அடுத்த ஜனாதிபதித்   தேர்தலின் போது ஐக்கிய  மக்கள் சுதந்திர  முன்னணியின்   வேட்பாளராக போட்டியிடும் மஹிந்த ராஜபக்ஷவை தோற்;கடிப்பதற்காக எதிர்க் கட்சியின் சார்பில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது   தொடர்பான விவாதம் வலுப்பெற்று வருகிறது.

பொது வேட்பாளராக வட மாகாண முதலமைச்சரும் முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசருமான  சி.வி. விக்னேஸ்வரனை நிறுத்த வேண்டும் என்றதோர் கருத்தும் இப்போது முன்வைக்கப்பட்டுள்ளது.

அரசியல் விமர்சகர்,  குசல் பெரேராவே முதன் முதலில் இக் கருத்தை முன்வைத்தார். அதனை அடுத்து கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாடொன்றின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்

எம்.ஏ. சுமந்திரனும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான மனோ கணேசனும் அக் கருத்தை தெரிவித்திருந்தனர். அக் கருத்து பொது வேட்பாளர் தொடர்பான விவாதத்திற்கு புதியதோர் பரிமாணத்தை கொடுத்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தலின் போது பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்த வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி உட்பட பல எதிர்க் கட்சிகள் கூறி வந்த போதிலும் அம் முயற்சி எந்த அளவிற்கு வெற்றிபெறும் என்பது சந்தேகமே. பொது வேட்பாளர் தமது கட்சியைச் சேர்ந்தவர் அல்லது தம்மை சார்ந்தவராக இருக்க வேண்டும் என்று எதிரணியிலுள்ள உள்ள பல கட்சிகள் நினைப்பதே அதற்குக் காரணமாகும்.

தமது கட்சிகள் தனித் தனியே போட்டியிட்டு மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடிக்க முடியாது என எதிர்க் கட்சிகள் நினைப்பதனாலேயே அக் கட்சிகள் பொது வேட்பாளர் ஒருவரைப் பற்றி சிந்திக்கின்றன. அவ்வாறாயின் அப் பொது வேட்பாளர் எதிர்க் கட்சியில் சகல கட்சிகளாலும் ஏற்றுக் கொள்ளக் கூடியவராக இருக்க வேண்டும். தனி ஒரு கட்சியைச் சார்ந்தவராக இருந்தால் நோக்கம் நிறைவேறாது.

அதேவேளை மஹிந்த ராஜபக்ஷவுக்குப் பதிலாக மற்றொருவரை நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்வதிலும் அர்த்தம் இல்லை.

ஏனெனில் எவர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இருந்தாலும் அந்தப் பதவிக்கான அதிகாரங்களை பாவிக்க மாட்டார் என்பதற்கு உத்தரவாதமில்லை. ஜனாதிபதி டி.பி. விஜேதுங்கவைத் தவிர வரலாற்றில் எந்தவொரு ஜனாதிபதியும் நிறைவேற்று அதிகாரங்களை பாவிக்காதிருந்ததில்லை.

விஜேதுங்க தற்செயலாக ஜனாதிபதியானவர்.   தொடர்ந்தும் அது போன்றவர்கள் பதவிக்கு வருவதில்லை. எனவே பொது வேட்பாளர் பதவிக்கு வந்து நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ரத்துச் செய்தால் மட்டுமே நோக்கம் நிறைவேறும்.

பல மாதங்களுக்கு முன்னர் பொது வேட்பாளர் வேண்டும் என்ற கோஷத்தை ஆரம்பித்து வைத்த கோட்டே நாக விகாரை விகாராதிபதி மாதுளுவாவே சோபித்த தேரரும் அதனை தான் வலியுறுத்தி வருகிறார்.

