ilakkiyainfo

‘ராஜபக்சே நண்பர்’ சுஷ்மா ஸ்வராஜூக்கு வெளியுறத் துறையா? கலங்கும் மதிமுக, பாமக கூட்ணிகள்!!

சென்னை: லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியாகாத நிலையில் மோடி தலைமையிலான அமைச்சரவை குறித்து பரபரப்பான தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இதில் லோக்சபா பாஜக தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் வெளியுறவுத்துறையை விரும்புவதாக வெளியாகி இருக்கும் செய்திகள் தமிழக பாஜக கூட்டணிக் கட்சிகளை கதிகலங்க வைத்திருக்கிறது.
தமிழகத்தில்  பாஜக தலைமையிலான  கூட்டணியில் தேமுதிக, மதிமுக, பாமக உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. பாஜகவைத் தவிர மூன்று கட்சிகளுமே தமிழீழ பிரச்சனையில் குரல் கொடுப்பவை.
அதுவும் மதிமுக, பாமகவின் கொள்கைகளில் ஒன்றாகவே இருப்பது தனித் தமிழீழம் அமைப்பது, இலங்கையுடனான உறவை துண்டிப்பது, இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும், போர்க்குற்றவாளி ராஜபக்சேவை குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவது போன்றவைதான்.
14-1400072475-sushma-swaraj-rajapaksa-600
ராஜபக்சே நண்பர் சுஷ்மா ஸ்வராஜ்
இதில் தமிழக பாரதிய ஜனதாவுக்கு மழுப்பலான கொள்கைதான்.. ஆனால் டெல்லி பாஜக தலைவர்களோ இலங்கையுடன் குறிப்பாக ராஜபக்சேவுடன் மிக நெருக்கமான உறவு கொண்டவர்கள். அதிலும் தற்போது வெளியுறவுத் துறையை விரும்புவதாக சொல்லப்படும் சுஷ்மா ஸ்வராஜ்தான் மகிந்த ராஜபக்சேவுக்கு மிக நெருங்கிய நண்பராக சொல்லப்படுகிறவர்.
ராஜபக்சேவுடன் தனியே சந்திப்பு- நற்சான்றிதழ்
இந்திய எம்.பி.க்களின் இலங்கை பயணத்தின் போது ராஜபக்சேவை தனியே போய் சந்தித்து பேசியவர் சுஷ்மா ஸ்வராஜ். அத்துடன் இலங்கையில் “ஒன்றுபட்ட இலங்கையைத்தான் இந்தியா ஆதரிக்கும்” என்று எதிர்க்கட்சியாக எம்.பியாக இருக்கும்போதே வெளியுறவுக் கொள்கை பேசியவர். மேலும் ராஜபக்சேவுக்கு நற்சான்றிதழ் கொடுத்தவரும் இதே சுஷ்மா தான்.
சாஞ்சிக்கு வரவழைத்த சுஷ்மா
சுஷ்மாதான் மத்திய பிரதேச மாநிலம் சாஞ்சிக்கு ராஜபக்சேவை வரவழைக்கவும் காரணமாக இருந்தவர். அப்போது சாஞ்சிக்கே போய் போராடியவர் வைகோ.
தீர்மானம் கொண்டுவர விடாமல் தடுத்த சுஷ்மா
அத்துடன் இந்திய நாடாளுமன்றத்தில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வருவதற்கான அனைத்து சாதகமான சூழல் வந்த போது அனைத்துக் கட்சிக் கூட்டமும் வேண்டாம்.. தீர்மானமும் வேண்டாம் என்று தடுத்து அப்படி ஒரு தீர்மானத்தையே கொண்டுவரவிடாமல் செய்தவரும் இதே சுஷ்மாதான்.
சிவப்புக் கம்பளம்
இப்படி எதிர்க்கட்சியாக இருக்கும் போதே ராஜபக்சேவுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்க காரணமாக இருக்கும் சுஷ்மா ஸ்வராஜ், வெளியுறவுத் துறை அமைச்சரானால் நிச்சயமாக அதன் தமிழகக் கூட்டணிக் கட்சிகள் விடுக்கும் தமிழீழ ஆதரவு கோரிக்கைகளை ஒருபோதும் ஏற்கமாட்டார்.
அமெரிக்கா தீர்மானத்தை எதிர்க்கலாம்
இன்னும் ஒருபடி மேலேபோய் ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தால் அதை எதிர்க்கவும் கூட செய்ய வைப்பார் சுஷ்மா. இதனால் சுஷ்மா வெளியுறவுத் துறை அமைச்சராவார் என்ற செய்திகளால் தமிழக கூட்டணிக் கட்சிகள் கதிகலங்கிப் போயுள்ளன.
அரசியல் நெருக்கடியில் தமிழக கட்சிகள்
“பாஜக வந்தால் எல்லாமும் சரியாகிவிடும்” என்று சொன்னதை செய்ய இயலாமல் போனால் தங்களது அரசியல் எதிர்காலத்துக்கு மிகப் பெரிய நெருக்கடி ஏற்படும் என்பது தமிழக கூட்டணிக் கட்சித் தலைவர்களின் முன் உள்ள சிக்கலாக இருக்கிறது.
யஷ்வந்த்சின்ஹா ஓகே
அதே நேரத்தில் யஷ்வந்த்சின்ஹாவை வெளியுறவுத் துறை அமைச்சராக்கினால் ஓரளவு தமிழர்களுக்கு ஆதரவான நிலை எடுக்கக் கூடிய வாய்ப்பிருக்கிறது. தமிழகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய யஷ்வந்த்சின்ஹா, தமிழகத்தின் உணர்வுகளை பிரதிபலிப்பவராக வெளிப்பட்டார். அதனால் அவர் வருவதுதான் தமிழகத்தில் பாஜகவுக்கு எதிர்காலத்தை ஏற்படுத்தும் என்பது தமிழக பாஜகவினர் கருத்து. இதையேதான் பாஜக கூட்டணிக் கட்சியினரும் விரும்புவதாக கூறப்படுகிறது.

 

Exit mobile version