ilakkiyainfo

யாழ். அச்சுவேலி முக்கொலை! நடந்தது இதுதான்! – கொலையாளியின் மனைவியின் வாக்கு மூலம்

யாழ். அச்சுவேலி, கதிரிப்பாய் பிரதேசத்தில் நேற்று அதிகாலை இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலியாகியிருந்தனர். மேலும் இருவர் காயமடைந்திருந்தனர். இச்சம்பவம் குறித்து காயமடைந்து சிகிச்சை பெற்றுவருபவரும், கொலையாளியின் மனைவியுமான தர்மிகா பொலிஸாருக்கு வாக்குமூலம் அளித்துள்ளார்.

விபரம் வருமாறு,

அச்சுவேலி கதிரிப்பாய் பகுதியில் கொலையாளி தனஞ்சயனின் மனைவியின் தாயார் வீடு உள்ளது. இங்குதான் கொலை இடம்பெற்றது.

கொலைச் சந்தேக நபரான தனஞ்சயனுக்கும் அவரது மனைவி தர்மிகாவுக்கு இடையில் ஏற்பட்ட தகராறுகளை அடுத்து இவர்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

வாள்வெட்டில் காயமடைந்த தர்மிகாவும் தனது தாய் வீட்டிலேயே வசித்து வந்தார்.

achuveliமனைவியைப் பிரிந்திருந்த தனஞ்சயன், மனைவியின் சகோதரியான கொல்லப்பட்ட மதுஷா என்பவரைத் தனக்குத் திருமணம் செய்து வைக்குமாறு அவரது குடும்பத்தினரிடம் வலியுறுத்தி வந்துள்ளார். அவர்கள் அதற்கு மறுத்து விட்டனர்.

அத்துடன், தனஞ்சயனுக்குத் தெரியாமல் கிளிநொச்சியில் மதுஷாவுக்கு கடந்த வாரம் திருமணம் செய்து வைத்துள்ளனர். இதனை ஒருவாறு தனஞ்சயன் அறிந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையியே புதிதாக திருமணமாக மதுஷாவும் தனது கணவருடன் சனிக்கிழமை அச்சுவேலியில் உள்ள தனது வீட்டுக்கு வந்துள்ளார். இதனை தனஞ்சயன் அறிந்திருந்தார்.

அன்று இரவு வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது தனஞ்சயன் தனது நண்பர்கள் சிலருடன் ஓட்டோ ஒன்றில் வாளுடன் வந்துள்ளார்.

வீட்டில் வந்து இறங்கியவர் வெறிகொண்டு தூங்கிக் கொண்டிருந்த மனைவியின் குடும்பத்தவர்களை சராமாரியாக வெட்டியுள்ளார்.

சத்தம் கேட்டு எழுந்து வந்த மனைவி மற்றும் மைத்துனரையும் துரத்தித் துரத்தி வெட்டியுள்ளார்.

இவரது வாள்வெட்டுக்கு இலக்காகி படுகாயங்களுடன் கொலைச் சந்தேகநபரின் மனைவி மற்றும் அவரது சகோதரியின் கணவரான புதுமாப்பிள்ளை ஆகியோர் அலறி அடித்துக்கொண்டு வீட்டை விட்டு ஓடி கூச்சலிட்டுள்ளனர்.

இதனையடுத்து அயலவர்கள் திரண்டு வருவதற்குள் வீட்டில் இருந்த அனைவரையும் வெட்டிக் கொன்றுவிட்டு தனஞ்சயன் தப்பிச் சென்றுள்ளார்.

வீட்டிலிருந்தோர் இறந்து விட்டதை உறுதிசெய்த அயலவர்கள், காயமடைந்த கொலையாளியின் மனைவி மற்றும் மைத்துனரை மீட்டு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்தத் தகவல்களை காயமடைந்து வைத்தியசாலையில் உள்ள கொலைச் சந்தேகநபரின் மனைவி பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மூர்க்கத்தனமாக வெட்டியதில் அண்மையில் திருமணமான மனைவியின் சகோதரியின் கை மற்றும் கைவிரல்கள் துண்டாகி ஆங்காங்கே தனித்தனியாக விழுந்து கிடந்த நிலையில் மீட்கப்பட்டன. அவரது கழுத்தின் பின்புறமாக பாரிய வெட்டு விழுந்துள்ளது.