அவ்வாறாயின் பொது வேட்பாளரைப் பற்றிப் பேசும் எதிர்க் கட்சியைச் சேர்ந்த கட்சிகள் நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்துச் செய்ய விரும்பும் கட்சிகளாக இருக்க வேண்டும். ஆனால் உண்மை என்னவென்றால் மக்கள் விடுதலை முன்னணியைத் தவிர்ந்த நாட்டில் எந்தவொரு கட்சிக்கும் இது தொடர்பாக நிலையான கொள்கையொன்று இருந்ததில்லை. வரலாற்றை சற்று எட்டிப் பார்த்தால் அது புலனாகும்.

1978 ஆம் ஆண்டு ஜே.ஆர.;ஜயவர்தனவின் ஐ.தே.க. அரசாங்கம் இரண்டாவது குடியரசு அரசியலமைப்பின் மூலம் நிறைவேற்று ஜனாதிபதி முறையை அறிமுகப்படுத்திய போது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உட்பட அப்போதைய சகல எதிர்க் கட்சிகளும் அதனை எதிர்த்தன.

முன்னாள்  நிதி அமைச்சரும் லங்கா சம சமாஜக் கட்சியின் தலைவருமாக இருந்த கலாநிதி என்.எம். பெரேரா அக் காலத்திலேயே இந்த ஆட்சி முறையின் விளைவுகளைப் பற்றி புத்தகம் ஒன்றையும் எழுதியிருந்தார்.

ஆனால் ஐ.தே.க. தலைவர்கள் அந்த எதிர்ப்புகளைப் பொருட்படுத்தாது தமக்கு நாடாளுமன்றத்தில் அப்போதிருந்த ஆறில் ஐந்து பலத்தை பாவித்து 1978ஆம் ஆண்டு அரசியலமைப்பை நிறைவேற்றிக் கொண்டனர்.

அதன் பிரகாரம் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உட்பட எதிர்க் கட்சிகள் கூறியவாறே குறைந்த பட்சம் நாடாளுமன்றத்தில் கேள்விக்கு உட்படுத்தவாவது முடியாத நிறைவேற்று ஜனாதிபதி ஒருவர் உருவாகினார்.

1994ஆம் ஆண்டு தாம் பதவியில் இருந்து தூக்கியெறியப்படும் வரை ஐ.தே.க. இந்த ஆட்சி முறையின் விளைவுளை பகிரங்கமாக ஏற்றுக் கொள்ளவில்லை. 1994ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான கூட்டணியொன்று பதவிக்கு வந்தது.

தாம் பதவிக்கு வந்தால் நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்துச் செய்வதாக அக் கூட்டணியின் சார்பில் பிரதமர் பதவியை நாடி நின்ற சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க வாக்குறுதி அளித்திருந்தார்.

ஆனால் அவர் பிரதமாக பதவியேற்ற போது அவருக்கு அதற்குத் தேவையான மூன்றில் இரண்டு பங்கு நாடாளுமன்ற பலம் கிடைக்கவில்லை. எனவே அதற்கு தேவையான வாக்குகளை தாம் வழங்குவதாக எதிர்க் கட்சித் தலைவராகவிருந்த காமினி திஸாநாயக்க கூறினார்.

ஆனால் அந்த ஒத்துழைப்பை பெற்று நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்துச் செய்ய சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க முன்வரவில்லை.]

அதே ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான பொதுஜன ஐக்கிய முன்னணியின் சார்பில் சந்திரிகாவும் ஐ.தே.க. சார்பில் காமிணி திஸாநாயக்கவும் மக்கள் விடுதலை முன்னணியின் சார்பில் நிஹால் கலப்பத்தியும் போட்டியிட்டனர்.

