பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியிலும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொண்டு விட்டுத் திரும்பியுள்ளார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.

நரேந்திர மோடியின் பதவியேற்பு நிகழ்வுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதும், தமிழ்நாட்டிலிருந்து கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியிருந்தன.

இந்த அழைப்பை இரத்துச் செய்ய வேண்டும் என்று தமிழ்நாட்டின் பெரும்பாலான அரசியல் கட்சிகள் குரல் எழுப்பியிருந்தன.
இதுவரை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் ஏனைய இலங்கை அரசாங்கத் தலைவர்களுக்கும் செங்கம்பளம் விரித்து வரவேற்று வந்த காங்கிரஸ் கட்சியின் புதுடெல்லியில் உள்ள பேச்சாளரும் முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசனும் கூட, இந்த அழைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்தமை விந்தைதான்.

தமிழ்நாட்டின் பிரதான கட்சிகள் அனைத்துமே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு விடுக்கப்பட்டிருந்த அழைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்ததுடன், அதை மீளப் பெறவும் வலியுறுத்தியிருந்தன. ஆனால், அந்த எதிர்ப்புகள் எதையும் பாரதிய ஜனதாக் கட்சித் தலைமை பொருட்படுத்தவில்லை. தமது முடிவில் பா.ஜ.க. தலைமை உறுதியாக இருந்தது.

அதன் காரணமாக தமிழ்நாட்டில் உள்ள கூட்டணிக் கட்சிகள் மட்டுமன்றி, பா.ஜ.க. வினது பல்வேறு நண்பர்களும் கூட பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்கவில்லை.

இவ்வாறு கலந்துகொள்ளாமல் புறக்கணித்தவர்களில் தமிழ்நாட்டு முதல்வர் ஜெயலலிதா, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலர் வைகோ, நடிகர் ரஜினிகாந்த், தேசிய முற்போக்கு திராவிட கழகத் தலைவர் விஜயகாந்த் உள்ளிட்டோர் முக்கியமானவர்கள்.

இந்தச் சம்பவம் ஒரு விடயத்தை தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ளது. அதாவது, இலங்கைப் பிரச்சினை விவகாரத்தில் புதுடெல்லியின் மீதான தமிழ்நாட்டின் அழுத்தங்கள் இனிவரும் காலத்திலும் குறையப் போவதில்லை என்பதே அது.

காங்கிரஸ் கூட்டணியின் ஆட்சிக்காலத்தில் தமிழ்நாட்டின் தாளத்துக்கு மன்மோகன் சிங் அரசாங்கம் ஆட்டம் போடுவதாகவும் அதனால், இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கை சீரழிந்து போய்விட்டதாகவும் சில தரப்பினர் நெடுங்காலமாக குற்றஞ்சாட்டி வந்தனர்.

இப்படியான நிலையில் நரேந்திர மோடி அரசாங்கத்துக்கு நாடாளுமன்றத்தில் தனிப்பெரும்பான்மை பலம் கிடைத்தபோது, இனிமேல் இந்திய மத்திய அரசின் முடிவுகள் மீது தமிழ்நாடு செல்வாக்குச் செலுத்த முடியாது என்றே இலங்கை அரசாங்கம் குதூகலித்தது. அத்தகையதொரு நிலையைப் பரீட்சிப்பதற்கான வாய்ப்பும் இலங்கை அரசாங்கத்துக்கு உடனேயே கிடைத்து விட்டது.

அதாவது அயல் நாடுகளின் தலைவர்களுக்கு பதவியேற்பு நிகழ்வுக்கு அழைப்பு விடுக்கும் நரேந்திர மோடியின் முடிவையடுத்து, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் நிகழ்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதையடுத்தே தமிழ்நாட்டில் எதிர்ப்புகள் கிளம்பியிருந்தன.

இது இலங்கை அரசுக்கு எதிரான உணர்வுகள் தமிழ்நாட்டில் அடங்கி விடவில்லை என்பதை எடுத்துக் காட்டியிருந்தாலும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை புதுடெல்லிக்கு வரவிடாமல் தடுக்க முடியவில்லை.

