ilakkiyainfo

உருத்திரபுரத்தில் பழங்கால விகாரையின் சிதைவுகள் கண்டுபிடிப்பாம் – சிறிலங்கா இராணுவம் கூறுகிறது

கிளிநொச்சி உருத்திரபுரம், சிவநகர் பகுதியில், பொலன்னறுவ ஆட்சிக் காலத்தைச் சேர்ந்த பௌத்த விகாரை ஒன்று இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக, சிறிலங்கா இராணுவம் தகவல் வெளியிட்டுள்ளது.

உருத்திரபுரம் சிவநகர் சிவன் கோவில் பகுதியில், சிறிலங்கா இராணுவத்தின் 66-2 பிரிகேட்டின் கீழு உள்ள 20வது இலகு காலாற்படைப் பிரிவினரால், இந்த பௌத்த விகாரையின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

uruthrapuram-ruins2இதையடுத்து, கிளிநொச்சி படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க, தொல்பொருள் ஆய்வு நிபுணர்களுடன் அந்த இடத்துக்குச் சென்று பார்வையிட்டு, விசாரணைகளை மேற்கொண்டனர்.

இதன்போது, சுமார் 60 அடி விட்டமும், 12 அடி உயரமும் கொண்ட தாதுகோபத்தின் சிதைவுகள், பழங்கால செங்கல் அடுக்குகள். பாதச்சுவடுகள் பதிந்த கல், கற்தூண்கள், போன்றவை கண்டுபிடிக்கப்பட்டன.

இவை பொலன்னறுவ ஆட்சிக்காலத்தில், அங்கிருந்த பௌத்த விகாரை ஒன்றினது சிதைவுகள் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து இந்தப் பகுதியில், விரைவில் தொல்பொருள் ஆய்வுகளை மேற்கொண்டு இந்தப் பிரதேசத்தை புனிதப் பிரதேசமாக பிரகடனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இந்தப் பகுதியில், 1940ம் ஆண்டு வரை ஒரு பிள்ளையார் கோவில் இருந்ததாகவும், அதன் பின்னர், 1980களில் சிவன் கோவில் கட்டப்பட்டதாகவும் அந்தப் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

1965இல், இந்தப் பகுதியைத் துப்புரவு செய்த ஆலயக் குருக்கள், 4-6 அடி உயரமுள்ள, சமாதி நிலை புத்தர் சிலை ஒன்றைக் கண்டெடுத்ததாகவும், அதனையும், அந்தப் பகுதியில் காணப்பட்ட அரச மரம் ஒன்றையும் பின்னர் புலிகள் அழித்து விட்டதாகவும், சிறிலங்கா படையினர் கூறியுள்ளனர்.

Exit mobile version