இதேபோன்றே மனைவியின் தாய், சகோதரன் ஆகியோரையும் மூர்க்கத்தனமாக கொலையாளி வெட்டிக் கொன்றுள்ளார்.

சம்பவம் தொடர்பாக அச்சுவேலிப் பொலிஸாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது.  சம்பவ இடத்திற்கு அச்சுவேலிப் பொலிஸாரும், அப்பகுதி இராணுவத்தினரும் விரைந்து வந்து விசாரணைகளை மேற்கொண்டனர்.

மல்லாகம் நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஜோய் மகிழ் மகாதேவா இன்று காலை சம்பவ இடத்தில் விசாரணைகளை மேற்கொண்டார்.

பின்னர் சடலங்கள் அங்கிருந்து மீட்கப்பட்டு அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டன. அங்கிருந்து மூவருடைய சடலமும் பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

இந்தநிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் நேற்று காலை கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, அச்சுவேலிப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இந்தக் கொலைகள் தொடர்பில் மேற்கொண்ட ஆரம்ப விசாரணைகளின் அடிப்படையில் குறித்த நபரே கொலைகளுக்கு காரணம் என தெரியவந்ததனையடுத்து, ஊரெழுப் பகுதியில் மறைந்திருந்த குறித்த நபரை பொலிஸார் கைது செய்தனர்.

அதேவேளை,  இச்சம்பவத்துடன் தொடர்புடைய மற்றொரு நபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் இந்த முக்கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும்  முச்சக்கரவண்டியொன்றினை மீட்டுள்ளதாகவும் அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்தனர். புத்தூர், நவக்கிரி என்னும் இடத்தில் இருந்து மீட்கப்பட்ட இந்த முச்சக்கரவண்டியினுள் பெருமளவு இரத்தக்கறைகள் இருந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

யாழில் மூவர் படுகொலை: பிரதான சந்தேக நபருக்கு விளக்கமறியல்
05-05-2014
யாழில் இரண்டு பெண்கள் உட்பட மூவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் இன்று நண்பகல் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்தியபோது  எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கு மாறு நீதவான் உத்தவிட்டதாக  அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை மேற்படி கொலைச் சம்பவத்துடன் நேரடியாக தொடர்பட்டுள்ள தனஞ்செயன் என்பவர் தனது மனைவின் மூத்த சகோதரியையும் தனக்கு திருமணம் செய்து தருமாறு நீண்டநாட்களாக தொந்தரவு செய்து வந்துள்ளார் என்றும் இவர் குறித்து அச்சுவேலிப் பொலிஸ் நிலையத்தில் பல முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் யாழ்.அச்சுவேலி வளலாய் கதிரிப்பாய் பகுதியில் இடம்பெற்ற இந்த முக்கொலைச் சம்பவத்தில்  ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த தாய், மகன் மற்றும் மகள் மூவருமே இனந்தெரியாத நபர்களினால் வாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் அதே குடும்பந்தைச் சேர்ந்த இருவர் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவத்தில்; நிற்குணானந்தன் அருள்நாயகி (வயது-50), இளம் குடும்ப பெண்ணான யசோதரன் மதுசா (வயது-27), நிற்குணானந்தன சுபாங்கன் (19) ஆகிய மூவரும் உயிரிழந்துள்ளதுடன், நிற்குணானந்தன் தர்மிகா (25), க. யசோதரன் (வயது-30) ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர்.

இதேவேளை இரத்த வெள்ளத்தில் கிடந்த சடலங்களுடன் கைக்குழந்தையும் மீட்கப்பட்டு யாழ்.போதான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது என்று அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை மேற்படி கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய நபர் ஒருவரை கோப்பாய் பொலிஸாரும் மற்றுமொரு நபரை அச்சுவேலிப் பொலிஸாரும் கைது செய்துள்ளனர்.
அச்சுவேலிப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட நபர் கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ள தனஞ்சயன் என்ற ஆட்டோசாரதியின் ஆட்டோவில் நேற்று இரவு பயணம் செய்துள்ளதாக குற்றம் சாட்டி கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்டுள்ள இருவரும் இன்று நண்பகல் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். 

 

Exit mobile version