அதேவேளை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை புதுடெல்லிக்கு வரவிடாமல் தடுப்பதில் தமிழக அரசியல் கட்சிகள் தோல்வியைச் சந்தித்துள்ளபோதிலும், இலங்கை விவகாரத்தில் மத்திய அரசாங்கத்தின் மீது தமிழகம் செல்வாக்குச் செலுத்தத்தக்க நிலையில் இல்லை என்ற இலங்கை அரசாங்கத்தின் கருத்து முற்றிலும் உடன்பாடானது என்று கூறமுடியாது.

இப்போது தான், இலங்கைக்கும் தமிழகத்துக்கும் இடையிலான புதிய ஆட்டம் தொடங்கியிருக்கிறது.

முன்னரெல்லாம் தமிழ்நாட்டிலிருந்து கிளம்பும் எத்தகைய எதிர்ப்பையும் இலங்கை அரசாங்கம் கண்டுகொள்ளாதது போலவே பதிலளிக்கும். இந்திய மத்திய அரசுக்கும் தமக்கும் இடையில் தான் உறவு என்றும் மாநில அரசு பற்றித் தாம் கவலைப்படவோ, கருத்துக் கூறவோ போவதில்லை என்றும் அரசாங்கம் கூறிவந்தது நினைவில் இருக்கலாம்.

ஆனால், தேர்தல் முடிவுகள் வெளியாகி நரேந்திர மோடி அரசாங்கத்துக்கு தனிப்பெரும்பான்மை பலம் கிடைத்துவிட்டது என்றவுடன், இனித் தமிழகத்தின் ஆதிக்கம் புதுடெல்லியில் இருக்காது என்று நிம்மதி தெரிவித்திருந்தார் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல.

அவரே தான், முன்னர் தமிழ்நாட்டைப் பற்றியெல்லாம் இலங்கை அரசாங்கம் கவலைப்படவில்லை என்று கூறியிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

எப்போதுமே இலங்கை அரசாங்கத்தினால் தமிழகத்தையிட்டுக் கவலைப்படாமல் இருக்க முடியாது. ஏனென்றால், இலங்கை குறித்த ஒட்டுமொத்த இந்தியாவுடனான கொள்கைகளில் அது செல்வாக்குச் செலுத்தக்கூடிய அமைவிடத்தில் உள்ளது.

இந்தியாவின் வடக்கிலோ அல்லது கிழக்கிலோ, மத்திய பகுதியிலோ தமிழ்நாடு இருந்திருந்தால் இலங்கை விவகாரத்தில் தமிழகத்தின் கருத்து அவ்வளவுக்கு செவிமடுக்கப்படாமல் போகலாம்.

ஆனால், இலங்கைக்கு மிக நெருக்கமாக இந்தியாவின் கடைசி எல்லையாக தமிழ்நாடு அமைந்திருப்பதால், இலங்கையிலும் தமிழ்நாட்டிலும் உள்ள தமிழர்களுக்கு இடையில் வரலாற்றுக்கு முந்திய காலம் தொடக்கம் தொடர்புகள் இருந்து வருவதால், தமிழ்நாட்டையிட்டு இலங்கை ஒருபோதும் கவலைப்படாமல் இருக்க முடியாது.

நரேந்திர மோடி அரசாங்கத்துக்கு தனிப் பெரும்பான்மை கிடைத்துவிட்டதால், இலங்கை விவகாரத்தில் தமிழ்நாட்டின் அழுத்தங்களுக்கு அடிபணியாது என்ற கருத்து இலங்கைக்கு ஏற்பட்டுள்ளது.

இங்கு அடிபணிதல் என்பதை விட, அதற்கு அப்பாற்பட்ட இராஜதந்திரம் ஒன்று உள்ளதென்பதை மறுக்க முடியாது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதுடெல்லிப் பயணத்தைத் தடுக்கமுடியாமல் போனது, தமிழ்நாட்டின் அழுத்தங்களுக்குக் கிடைத்த தோல்வி தான். ஆனால், இதில் வெற்றி காணமுடியாது என்பது தமிழ்நாட்டிலுள்ள அனைத்துக் கட்சிகளுக்குமே தெரியாமல் போயிருக்காது.

