ilakkiyainfo

சிறிலங்கா அரசின் புலம்பெயர் அமைப்புகள் மீதான தடையும் புலிமுக அரசியலும் – யதீந்திரா

சிறிலங்கா அரசாங்கம் அவ்வப்போது மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளால் அரசாங்கம் எத்தகைய நன்மைகளை அடைந்தது அல்லது அடைய முற்படுகின்றது என்பதை ஊகிப்பது கடினமானாலும்,  அரசாங்கத்தின் ஒவ்வொரு நடவடிக்கையும் சோர்வடைந்து கொண்டிருக்கும் தீவிர தமிழ் அரசியல் தரப்பினருக்கு, உற்சாக மருந்தூட்டுவதாக அமைந்துவிடுகிறது என்பது மட்டும் உண்மை.

ஜெனிவா விவாதங்கள் சூடு தணியத் தொடங்கிக்கொண்டிருந்த வேளையில், மீண்டும் புலம்பெயர் அமைப்புக்கள் மீதான தடை பிறிதொரு விவாதக் களத்தை திறந்து வைத்திருக்கிறது.

புலம்பெயர் அமைப்புக்கள் மீதான தடை ஜனநாயக விரோதமானது என்னும் நோக்கில் சிலர் விவாதிக்க, வேறு சிலரோ, அரசாங்கம் ஜெனிவாவில் தோல்வியடைந்ததற்கு பதிலடியாகவே இவ்வாறானதொரு நடவடிக்கையில் இறங்கியிருப்பதாக கூறுகின்றனர்.

ஆனால் சாதாரண மக்கள் மத்தியில் இந்த விடயம் பெரிய அதிர்வலைகள் எதனையும் ஏற்படுத்தியிருக்கவில்லை.

தற்போது அரசாங்கத்தால் பயங்கரவாதத்துடன் தொடர்பானவர்கள் என்னும் தரப்படுத்தலின் கீழ் தடை செய்யப்பட்டிருக்கும் 16 அமைப்புக்களில், உலகத் தமிழர் பேரவை, பிரித்தானிய தமிழர் பேரவை, கனடிய தமிழ் காங்கிரஸ், நாடுகடந்த தமிழீழ அரசு போன்ற ஒரு சில அமைப்புக்களைத் தவிர ஏனைய அமைப்புக்கள் குறித்து [இலங்கைக்குள்ளிருந்து வெளிவரும்] தமிழ் ஊடகச் சூழலில் கூட எவரும் அலட்டிக்கொண்டதாக சான்றில்லை.

மேற்குறிப்பிட்ட அமைப்புக்கள் எவையும், இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதியில் பூர்வீகமாக வாழ்ந்துவரும் தமிழ் மக்களுக்கு, ஒரு நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும் என்பதில் அக்கறையுடைவர்களாக, தங்களை நிரூபித்திருக்கவும் இல்லை.

மாறாக அழிவுற்ற தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தொடர்ச்சியாக அல்லது அதன் நிழல் அமைப்பாகவே தங்களை காண்பித்துக் கொண்டனர். காண்பித்துக் கொள்கின்றனர். பிரபாகரனின் அரசியல் இலக்கே தங்களுடைய அரசியல் இலக்கென்றும் சூழுரைக்கின்றனர்.

ஜக்கிய இலங்கைக்குள் அதிகாரப் பகிர்வு குறித்து இவர்கள் ஒரு போதும் வாய்திறந்ததேயில்லை. ஆரம்பத்தில் விடுதலைப் புலிகளின் அழிவு குறித்து பல பொய்யான தகவல்களை புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியில் பரப்பிக்கொண்டிருந்த மேற்படி அமைப்பின் உறுப்பினர்கள் ஆண்டுகள் நகர, நகர மெதுவாக தங்கள் பொய்யுரைத்தலிருந்து, தாங்களாவே விலகிக் கொண்டனர். ஆனாலும் புலிக் கொடியை தொடர்ந்தும் இறுகப் பற்றிக் கொண்டனர்.

இந்த பின்னணியை அடிப்படையாகக் கொண்டே, அரசாங்கம் ஜக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புப் பேரவையினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பயங்கரவாத அமைப்புக்களை தடுப்பதற்கான உலகளாவிய ஒத்துழைப்பிற்கான ஏற்பாடான, பிரேரணை 1376ம் பிரிவின் கீழ் மேற்படி 16 அமைப்புக்களை தடசெய்திருக்கிறது.

இவ்வாறான விடயங்களை முன்னுணர்ந்த சில ஆய்வாளர்களும், ஊடகவியலாளர்களும் புலிவாதத்தை கைவிடுமாறும், அதனை கைக்கொள்வதன் மூலம் தமிழ் மக்களுக்கு எந்தவொரு நன்மையையும் செய்ய முடியாதென்றும், கடந்த நான்கு ஆண்டுகளாக வாதிட்டு வந்திருக்கின்றனர்.

