ilakkiyainfo

12 வயதிற்குப் பிறகு பெண்கள் படிக்கக் கூடாதாம்! கூறுகிறது ‘பொக்கோ ஹரம்’ அமைப்பு: யார் இவாகள்?

புனித இசுலாமிய மதத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் நைஜீரியாவில் பொக்கோ ஹரம் என்னும் அமைப்பு செயற்படுகின்றது. சுனி முஸ்லிம்களின் ஒரு பிரிவாகக் கருதப்படும் இந்த அமைப்பு தம்மை மிகவும் மரபுவழி இசுலாமியர்கள் என்றும் இசுலாமிய விதிகளைக் கடுமையாகக் கடைப்பிடிப்பவர்கள் என்றும் தூய்மையானவர்கள் என்றும் அடிப்படைவாதிகள் என்றும் பல அடைமொழிகளால் அழைக்கின்றார்கள்.

நைஜீரியா முழுவதும் இசுலாமிய ஷரியா சட்டம் நடைமுறைப்படுத்தப் பட வேண்டும் என இவர்கள் வலியுறுத்துகிறார்கள்.

உலகப் பொருளாதார மாநாடு\
எண்ணெய் வளம் மிக்க நைஜிரியாவில் உலகப் பொருளாதார மாநாடு நடக்கும் வேளையில் அங்கு இளம் பெண் பிள்ளைகள் இருநூற்றுக்கு மேற்பட்டவர்கள் கடத்தப்பட்டுள்ளனர். நைஜீரிய அரசு கடத்தப்பட்ட பெண் பிள்ளைகளிலும் பார்க்க பொருளாதார மாநாட்டில் அதிக கவனம் செலுத்துவதாக வட நைஜீரிய மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

உலகம் தொலைந்து போன மலேசிய விமானத்தைத் தேடுவதில் காட்டும் அக்கறை கடத்தப்பட்ட பெண்பிள்ளைகளை மீட்பதில் காட்டவில்லை. முன்னூறு மக்கள் கொல்லப்பட்ட தென் கொரிய படகு விபத்திற்காக தலைமை அமைச்சர் பதவி விலக முன்வந்தார்.

நைஜீரியாவில் அப்படி எதுவும் நடக்கவில்லை. நைஜீரய அதிபர் தனது நாடு ஆபிரிக்காவிலேயே பொருளாதார வலுமிக்க நாடு என உலகிற்குக் காட்ட முயல்கின்றார்.

வேறு பெயர்.
நைஜீரியாவின் வடக்குப் பகுதிகளில் வாழ்பவர்கள் இவர்களை பொக்கோ ஹரம் என அழைக்கின்றனர். ஆனால் இவர்களின் அமைப்பின் உண்மையான பெயர் “புனிதப் போரையும் இறைதூதுவரின் போதனைகளையும் பரப்புரை செய்யும் மக்கள்” என்பதாகும்.

பொக்கோ ஹரம் என்பது போலித் தடை எனப் பொருள்படும். தாம் போலிகள் எனக் கருதுபவற்றைத் தடை செய்யும் அமைப்பு இது. வட நைஜீரியா, தென் கமரூன், நிகர் ஆகிய நாடுகளில் இவர்கள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள்.

abubakar-shekau73737373788அபுபக்கர் ஷெகௌ (Abubakar Shekau) இந்த அமைப்பின் தலைவர் எனச் சொல்லப்படுகின்றது. இவர்களுக்குத் தேவையான நிதியை இவர்கள் வங்கிக் கொள்ளைகள் மூலம் பெற்றதாகச் சொல்லப்படுகின்றது. சுனி முஸ்லிம்கள் வாழும் சவுதி அரேபியா போன்ற நாடுகளில் இருந்து இவர்களுக்கு நிதி கிடைப்பதாகவும் சொல்லப்படுகின்றது.

நவீனம் வேண்டாம்.
பொக்கோ ஹரம் அமைப்பினர் பல இசுலாமியர்களையும் கிறித்தவர்களையும் கண்டபடி கொல்கின்றனர். நவீனமான எதுவும் இவர்களுக்குப் பிடிப்பதில்லை. மத சார்பின்மை என்ற சொல்லைக் கடுமையாக எதிர்க்கிறார்கள்.

அல்லாவின் போதனைகளை மீறி நடப்பவர்கள் எல்லை மீறியவர்களாகும் என்ற குரான் வாசகம் இவர்களின் தாரக மந்திரமாக உள்ளது. கார் குண்டு வெடிப்புக்கள், தற்கொடைக் குண்டு வெடிப்புக்கள் போன்றவற்றை நிறையச் செய்கின்றார்கள்.

