்றனரே?
ப:– 22 ஆயிரம் எக்டேர் வில்பத்து காணிகளை அழித்து அதில் முஸ்லிம் அராபிய கொலனி ஒன்றை அமைப்பதாக கூறுகிறார்கள். இவ்வாறு எல்லாம் பொய்களை மக்கள் மத்தியில் பரப்பினார்கள்.
அகவேதான், சட்ட ரீதியாக நீங்கள் சொல்வது எல்லாம் பொய், நீங்கள் சொல்வதை நிரூபித்து காட்டுங்கள் இல்லையென்றால் 500 மில்லியன் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடருவேன் என ஊடகங்கள் மூலம் அறிவித்தேன். அதற்கு அவர்கள் இன்னும் பதில் அளிக்கவில்லை. அண்மையில் அவர்களுக்கு எதிராக வழக்கு தொடரவுள்ளேன்.
கே:- உண்மையில் பொது பல சேனாவினர் உங்கள் அமைச்சகத்தை முற்றுகையிட்டதற்கு காரணம் என்ன?
ப:- நான் அரச அமைச்சராக இருந்தும் கூட அவர்களுக்கு எதிராக தொடர்து பேசி வருவதால் என்னை அடக்கி, ஒடுக்கி, என் குரல் வலையை நசுக்கும் எதிர்பார்ப்புடன்தான் அன்று அவர்கள் அடாவடி தனத்துடன் அமைச்சுக்குள் நுழைந்தார்கள்.
அவர்கள் நுழைந்த தகவல் தெரிந்தவுடன் உடனடியாக நான் அமைச்சுக்கு வந்தேன். அப்போது அவர்கள் என்னை சந்திக்க வேண்டும் என்று கூறினார்கள். என்னை வந்து ஒரு சாதாரண மனிதன் சந்திக்கலாம். ஆனால், அடாவடியுடனும், சண்டியன்போலும் வந்து என்னை எவரும் சந்திக்க நான் அனுமதிக்க மாட்டேன். இதை நான் ஒட்டு மொத்த இலங்கை மக்கள் சார்பாக கண்டிக்கிறேன்..
கே:- இது சம்பந்தமாக இன்னும் யாரும் கைது செய்யப்பட வில்லையே?
ப: இது சம்பந்தமாக எனது அதிகாரிகள் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்கள். சட்ட நடவடிக்கை எடுக்க சொல்லி பொலிஸாரையும் கேட்டுக் கொண்டுள்ளோம். நான் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் இது எனது சிறப்புரிமையை மீறுவதாகும் இது சம்பந்தமாக மட்டும் அல்ல, கிராண்பாஸ் பள்ளிவாசல் தாக்குதல் சம்பந்தமாககூட யாரும் இன்னும் கைது செய்யப்படவில்லை என்பதும் கவலைக்குரிய விடயம்.
பொலிஸாரின் நிலைப்பாடு கூட ஒரு மந்தமான நிலையிலேயே காணப்படுகின்றன. இவ்வாறன தாமதங்கள் அவ்வாறான அடிப்படை வாத அமைப்புகள் எவ்வளவு ஆட்டம் போட்டாலும் யாருக்கும் ஒன்றும் செய்ய முடியாது என்ற அர்த்தத்தையே காட்டுவதாக அமைகிறது.
கே:- பொது பலசேனாவின் எதிர்பார்ப்பு என்ன?
ப:- குறிப்பாக பொது பலசேனா எதிர்பார்ப்பது; நாட்டில் உள்ள சிறுபான்மை மக்களை அடக்க அனைத்து பெளதர்களும் உத்தியோகபூர்வமற்ற பொலிசாராக மாற வேண்டும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பு. இவ்வாறானதொரு ஜனநாயக நாட்டில் பூர்வமற்ற பொலிசாராக யாரும் இருக்க முடியாது.
கே:- ஆட்டை கடித்து மாட்டை கடித்து இப்போது ஒரு முஸ்லிம் அமைச்சரின் அமைச்சுக்குள் புகுந்தே அடாவடித்தனமாக நடந்து கொண்டு விட்டார்களே?
ப:- இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். இதை ஒட்டு மொத்த முஸ்லிம் மக்களும் எதிர்கின்றனர். இது சம்பந்தமாக நான் பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதியையும் தொடர்பு கொண்டுள்ளேன். எனது அதிகாரிகளும் இதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க செயற்படுகின்றனர்.