ஆனால் அவ்வாறு யதார்த்தத்தை உணர்ந்து செயற்படுமாறு வலியுறுத்தியவர்கள் அனைவரும் துரோகிகளென்றும் அரசாங்கத்தின் ஆட்களென்றும் எள்ளிநகையாடப்பட்டனர். ஆனால் அவ்வாறானவர்கள் முன்னுணர்ந்ததே இன்று நடைபெற்றிருக்கின்றது.

ஜெனிவா விவகாரத்திற்கு பதிலடியாகவே அரசாங்கம் இத்தகையதொரு முடிவை எடுத்ததாக சிலர் வாதிடுவதில் ஓரளவு உண்மையிருப்பினும் கூட, அது முழு உண்மையாக இருக்க வாய்ப்பில்லை.

அரசாங்கம் மீண்டும் புலிகளுக்கு புத்துயிரளிக்கும் முயற்சியில் மேற்படி புலம்பெயர் அமைப்புக்கள் ஈடுபட்டுவருவதாக குற்றம்சாட்டியிருக்கிறது. இத்தகை சூழலில்தான் மேற்படி அமைப்புக்களை இலங்கைக்குள் தடை செய்யும் முடிவை அறிவித்திருக்கின்றது.

untitled3ஜெனிவாவில் ஒரு பிரேரணையை எதிர்கொண்டிருக்கும் சூழலிலேயே தர்மபுரத்தில் ஒருவர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

இதனைத் தொடர்ந்து வடக்கு கிழக்கில் மட்டுமல்ல கொழும்பிலும் கூட சிலரை அடையாளம் காட்டுமாறு, மக்களின் ஒத்துழைப்புக்கள் கோரப்பட்டிருந்தன. அரசாங்கத்தை விமர்சிப்போர் இவை அனைத்தும் அரசாங்கத்தின் திட்டமிட்ட சோடிப்புக்கள் என்று கூறி, ஒரே வரியில் அனைத்தையும் நிராகரிக்கின்றனர்.

ஜெனிவாவில் அரசாங்கம் ஒரு பிரேரணையை எதிர்கொண்டிருக்கின்ற சூழலில் இது போன்றதொரு சோடிப்பை செய்வதன் மூலம் அரசாங்கம் நன்மைகளை பெற முடியுமா?

யுத்த வெற்றியை மூலதனமாக்கிருக்கும் அரசாங்கம், தனது வெற்றியை தானே நீர்த்துப்போகச் செய்யும் வகையில் செயற்படுமா? இப்படியும் சிலர் கேள்விகளை தொடுக்கின்றனர்.

ஆனால் இந்தத் தடையின் மூலம் புலம்பெயர் அமைப்புக்களின் செயற்பாடுகளுக்கு பெரியளவில் தடைகள் ஏற்படப் போவதில்லை. ஏனெனில் தற்போது தடைசெய்யப்பட்டிருக்கும் ஒரு சில அமைப்புக்களை தவிர பெரும்பாலான அமைப்புக்கள் அனைத்தும் குறித்த நாடுகளில் சட்ட பூர்வமாகவே இயங்கிவருகின்றன.

தவிர, குறித்த நாடுகளின் ஆளும் பிரிவினருடனும் தொடர்புகளை பேணி வருகின்றன. அந்த நாடுகளின் குறிப்பேடுகளில், குறித்த அமைப்புக்கள் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்கான சான்றுகளும் இல்லை. எனவே இந்த பின்னணியில், அரசாங்கத்தின் தடையின் மூலம் ஜரோப்பிய நாடுகளில் இயங்கும் புலம்பெயர் அமைப்புக்களின் செயற்பாடுகளை தடுத்து நிறுத்திவிட முடியாது.

ஆனால் பிறிதொரு நெருக்கடியை கொடுக்கலாம். ஜரோப்பாவிற்கு வெளியில், குறித்த அமைப்புக்களை பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் பயணம் செய்யும் போது, அந்த நாடுகளுக்கும் இலங்கை பாதுகாப்புப் பிரிவிற்கும் இடையில் இருக்கும் தொடர்புகளைக் கொண்டு, இலங்கை அரசு விரும்பும் பட்சத்தில், அவர்களை கைது செய்து இலங்கைக்கு கொண்டுவர முடியும்.

முன்னர் அவ்வாறானதொரு பாதுகாப்பு ஒத்துழைப்பின் போரிலேயே, விடுதலைப் புலிகளின் ஆயுதக் கொள்வனவாளர் கே.பி மலேசியாவில் வைத்து கைதுசெய்யப்பட்டு, இலங்கைக்கு கொண்டுவரப்பட்டிருந்தார்.

எனவே இந்தப் பின்னணியில் குறித்த தடையின் கனதியை நோக்கினால், தற்போது பட்டியலிடப்பட்ட புலம்பெயர் அமைப்புக்களின் உறுப்பினர்கள் முன்னரைப் போன்று சுதந்திரமாக உலகமெல்லாம் சுற்றித்திரிய முடியாமல் போகும்.

உதாரணமாக புலம்பெயர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் கிழக்காசிய நாடுகளுக்குள் நுழையுமிடத்து, அந்நாட்டின் புலனாய்வுத் துறையின் ஒத்துழைப்புடன், அவர்களை கைது செய்யக் கூடிய வாய்ப்பை தற்போதைய தடை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.