மற்ற இருவரில் ஒருவர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இரத்துச் செய்வதாக எழுத்து முலம் வாக்குறுதியளித்தால் தாம் போட்டியில் இருந்து வாபஸ் பெற்று அந்த வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவதாக கலப்பத்தி கூறினார்.

chandirika-1994ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் தாம் நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்துச் செய்வதாக சந்திரிகா அம்மையார் மக்கள் விடுதலை முன்னணிக்கு எழுத்து மூலம் வாக்குறுதியளித்தார். கலப்பத்தி தேர்தலில் இருந்து வாபஸ் பெற்றார். ஆனால் பதவிக்கு வந்ததன் பின்னர் சந்திரிகாவின் அரசாங்கம் வாக்குறுதியை நிறைவேற்றுவதைப் பற்றி சிந்திக்கவே இல்லை.

அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு சந்திரிகாவே நியமித்த நாளுக்கு இரண்டாண்டுகள் பூர்த்தியானதன் பின்னர் 1997 ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் திகதி வாக்குறுதியை நிறைவேற்றுமாறு கோரி ஐ.தே.க. கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியது. சந்திரிகாவின் அரசாங்கம் பொலிஸாரை ஏவி ஆர்;ப்பாட்டக்காரர்களை மட்டுமன்றி அங்கு சென்றிருந்த ஊடகவியலாளர்களையும் அடித்து விரட்டியது.

உண்மையிலேயே ஐ.தே.க.வின் இந்த ஆர்ப்பாட்டமும் ஒரு வித அரசியல் திருகுதாளமேயன்றி வேறொன்றுமல்ல. அக்காலத்திலும் ஐ.தே.க. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இரத்துச் செய்யும் நோக்கத்தில் இருக்கவில்லை.

தாம் செய்ய நினைக்காத ஒன்றை செய்யுமாறே அக் கட்சி அப்போது அரசாங்கத்திற்கு வற்புறுத்தியது. ஆனால் அரசாங்கத்தின் நேர்மையற்ற தன்மை அதனால் மேலும் அம்பலமாகியது உண்மை தான்.

1994ஆம் ஆண்டு நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்து செய்ய தாம் ஒத்துழைப்பு வழங்குவதாக காமினி திஸாநாயக்க கூறியதும் அரசாங்கத்தின் நேர்மையற்ற தன்மையை அம்பலப்படுத்துவதற்காகவே அன்றி உண்மையிலேயே நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்துச் செய்து கொள்வதற்காக அல்ல.

2000ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 3ஆம் திகதி ஜனாதிபதி சந்திரிகா தாமே நாடாளுமன்றத்திற்குச் சென்று புதிய அரசியலமைப்பு திட்டமொன்றை சமர்ப்பித்தார். நிறைவேற்று ஜனாதிபதி முறையற்ற ஆட்சி முறையே அதன் மூலம் சிபாரிசு செய்யப்பட்டு இருந்தது.

ஆனால் அதற்கு ஐ.தே.க. ஆதரவு வழங்கவில்லை. அதேவேளை அந்த அரசியலமைப்பின் பிரகாரமும் சந்திரிகா தமது இரண்டாவது பதவிக் காலம் முடியும் வரை நிறைவேற்று ஜனாதிபதியாகவே இருக்க வழி சமைக்கப்பட்டிருந்தது.

mahinda_rajapaksa2005ஆம் ஆண்டு புலிகளின் தேர்தல் பகிஷ்ப்பின் பயனாக ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற மஹிந்த ராஜபக்ஷ அந்தத் தேர்தலின் போது முன்வைத்த மஹிந்த சிந்தனை என்ற தேர்தல் விஞ்ஞாபனத்தில் இருந்த முக்கிய வாக்குறுதிகளில் நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்துச் செய்வதும் ஒன்றாகும்.

ஆனால் அவரும் அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதைப் பற்றி சிந்திக்கவேனும் இல்லை. அதற்காக 2004 ஆம் ஆண்டு பதவிக்கு வந்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணிக்கு மூன்றில் இரண்டு நாடாளுமன்ற பலம் இருக்கவும் இல்லை.

