Site icon ilakkiyainfo

தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் சுயநல நாடகங்கள் அரங்கேறுகின்றன: விக்னேஸ்வரன்

இலங்கையின் வடமாகாண முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன் மேதின கூட்டத்தில் ஆற்றிய உரையில், தமிழ்த்தேசிய கூட்டமைப்பிற்குள் இருக்கும் கட்சிகள்  சுயநலத்துடன் செயற்படுவதாகவும், அதனால், தமிழர்களின் பொது நன்மைகள் பின்னுக்குத்தள்ளப்படுவதாகவும் கவலை வெளியிட்டிருக்கிறார்.

தமிழர்களுக்கு இடையிலான ஒற்றுமையின்மையே அவர்களின் தோல்விக்கு முக்கிய காரணம் என்று தெரிவித்த அவர், உலகு தழுவிய அளவில் தொழிலாளர்களின் இன்றைய உரிமைகளை சாத்தியமாக்கியது தொழிலாளர்களுக்கு இடையிலான ஒற்றுமையே என்றும், அத்தகைய ஒற்றுமையையே தற்போது  தமிழர்களும் தமது   அரசியல் செயற்பாடுகளில்  கடைபிடிக்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

இலங்கைப் போரில் நடந்த பாரிய மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஜெனீவா தீர்மானத்தை அடுத்து உலகநாடுகளின் கவனம் ஈழத்தமிழர் பட்ட இன்னல்கள் தொடர்பில் குவிந்திருக்கும் இன்றைய சூழலில் இலங்கை அரசு நிகழ்த்திய பாரிய மனித உரிமைகள் தொடர்பான ஆதாரங்களை ஆவணமாக்கி ஐநாமன்றத்திடம் கையளிக்க வேண்டிய முறையில் கையளிக்கவேண்டிய பாரிய பணி இலங்கை தமிழர்களின் முன் இருப்பதாகவும் தெரிவித்தார் விக்னேஸ்வரன்.

இலங்கை தொடர்பான சர்வதேச விசாரணையில் தமிழர் தரப்பு கடைபிடிக்கவேண்டிய அணுகுமுறைகள் குறித்தும் அவர் தமது பேச்சில் விரிவாக விளக்கினார்.

“கேட்பாரின்றி அதிகாரம் செலுத்திய பிரபாகரன்”

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது ஆட்சி நிரந்தரமானது என்கிற இறுமாப்புடன் செயற்பட்டுவருவதாக குற்றம் சாட்டிய சி வி விக்னேஸ்வரன், ஒருகாலத்தில் கேட்பாரின்றி அதிகாரத்தில் இருந்த பிரபாகரனைப் பற்றி நன்கு அறிந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே தற்போதைய தனது அதிகாரம் நிலையானது என்கிற இறுமாப்பில் வடபகுதியில் நிலைகொண்டிருக்கும் இலங்கை இராணுவத்தை திரும்பப்பெற மாட்டேன் என்று கூறுவதைக்கண்டு தான் பரிதாபப்படுவதாகவும் தெரிவித்தார்.

இந்திய அமைதிகாப்புப்படை இலங்கையில் நிலைகொண்டிருந்த சமயத்தில் இந்திய படைகள் இலங்கையில் இருந்து அடுத்த 100 ஆண்டுகளுக்கு வெளியேறாது என்று இந்திய படை அதிகாரி ஒருவர் முன்பொருமுறை பேசியதாக தாம் கேள்விப்பட்டதாக தெரிவித்த விக்னேஸ்வரன், ஆனால் அடுத்த ஆண்டே இந்திய பொதுத்தேர்தலில் காங்கிரஸ் அரசு தோற்று, விபிசிங் தலைமையிலான அரசு அமைந்து இந்தியப் படைகள் இலங்கையிலிருந்து வெளியேற்றப்பட்ட நிகழ்வை நினைவுகூர்ந்தார்.

அதே போல இலங்கை இராணுவம் இலங்கையின் வடபகுதியில் நிலைகொண்டிருப்பதற்கு எந்தவிதமான நியாயமான காரணங்களும் இல்லை என்று தமது பேச்சில் கடும் எதிர்ப்பு தெரிவித்த விக்னேஸ்வரன், தேவைப்பட்டால் சர்வதேச சட்டங்களுக்கு அமைய குறிப்பிட்ட சில இடங்களில் வேண்டுமானால் (இலங்கை) மத்திய அரசின் படைகளை நிலை நிறுத்த தாங்கள் இடமளிக்கலாமே தவிர, ஒரு ஆக்கிரமிப்பு படையாக  இலங்கை  ராணுவம்  தமிழர் பகுதிகளில் இருப்பதற்கு தாம் இடமளிக்கப்போவதில்லை என்றும் எச்சரித்தார்.

 

Exit mobile version