வெளி நிலைமைகள் இவ்வாறென்றால், உள்ளக நிலைமைகளில் அரசாங்கம் மேலும் சில இறுக்கங்களை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பும், இத்தடை மூலம் உருவாகியிருக்கிறது.

விடுதலைப் புலிகளின் அழிவின் பின்னரான, கடந்த நான்கு ஆண்டு கால தமிழர் அரசியலை உற்று நோக்கினால், ஒரு விடயம் வெள்ளிடைமலையாகும். பெரும்பான்மையான  தமிழ் மக்களின் ஆதரவை பெற்றிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சரி, கூட்டமைப்பின்  எதிரணியாக செயற்பட்டுவரும் கஜேந்திர குமார் அணியினரும் சரி, புலம்பெயர் அமைப்புக்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணி வருகின்றனர்.

குறிப்பாக கஜேந்திர குமார் அணியினர் புலம்பெயர் அமைப்புக்களுடன் கூடுதல் நெருக்கத்தை கொண்டிருக்கின்றனர். இதற்கு அவர்கள் முன்னிறுத்திவரும் அரசியல் நிலைப்பாடும் ஒரு காரணமாகும்.

கஜன் அணியினர், ஒப்பீட்டளவில் கூட்டமைப்பை விடவும் கவர்ச்சிகரமான அரசியல் முழக்கத்தை கொண்டிருப்பதும், புலிகளை எட்டிப்பிடித்துவிடும் தூரத்தில் உள்ளவர்களாக தங்களை காண்பித்துவருவதுமே, மேற்படி கூடுதல் நெருக்கத்திற்கு காரணமாகும்.

எனவே தற்போது நடைமுறைக்கு வந்திருக்கும் தடையின் மூலம் கூட்டமைப்பின் மீதும், கஜேந்திரகுமார் அணியினர் மீதும், அரசாங்கம் சில கட்டுப்பாடுகளை விதிக்க முடியும்.

கூட்டமைப்பை பொருத்தவரையில், அதனை வழிநடத்திச் செல்லும் இரா.சம்பந்தன் புலிகளின் ஆதரவாளராக இல்லாது விட்டாலும் கூட, கூட்டமைப்பில் உள்ள ஒரு சிலர் தங்களை புலிமுக அரசியலுக்குரிவர்களாகவே காண்பித்து வருகின்றனர்.

அவ்வாறானவர்கள் மீது இத்தடை நிச்சயம் பாயும். மேலும் கூட்டமைப்பின் தலைவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும் போது, குறித்த அமைப்புக்களுடன் தொடர்புகளை பேணுகின்றனர்.

இறுதியான ஜெனிவா நிகழ்வின் போதும், சுமந்திரன் கனடிய தமிழ் காங்கிரசை சேர்ந்த ஹரி சங்கரி மற்றும் உலகத் தமிழர் பேரவையைச் சேர்ந்த சுரேன் சுரேந்திரன் ஆகியோருடன் இணைந்தே, இலங்கையின் மீதான அமெரிக்க பிரேணைக்கு ஆதரவு திரட்டும் பரப்புரைகளில் ஈடுபட்டிருந்தார். அதே வேளை தேர்தல்களின் போது, சில புலம்பெயர் அமைப்புக்கள் கூட்டமைப்பிற்கும், கஜேந்திர குமார் பொன்னம்பலம் தரப்பினருக்கும் நிதி சேகரிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போதும், கனடிய தமிழ் காங்கிரஸ் பெருந்தொகையான நிதியை கூட்டமைப்பிற்கு வழங்கியிருந்தது. இதே போன்று வடக்கு மாகாணசபை தேர்தலின் போதும் கூட்டமைப்பின் தலைவர்கள் புலம்பெயர் நாடுகளில் நேரடியாகவே நிதி சேகரிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

ஆனால் தற்போதைய தடை, இவ்வாறான நடவடிக்கைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்திருக்கிறது எனலாம். இத் தடையை மீறி கூட்டமைப்போ அல்லது கஜேந்திர குமார் அணியினரோ, புலம்பெயர் அமைப்புக்களுடன் தொடர்புகளை பேண முற்படுவார்களாயின், அவர்கள் மீது அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்க முடியும்.

மொத்தத்தில் புலம்பெயர் அமைப்புக்கள் மீதான தடையானது, வெளிநாடுகளிலும், இலங்கைக்குள்ளும் சில தாக்கங்களை ஏற்படுத்தவல்லது என்பதை மறுப்பதற்கில்லை.

ஆனால் தமிழ் அரசியல் தரப்பினர் தங்களுக்குள் கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி, இதிலிருந்து நாங்கள் எதை கற்றுக்கொள்ளப் போகின்றோம். தொடர்ந்தும் புலிமுக அரசியலை காவிக் கொண்டிருப்பதையா அல்லது அதிலிருந்து விடுபட்டு முற்றிலும் புதியதொரு உபாயத்தை கைக்கொள்வதையா?

-யதீந்திரா –

Exit mobile version