விருதுநகர்: நானொரு ராசியில்லா ராஜா என பாடிக்கொண்டிருக்கும் நிலை வைகோவுக்கு ஏற்பட்டுள்ளது. மதிமுகவின் தொடர் தோல்விகள் அத்தொண்டர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளன.
விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்குள், மதுரை மாவட்டத்து திருமங்கலம், திருப்பரக்குன்றம் ஆகியவை உட்பட 6 சட்டசபை தொகுதிகள் வருகின்றன.
சிவகாசி தொகுதியாக இருந்தவரை மதிமுகவுக்கு சாதகமாக இருந்த இத்தொகுதி, தொகுதி பங்கீட்டுக்கு பிறகு விருதுநகர் தொகுதியாக மாறியதும் பின்னடைவை கொடுத்தது.
1998ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை தொடர்ந்து மதிமுக வசம் இருந்த இத்தொகுதி, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கைவிட்டுப்போனது.
திமுகவில் இருந்து 1994ம் ஆண்டு வைகோ வெளியேற்றப்பட்ட பிறகு மறுமலர்ச்சி திமுக என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கினார். 1996ம் ஆண்டு முதன்முறையாக சட்டசபை தேர்தலில் அக்கட்சி போட்டியிட்டது.
திமுக மற்றும் அதிமுகவை எதிர்த்து கம்யூனிஸ்ட் கூட்டணியுடன் மதிமுக போட்டியிட்டது.
ஆனால் ஒரு தொகுதியிலும் வெற்றி பெற முடியவில்லை. வைகோ தான் போட்டியிட்ட விளாத்திகுளம், சிவகாசி ஆகிய இரு தொகுதிகளிலும் தோற்றார்.
1998 மற்றும் 1999ம் ஆண்டுகளில் நடந்த நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் வைகோ வெற்றிபெற்றார். 2004 ம் ஆண்டு பொதுத்தேர்தலில் பெற்றிபெற நல்ல வாய்ப்பு இருந்தும் வைகோ போட்டியிடாமல் கட்சியை சேர்ந்தவருக்கு தொகுதியை விட்டுக்கொடுத்தார்.
அந்த தேர்தலில் காங்கிரஸ், மதிமுக, திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. ஆனால் 2009ம் ஆண்டு பொதுத்தேர்தலில் விருதுநகரில் போட்டியிட்ட வைகோ தோல்வியைத்தான் தழுவினார்.
2011ம் ஆண்டு தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் மதிமுக போட்டியிடப்போவதில்லை என்று வைகோ அறிவித்துவிட்டார். 2014ல் பாஜக கூட்டணியை தமிழகத்தில் அமைக்க முன்னிலையில் இருந்த வைகோ, விருதுநகரில் மீண்டும் தோற்றுள்ளார்.ஜெயலலிதாவின் அலையில் வைகோவும் அடித்து செல்லப்பட்டுள்ளார். தமிழக அரசியலில் மிகப்பெரிய போராளியாக பார்க்கப்படும் வைகோ, தமிழர் நலன் சார்ந்த பிரச்சனைகளில் உடனுக்குடன் குரல் கொடுப்பவர்,.இத்தேர்தலில் ஜெயலலிதா அலையை தவிர அவர் தோற்க எந்த காரணமுமே இல்லை என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள். இத்தேர்தலில் வைகோ வெற்றி பெற்றிருந்தால், அவர் மத்திய அமைச்சராக வாய்ப்பு இருந்தது.
வாஜ்பாய் ஆட்சி காலத்தில் வைகோவுக்கு அமைச்சர் பதவி அளிக்க முன்வந்தபோது அதை மறுத்துவிட்ட வைகோ இம்முறை அதை ஏற்றிருப்பார் என எதிர்பார்க்கலாம். ஆனால் வைகோவின் தோல்வி மதிமுக தொண்டர்களின் ஆசையில் மண்ணை போட்டுவிட்டது.