Site icon ilakkiyainfo

நள்ளிரவில் இரகசியமாக கேக் உண்பதை வழக்கமாக கொண்டிருந்த சர்வாதிகாரி ஹிட்லர்

 

 ஜேர்மனிய சர்வாதிகாரி ஹிட்லர் தினசரி நள்ளிரவு வேளையில் இரகசியமாக கேக் மற்றும் ஏனைய இனிப்பான தின்பண்டங்களை உண்ணும் வழக்கத்தைக் கொண்டிருந்ததாக அவரது முன்னாள் பணிப்பெண் தெரிவித்துள்ளார்.

ஹிட்லரின் பவேரியாவிலுள்ள தனது மலைப்பிராந்திய வாசஸ்தலத்தில் பணிப்பெண்ணாக பணியாற்றிய எலிஸபெத் கல்ஹம்மர் (89 வயது) என்ற மேற்படி பணிப்பெண் 71 வருடங்களுக்கு பின் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

மண்ணீரல் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்த ஹிட்லர் கடுமையான உணவுக்கட்டுப்பாட்டை பின்பற்றி வந்ததாக அனைவரும் நம்பிக்கொண்டிருந்த நிலையில் இனிப்பான உணவுகளில் தீவிர நாட்டமுள்ள அவர் இரகசியமாக கேக்குகளையும், சொக்லேட்  பிஸ்கட்டுக்களையும் உண்டு வந்ததாக எலிஸபெத் தெரிவித்தார்.

ஹிட்லர் நள்ளிரவு வேளைக்கும் அதிகாலை 2.00 மணிக்கும் இடையிலான பொழுதில் அனைவரும் உறக்கத்தில் ஆழ்ந்திருக்கும் வேளையில் குறும்புக்கார பாடசாலை சிறுவன் போன்று இனிப்பான தின் பண்டங்களை சுவைத்து உண்பதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார்.

கடலைப்பருப்பு மற்றும் முந்திரி வற்றல் என்பன கலக்கப்பட்ட அப்பிள் கேக் தயாரிக்கப்பட்டு தினசரி ஹிட்லர் உண்பதற்காக தயார் நிலையில் வைக்கப்படுவது வழமையாக இருந்துள்ளது.

அச்சமயம் இளவயதினராக இருந்த எலிஸெபெத் பத்திரிகையில் வெளியான  பணிப்பெண் தேவை விளப்பரத்தைப் பார்த்தே மேற்படி வேலைக்கு விண்ணப்பித்துள்ளார். இதன் போது தனது தொழில் தருனர் ஹிட்லர் என்பதை அறியாதிருந்துள்ளார்.

இந்நிலையில் கடும் பாதுகாப்புக்கு மத்தியிலிருந்த ஹிட்லரின் வாசஸ்தலத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட பின்னரே தான் ஹிட்லருக்காக  பணியாற்ற வந்துள்ளதை எலிஸபெத் அறிந்துள்ளார்.

இதன் போது ஹிட்லர் தொடர்பான விபரங்களை எவராவது வெளிப்படுத்தினால் கடும் தண்டனைக்குள்ளாக நேரிடும் என  எலிஸபெத்துக்கு எச்சரிக்கப்பட்டிருந்தது.

அச்சமயம் ஹிட்லருக்காக பணியாற்றிய 22 யுவதிகளில் எலிஸபெத்தும் ஒருவராக இருந்தார்.

அவர் சலவை மற்றும் தையல் வேலைகள் சுத்திகரிப்பு ஹிட்லருக்காக தேநீர் தயாரித்தல் என்பவற்றை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்டிருந்தார்.

எலிஸெபெத் 1943 ஆம் ஆண்டிலிருந்து 1945 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஹிட்லருக்காக பணியாற்றியிருந்தார்.

Exit mobile version