2014-ம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் 1,500இற்கு மேற்பட்டவர்களை கொன்றுள்ளனர். ஆசியாவில் அதிக மக்கள் தொகையைக் கொண்ட நைஜீரியாவில் பொக்கோ ஹரம் அமைப்பினர் மிகவும் அச்சத்தை உருவாக்கியுள்ளார்கள்.


12 வயதுக்கு மேல் படிக்கக் கூடாது.
நைஜீரிய அரசு இசுலாமிய விதிகளுக்கு எதிராகச் செயற்படுவதாக பொக்கோ ஹரம் அமைப்பினர் ஆத்திரம் அடைந்துள்ளார்கள். இவர்கள்  மேற்கத்தைய கலாச்சாரம், சமூக முறைமை போன்றவை தடைசெய்யப்பட வேண்டும் என வலியுறுத்துகிறார்கள்.

பெண்கள் 12 வயதிற்குப் பிறகு பாடசாலைக்குச் செல்லக் கூடாது என்ற கொள்கையால் உந்தப்பட்டு பொக்கோ ஹரம் அமைப்பினர் அவர்களைக் கடத்திச் சென்று கட்டாயட் திருமணம் செய்து வைக்கிறார்கள்.

பொக்கோ ஹரம் அமைப்பின் வரலாறு
2002-ம் ஆண்டு மொஹமட் யூசுப் என்பவரால் ஆரம்பிக்கப்பட்ட பொக்கோ ஹரம் அமைப்பு ஆரம்பத்தில் இசுலாமிய மத போதனையை ஏழைப் பிள்ளைகளுக்கு செய்து வந்தது.

பின்னர் இது இசுலாமிய அரசு உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை மக்கள் மத்தியில் பரப்புரை செய்தது.  பின்னர் 2009-ம் ஆண்டு படைக்கலன்கள் ஏந்திய போராட்டத்தை ஆரம்பித்தது.

மோட்டார் சைக்கிளில் துப்பாக்கியுடன் சென்று தாக்குதல் நடத்துவதை இவர்கள் வழமையாகக் கொண்டிருந்தனர். பல காவல் நிலையங்கள் மீது தாக்குதல்கல் நடத்தியது. 2009 ஆண்டு நைஜீரியப் படையினர் இந்த அமைப்பின் தலைமையகத்தின் மீது தாக்குதல் நடாத்தி அதன் தலைவரைக் கொன்றதுடன் பலரைக் கைதும் செய்தனர்.

கொல்லப்பட்ட தலைவர் மொஹமட் யூசுப்பின் உடலின் படத்தை தொலைக்காட்சியில் காட்டிய நைஜீரிய அரசு பொக்கோ ஹரம் அமைப்பு ஒழித்துக் கட்டப்பட்டது என மக்களுக்கு அறிவித்தனர்.

2010-ம் ஆண்டு இவர்கள் மீண்டும்  அபுபக்கர் செக்கௌ  தலைமையின் கீழ் திரண்டு எழுந்தனர். சிறைச் சாலையின் மீது தாக்குதல் நடாத்தி தமது அமைப்பின் உறுப்பினர்களை விடுவித்தனர்.

2010-ம் ஆண்டு புத்தாண்டு தினத்திலும் 2011 நத்தார் தினத்திலும் இவர்கள் கிறித்தவர்கள் மீது தாக்குதல்கள் நடாத்திப் பலரைக் கொன்றனர். தம்மீது நடாத்திய தாக்குதல்களுக்கு அவை பழிவாங்கல்கள் என்றனர் பொக்கோ ஹரம் அமைப்பினர்.

2011-ம் ஆண்டின் பிற்பகுதியில் அமெரிக்க வெளியுறவுத் துறை பொக்கோ ஹரம் அமைப்பு தமக்கு எதிரானது என அறிவித்தனர். அத்துடன் பொக்கோ ஹரம் அமைப்பிற்கும் அல் கெய்தாவிற்கும் தொடர்பு இருப்பதாகவும் அமெரிக்க அரசு கருத்து வெளியிட்டது.

2013-ம் ஆண்டு ஒரு இசுலாமிய வழிபாட்டு நிலையம் மீது தற்கொடைக் குண்டுத் தாக்குதல் மேற்கொண்டனர். பல இசுலாமிய மத போதகர்களையும் தலைவர்களையும் இலக்கு வைத்துப் பல தாக்குதல்கள் 2012, 2013-ம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டது. 2013-ம் ஆண்டில் கமரூன் நாட்டில் இவர்கள் தமது முதல் தாக்குதலை மேற்கொண்டனர்.

