அவுஸ்ரேலியாவில் தமிழ் புகலிடக் கோரிக்கையாளர் தீமூட்டித் தற்கொலை – நாடுகடத்தப்படும் அச்சத்தின் விளைவு
அவுஸ்திரேலியாவின் விக்ரோறியா மாநிலத்தில் தமிழ்ப் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் தனக்குத் தானே தீமூட்டித் தற்கொலை செய்துள்ளார்.
மெல்பேணிலிருந்து 100 கி.மீ தொலைவிலுள்ள ஜீலோங் நகரில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
தனக்குத்தானே தீமூட்டிய நிலையில், சாலையால் சென்றவர்களின் அழைப்பின் பேரில், லியோ சீமான்பிள்ளை என்ற 29 வயதான புகலிடக் கோரிக்கையாளர் நேற்றுக்காலை 11.38 மணியளவில், மெல்பேர்ண் அம்புலன்ஸ் பிரிவினரால் மீட்கப்பட்டார்.
பின்னர் உலங்கு வானூர்தி மூலம் மெல்பேண் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டார்.
95 சதவீதம் எரிகாயங்களுக்குள்ளான அவர் உயிருக்குப் போராடிய நிலையில் இன்று காலை 9.15 மணிக்கு உயிரிழந்தார்.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் படகு மூலம் டார்வின் வந்த இவர் இணைப்பு நுழைவிசைவு மூலம், மெல்பேர்ணில் தங்க அனுமதிக்கப்பட்டிருந்தார்.
எனினும் சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்பப்படுவோம் என்ற அச்சத்தினாலேயே அவர் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர், சிறிலங்காவை விட்டு வெளியேறிய லியோ சீமான்பிள்ளையும், அவரது பெற்றோரும் இந்தியாவில் அகதி முகாம் ஒன்றில் வசிக்கின்றனர்.
அவர்கள் மகனின் இந்த நிலை குறித்து அதிர்ச்சி வெளியிட்டுள்ளனர்.
மென்பானப் போத்தல் ஒன்றில் நிரப்பிய பெற்றோலைக் கொண்டே அவர் தனது உடலில் தீயை மூட்டியுள்ளார்.
முன்னதாக இவர் தனது உடல் உறுப்புகளைத் தானம் செய்ய விருப்பம் வெளியிட்டிருந்தார்.
இதனையடுத்து, இவரது ஒரு கண், ஈரல், நுரையீரல், இரண்டு சிறுநீரகங்கள் என்பன மருத்துவமனையில் தானமாக அளிக்கப்பட்டுள்ளன.
இவரது பெற்றோருடன் நேற்றிரவு தொடர்பு கொண்டபோது அதற்கு அனுமதி அளித்திருந்தனர்.
தமது மகன் மூலம் ஐந்து பேர் வாழ்வு பெறுவதை அவர்கள் விரும்பம் தெரிவித்திருந்தனர்.
அவுஸ்திரேலியாவில் தமிழ்ப் புகலிடக் கோரிக்கையாளர்கள் தம்மைத்தாமே அழித்துக்கொள்ளும் நிகழ்வுகள் அவ்வப்போது நிகழ்ந்து வருகின்றன.
அதிகளவு மனவழுத்தம், எதிர்காலம் குறித்த நிச்சயமின்மை, மீளவும் சிறிலங்காவுக்கு நாடு கடத்தப்படுவோமென்ற பயம் போன்றவை இவற்றுக்குக் காரணமாகவிருக்கின்றன.
லியோ குறித்து அவரது நெருங்கிய நண்பர் பிருந்தன் கருத்து வெளியிடுகையில்,
“தடுப்பு முகாமிலிருந்தே எனக்கு அவரை நன்கு பழக்கம். மிக அருமையான மனிதன்.
யாருக்கும் என்னேரமும் உதவி செய்யும் பழக்கமுள்ளவர்.
சமூகத்துக்கு எம்மால் எப்போதும் பயன்பாடு இருந்துகொண்டே இருக்க வேண்டுமென்ற கொள்கையுள்ளவர்.
மிகவும் கலகலப்பாகவும் உற்சாகமாகவுமே எப்போதும் காணப்படுவார்.
தடுப்பு முகாமிலிருந்து வெளியேறி சமூகத்துள் விடப்பட்டபோதும் அவர் மிக நன்றாகவே இருந்தார்.
பின்னர் காலம் போகப்போக அவரது புகலிடக் கோரிக்கை தொடர்பான சாதகமான பதில்கள் இல்லாமற் போக அவரது மனநிலை பாதிப்படையத் தொடங்கியது.
அடிக்கடி தன்னைத் திருப்பி அனுப்பிவிடுவார்களோ என்ற பயத்தைப் பகிர்ந்து கொள்ளத் தொடங்கினார்.
ஒருகட்டத்தில் தீவிர மனவழுத்தத்துக்கு உள்ளாகிச் சிகிச்சை பெறும் நிலையும் ஏற்பட்டது.
அவரது சிரிப்பும் உற்சாகமும் குன்றினாலும் வழமைபோல் மற்றவர்களுக்கு உதவிசெய்யும் அவரது பணி தொடர்ந்து கொண்டேதான் இருந்தது.
இந்நிலையில் அவரது தற்கொலை என்பது எமக்கு ஆழ்ந்த அதிர்ச்சியளிக்கின்றது.
தனது புகலிடக் கோரிக்கை மறுக்கப்பட்டு தான் திருப்பி அனுப்பப்பட்டு விடுவேனென்ற பயமே அவரது இந்த முடிவுக்குக் காரணமாக இருக்க முடியுமென்று நான் நம்புகிறேன்.’ என்று தெரிவித்தார்.
இன்னொரு நண்பர் செந்தில் லியோ பற்றிக் குறிப்பிடும்போது,
‘துன்பப்படும் மக்களுக்கு உதவுவதை ஒரு செயற்பாடாகவே கொண்டிருந்தவர் லியோ. தடுப்பு முகாமுக்குள்ளிருந்த வெளிவந்த ஓராண்டு காலம் மற்றவர்களுக்கு உதவுவதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருந்தார்.
அடிக்கடி இரத்ததானம் வழங்கிக்கொண்டிருந்தார். இந்தியாவில் கடினவாழ்க்கையை எதிர்கொண்டிருக்கும் குழுந்தைகள் சிலருக்கான பணஉதவிகளைத் தொடர்ந்து செய்து கொண்டிருந்தார்.
இதைவிட கிழமைதோறும் ஒருநாள் முதியவர்களைப் பராமரிக்கும் வயோதிப இல்லத்துக்குச் சென்று தன்னார்வத் தொண்டராகப் பணியாற்றி வந்தார்.
தனக்குரிய ஆங்கில அறிவை வைத்து ஏனைய புகலிடக் கோரிக்கையாளருக்கு தன்னாலான உதவிகளைச் செய்து கொண்டிருந்தார்.
அப்படிப்பட்ட அற்புதமான லியோ இப்படியொரு முடிவை வரித்துக் கொண்டது எமக்கெல்லாம் வருத்தமும் அதிர்ச்சியும்தான்.’ என்று தெரிவித்தார்.