இது பொது பலசேனாவின் அடவடித்தனத்தின் அதி உச்சத்தைக் காட்டுகிறது. பொது பல சேனா, ஓர் அமைச்சரவை அமைச்சரின் அமைச்சுகுள்ளேயே இவ்வாறு செய்கிறது என்றால் சாதனா மக்கள் இந்த நாட்டில் அச்ச நிலையுடனேயே இருக்க வேண்டும் என்ற கேள்வியும் எழுகிறது.
கே:- பொது பலசேனா அரச அனுசரணை பெற்றது என்று ஒரு கருத்து நிலவுகிறதே?
ப:- அந்த கருத்து பரவலாக காணப்பட்டாலும் அண்மைக்காலமாக ஜனாதிபதிக்கும் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கும் எதிரான கருத்துக்களை கூட பொது பலசேனா கூறிவருகிறது.
தாங்கள் நினைத்தால் ஆட்சியையே மாற்றுவோம் என்று அண்மையில் இந்த அமைப்பு சவால் விட்டுள்ளது. பெளத்த மக்களின் ஆதரவின்றி ஜனாதிபதியால் மீண்டும் தேர்தலில் வெல்ல முடியுமா? என இவர்கள் ஜனாதிபதிக்கே சவால் விடும் நிலைக்குச் சென்றுள்ளனர்.
அதேபோல் முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்துக்கு உதவியுள்ளதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக் ஷவுக்கு எதிராகவும் கருத்து வெளியிட்டுள்ளனர். எதிர்காலத்தில் இவர்கள் அரசாங்கத்துக்கு எதிராகவும் செயல்படுவார்கள்.
கே:- பொது பல சேனாவை பௌத்த மக்கள் ஆதரிக்கின்றனரா?
ப:- இல்லை, இல்லை, நிச்சயமாக இல்லை. அண்மையில் இவர்கள் பெளத்த பிக்கு ஒருவரை தாக்குவதற்கு ஓட ஓட துரத்திச் சென்றனர் . இன்னொருவர் அதே பெளத்த பிக்குக்கு ஐ பாட்டால் தாக்குதல் நடத்திய சம்பவமொன்றும் இடம் பெற்றுள்ளது.
சிறுபான்மையை அடக்கி ஒடுக்க நினைக்கும் பொது பல சேனா இன்று அவர்களின் இனத்துடன் மோதும் நிலைப்பாடும் உருவாகியுள்ளது. பொது பல சேனா ஓர் பொய்யான இயக்கம், அவர்களிடம் ஓர் உண்மையும் கிடையாது. இதை இந்நாட்டு அனைத்து மக்களும் நன்கு அறிந்து கொண்டுள்ளனர்.
கே:- பொது பலசேனாவினர் நடவடிக்கைகள் எவ்வாறு அமைந்துள்ளது?
ப:- தமிழீழ விடுதலைப் புலிகளை விடவும் மோசமான ஒரு நிலைமையை இந்த நாட்டில் கொண்டு வர பொதுபல சேனா அமைப்பினர் முயற்சிக்கின்றனர்.
அவ்வாறே அவர்களின் நடவடிக்கைகள் அமைந்துள்ளது. கடந்த முப்பது வருட கால யுத்தத்தின் பின்னர் நிம்மதியான சூழ்நிலை ஏற்படுமென்றும், அச்சமின்றி தொழில் செய்யலாம், பிள்ளைகளுக்கு கல்வி புகட்டலாம் என்றும் மக்கள் நம்பியிருந்த வேளையில் நாட்டில் மிகவும் மோசமான நிலையை பொதுபல சேனா அமைப்பு உருவாக்கியுள்ளது.
கே:- தற்போது நாட்டில் எவ்வாறானதொரு சூழ்நிலை காணப்படுகின்றது?
ப:- தொட்டது பிடித்தற்கு எல்லாம் முஸ்லிம்களை வம்புக்கு இழுத்து; முஸ்லிம்களின் உணவு, உடை, கல்வி, மார்க்கம், குர் ஆன் மற்றும் இறைவன் என அனைத்தையும் கேவலமாக பேசுகின்றனர்.
இது அனைத்தையும் ஒட்டு மொத்த முஸ்லிம்களின் சார்பாக வன்மையாக கண்டிக்கிறன். இந்த நாட்டில் வாழும் 20,000 முஸ்லிம்கள் வெறுப்புடன் வாழும் ஒரு சூழ்நிலையையே பொது பலசேனா அமைப்பு உருவாக்கியுள்ளது.