பொக்கோ ஹரம் ஓய்வதில்லை
2013-ம் ஆண்டு மே மாதம் நைஜீரியாவின் பாமா நகரில் பொக்கோ ஹரம் உறுப்பினர்கள் நைஜீரிய அரச படை முகாம், காவல் நிலையம், சிறைச்சாலை ஆகியவற்றின் மீது பெரும் தாக்குதல் ஒன்றை மேற்கொண்டனர்.

நைஜீரியப் படையினரின்   மனைவிகளையும்  பிள்ளைகளையும்  இதில் பொக்கோ ஹரம் அமைப்பினர் பணயக் கைதிகளாகப் பிடித்தனர். தமது உறுப்பினர்களின் மனைவிகள் பிள்ளைகளைப் படையினர் கைது செய்வதற்கு தாம் பழிவாங்குவதாகத் தெரிவித்தனர்.

இத்தாக்குதல் பொக்கோ ஹரம் அமைப்பினர் தமது தாக்குதிறன், படைக்கலன் போன்றவற்றை அதிகரித்துள்ளனர் என்பதைக் காட்டியது. நைஜீரிய அரசிடம் இருந்து   முன்று மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான பணத்தைப் பெற்றுக் கொண்டு தம்மிடமிருந்த கைதிகளை விடுதலை செய்தனர்.

மாலியில் பிரெஞ்சுப் படையினர் தலையிட்டதற்குப் பழிவாங்க ஒரு பிரெஞ்சுக் குடும்பத்தையும் பொக்கோ ஹரம் அமைப்பினர் கைப்பற்றி பின்னர் ஒரு மாதத்தின் பின்னர் விடுதலை செய்தனர்.

மேற்கத்தையக் கல்வி முறைமைக்கு எதிரான போர்
கடந்த சில மாதங்களாக பொக்கோ ஹரம் அமைப்பினர் மேற்கத்தையக் கல்வி முறைமைக்கு எதிராகப் போர்க் கொடி தூக்கி உள்ளனர். மேற்கத்தைய கல்வி முறைமையை ஒழித்து இசுலாமியக் கல்வி முறைமை நாட்டில் அறிமுகப்படுத்த வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

அதிலும் பெண்கள் கல்வியை நிறுத்திவிட்டு போய் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என பொக்கோ ஹரம் அமைப்பினர் மிரட்டுவதாக மேற்கத்தைய ஊடகங்கள் செய்திகள் வெளியிடுகின்றன.

ஏப்ரல் மாதம் 16-ம் திகதி இருநூற்றிற்கும் மேற்பட்ட 12இற்கும் 15இற்கும் இடைப்பட்ட வயதுப் பெண் பிள்ளைகளை பொக்கோ ஹரம் அமைப்பினர் நைஜீரிய சிபோக் நகரப் பாடசாலைகளில் இருந்து கடத்திச் சென்றதாகச் சொல்லப்படுகின்றது.

அதற்கு முன்னர் 59 பாடசானை ஆண் மாணவர்களை பொக்கோ ஹரம் அமைப்பினர் கொன்றாதாகவும் செய்திகள் வெளி வந்தன. கடத்தப்பட்ட பெண்களை தாம் மீட்டதாக முதலில் நைஜீரிய அரசு செய்தி வெளிவிட்டது. பின்னர் அது உண்மையல்ல எனச் செய்திகள் வெளியாகின. ஒன்பது வயதுச் சிறுமிகள் கூடக் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர்.

பெண்கள் விற்பனைக்கு
பொக்கோ ஹரம் அமைப்பினர் தம்மிடம் உள்ள 276 இளம் பெண்களை விற்பனை செய்யப் போவதாக காணொளி மூலம் தெரிவித்ததாக  ஏஎஃப்பி செய்தி நிறுவனம் செய்தி வெளியுட்டுள்ளது. மே மாதம 6-ம் திகதி மேலும் 14 இளம் பெண்கள் கடத்தப்பட்டதாகச் செய்திகள் வெளிவந்தன.