ஆனாலும், இந்த விவகாரத்தில் மத்திய அரசாங்கம் இணக்கத்துக்கு வராது என்று தெரிந்திருந்தும், அவை தமது முடிவிலும் பிடியிலும் உறுதியாக நின்று எதிர்ப்புத் தெரிவித்தன.

இந்த அழைப்பு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மட்டுமான தனிப்பட்ட அழைப்பு அல்ல. அயலில் உள்ள அனைத்து நாடுகளுக்கானது, சார்க் நாடுகளின் தலைவர்களுக்கானது.

இப்படியானதொரு முடிவை எடுக்கும்போது, இந்திய அரசாங்கம் ஒருபோதும் இலங்கையை விலக்கி வைக்க முடியாது. அதுபோலவே தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் கோரியது போல, விடுக்கப்பட்ட அழைப்பை இரத்துச் செய்யவும் முடியாது.

இவை இரண்டையும் புதுடெல்லி செய்திருந்தால், இரு நாடுகளுக்கும் இடையில் தீராப்பகையாக உருவெடுத்திருக்கும். கிட்டத்தட்ட அது மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்துக்கு எதிரான நரேந்திர மோடி அரசாங்கத்தின் போர்ப் பிரகடனம் போலவே இருந்திருக்கும்.

ஏற்கெனவே இந்தியாவுக்கு பாதுகாப்பு ரீதியாக சவால் விடும் நாடுகளான பாகிஸ்தானுடனும் சீனாவுடனும் இலங்கை நெருக்கமான உறவுகளை வைத்துக்கொண்டுள்ள நிலையில், பதவியேற்பு நிகழ்வுக்கு இலங்கைக்கு மட்டும் அழைப்பு விடுக்காமல் போயிருந்தால் அது பாரதூரமான விவகாரமாக மாறியிருக்கும்.

அதுபோலவே விடுக்கப்பட்ட அழைப்பை இரத்துச் செய்திருந்தால், அது பாரிய இராஜதந்திர அவமதிப்பாக மாறியிருக்கும்.

அண்டை நாடுகளுடனான வெளிவிவகாரக் கொள்கையை மன்மோகன் சிங் அரசாங்கம் தவறாக கையாள்வதாக குற்றஞ்சாட்டிய நரேந்திர மோடி, அதே தவறுக்குத் தாமும் துணைபோவதை ஒருபோதும் விரும்பமாட்டார்.

அயல் நாடுகளுடன் நட்புறவு கொண்டு இந்தியாவின் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல் என்பதே நரேந்திர மோடி அரசாங்கத்தின் கொள்கையாகத் தெரிகிறது.

மன்மோகன் சிங் ஆட்சிக்காலத்தில் சீர்கெட்டுப் போயிருந்த அயல் நாடுகளுடனான உறவுகளை புதுப்பித்துக் கொள்வதற்கே, நரேந்திர மோடி தனது பதவியேற்புக்கு எல்லா சார்க் நாடுகளின் தலைவர்களையும் அழைத்திருந்தார். அவரது இந்த இராஜதந்திரத்துக்கு இப்போதைக்கு கை மேல் பலன் கிடைத்துள்ளது என்பதில் சந்தேகமில்லை.

இப்படிப்பட்ட சூழலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுக்காமல் தவிர்ப்பதோ, அழைப்பை இரத்துச் செய்வதோ புதுடெல்லியால் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. இது தமிழ்நாட்டில் உள்ள கட்சிகளின் தலைவர்களுக்குத் தெரியாத விவகாரம் அல்ல.

ஆனால், இலங்கைத் தமிழர் விவகாரத்தில் அவை கொண்டுள்ள நிலைப்பாடுகளும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்ப்பு உணர்வும் போராட்டங்களை நடத்தவும் எதிர்ப்பைத் தெரிவிக்கவும் நிகழ்வைப் புறக்கணிக்கவும் காரணமாகின.