சிறுபான்மையினரின் அடையாளங்களையும் மதங்களையும் அழிப்பதுடன் சிறுபான்மையினருக்கு இந்த நாடு சொந்தமில்லை. இது ஒரு பெளத்த நாடு என்று தெரிவித்து வந்த பொதுபல சேனா அமைப்பினர் இப்பொழுது அவர்களது இனத்துடனேயே மோதுகின்ற நிலை உருவாகியுள்ளது.
கே:- முஸ்லிம் என்ற ரீதியில் பொது பலசேனாவினருக்கு என்ன சொல்ல நினைக்கிறீர்கள்?
ப:- பொது பலசேனா அமைப்பும் அதன் பொதுச் செயலாளர் ஞானசார தேரரும். ஒரு தேரரைப்பார்த்து மொஹம்மத் வட்டாரக விஜித என கூறுகின்றனர். எமது இறுதி தூதரான எங்களது உத்தம தூதர் முஹம்மத் நபியின் பெயரை ஒரு பௌத்த தேரரின் பெயருடன் இணைத்து கூற அந்த ஞானசார தேரருக்கும் அந்த அடிப்படை வாத இயக்கமான பொது பலசேனாவுக்கும் எவ்வித அதிகாரமும் கிடையாது.
ஞானசார நினைக்கிறாரா அவர் நினைத்ததெல்லாம் பேசலாம் என்று? முஸ்லிம்களின் புனித வேதமான குர் ஆன் மீதும், எமது நபியின் பெயரை வைத்து பௌத்த தேரர்களுடன் இணைத்து கேவலப்படுத்துவதையும் இத்துடன் நிறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.
கே:- பொது பலசேனாவுக்கும் எதிரான உங்களது நடவடிக்கைகள் என்ன?
ப:- பொது பல சேனாவுக்கும் அந்தந பொதுச்செயலாளர் ஞானசார தேரருக்கும் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்து இவர்களின் ஆட்டங்களை முடிவுக்கு கொண்டு வருவோம்.
மரிச்சிகட்டில் ,இந்த ஞானசார தேரர் மக்களுக்கு தேவயில்லாத வார்த்தைகளை பாவித்துள்ளார். ஆகவே, அவர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். இப்போது அவர் மன்னார் நீதி மன்றத்துக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த ஜனநாயக நாட்டு மக்களிகம் கேட்டுக் கொள்கிறேன்.
இந்த அடிப்படை வாத இயக்கத்தின் நாசகார செயற்பாடுகளுக்கு எதிராக யாருக்கும் பொலிஸில் முறைப்பாடு செய்யலாம். எந்த மகளும் இவருக்கு அச்சபட தேவையில்லை. அவ்வாறு யாருக்காவது ஏதாவது பிரச்சினை இருந்தால் அவர்களுக்கு நாம் உதவி செய்ய தயாராக இருக்கிறோம்.
யாரும் யாருக்கும் பயப்பட தேவையில்லை, இது எங்கள் நாடு ஞானசார தேரர் சொல்வது போல இலங்கை பௌத்தர்களுக்கு மட்டும் உரியது அல்ல. மாறாக பௌத்த, முஸ்லிம், இந்து மற்றும் கிறிஸ்தவர்களுக்கும் இந்த நாடு உரியது. இந்த நாட்டில் நாம் அனைவருக்கும் சுதந்திரமாக வாழும் உரிமை இருக்கிறது.
கே:- பல சேனாவினர் இடைவிடாமல் உங்களுக்கெதிராக கருத்துக்களையும் நடவடிக்கைகளையும் மேற்கொள்கின்றனரே?
ப:- அவர்களை செய்வதை செய்யட்டும், மக்கள் என்னுடன் இருக்கிறார்கள். அல்லா என்னுடன் இருக்கிறான். எனது அமைச்சுகல்ல அவர்கள் எங்கு வந்தாலும் முஸ்லிம்களுக்கான எனது உரிமைக்குரலை அந்த அடிப்படை வாத இயக்கத்தினால் தடுத்து நிறுத்த முடியாது.
இவர்களை அடக்க என் அமைச்சர் பதவிதான் தடையாக இருக்கு மென்றால் இந்த அமைச்சர் பதவியே எனக்குத்தேவையில்லை. அஞ்சுவதும் அடிபணிவதும் அல்லாஹ்வுக்கு மாத்திரமே பொது பலசேனாவுக்கு அல்ல
கே:- வடமாகாணத்தில் மக்களின் மீள் குடியேற்றத்துக்கு தடையாக இருப்பது என்ன ?