தம்மிடம் உள்ள பிள்ளைகளை விற்கும்படி அல்லா தமக்கு உத்தரவிட்டுள்ளதாக பொக்கோ ஹரம் அமைப்பினர் தெரிவித்ததாகச் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

கடத்தப் பட்ட பல பெண்கள் பொக்கோ ஹரம் அமைப்பின் உறுப்பினர்களை வலுக்கட்டாயமாகத் திருமணம் செய்துள்ளனர் என சிபிசி நியூஸ் செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் அச்செய்தியில் ஐம்பது இளம் பெண்கள் தப்பி ஓடிவிட்டதாகச் சொல்லப்பட்டுள்ளது.

நைஜீரிய அதிபர் ஜோனார்த்தன் குட்லக் கிறித்தவர்களைப் பெரும்பான்மையினராகக் கொண்ட தென் நைஜீரியாவில் வாழ்கின்றார் வட நைஜீரியர்கள் அடக்கு முறைகளின் கீழ் அல்லல் படுவதைப்பற்றி அவர் கவலைப்படவில்லை என வட நைஜீரியர்கள் குற்றம் சாட்டுகின்றார்கள்.

பெண்பிள்ளைகளைக் கடத்தி வைத்திருக்கும் இடங்கள் நைஜீரியப் படையினர் செல்வதற்கும் கடினமான பெரிய காட்டுப் பகுதியாகும். கடத்தப்பட்ட பெண்கள் பன்னிரண்டு அமெரிக்க டொலர்களுக்கு விற்கப்படுகின்றார்கள். சாட், கமரூன் நாடுகளில் விற்பனை நடக்கிறதாம்.

கல்லாத சாத்தான் சொல்லும் குரான்
பொக்கோ ஹரம் அமைப்பின் தலைவர் அபூபக்கர் ஷெக்கௌ படித்தவரல்லர். அவர் இசுலாமிய மார்க்கத்தைப் பற்றி கற்றவரும் அல்லர். உணர்ந்தவரும் அல்லர்.

அந்தப் புனித மார்க்கத்திற்கோ அல்லது அதன் போதனைகளுக்கோ  வியாக்கியானக் கொடுக்கும் அருகதை அற்றவர் அபூபக்கர். நைஜீரியாவின் வட கிழக்குப் பகுதியில் கமரூன் நாட்டு எல்லையில் இருக்கும் கம்போரு அங்காலா நகரில் உள்ள சந்தைப் பகுதியில் பொது மக்கள் மீது பொக்கோ ஹரம் அமைப்பினர் தாக்குதல் நடத்தி முன்னூற்றிற்கு மேற்பட்டவர்களைக் கொன்றனர்.

கம்போரு அங்கால நகரில் இருந்த படையினர் கடத்தப்பட்ட பெண்களைத் தேடும் பணிக்கு அனுப்பப்பட்டதால் நகரம் பாதுகாப்பின்றி இருந்தது. கடத்தப்பட்ட பெண்களில் இருந்த கிருத்தவர்கள் இசுலாமிய மதத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்கள்.

கைதிகள் பரிமாற்றம்
நைஜீரியா கைது செய்து வைத்திருக்கும் தமது அமைப்பின் உறுப்பினர்களை விடுவித்தால் தம்மிடம் இருக்கும் பெண்களை விடுதலை செய்வதாக பொக்கோ ஹரம் அமைப்புத் தெரிவித்தது. இது பற்றி கருத்துத் தெரிவித்த நைஜீரிய அரசு தாம் பெண்களை விடுவிக்க எல்லா வழிவகைகளையும் பின்பற்றுவோம் என்றது.

தலையிடும் அமெரிக்கா
நைஜீரியாவில் அரச படைகளுக்கு ஆலோசனை வழங்க தனது படைத்துறை நிபுணர்களை அமெரிக்கா அனுப்பியுள்ளது. அமெரிக்க விமானங்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளன .

கடத்தப்பட்ட பெண் பிள்ளை விடுவிக்க தன்னாலான எல்லா உதவிகளையும்செய்வதாக பராக் ஒபாமா அறிவித்துள்ளார். என்கெங்கு எண்ணெய் வளம் உண்டோ அங்கெல்லாம் அநியாயம் நடந்தால் (சிலசமயம் அநியாயம் திட்டமிட்டு உருவாக்கப்படும்) அங்கு சென்று நியாயத்தைஅமெரிக்கா நிலைநாட்டும்.

 

Chilling: The schoolgirls were paraded on video by Boko Haram

Captured: The video shows the girls wearing the full-length hijab and praying in an undisclosed rural location
Extremist group Boko Haram seized 276 girls who were taking exams at a school in Borno’s north-eastern village of Chibok on April 14

நன்றி -வேல் தர்மா

Exit mobile version