எவ்வாறாயினும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வருகையைத் தடுக்கமுடியாது போனாலும், இலங்கை விவகாரத்தில் தமிழ்நாட்டின் விருப்பங்களுக்கு மாறாக இந்திய மத்திய அரசு நடந்துகொள்ள முற்படக்கூடாது என்ற கருத்து நரேந்திர மோடி அரசுக்கு இதன் மூலம் தெளிவாக வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதுவும் இந்த விவகாரத்தில் தமிழ்நாட்டில் உள்ள கட்சிகள் அனைத்தும் ஒரே நிலைப்பாட்டில்தான் உள்ளன என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, நரேந்திர மோடி அரசாங்கத்துக்கு இதுவொரு மறைமுக அழுத்தமாகவே அமைந்துள்ளது.

வெளிநாடு ஒன்றுடனான உறவில் உள்நாட்டு அழுத்தங்களுக்கு இடம்கொடுப்பதில்லை என்ற நிலைப்பாட்டை மோடியின் அரசினால் அவ்வளவு இலகுவாக எடுத்து விடமுடியாது.

சுப்பிரமணியன் சுவாமி போன்ற இலங்கை அரசுக்கு ஆதரவான சிலர், வெளிவிவகாரக் கொள்கையில் உள்நாட்டுத் தலையீடுகளுக்கு இடம் கொடுக்க முடியாது என்றும் அது முற்றிலும் மத்திய அரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ள அதிகாரம் என்றும் கூறுகின்றனர்.

இங்கு அதிகாரம் என்பதல்ல பிரச்சினை. உள்நாட்டு மக்கள் கொடுத்த ஆணையிலிருந்தே மத்திய அரசுக்கான அதிகாரம் பிறந்தது. எனவே, உள்நாட்டு மக்களின் விருப்பங்களையும் அரசாங்கம் புறக்கணிக்க முடியாது. அதைவிட, வெளிநாட்டு உறவுகளுக்காக உள்நாட்டு உறவுகளை குலைத்துவிடவும் முடியாது.

அதுவும், 37 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் தமிழ்நாட்டின் ஆட்சியையும் வைத்துக்கொண்டிருக்கின்ற அ.தி.மு.க. போன்ற கட்சிகளை அவ்வளவு இலகுவாக நரேந்திர மோடியாலோ, பா.ஜ.க. அரசினாலோ உதறித் தள்ளிவிட முடியாது. அது மத்திய – மாநில அரசாங்கங்களுக்கு இடையில் தான் விரிசலை ஏற்படுத்தும்.

தென்மாநிலங்களில் காலூன்றத் தடுமாறும் பா.ஜ.க. வுக்கு இதுபோன்ற விரிசல் ஏற்படுவது பின்னடைவை ஏற்படுத்தும். தமிழ்நாட்டுடனான உறவு என்பது நரேந்திர மோடிக்கு அவசியம் என்பதால், இலங்கை விவகாரத்தில் தமிழ்நாட்டின் விருப்பங்களை அவரால் புறக்கணித்துச் செயற்பட வழியில்லை.

தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளும் இந்த விவகாரத்தில் உள்ள சிக்கலைப் புரிந்துகொண்டுள்ளதால்தான் நரேந்திர மோடிக்கு எதிராகவோ, பா.ஜ.க. அரசாங்கத்துக்கு எதிராகவோ போராட்டங்களை நடத்தவோ, அறிக்கைகளை வெளியிடவோ இல்லை.

மத்திய அரசுடன் இணங்கிப் போய்த்தான் அதனைக் கையாள வேண்டும் என்று தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள் புரிந்துகொண்டிருப்பதால், தந்திரமான முறையில் காய்களை நகர்த்த ஆரம்பித்துள்ளன.

எனவே, காங்கிரஸ் அரசாங்கத்துக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையில் ஏற்பட்டிருந்தது போன்ற இடைவெளி இம்முறை ஏற்பட வாய்ப்பில்லை.
அவ்வாறானதொரு இடைவெளி ஏற்பட்டால்தான், அது இலங்கைக்கு வெற்றியாகும்.