ப:- வடமாகாணத்தில் 3 இலட்சம் தமிழ் மக்கள் மேனிக் பாமுக்கு அகதிகளாக வரும் பொது அமைச்சராக இருந்தவன் நான். அப்போது நாம் அவர்களுக்கு சலுகை அடிப்படையில் 50 ஆயிரம் பணம், 12 தகரம், சீமெந்தி மற்றும் வாழ்வாதார பொருட்கள் அனைத்தும் ஏற்படுத்தி கொடுத்தோம். மேலும் பல NGO க்களின் உதவிகளையும் ஏற்படுத்தினோம். அப்போது அவர்கள் அவரவர் சொந்த காணிகளுக்கு சென்றனர்.
முஸ்லிம்கள் அவர்களின் சொந்த காணிகளுக்கு 22 வருடங்களுக்கு பின் காட்சி போல் காட்சி யளித்தது. அதன் பின் அது சம்பந்தமாக உரிய அதிகாரிகளின் கவனத்து கொண்டு வந்து அவர்களின் அனுமதி பெற்ற பின் ஒரு சில பிரச்சனைகள் வந்தது.
யாழ்பாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்துக்கு ஜனாதி பதியையும், வடமாகாண முதலமைச்சரையும் வேண்டிக்கொள்கிறேன். இது சம்பந்தமாக எனது பூரண ஒத்துழைப்பை வழங்குவேன் என் அவர்களுக்கு உறுதி பூண்டுகிறேன். கிளிநொச்சியில் மக்கள் செல்கின்றனர் மற்றும் முல்லைத்தீவு 10 கிராமங்களில் மக்கள் வாழ்துந்துள்ளனர்.
வவுனியாவில் ஓரளவு பிரச்சினைகள் குறைவு இடம் பெறுகின்றன. மன்னாரில் தான் ஒரு பாரிய பிரச்சனையாக காணப்படுகின்றன.
மன்னாரில் 15 ஆயிரம் குடிம்பங்கள் பிரச்சினையில் உள்ளன. மரிச்சி கட்டி மக்களின் 300 ஏக்கர் காணியும், முள்ளி குளம் மக்களின் 400 ஏக்கர் காணியும் முள்ளிகுள படையினரால் சுவீகரிக்கப் பட்டுள்ளது. 70 – 75 குடும்பங்கள் பிரச்சினையில் இருந்தால் மாற்று காணிகளை AGA மூலம் கொடுக்க ஏற்பாடு செய்தோம். அனால் அதைகூட படையினர் தடுத்து விட்டனர்.
இதனால் நான் அரச அதிபரிடம் இன்னும் இரண்டு வாரங்களுக்குள் படையினருடன் கடித்து அதே காணியை அவர்களுக்கு எடுத்து கொடுக்கும் படியாக அறிவுறுத்தியுள்ளேன்.
நான் அது சம்பந்தமான அமைச்சராக இருக்கும் போது இருந்த சலுகைகள் அம்மக்களுக்கு இப்போது இல்லைஸ இது சம்பந்தமாக இப்போதும் நான் அடிக்கடி அமைச்சரவையில் குரல் கொடுக்கிறேன்.
கே:- மரிச்சி கட்டி பிரச்சனை சம்பந்தமாக சம்பிக்க ரணவக மற்றும் விமல் வீரவன்ச ஆகியோர் உங்கள் மீது குற்றம் சுமத்துகின்றனரே?
ப:- அவர்கள் அவ்வாறு கேட்டிருந்தால் அது அவர்கள் மீது பிழை, என் மீது அவர்கள் குற்றம் சுமத்த முன் அவர்கள் அதை நிரூபிக்க வேண்டும். குறைந்த பட்சம் இது சம்பந்தமாக என்னை தொடர்பு கொண்டிருக்கவாவது வேண்டும். அது சம்பந்தாக அமைச்சரவையில் விளக்கமளிப்பேன். பொது பல சேனாவின் குற்றச்சாட்டுகளுக்கும் எதிராக கண்டிப்பாக நாடாளுமன்றத்தில் கதைப்பேன்.
கே:- இறுதியாக மக்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
ப:- நான் சில நேரங்களில் தமிழ் விரோதியாக காட்டபடுகின்றவன். அனால், அவ்வாறு தமிழ் மக்களுக்கு விரோத மாணவன் அல்ல. எல்லா நேரங்களிலும் எல்லா இடங்களிலும் தமிழ் மக்களுக்காக நான் கதைத்துள்ளேன். அதே போல நான் முஸ்லிம்களுக்காக உயிரையும் அர்பணிப்பேன். அஞ்சுவதும் அடிபணிவதும் அல்லாஹ்வுக்கு மாத்திரமே பொது பலசேனாவுக்கு அல்ல – என்று அவர் கூறினார்.