2010ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்   தேர்தலின் போதே அக் கூட்டணிக்கு அந்த பலம் கிடைத்தது. ஆனால் ஐ.ம.சு.கூ அந்த பலத்தை பாவித்து நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இரத்துச் செய்வதற்குப் பதிலாக நிறைவேற்று  ஜனாதிபதிக்கு   இருந்த ஒரே கட்டுப்பாடான 17ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை   இரத்துச் செய்து ஒருவர்   நிறைவேற்று ஜனாதிபதியாக இரண்டு முறை மட்டுமே இருக்க முடியும் என்ற நிலையை மாற்றி எத்தனை முறையும் இருக்கலாம் என்று கூறும் 18ஆவது அரசியலமப்புத் திருத்தத்தை நிறைவேற்றிக் கொண்டது.

இவ்விடயத்தில் இவ்வாறு அரசியல் நிலைத்தன்மை இல்லாமல் செயற்படுவது இரு பிரதான கட்சிகள் மட்டும் அல்ல. தமிழ், முஸ்லிம் கட்சிகள் இடதுசாரி கட்சிகள் மற்றும் மக்கள் விடுதலை முன்னணியைத் தவிர்ந்த சகல சிறு கட்சிகளும் இவ்வாறே நாளுக்கொரு கொள்கையையே கடைப்பிடித்துள்ளன.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆரம்ப காலத்தில் நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஆதரித்தது. ஜனாதிபதித் தேர்தலின் போது சிறுபான்மையினரின் வாக்குகள் மிகவும் பெறுமதி வாய்ந்தவை என்பதால் ஜனாதிபதிகள் சிறுபான்மை மக்களின் கருத்தை மதிக்க நிரப்பந்திக்கப்படுகின்றனர் என்றும் எனவே நிறைவேற்று ஜனாதிபதி முறை சிறுபான்மை மக்களுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றமாக செயற்படுவதாகவும் மு.கா. ஸ்தாபகத் தலைவர் காலஞ்சென்ற எம்.எச்.எம்.அஷ்ரப் பல முறை கூறியிருக்கிறார்.

ஆனால் இந்த வாதத்தின் படி சம்பவங்கள் நடைபெறுவதற்கு சிறுபான்மை மக்கள் பிரியாமல் ஒரே சக்தியாக இருக்க வேண்டும். அதிகாரப் போட்டியில் ஈடுபட்டும் வசதிகளுக்காக பிரதான கட்சிகளை ஆதரிக்கும் நிலையிலும் சிறுபான்மைக் கட்சிகள் இருப்பதால் இந்த வாதம் இப்போது எடுபடாது என்றே கூற வேண்டும்.

முதலில் அவ்வாறு கூறிய மு.கா. பின்னர் நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்துச் செய்வதாக கூறி போட்டியிட்ட சிறிமாவோ பண்டாரநாயக்க, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் சரத் பொன்சேகா ஆகியோருக்கு ஒத்துழைப்பு வழங்கியது.

பின்னர் அக் கட்சி நிறைவேற்று ஜனாதிபதி முறையை மேலும் பலப்படுத்திய 18ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தையும் ஆதரித்தது. அஷ்ரப் வாழ்ந்த காலத்தில் மு.கா.வில் இருந்த வேறு சிலரும் அக் காலத்தில் நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஆதரித்துவிட்டு அஷ்ரப்போடு பல முறை அம்முறைமையை எதிர்த்து பின்னர் மு.கா.விலிருந்து பிரிந்து 18ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தையும் ஆதரித்தனர்.

தமிழ் கட்சிகளும் ஆரம்ப காலத்தில்; காலத்தில் நிறைவேற்று ஜனாதிபதி முறையை எதிர்க்கவில்லை ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பு 2010ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது அந்த நோக்கத்தை முன்வைத்து போட்டியிட்ட முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை ஆதரித்தது.