நரேந்திர மோடி அரசாங்கம் நாடாளுமன்றத்தின் ராஜ்யசபையில், போதிய பெரும்பான்மை பலத்தைக் கொண்டிருக்கவில்லை. எனவே, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களின் தயவு எப்போதும் மத்திய அரசுக்குத் தேவைப்படுகிறது.

அதுவும் பா.ஜ.க.வின் கொள்கைகளை கடுமையாக எதிர்க்கும் மேற்கு வங்காள அரசு போன்றவற்றுடன் ஒப்பிடுகையில், தமிழ்நாட்டின் ஜெயலலிதா அரசாங்கத்தின் ஆதரவைப் பெறுவது ஒன்றும் பா.ஜ.க. வுக்கு அவ்வளவு சிரமமான காரியமில்லை. எனவே, தமிழ்நாட்டு அரசாங்கத்துடன் உறவைக் கெடுத்துக்கொள்ள மத்திய அரசு விரும்பாது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு விடுக்கப்பட்ட அழைப்பினால், மத்திய – மாநில அரசுகளுக்கு இடையில் நல்லுறவு கட்டியெழுப்பப்படுவதற்கான ஒரு வாய்ப்பு தவறவிடப்பட்டுள்ளதாக ஜெயலலிதா சுட்டிக்காட்டியிருந்தார். எனவே, தமிழ்நாடும் அந்த உறவுக்குத் தயாராகவே உள்ளது.

இலங்கை அரசுக்கு சார்பான முடிவுகளை மத்திய அரசாங்கம் தன்னிச்சையாக எடுக்கமுடியாது என்றே கருதலாம்.

இப்படியான நிலையில், தமிழ்நாட்டின் எதிர்ப்பை குறைத்து இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தமக்குள்ள அக்கறையை வெளிப்படுத்தி, சமநிலையை பேணுவதான தோற்றத்தை உருவாக்க நரேந்திர மோடி சில முன்னகர்வுகளை மேற்கொள்ளலாம்.

அதற்கு அவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கூடிய விரைவில் அழைப்பு விடுத்து அவர்களைச் சந்திக்கக் கூடும். அதற்கான சாத்தியங்கள் புதுடெல்லியில் உள்ளதாகவே தெரிகிறது.

அதேவேளை, இலங்கைக்கு வருமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்த அழைப்பை நரேந்திர மோடி ஏற்றுக்கொண்டுள்ளார்.
ஆனால், அவர் எப்போது, எப்படி அங்கு செல்வார் என்பது புதிய சர்ச்சையாக உருவெடுக்கும்.

மன்மோகன் சிங் பத்தாண்டு பதவிக்காலத்தில் 1998இல் ஒரேயோரு முறை அதுவும், சார்க் மாநாட்டுக்காகவே கொழும்பு வந்திருந்தார்.
பலமுறை இலங்கை அரசாங்கம் அழைத்தும் அவர் தனிப்பட்ட, அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவில்லை.

பொதுநலவாய மாநாட்டின்போதும், தமிழ்நாட்டின் எதிர்ப்புகளால் கொழும்பு செல்லவில்லை. இந்த நிலையில், இலங்கை விவகாரத்தில் நரேந்திர மோடி அரசாங்கம் எப்படிச் செயற்படப் போகிறது என்று முடிவுகட்ட இன்னொரு வாய்ப்பு உருவாகியுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பை ஏற்று உடனடியாகவே கொழும்பு செல்ல நரேந்திர மோடி முடிவெடுத்தால், அவர் தமிழ்நாட்டை உதாசீனப்படுத்துகிறார் என்றோ, இலங்கை அரசுக்கு சார்பாக மாறிவிட்டார் என்றோ உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்.

மாறாக மன்மோகன் சிங் போல, இவரும் கொழும்புப் பயணத்தை இழுத்தடித்தால், கூடிய விரைவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்காக சவுத் புளொக்கின் கதவுகள் திறக்கப்பட்டால், மத்திய அரசின் மீதான தமிழ்நாட்டின் செல்வாக்கு அல்லது பிடி தளர்ந்து போகவில்லை என்பதை இப்போதைக்கு உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.

Share.
Leave A Reply