எனவே பொது வேட்பாளரை தேடும் எந்தவொரு கட்சியும் நாளை பதவிக்கு வந்து நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்துச் செய்யும் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை. அந்த நோக்கம் இல்லாவிட்டால் எதிர்க் கட்சிகள் பொது வேட்பாளர் ஒருவரை முன்வைப்பதில் அர்த்தமும் இல்லை.

manokaneshanஆனால் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நீதியரசராக இருந்த காலத்தில் நடந்து கொண்ட விதத்தை பார்த்தால் அவர் இந்த விடயத்தில் வித்தியாசமாக நடந்து கொள்ளலாம். அதாவது நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்துச் செய்வதாக வாக்குறுதியளித்துவிட்டு அவர் உண்மையிலேயே ஜனாதிபதியானால் அவர் தமது வாக்குறுதியை நிறைவேற்ற முயற்சி செய்யலாம். அதற்கான நாடாளுமன்ற பலத்தைப் பெற்றுக் கொள்வது தான் பிரதான பிரச்சினையாக அமையும்.

தமிழ் இனவாத கட்சியொன்றில் சேராமல் இருந்திருந்தால் விக்னேஸ்வரன் நேர்மையான நிர்வாகி என்பதற்கு உதாரணப் புருஷராக திகழ்வார் என சிங்கள சட்;டத்தரணி எஸ்.எல். குணசேகரவே டெய்லி மிரர் பத்திரிகைக்கு எழுதியிருந்த கட்டுரையொன்றில் கூறியிருந்தார். எனவே விக்னேஸ்வரனின் தகுதியில் எவ்வித குறையும் இல்லை.

விக்னேஸ்வரன் பொது வேட்பாளராக ஏற்றுக் கொள்ள முடியாவிட்டால் எதிர்க் கட்சிகள் அதற்கான காரணத்தை விளக்க வேண்டும் என சுமந்திரனும் மனோ கணேசனும் எதிர்க் கட்சிகளிடம் கூறியிருக்கின்றனர்.

ஏற்றுக் கொள்ள முடியாவிட்டால் அதற்கான காரணத்தை அக் கட்சிகள் கூறித்தானே ஆக வேண்டும். அவ்வாறிருக்க அதனை ஏன் அழுத்திக் கூற வேண்டும்? அதாவது அந்தக் காரணம் அவ்விருவருக்கும் தெரியும் என்பதே.

உண்மையிலேயே ஏனைய எதிர்க் கட்சிகள் விக்னேஸ்வரனை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். காரணம் அவர் ஜனாதிபதியாவதற்கு தகுதியானவரல்ல என்பதல்ல. நாட்டில் ஜனாதிபதி பதவிக்கு தகுதியான ஒரு சிலர் இருந்தால் அவர்களில் விக்னேஸ்வரன் முன்னணியில் இருப்பார்.

ஆனால் அவர் தமிழராயிற்றே. எதிர்க் கட்சிகள் இனவாதக் கண் கொண்டு அவரை நோக்காவிட்டாலும் அவரை போட்டியில் நிறுத்தி வெற்றி பெற முடியாது. பெரும்பான்மையான சிங்கள மக்கள் அவருக்கு வாக்களிக்க மாட்டார்கள். அது எதிர்க் கட்சிகளின் தலைவர்களின் இப்போதைய தவறல்ல.

விக்னேஸ்வரனை போட்டியில் நிறுத்தினால் சிங்கள இனவாதத்தை அம்பலப்படுத்தவாம.; ஆனால் மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடிக்க முடியாது.

தற்போதைய அரசாங்கத்தின் போக்கை நிறுத்துவதற்கு மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடிக்க வேண்டும் என்பது தான் எதிர்க் கட்சிகளின் நோக்கமாக இருந்தால் அதனை ஒரு புறம் வைத்துவிட்டு சிங்கள இனவாதத்தை அம்பலப்படுத்துவதில் என்ன அர்த்தம் இருக்கிறது?

-எம்.எஸ்.ஐயூப்-

Share.
Leave A Reply